‘நான் [கிட்டத்தட்ட] கடவுள்’

தெருவில் மறித்த நண்பர் கேட்டார் ” பாலாவின் நான் கடவுள்னாக்க என்ன சார் அர்த்தம்?” . நான் தயக்கத்துடன் ”அதான் சார்…அஹம் பிரம்மாஸ்மி” என்றேன். ”வெளையாடுறீங்களா? இதுக்கே அர்த்தம் தெரியாமத்தானே கேக்கிறேன்…” என்ன சொல்வதென தெரியவில்லை. அதாவது எங்கிருந்து தொடங்குவது என்று. யோசித்துவிட்டு ”நானே கடவுள்னு அர்த்தம் சார்… இப்ப நான் ஜெயமோகன்னு சொல்றதில்லியா, அதே மாதிரி…” ”அப்ப எதுக்கு பாலாவின் நான் கடவுள்னு போட்டிருக்கு?” இன்னும் கொஞ்சம் குழம்பியபின் நான் ”நீங்க என்ன அர்த்தம் எடுத்துக்கிட்டீங்க?”என்றேன்.”அதான் சார் நான் சொல்ல வந்தேன்…”என்று அவர் உற்சாகமாக ஆரம்பித்தார்.

”இப்ப பாத்தீங்கன்னாக்க பாலாவின்நான் கடவுள்…அப்டீன்னா பாலாவுக்குள்ள இருக்கப்பட்ட நான்– அதுதான் கடவுள். அவர் தன்னை கடவுள்னு சொல்லிக்கல்லை. அவருக்குள்ள இருக்கபட்ட நானை கடவுள்னு சொல்றார்… அந்த நான்ன்னாக்க அது என்ன?  ரெண்டு ரிஷிகள் அவங்களிலே யாரு சொற்கத்துக்குப் போவாங்கன்னு ஒக்காந்து சண்டை போட்டுண்டிருந்தாங்க…அந்தப்பக்கமா போன இடைச்சி ஒருத்தி நீங்க ரெண்டுபேரும் சொற்கத்துக்குப் போகப்போறதில்லை, நான் போனாக்க போகலாம்னு சொல்லிட்டு போனாள். இவங்க ஆச்சரியப்பட்டாங்க. என்னடாது நாம இத்தனை வருஷம் தவம் பண்ணினோம். நாம போக முடியாது தான் போவேன்னு இடைச்சி சொல்றாளேன்னு அவ பின்னாடி போனாங்க…ஏம்மா இப்டிசொல்றியே அதோட அர்த்தம் என்னன்னு கேட்டாங்க… அவ சொன்னா அதாவது நீங்க ரெண்டுபேரும் போக முடியாது ஏன்னாக்க உங்க மனசிலே நான்-ங்கிற நெனைப்பு இருக்கு.. அந்த .நான் போனாத்தான் சொற்கத்துக்குப்போகலாம்னு…”

நண்பர் மூச்சுவாங்கினார். ”…அப்டீன்னாக்கா நான் போனாத்தான் மீட்புன்னு அர்த்தம். நான் கடவுள்னாக்க கடவுள் போனாத்தான் முக்தீன்னு அர்த்தமா? இல்லை…எதுக்குச் சொல்றேன்னா நமக்குள்ள இருக்கப்பட்ட நான் ஒரு மித்யை… அதை மமகாரம்னு பெரியவங்க சொல்றாக. அதுபோகணும்…அது போனா மிச்சமிருக்கிறது கடவுள்… மித்யை மறைஞ்சா மிஞ்சுறது சத்யம்தானே? சத்யம்னா அது கடவுள் என்ன சொல்றியோ?”

