«

»


Print this Post

ஈழ இலக்கியம் பற்றிய கூச்சல்கள்


வணக்கம் ஜெயமோகன் அவர்களே!

எனது பெயர் இளையதம்பி தயானந்தா புலம்பெயர்ந்த ஓர் ஈழத் தமிழ் ஊடகவியலாளன். தற்போது லைக்காவின் ஆதவன் தொலைக் காட்சி/வானொலியில் பணியாற்றுகிறேன்.

கடந்த ஆண்டு மீண்டு நிலைத்த நிழல்கள் நூல் வெளியீட்டில், நீங்கள் ஆற்றிய  உரையில், ஈழத்து படைப்பாளிகள் பற்றிய உங்கள் குறிப்பு, ஏனோ திடீரென சமூக வலைத் தளத்தில் ஈழத் தமிழர்களால், கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருப்பதை நீங்கள் அவதானித்திருக்கலாம்.

ஆதவன் வானொலியில் என்னால் செய்யப்படும் வாராந்த நேரலை நிகழ்ச்சியில் இந்த விடயத்தை, அடுத்த வாரம்  எடுத்துக் கொள்ள திட்டமிட்டுள்ளேன். குறித்த நிகழ்ச்சி இலங்கை/இந்திய நேரப்படி இரவு 7.30 இற்கு ஞாயிற்றுக் கிழமை ஒலிபரப்பாகிறது. வாரம் ஒரு வலம் என்ற இன் நிகழ்ச்சியின் முன்னைய பதிவுகளை இதில் பார்க்கலாம்.

அடுத்த வார நிகழ்ச்சியில் உங்களால் பங்கேற்க முடியுமா? குறித்த நேரலை நேரத்தில் பங்கேற்க முடியாத நிலையிருப்பின், அதற்கு முன்னராக உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ள முடியுமா?

உங்கள் பங்கேற்பில்லாமல் இன் நிகழ்ச்சியை செய்தால் அது  அர்த்தமற்றதாக  அல்லது ஒரு பக்க சார்புடையதாக அமையும் என நினைக்கிறேன்.

அன்போடும், பதிலுக்கான எதிர்பார்ப்போடும்,

இளையதம்பி தயானந்தா

அன்புள்ள இளையதம்பி அவர்களுக்கு,

நான் சொன்ன கருத்து இலக்கியவிவாதம் என்னும் களத்திற்குள் நிகழ்வது. இலக்கியத்தில் ரசனை சார்ந்த கூரிய மதிப்பீடு எவ்வளவு தேவையானது என்பதை சுட்டிக்காட்டியிருந்தேன். அதைப்பற்றி இப்போது பேசிக்கொண்டிருப்பவர்களின் குரல்களைக் கேட்டால் குமட்டலும் பரிதாபமும்தான் வருகிறது. அவர்களுக்கு இலக்கியம் என்பதே அறிமுகமில்லை. நகைச்சுவையை புரிந்துகொள்ளும் அறிவுத்திறனும் இல்லை. அதேசமயம் எளிய மனிதர்களாக, தங்களுக்கு அப்பாற்பட்ட ஒன்றில் தலையிடாமல் விலகிவிடவேண்டும் என்ற அடிப்படைப் பண்பும் இல்லை. வெறும் வெட்டிவம்புக்கும்பல்.

இலக்கியவிவாதங்களை அறிவுலகுக்கு எந்தத் தொடர்பும் இல்லாதவர்கள் பார்க்கும்போது நிகழும் வம்பு இது. இணையம் இப்படி சில இக்கட்டுகளை உருவாக்கிவிடுகிறது. இப்படி தலையும்காலும் தெரியாத கும்பல்களிடம் இலக்கியவாதி அமர்ந்து ‘விவாதிக்கவேண்டும்’ என்பது போல அசட்டுத்தனமும் வேறில்லை. எந்தத் துறையிலும் அதில் அடிப்படை புரிதல் இல்லாதவர்களின் குரல்களை புறக்கணிப்பதே ஊடகங்கள் உண்மையில் செய்யவேண்டியது. சமூகவலைத்தளங்களின் உளச்சிக்கல்களை திரும்ப பதிவுசெய்வது ஊடகங்களின் வேலை அல்ல.  உங்கள்  பரபரப்புத் தேவைக்கு வம்புகள் உதவுமென்றால் செய்க! எனக்கு ஆர்வமில்லை.

