மோகன் வாறே !

jea

ஈழ இலக்கியம் பற்றிய கூச்சல்கள்

ஜெயமோகன் பார்வையில் ஈழ இலக்கியம்: ரஸஞானி

அன்பு ஜெ,

உங்களுக்கு ஜின்னாஹ் என்னும் மாகவிஞர் எழுதிய வசைக்கவிதையை அனுப்புகிறேன். வசைபட வாழ்தல் என நீங்கள் எழுதிய பழைய கட்டுரையை நினைவுகூர்க

இலங்கையில் கவிஞர்கள் இலையெனும் ஜெயமோகன்
இழிமொழி கேட்டு வியந்தேன்
மலப்புழு அறியுமோ மலர்மணம் நறைதரு
மதுரத்தை மோகன் வாறே
அலைகடல் தாண்டியவர் அறிந்தவை என்னவோ
அறிந்திலை யாதும் நெஞ்சில்
நிலைகொண்ட காழ்ப்பினை நெறிபிறழ்ந் துரைப்பது
நீசனின் செயலு மன்றோ!

என்னதான் அளவுகோல் எழுத்துக்கு யாரெவர்
இயற்றினர் சொல்லு வாரோ
தன்வழி மதிப்பிடத் தகுதியென் மோகனின்
தமிழென்ன அளவு கோலோ
புன்மையை வார்த்தையில் பொழிகின்ற பாங்கொரு
பண்பிலிச் செயலு மன்றோ
முன்பிருந் தின்றுமெம் மணித்திரு நாட்டினோர்
மன்னர்கள் தமிழி லறிவீர்!

கடன்வாங்கு மொழியினில் காதைகள் படைப்பவன்
கருவினில் திருவு டைத்தோன்
படைத்திடும் படைப்பினைப் பரிகசித் துரைப்பததைப்
பார்த்துநாம் பொறுத்தி லோமே
உடன்பாடு கொண்டவர் ஈழத்தோர் தமிழக
உயர்தமிழ் வித்து வத்தில்
உடன்பாடு கொண்டவர் உள்ளனர் ஆங்குமே
எம்மவர் படைப்பி லுணர்வீர்.

இலங்கையில் இருநூறு இருக்கிறார் கவிஞர்கள்
என்றதைப் புரியா மூடன்
இலங்கையை நகரமாய்க் கொண்டதில் நூறுபேர்
இருப்பதாய்க் கனவு கண்டால்
சொலவென்ன உண்டதோ தேரிலான் இலங்கையின்
தரைப்படம் இலங்கை நாடு
அலைகடல் சூழ்ந்ததோர் அழகிய புனிதமண்
அறிகுவாய் அறிவி லானே!

கவிஞர்கள் தொகையினில் கூடினால் பெண்களின்
கற்பினுக் கென்ன தீங்கோ
செவிகூசும் வார்த்தைகள் செப்பினான் கடைமகன்
சொல்லிழுக் கறிகி லானோ
இவன்கூற்றைக் கொண்டிடில் இழிவெங்கள் தமிழுக்கே
இழிகுலக் காமப் பித்தன்
பவமிவன் பற்றியே பேசுதல் பண்பிலான்
பழிபாவ மறியா தோனே!

ஏழு முறை வாசித்தபின்னரும் இந்தக்கவிதையை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. மதுரத்தை மோகன் வாறே அலைகடல் தாண்டியவர் அறிந்தவை என்னவோ என்ற வரி உச்சம்.

இலங்கையை ஈசன் காக்கட்டும்

ராஜ்