 

பாலா வெயிலைப் பார்க்க ஆர்தர் வில்சன் ஒரு காட்சியை எனக்கும் சிங்கம்புலிக்கும் காட்டுகிறார்

 

”ஆமா ஆமா” என்றேன். நண்பர் கடுமையாகச் சிந்தனைசெய்திருக்கிறார் என்று புரிந்தது. ” இந்த பாலா பெரிய ஞானவான் என்ன சொல்றியோ?” ”பின்னே?” ”சும்மாவா? இதெல்லாம் தோணுதுண்ணாக்க அது சாமான்யப்பட்ட விசயமா ? ஒருவாட்டி அவரை நான் பாக்கணும்…அறிமுகம் செய்து வைங்கோ” என்றார் நண்பர். ”கண்டிப்பா” என்று சொல்லி தலையை உருவி எடுத்தேன். ஆச்சரியமாக இருந்தது. இந்துமெய்ஞான மரபின் அடிப்படையான ஆப்தவாக்கியங்களில் ஒன்று ‘அஹம் பிரம்மாஸ்மி’ என்னும் ‘நான் கடவுள்’. அந்த வாசகம் இந்து நம்பிக்கை கொண்டவர்களில் மிகப்பெரும்பாலானவர்களுக்கு தெரியவே இல்லை. அதை அவர்களுக்குத் தெரியவைக்க ஒரு பெரிய வணிக சினிமா தேவைப்படுகிறது. தமிழ் மக்களிடம் எதையும் சினிமா வழியாகவே சொல்ல முடியும் போலும்.

பெரும்பாலானவர்கள் படத்தைப்புரிந்துகொள்ளும் விதமே ஆச்சரியமளித்தது. ”என்னா படம் சார்?” ”நான் கடவுள்னு ஒரு படம்ங்க” ”அப்டீங்களா…ஆரு ஹீரோ?” ”ஆரியா” ”யார்ரா அது?”என்று பின்பக்கம் ஒரு குரல். ”அதாண்டா தீப்பிடிக்க தீப்பிடிக்கன்னு ஆடுவானே…அந்தப்பையன்” மூன்றாம் ஆள் நெருங்கி ”என்னா படம்?” முதலில் கேட்டவர் விளக்குகிறார் ”நான் கடவுள் அல்ல. பாலா எடுக்கிற படம்டா” நான் கடவுள் அல்ல என்றுதான் பெரும்பாலான படப்பிடிப்பினர் சொன்னார்கள். நான் கடவுள் என்று அவர்களின் மனதில் நிற்கவேயில்லை.

நான் கடவுள் என்ற பெயர் பாலாவால் உருவாக்கப்பட்டது. உண்மையில் அந்த தலைப்புதான் நெடுங்காலமாக அவரிடம் இருந்தது. அது அவருக்குப் பிடித்தமான ஒரு சித்தர் எழுதிய நூலின் தலைப்பும்கூட. பொதுவாகவே பாலாவுக்கு சித்தர்கள்மீது விசித்திரமான ஈடுபாடு ஒன்று உண்டு. நான் கடவுள் தலைப்பைக் கேட்டதுமே தொண்ணூறு சத சினிமாக்காரர்களும் பாலா தன்னகங்காரம் மூத்து தன்னைத்தானே கடவுள் என்று சொல்லிக் கொள்கிறார், இது நல்லதற்கில்லை என்ற எண்ணத்தையே அடைந்தார்கள். அதன் பின்னர் அஜித் அப்படத்தில் நடிப்பதாக இருந்தபோது சர்வவியாபியான கதாநாயகனை கடைசியில் கடவுளாக ஆக்கும் கதை என்ற புரிதல் ஏற்பட்டது. அஜித்தே அப்படித்தான் புரிந்துகொண்டார் என்று ‘ஆழ்வார்’ படம் பார்த்தபோது தோன்றியது.

 

 

பாலா, சூப்பர் சுப்பராயன், சிங்கம்புலி,நான் ஆகியோர் ஆர்தர் வில்சனின் உதவியாளர் காட்டும் காட்சியை பார்க்கிறோம்.