ஜெ

அன்புள்ள ஜெ

மலேசிய எழுத்தாளர் ம.நவீனின் மீண்டு நிலைத்த நிழல்கள் குறித்த உரையாடலில் நீங்கள் சொன்ன சில கருத்துக்களை ஒட்டி இணையத்தில் சில ஈழத்தவர்கள் உங்களை வசைபாடி அவதூறுகளை எழுதிக் குவித்துக் கொண்டிருக்கிறார்கள். கூட உள்ளூர் கும்பலும் சேர்ந்துகொண்டு கும்மியடிக்கிறது. நான் ஒருநாள் முழுக்க அமர்ந்து பெரும்பாலும் எல்லாக் குறிப்புகளையும் பார்த்தேன்.

இவர்களில் ஒருவர்கூட, ஒரே ஒருவர்கூட, அடிப்படை இலக்கியவாசிப்போ, அதுசார்ந்த நுண்ணுணர்வுகளோ கொண்டவர்களாக இல்லை. இலக்கியத் தற்குறிகள் என்றே சொல்லலாம். பலருக்கு உங்கள் பெயரே தெரியவில்லை. சினிமா வசனகர்த்தா என நினைக்கிறார்கள். பின்னூட்டங்களில் பலர் வந்து யார் இவர் என்று விசாரிக்கிறார்கள். ஆனால் அத்தனை பேருமே ‘கவிதை’ எழுதுபவர்கள். மேலோட்டமாக வாசிக்கும் எவரோ  ‘கொளுத்திப்போட’ இவர்கள் ‘அய்யகோ ஈழத்தை அவமதிக்கிறார்களே!” என்று ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். இந்த அசட்டுக்கூட்டத்தைப் பற்றி விமர்சனம் செய்தால் அதை ஈழம் பற்றிய விமர்சனமாக கட்டமைக்கிறார்கள். அந்த உரையை கேட்கும் அளவுக்குக் கூட பொறுமையோ அறிவோ இல்லை. ஆக, நீங்கள் ஈழ இலக்கியத்தைப்பற்றி சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும் நிரூபித்தே ஆகவேண்டும் என்று ஒருகூட்டம் களம் இறங்கியதுபோல் உள்ளது.

நீங்கள் சொன்னது ஒரு விமர்சனம். அதற்குப் பதிலாக உங்கள் சாதியை குடும்பத்தை எல்லாம் இழுத்து வசைபாடும் இந்தக்கும்பலுக்கும் இலக்கியத்திற்கும் என்ன சம்பந்தம்? இலக்கியம் என்னும் இயக்கம் மீது ஓர் அடிப்படை மரியாதை கொண்டவர் எவரும் ஓர் இலக்கியவாதியை இப்படி கீழ்த்தரமாக வசைபாட மாட்டார்கள். உண்மையிலேயே இந்தக்குப்பைகள் இப்படி கொட்டிக்குவிந்திருப்பதனால்தான் ஈழச்சூழலில் நல்ல எழுத்துக்கள் உருவாக முடியாதநிலை உள்ளது. நல்ல கவிஞர்களுக்கும் இவர்களுக்கும் வேறுபாடு அவர்களுக்குத்தெரியவில்லை என்றால் நல்ல கவிஞர்களுக்கு என்னதான் மதிப்பு?

நீங்கள் சொல்லியிருப்பது இந்த சருகுக்குவியலில் இருந்து நல்ல கவிஞர்களை மீட்டு தனியாக அடையாளம் காட்டப்படவேண்டும், படைப்பாளிகளின் நடுவே ஒரு தரவரிசையை வாசகனும் விமர்சகனும் சேர்ந்து உருவாக்கவேண்டும், அந்த வரிசை தொடர்ந்து விவாதிக்கப்படவேண்டும் என்றுதான். அப்படிச் சிறப்பாக எழுதிய அத்தனை பேரைப்பற்றியும் நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். தமிழில் ஈழ இலக்கியவாதிகளைப் பற்றி மிக விரிவாக எழுதியவர் நீங்கள் – இந்த அளவுக்கு அங்குள்ளவர்கள்கூட எழுதவில்லை. அதில் பத்துவரியைக்கூட படித்துப்பார்க்காத, படிக்கும் அறிவில்லாத கும்பலின் இந்த வசை கசப்பூட்டுகிறது.

