நீர்க்கூடல்நகர் – 1

கோவை விமான நிலையத்திலிருந்து நான், கிருஷ்ணன், ஈஸ்வரமூர்த்தி, ராஜமாணிக்கம், நெல்லை சக்தி கிருஷ்ணன் ஆகியோர் ஏர் இந்தியா விமானத்தில் டெல்லிக்கு வந்திறங்கினோம். ராஜமாணிக்கம் திருப்பூரில் வாங்கிய நைலானால் ஆன விண்ட்சீட்டர் அணிந்திருந்தார். அநியாயமாக இருநூறுரூபாய் விலை வைத்திருக்கிறான் என பிலாக்கணம் வைத்தார். சக்தி கிருஷ்ணன் சைபீரியாவுக்குச் செல்லும் உடையில் இருந்தார். அதுவும் இரவல் உடை. “நமக்கு பின்ன திண்ணவேலியிலே ஈரிழை துண்டு போரும்லா?” கோவை விமானநிலையத்தில் இருந்த குளிரே கொஞ்சம் கஷ்டமாக இருந்தது எனக்கு.

டெல்லியில் குளிர் 7 டிகிரி. நாங்கள் குளிருக்கான ஆடைகள் அணிந்திருந்தபோதும்கூட வெளியே வந்தபோது விடியற்காலையில் குளிர் நடுக்கி எடுத்தது. நாங்கள் பத்து பேர் பயணம் பண்ண வேண்டிய பெரிய வண்டியை பதிவுசெய்திருந்தோம். அதை விமான நிலையத்திற்கு உள்ளே அனுமதிக்க மாட்டோம் என்றார்கள். அதற்கு ஆயிரம் ரூபாய் கட்டணம் ஆகுமாம். பணத்தை ஆரம்பத்திலேயே சேமித்தால்தானே நல்லது? வண்டி எங்கோ சாலையில் நின்றிருந்தது. அதற்கு வழி கண்டு பிடிப்பதற்காக  அங்குமிங்கும் அலைந்தோம். பலரிடம் உசாவி தட்டழிந்து கடைசியில் அவர்கள் கேட்ட ஆயிரம்ரூபாய் கட்டணத்தை செலுத்தச்சொல்லி உள்ளே கொண்டுவந்து அங்கு சென்று சேர்ந்தோம். தேவையில்லாத குளிர்.  “பரவாயில்ல, நல்ல குளிரா இருக்கே” என கிருஷ்ணன் அதை தன் பயணத்திட்டத்தின் பகுதியாக ஆக்கிக் காட்டினார்.

டெல்லி விமான நிலையத்திலிருந்து நேராக ஆக்ரா வந்தோம். குளிரில் ஒடுங்கி அமர்ந்து நான் தூங்கியபோது விமானத்தில் சென்றுகொண்டிருப்பதாக கனவு. காலை பத்து மணிக்கு ஆக்ரா வந்து அங்குதான் காலை உணவு உண்டோம். வழியில் டெல்லியின் புறநகர்ப்பகுதியில் ஒரு சாலையோர விடுதியில் தேனீர் அருந்தினோம். ஒரு வாய் அருந்தியதுமே தெரிந்துவிட்டது அது பால் அல்ல, செயற்கைப்பால். இந்தியா முழுக்க இன்று அருந்தப்படும் பால் பற்பல லட்சம் லிட்டர். அத்தனை பால் கறக்கும் மாடுகள் எங்கிருக்கின்றன என்று தேடினால் இப்போதெல்லாம் பசுக்கள் எங்குமே தென்படுவதில்லை. வட இந்தியாவிலேயேகூட எருமைகளும் பசுக்களும் அருகிவிட்டன. சென்னை நகரம் அருந்தும் பால் எவ்வளவு இருக்கும்! எங்கிருந்து அத்தனை பால் வருகிறது? பால்கறக்கும் மாடுகள், அவற்றுக்கான வைக்கோல், அவை போடும் சாணி எங்கே? எவருமே இதை யோசித்துப் பார்ப்பதில்லை.

இன்று நகரங்களில் நாம் அருந்தும் பாலின் பெரும்பகுதி மாவு யூரியா மற்றும் ரசாயன பொருட்களைக்கொண்டு செயற்கையாக தயாரிக்கப்படுவது. இதை பால்பவுடர் என மங்கலமாக அழைக்கிறார்கள். அதை நீருடன் கலந்து பத்து அல்லது இருபது சதவீதம் நிஜமான பாலும் சேர்த்து பாலை உருவாக்குகிறார்கள். அரசுப் பால்நிறுவனங்கள்கூட இதைத்தான் செய்கின்றன. வேறுவழியில்லை. அந்த அளவுக்கு தேவை. இந்தப்பாலால் உருவாக்கப்படுவதே தைராய்டு பிரச்னை உட்பட பல நோய்கள். ஆனால் பாலின்றி வாழ முடியாத நிலையை இன்று வந்து அடைந்துவிட்டிருக்கிறோம். ஒரு கோப்பை பால் ஒருமணிநேரம் குமட்டச்செய்தது.