 

நான் கடவுள் என்ற அந்த மந்திரம் தமிழர்களுக்குப் புரியாத ஒன்று என்பது படிப்படியாக பிடிகிடைத்தபின் அதன் மூலவரியை இரண்டாவது தலைப்பாகக் கொடுத்தோம். அப்போதும் அந்த ஐயமே நீடித்தது, மூலமந்திரமே இங்குள்ளவர்களுக்கு புரிந்ததாக இல்லை. இப்போதுவரை கேள்விகள்தான். ”பக்திப்படமா சார்?” என்று ஒரு கேள்வி. ”’ஏங்க நானே கடவுள்னு சொன்னதுக்கு அப்றம் என்னங்க பக்தி?” ”ஆமாசார் அது சரிதான்… அப்ப ஹீரோ படம் …என்னா சார்?” ”அப்டீன்னா ஆரீயாவே கடவுள் அப்டீன்னு பேரு வச்சிருப்போமே”

நான் கடவுள் என்பது வேதாந்தத்தின் அடிப்படை மந்திரங்களில் ஒன்று. ரிக்வேதத்தின் பத்தாம் மண்டிலத்தில் குறிப்பாக அதில் உள்ள சிருஷ்டி கீதத்தில் மானுட இருப்பு பிரபஞ்ச சாரம் ஆகியவற்றைப்பற்றிய அடிப்படைவினாக்கள் எழுப்பபட்டிருக்கின்றன. அவற்றிலிருந்து எழுந்த மேலதிக தத்துவ விவாதங்களே உபநிதடங்கள் ஆயின. அவற்றை வேதந்ங்களின் முடிவு என்ற அர்த்ததில் வேதாந்தம் என்று சொன்னார்கள். வேதாந்தம் என்பது அடிப்படையில் பிரம்மத்தைப்பற்றிய ஞானம். பிரம்மம் என்று வேதங்கள்  முழுக்க அறிந்துவிடமுடியாத- வகுத்துரைக்க முடியாத முழுமுதலான பிரபஞ்சசாரத்தை குறிப்பிடுகின்றன. அதைப்பபற்றிய உள்ளுணர்வுகளும் தத்துவங்களும்தான் வேதாந்தம்.

வேதாந்தத்தின் அடிப்படை சூத்திரங்களை இவ்வாறு வகுத்துக்கூறலாம் ‘நேதி நேதி நேதி’ [இதுவல்ல இதுவல்ல இதுவல்ல] நம் முன் நாம் அறியும் இவையெல்லாம் உண்மையானவை அல்லது முழுமுற்றானவை அல்ல என்ற தரிசனமே முதலானது. ‘பிரக்ஞானம் பிரம்மாஸ்மி’ [பிரக்ஞையே பிரம்மம்] என்ற அறிதல் அடுத்தது.  இவையனைத்தையும் அறியும் நம் பிரக்ஞையே பிரபஞ்ச சாரமாக உள்ள பிரம்மம். அதில் இருந்து அடுத்த நிலை ‘அஹம் பிரம்மாஸ்மி” நானே பிரம்மம். நானும் பிரம்மமே என்ற உணர்வின் முதிர்நிலை இது. கடல்மீன் கடலேதான் என உணர்வதைப்போன்ற ஒரு பிரம்மாண்டமான தன்னுணர்வு இது.

 

ஆர்யா, சிங்கம்புலியுடன்

அதன் அடுத்த நிலை என ‘ஈஸோ வாஸ்யம் இதம் சர்வம்’ என்ற ஆப்த வாக்கியத்தைச் சொல்லலாம். ‘இவையனைத்திலும் ஈசா உறைகிறது’ நான் கடவுள் என உணர்ந்ததுமே இவையெல்லாமே கடவுள் என்றாகிவிடுகிறது. கடவுளே பிரபஞ்சம் , கடவுளன்றி எதுவுமே இல்லை என்ற நிலை. அந்நிலையின் உச்சமே ‘தத்வமஸி’ [அது நீதான்] அது ஒரு இறுதித்தன்னிலை.