ஸ்ரீதர்

 

அன்புள்ள ஸ்ரீதர்,

இந்தக் கூட்டம் உருவாக்கும் சத்தம் நல்லதுதான். அங்கேயும் இவர்கள் எழுதும் அசட்டுவரிகளைப் பார்த்து நுண்ணுணர்வு புண்பட்ட வாசகன், இளம்படைப்பாளி இருப்பான். அவன் இவர்களினூடாக என்னை வந்துசேர்வான். அவன் எண்ணுவதை, சொல்லத் தயங்கியதை ஒருவர் சொல்வதை கண்டுகொள்வான். இலக்கியமென்றால் என்ன என்று புரிந்துகொள்வான். அவ்வாறு ஐந்துபேர் என்னிடம் வருவார்கள், ஐநூறு அசடர்கள் கூச்சலிட்டுவிட்டு அடுத்த வேலைக்கு சென்றுவிடுவார்கள். என்னிடம் வரும் அந்த ஐந்துபேர்தான் இலக்கியத்திற்கு முக்கியமானவர்கள். ஆகவே டமாரவாதிகள் வாழ்க!

ஜெ

அன்புள்ள ஜெ

நீங்கள் இந்த உரையில் சொல்லியிருப்பதைவிட மிகக்கடுமையாக மலேசியா நவீன் இலங்கைக்குச் சென்றபின் திரும்பிவந்து அங்குள்ள சூழலைப் பற்றி எழுதியிருக்கிறார். நீங்களும் அதை ஏற்று எழுதியிருக்கிறீர்கள். இந்த கூச்சலை வாசிக்கும்போது நவீன் சொன்னதே மிகமிக குறைவாகத்தான் என்ற எண்ணம் ஏற்படுகிறது

நா.ராஜீவ்

ஜெ,

மனுஷ்யபுத்திரனின் முகநூல் பக்கத்தில் உங்களைப்பற்றிய வசைகளை ஈழ எழுத்தாளர்கள் எழுதியிருந்ததைப் பார்த்தேன். ஒருவர் எழுதுகிறார். கண்ட இடத்தில் அடித்துக் கொன்றிருக்க வேண்டும் இந்தப் பார்ப்பனியக் காவி நாயை. இலக்கியவிமர்சனக்கருத்துக்கான எதிர்வினை இது.  ஈழத்தில் இத்தனை கொடூரமான சகோதரக்கொலைகள் ஏன் நிகழ்ந்தன என்ற கேள்வி எப்போதுமே தமிழர்களின் மனதில் உள்ளது. மதிக்கப்பட்டவர்கள் எல்லாம் நாயைப்போல சுட்டுக்கொல்லப்பட்ட வரலாறு நம் முன் உள்ளது. இத்தனை அழிவுக்குப்பிறகும் இவர்களில் பெரும்பாலானவர்களின் மொழிநடை இதுதான். இவர்களின் இந்தமனநிலைதான் அழிவை இன்னும்கூட உருவாக்கக்கூடியது. இந்தக்கும்பல் எத்தனை அழிவு வந்தாலும் அதற்கு தமிழகம்தான் காரணம், கலைஞர்தான் காரணம் என கூச்சலிடுவார்கள்.

ஜெயவேல்

இலங்கை வாசகர்களும், இலக்கியமும்

இலங்கை,நவீன்,அனோஜன்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

Permanent link to this article: https://www.jeyamohan.in/117861

2 pings

  1. மோகன் வாறே !

    […] ஈழ இலக்கியம் பற்றிய கூச்சல்கள் […]

  2. குட்டுதற்கோ…

    […] ஈழ இலக்கியம் பற்றிய கூச்சல்கள் […]

Comments have been disabled.