taj1

ஆக்ராவில் ஒரு சிறுவிடுதி. அதன் மொட்டைமாடியில் உணவகம். ஆக்ரா முழுக்க மொட்டைமாடிகள் எல்லாமே உணவகங்கள்தான். மூங்கில்களைக் கொண்டு எளிமையானமுறையில் ‘உள்ளூர் அலங்காரம்’ செய்திருக்கிறார்கள். இளவெயிலில் மொட்டைமாடியில் அமர்ந்து உண்பது இனியது. அறைக்குள் போர்வைக்குள் சுருண்டு படுத்து தூங்கி மதியம் இரண்டரை மணிக்கு விழித்துக்கொண்டோம். நண்பர்கள் தாஜ்மகால் பார்க்கவேண்டுமென்று ஆசைப்பட்டார்கள். கிருஷ்ணன் தாஜ்மகாலை பார்த்ததில்லை. கட்டை பிரம்மச்சாரியான அவருக்கு தாஜ்மகாலை பார்க்க வேண்டிய தேவையுமில்லை என்றுதான் நாங்கள் நினைத்தோம். ஆனால் ஆண்கள் பெண்களுக்காக எல்லா அசட்டுத்தனங்களையும் செய்வார்கள் என்று நம்பும் கிருஷ்ணன் அந்த அசட்டுத்தனத்தின் உச்சகட்டம் என்று தாஜ்மகாலை கருதுகிறார். எந்த அளவுக்கு போவார்கள் என்று பார்த்துவிடுவோமே என்று தாஜ்மகாலைப் பார்க்க முடிவு செய்திருந்தார்.

நான்கு மணிக்கு தாஜ்மகாலுக்கு செல்வதற்கான டிக்கெட் வாங்கினோம். ஆனால் ஏறத்தாழ ஒன்றரை கிலோமீட்டர் தொலைவுக்கு க்யூ நின்றது. ஞாயிற்றுக்கிழமை காரணமாக இருக்கலாம். கும்பமேளாவுக்கு செல்பவர்கள் ஒருசாரார் அங்கு வருவதாகக் கூட இருக்கலாம். தாஜ்மகாலில் எப்போதும் இத்தனை பெரிய கூட்டத்தை பார்த்ததில்லை. கும்பமேளா அங்கேயே தொடங்கிவிட்டதுபோல் இருந்தது. ‘புகுத்திவிடுவதற்கு’ ஆயிரம் ரூபாயில் தொடங்கி ஐம்பது ரூபாய் வரை பேரம் பேசினார்கள். இருவர் புகுந்தனர். நாங்கள் சட்டத்தை மீற கிருஷ்ணன் தயாராக இல்லை. ஆகவே ஒரு வழியாக முட்டி மோதி உள்ளே சென்றோம்.

taj2

மாபெரும் கற்கண்டுக் கட்டி ஒன்றில் எறும்புக்கூட்டம் அப்பியிருப்பது போல எங்கு பார்த்தாலும் தலைகள். தாஜ்மகாலை கிள்ளி எடுப்பது போல, உள்ளங் கையில் வைத்திருப்பது போல், தாஜ்மகாலை தாங்கிநிற்பது போல புகைப்படம் எடுக்க பெண்கள் வெவ்வேறு விதமாக நடித்துக்கொண்டிருந்தார்கள். காதலர்கள் காதலர்கள் போலவே நடிக்க குடும்பஸ்தர்கள் வேறு எல்லாவகையிலும் நடிக்க நடுவே வாய்பிளந்து திரிந்தோம். அதை முதலில் பார்ப்பவர்கள் “எவ்வளவு பெரிசு” என்பார்கள். அது எப்படியோ ஒரு சிறிய கட்டிடம் என்னும் உளச்சித்திரத்தை உருவாக்குகிறது. அதை நெடுந்தொலைவிலிருந்து புகைப்படம் எடுக்கமுடியும் என்பதனாலாக இருக்கலாம்.

அந்தியில் தாஜ்மகாலை பார்ப்பது ஓர் இனிய அனுபவமாக இருந்தது. அந்தியில் தாஜ்மகாலின் ஒரு பகுதி சற்றே சிவந்தும் இன்னொரு பகுதி இருளின் நீலத்தன்மை கொண்டும் இருப்பது அழகாக இருந்தது. காலையில் வந்தால் அதன் நிழல் இனிய மெல்லிய செந்நிறம் கொண்டிருப்பதை முன்னர் பார்த்திருக்கிறேன். முகில்களால் மூடப்பட்டிருக்கையில் ஓர் அழகு. அப்போது துல்லியமான நீலவானின்கீழ் உருகிச் சொட்டியதுபோல நின்றிருந்தது.