வேதாந்த்ததின் இந்த கொள்கையை பாலில் நெய் போல இந்துஞானமரபின் எல்லாப் பிரிவுகளிலும் நாம் காணலாம். உள்ளூர் மாரியம்மன் கோயிலின் பூசைப்பாட்டிலும்கூட ‘ஒளிக்கெல்லாம் ஒளி தருபவள் நீ’ ‘வானமாக ஆனவள் நீ ‘என்றெல்லாம் பல்வேறு வரிகளில் இந்த கருத்து ஒலிக்கும். இந்துமதத்தில் உருவ வழிபாடு இல்லை என்று ஒருவர் சொன்னால் அந்த வரியை நம்மால் மறுத்துவிடமுடியாது. ஏனென்றால் கண்ணில் தென்பட்டு கைக்குச் சிக்கும் உருவங்களில் கண்ணுக்கும் கருத்துக்கும் அகப்படாத அருவ வடிவமான பிரம்மத்தை  உருவகித்து வழிபடுவதுதான் இந்து மத மரபு. கல்மேல் கல் ஏற்றி வைத்து கும்பிடும் சிறு தெய்வத்தைக்கூட கல்வடிவமானவனே என்று எவரும் வழிபடுவதில்லை, எண்ணங்களால் எட்டப்பட முடியாதவனே என்றுதான் வழிபடுகிறார்கள். அனைத்துமானவனே என்றுதான் தொழுகிறார்கள். அனைத்துமானவன் இந்தக் கல்லும் ஆனவனே என்ற ஞானமே அதன் அடிப்படை.

ஓஷோ சம்பந்தப்பட்ட பிரபலமான நிகழ்ச்சி. ஓஷோவிடம் ஒருவர் கேட்டார் ”ஓஷோ பகவான் என்றான் என்ன அர்த்தம்?” ”கடவுள்” என்றார் ஓஷோ. ” அப்படியானால் நீங்கள் என்ன கடவுளா?” ”ஆமாம், அதில் என்ன சந்தேகம்?” என்றார் ஓஷோ கண்ணிமைக்காமல். அயர்ந்துபோன அந்த பேட்டியாளர் பின்பு சற்று கோபத்துடன் ” அப்படியானால் நாங்களெல்லாம் யார்? நாங்கள் மட்டும் கடவுள்கள் இல்லையா?” ”இல்லை” என்றார் ஓஷோ. ”ஏன்?” ”நீங்கள் அப்படிச் சொல்லிக்கொள்ளவில்லையே” கடவுள் என்று உணர்ந்தவன் கடவுள்தான். ஏசு மனிதகுமாரன் ஏனென்றால் அவர் அதை உணர்ந்தார். அப்படி உணர்ந்தவர்கள் அனைவருமே பிதாவால் மண்ணுக்கு அனுப்பபட்ட அவரது பிரியத்துக்குரிய குமாரர்களே.

கடவுள், பரம்பொருள் , பல்வேறு இறைவடிவங்கள் போன்ற கருத்துக்களால் மறைக்கப்படாமலிருந்தால் ஒருவேளை ஒருவரால் மிகமிக எளிதாகப்புரிந்துகொள்ளத்தக்க ஆன்மீகக் கருத்தே ‘நான் கடவுள்’தான். இயற்கையின் பிரம்மாண்டத்தின்முன், மானுடவாழ்க்கையின் உச்சகட்ட தருணங்களில் சற்றே நுண்ணுணர்வுள்ள அனைவருமே தன்னிலை அழிந்து ஒரு பிரம்மாண்டமான பெருநிலையை தான் என உணர்ந்திருப்பார்கள். இவையெல்லாம் நானே என்றும் நானே இவையனைத்தும் என்றும் உணரும் கணம் அது. இந்தப்பிரம்மாண்டவெளியின் ஒரு துளி நான் என்ற உணர்வில் இருந்து பிரம்மாண்டமே நான் என்று அறியும் ஒரு உச்சம். அந்த உச்சத்தின் தத்துவ விளக்கமே இவ்வரி