முகலாயக் கட்டிடக்கலை உலகக்கட்டிடக்கலைக்கு அளித்த கொடை என்ன, அதன் குறை என்ன என்று மணிகண்டன் கேட்டார்.  தலா ஒன்றை சொல்லலாம் என்று தோன்றியது. ஒன்று சீர்மை. கட்டிடக்கலை என்பது பொதுவாகவே சீர்மையை அடைய முயல்வது என்றாலும் இஸ்லாமியக் கட்டிடக்கலை அதையே மைய இலக்காகக் கொண்டு செயல்பட்டது. அதில் மேலும் மேலும் சோதனைகள் செய்தவர்கள் அவர்கள். தாஜ்மகாலையே எடுத்துக்கொள்ளலாம். அதன் அழகு அதன் சீர்மையில்தான் இருக்கிறது. அதை எந்தக்கோணத்திலிருந்து புகைப்படம் எடுத்தாலும் பெரும்பாலும் மாறாத ஒரே காட்சிதான் வரும்.

நாம் அதன் எழுத்துக்களை கீழே நின்று பார்த்தால் மேலே செல்லுந்தோறும் அது சிறிதாவதில்லை. எப்போதும்  ஒரே அளவிலேயே தெரியும் அளவுக்கு எழுத்துக்கள் மேலே செல்லுந்தோறும் பெரிதாக்கப்பட்டுள்ளன. அதன் வாயில்கள், வாயில்களுக்கு மேல் உள்ள வளைவுகள், வளைவுக்குள் வளைவுக்குள் வளைவு என அமைந்திருக்கும் அதன் மொத்த அமைப்புமே ஒன்றுக்கொன்று கொண்டுள்ள ஒத்திசைவே விழிக்கு நிறைவளிக்கும் ஓர் அனுபவமாக இருக்கிறது.

குறைபாடு என்ன என்று கேட்டால் புஷ்கலம் என்று வடமொழியிலோ பொலிதல் என்று தமிழிலோ சொல்லும் அழகுச்செறிவு அதிலில்லை. மதுரைப் பேராலயத்தின் ஒரு தூணிலிருக்கும் சிற்பச்செறிவு, ஒவ்வொரு சிற்பத்திலும் இருக்கும் நுணுக்கம் தாஜ்மகாலில் எதிர்பார்க்க முடியாத ஒன்று. பெரும்பாலும் எளிய வடிவங்களின் ஒத்திசைவாலான ஒரு பெருங்கட்டிட அமைப்பு அது. மதுரைக்கோயில் ஒவ்வொன்றும் தனித்தன்மைகொண்ட சிற்பங்களையே அடுக்கிக் கட்டப்பட்ட கட்டிட ஒத்திசைவு.

தாஜ்மகாலை சுற்றிவிட்டு நடந்தே அறைக்கு வந்தோம். வரும் வழியில் நண்பர்கள் சாலையோரத்தில் பானிபூரி சாப்பிட்டார்கள். கையில் கிடைத்த அனைத்தையும் போட்டுக்கலக்கிய ஒன்றை இலைத்தொன்னையில் போட்டு அதை மூங்கில் குச்சியால் சாப்பிட்டார்கள். நான் வயிற்றை வைத்து சோதனைகள் செய்ய விரும்பவில்லை. சாப்பிடுபவர்களின் உற்சாகத்தை மட்டுப்படுத்த என்னால் இயன்ற அனைத்தையும் செய்தேன். ஆனால் விமர்சனங்கள் அவற்றை மேலும் சுவையாக ஆக்கிற்று என்பது அவர்கள் அதை அள்ளி அள்ளி உண்டதிலிருந்து தெரிந்தது.

taj4

அறைக்கு வந்து சேர்ந்து வழக்கம்போல் பழ உணவை அருந்திவிட்டு அமர்ந்தேன். மலிவான விடுதி. ஓர் அறையில் மூன்று பேர் தங்குகிறோம். ஆகவே தலைக்கு இருநூற்றைம்பது ரூபாய் செலவுதான் வரும். ஆனால் நல்ல குளிர். ஓர் அறைக்கு போர்வை ஒன்றுதான் இருக்கிறது, ஆகவே இரவில் போர்வைக்கான பூசல் வருமென்று முன்னரே ஒரு உள்ளுணர்வு எழுந்திருந்தது. நான் ஜாக்ரதையாக முன்னரே ஒரு போர்வை கொண்டுவந்திருந்தேன். கோட்டையும் போட்டுக்கொண்டு படுத்தேன். தாஜ்மகாலை நினைத்துக்கொண்டு படுத்தேன். துண்டு துண்டு நினைவுகளாக காட்சிகள். பயணங்களில் இரவு உறங்கும்போது எப்போதும் ஓர் அனுபவம் உண்டு. அன்று முழுக்க நிகழ்ந்தவை ஒன்றுடன் ஒன்று கலந்து எவ்வளவு கடந்துவந்திருக்கிறோம் என்னும் பிரமிப்பை எழுப்பும். பயணங்களில் நாட்கள் நீண்டு நீண்டு பலமடங்காகிவிடுகின்றன.

முந்தைய கட்டுரைஉலோகம் – கடிதம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-47