 

 

 

 

பெரியகுளத்தில் படப்பிடிப்பில் பாலாவுடன். பாலாவின் மாமனாரின் தோப்புதான் எதிரில். பாலா பெரும்பாலான படப்பிடிப்புகளை சொந்தபந்தம்சாதிசனம் சூழத்தான் நடத்தியிருக்கிறார்

 

 

பெரியகுளத்தில் மலைக்கோயிலின் மீது. படப்பிடிப்பு நடந்த காலம் முழுக்க மழைச்சாரல், மேகமூட்டம். படப்பிடிப்பை தீர்மானிக்கும் முக்கிய சக்தியே சூரியன் தான்….

 

ஆனால் தமிழ்நாட்டில் புகழ்பெற்றிருக்கும் முதன்மையான தத்துவசிந்தனையான சைவ சித்தாந்தம் வேதாந்தத்தின் இக்கோட்பாடுகளை ஏற்றுக்கொள்வதல்ல. பசு பதி பாசம் என்று மூன்று அடிப்படை உருவகங்களை அது முன்வைக்கிறது. ஜீவாத்மா பரமாத்மா மாயை என்ற மூன்று கருத்துக்களுக்கு தோராயமாக நிகரானது அது. அதில் பசு தன் பாசத்தை அறுத்து பதியின் பாதங்களை அடைகிறதே ஒழிய ஒருபோதும் தன்னை பதி என உணர்வதில்லை. அதேபோல தமிழகத்தின் இரண்டாவது பெரிய சமய தத்துவமான ராமானுஜரின் விஷிஷ்டாத்வைதம் பெருமாளின் பாதங்களில் சென்றடையும் முக்தியையே முன்வைக்கிறது. ஆகவே வேதாந்தக்கருத்துக்கள் தமிழகத்தில் மெல்லமெல்ல மறைந்தன.

இவ்விரு தத்துவங்களும் பக்தி சார்ந்தவை என்பதைக் காணலாம். கிபி ஒன்பதாம் நூற்றாண்டு முதல் இங்கே உருவாகி வளர்ந்த பக்தி இயக்கங்களின் அடிப்படைக் கோட்பாடுகள் இவை. பக்தி இயக்கங்களால் நிலைநாட்டப்பட்ட பெருமதங்களான சைவ, வைணவ மதங்களின் சாராம்சங்கள். வேதாந்தம் அடிப்படையில் பக்திக்கு எதிரானது. எப்போதும் தனிமனிதனை நோக்கிப் பேசுவதென்பதனால் அது பெருமதங்களுக்கும் எதிரானது. உண்மையில் வேதாந்தம் அதன் தூயநுலையில் ஒரு கலகக்குரலாகவே ஒலிக்க முடியும். அஹம் பிரம்மாஸ்மி என்று உணர்பவன் அதன் பின் மண்ணில் எதற்கும் கட்டுப்பட்டவன் அல்ல. அவனை மத- சமூக அமைப்புகள் கையாள்வது கடினம்.

வேதாந்தம் இந்திய மறுமலர்ச்சிக்காலத்தில் ஒரு மாபெரும் சீர்திருத்தக்கருத்தாகவே முன்வைக்கப்பட்டது என்பதை இப்போது நினைவுகூரலாம். அடிமைத்தனமும் சாதிபேதமும் சூழ்ந்திருந்த ஒரு காலகட்டத்தில் வேதாந்தத்தின் ‘ஈஸாவாஸ்யம் இதம் சர்வம் ‘என்ற குரல் சமத்துவத்துக்கான குரலாகவே ஒலித்தது. அமைப்புகள் மனிதனை அடிமைப்படுத்தியிருந்த காலத்தில் ‘அஹம் பிரம்மாஸ்மி’ என்பது தனிமனித விடுதலைக்கான அறைகூவலாக எழுந்தது. அறியாமை சூழ்ந்திருந்த காலத்தில் ‘பிரக்ஞானம் பிரம்மாஸ்மி’ என்பது கல்விக்கான கோரிக்கையாக எழுந்தது.

 

ஒரு படப்பிடிப்பு என்பது பலர் நெருக்கமாக உறவாடி நிகழ்த்தும் ஒரு கூட்டுக்கலைச்செயல்பாடு. ஆகவே அதன் உற்சாகம் ஈடு இணையற்றது. அதிலும் நான் கடவுள் நெடுங்கால உழைப்பு. ஆகவே நீடித்த நட்புகள் உருவாக வழியமைத்தது அது. குறிப்பாக உதவி இயக்குநர்களுடனான உறவு மிக மிக உற்சாகமளிப்பதாக இருந்தது.

உதவி இயக்குநர் தியாகு, உதவி ஒளிப்பதிவாளர்கள் நிரண், மற்றும் ரதீஷுடன்

ஆரம்பகால இந்திய சீர்திருத்தவாதிகள் பெரும்பாலானவர்கள் வேதாந்திகளே. ஆரிய சமாஜ ம், பிரம்ம சமாஜம் போன்றவற்றில் ஒலித்தது வேதாந்தத்தின் குரல்தான். ராமகிருஷ்ண பரமஹம்ஸர் என்ற வேதாந்தியின் கீழிருந்துதான் வேதாந்தசிம்ம்மமாக விவேகானந்தர் வந்தார். சாதியின் கீழ்ப்படிகளில் இருந்து சமத்துவத்துக்கான குரலுடன் எழுந்து வந்த பல்வேறு துறவியர் முன்வைத்தது வேதாந்தமே. மிகப்பெரிய உதாரணம் நாராயணகுரு. அய்யன்காளி, சுவாமி சகஜானந்தா போன்ற தலித் சீர்திருத்த நாயகர்களின் தத்துவமாகவும் வேதாந்தமே விளங்கியது. அக்காலகட்டத்தில் நாடெங்கும் ஏராளமான வேதாந்த மடங்கள் அடித்தள மக்களின் மீட்புக்காக தங்களை அர்ப்பணம்செய்தன. சென்னை அத்வைத ஆசிரமம், சேலம் சித்தாசிரமம் போன்று ஏராளமான உதாரணங்களைச் சொல்ல முடியும். சமூகப்போராளிகளான அய்யா வைகுண்டர் போன்றவர்களிடமும்  வேதாந்தத்தின் நேரடியான குரலை கேட்கமுடியும்.

வேதாந்தத்தின் தீவிரமான பாதிப்பினால் இஸ்லாமில் எழுந்துவந்த தரிசனம் என்று சூ·பிஸத்தைச் சொல்லலாம். ‘அனல் ஹக்’ என்ற சூ·பி மெய்ஞான வாக்கியம் அஹம் பிரம்மாஸ்மி என்ற சொல்லின் நேரடி மொழியாக்கம். இப்பிரபஞ்சத்தில் அல்லா அன்றி எதுவுமே இல்லையென்பதனால் நானும் அல்லாவே என்பதே அந்தக் கோட்பாடு. சீக்கிய மதத்தின் மெய்ஞான நூலான குரு கிரந்த சாகிபில் பலநூறுவரிகளில் வேதாந்தத்தின் குரல் ஒலிக்கிறது.

பரவாயில்லை, ஒரு சினிமா மூலம் அந்தக்குரலை மீண்டும் சில காதுகளில் ஒலிக்கச்செய்ய முடிந்திருக்கிறது

 

 

முந்தைய கட்டுரைஎஸ்.வைத்தீஸ்வரனுக்கு விளக்கு விருது
அடுத்த கட்டுரைதிலீப்:கடிதங்கள்