‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-44

ele1குடில் வாயிலில் தோன்றிய மூத்த காவலரான தப்தர் தலைவணங்கி “மூத்த சைந்தவ அரசர்” என்றார். ஜயத்ரதன் தன்னுணர்வு கொண்டு எழுந்து “யாதவர் சென்றுவிட்டாரா?” என்றான். “ஆம், அரசே. அவர் சென்று நெடும்பொழுதாகிறது. சைந்தவ அரசர் தங்களைப் பார்க்க வந்துள்ளார்” என்றார் தப்தர். “அவரை நான் பார்க்க விழையவில்லை” என்றபடி அருகே வந்தான் ஜயத்ரதன். சிவந்து கலங்கிய விழிகள் வெறிக்க “நான் எவரையும் பார்க்க விழையவில்லை என்றேன் அல்லவா?” என்றான். தப்தர் ஒன்றும் சொல்லாமல் நின்றார். “அவரை நான் பார்க்க விரும்பவில்லை என்று சொல்க! நான் துயின்றுவிட்டேன் என்று சொல்க!” என்றான். “அவரிடம் எவரும் எதையும் சொல்லமுடியாது, அரசே” என்றார் தப்தர். “அத்துடன் நீங்கள் அவரை பார்ப்பதே முறை” என்று தணிந்த குரலில் சொன்னார்.

ஜயத்ரதன் திகைத்து நோக்க காவலர் மேலும் குரல் தழைய “ஒருவேளை…” என்றார். அவர் சொல்வதை உணர்ந்து ஜயத்ரதன் உளம் நடுங்கினான். ஜயத்ரதனை இளமையிலிருந்து தூக்கி வளர்த்த தப்தர் அவன் உளப்போக்கை நன்கு அறிந்திருந்தார். “ஒருவேளை இது உங்கள் இறுதி இரவாக இருக்கலாம். பிறிதொரு முறை உங்கள் தந்தையுடன் சொல்லாட முடியாமல் போகலாம். சொல்லப்படாத சொற்களுடன் அவரோ நீங்களோ இங்கிருந்து செல்லலாகாது. ஆகவே அவரை எதிர்கொள்க!” என்றார். ஜயத்ரதன் தளர்ந்த கால்களுடன் அமர்ந்தான்.

“ஒருவேளை அச்சொற்கள்தான் நீங்கள் இதுநாள்வரை எதிர்பார்த்ததாக இருக்கக்கூடும். அதனூடாக உங்கள் அனைத்து முடிச்சுகளையும் அவிழ்த்து நீங்கள் விடுபடவும் கூடும்” என்றார் தப்தர். “ஆம்” என அவன் சொன்னான். “அவர் வரட்டும்… நான் பிறிதொன்று எண்ண இயலாது.” தப்தர் “ஆணை” என்றார். அவர் திரும்புவதற்குள் கதவைத் தள்ளி அகற்றித் திறந்து குடிலுக்குள் நுழைந்த பிருஹத்காயர் “தப்தரே, விலகுக! என் மைந்தனிடம் தனியாக பேச வந்துள்ளேன்” என்றார். “ஆம், அரசே” என்று தலைவணங்கி தப்தர் வெளியே சென்றார். ஜயத்ரதன் உடல் நடுங்க எழுந்து நின்றான். பின்னர் நினைவுகூர்ந்து அருகணைந்து அவர் கால்களைத் தொட்டு வணங்கினான்.

பிருஹத்காயர் இரு கைகளையும் இடையில் வைத்து நிமிர்ந்து நின்றார். அவர் முன் தன் சிறிய உடலை குறுக்கியவனாக ஜயத்ரதன் நின்றான். தன் வலக்கையிலிருந்த யோகக்கழியை அறை மூலையில் சாய்த்து வைத்தபின் பிருஹத்காயர் சென்று பீடத்தில் அமர்ந்தார். “அமர்ந்துகொள்” என்று உரத்த குரலில் சொன்னார். ஜயத்ரதன் நின்றுகொண்டிருந்தான். “அமர்க!” என்று மேலும் உரக்க ஆணையிட அவன் நடுங்கி சென்று அமர்ந்துகொண்டான். அவர் முழங்கும் குரலில் “அஞ்சவேண்டியதில்லை. உன்னை நான் பார்க்க வந்தது எதையும் மன்றாடிப் பெறுவதற்காக அல்ல. இப்புவியில் நீ உயிரோடிருப்பதை அன்றி வேறெதையும் உன்னிடமிருந்து நான் எதிர்ப்பார்க்கவும் இல்லை” என்றார்.

அந்த உரத்த ஓசையாலேயே சீற்றம் கொண்டு ஜயத்ரதன் “உயிரோடிருப்பதையே ஒரு பெரும் பொறுப்பாக எனக்களித்துவிட்டீர்கள். எனக்கு உயிரளித்ததையே நீங்கள் உங்கள் வாழ்நாளில் இழைத்த பெரும்பிழை என்று சொல்வேன்” என்றான். அவர் ஏளனத்துடன் “உனக்கு உயிரளித்தது என் விழைவால் அல்ல. அது ஓர் இன்றியமையாமை. என் ஆழத்துவெளியில் எங்கோ நான் எனக்காக ஒளித்து வைத்திருந்த கூரிய நச்சுப்படைக்கலம் நீ. இருளுலகில் பேருருக்கொண்டு எழுந்த கருங்கனல் ஒன்றின் தீச்சொல்” என்றார். வெற்றுச் சிரிப்பொன்றை உரக்க எழுப்பிய பின் “தனக்கே ஒவ்வாத ஒன்றை இயற்றுபவன் தனக்கென ஒரு படைக்கலத்தை சமைத்துக்கொள்கிறான் என்கின்றன நூல்கள்” என்றார்.

ஜயத்ரதன் சலிப்புடன் கைகளை கோத்துக்கொண்டு தலையை அசைத்தான். “ஐங்களம் அறியாத இருளாற்றல் ஒன்று நீ பிறந்த கணம் முதல் உன்னைச் சூழ்ந்து வந்துகொண்டிருக்கிறது என்றனர் நிமித்திகர். அன்று தொடங்கிய அழல் இது. உன் உயிரைப் பேணுவது மட்டுமே என் இவ்வுலகப் பொறுப்பு. ஏனென்றால் நான் உன் வழியாகவே மீள இயலும்” என்ற பிருஹத்காயர் தன் கைகளை விரித்துப் பார்த்தார். “உன்னை ஈன்றிராவிடில் என் தமையனின் குருதி என் கைகளில் இப்படி எரிந்திருக்காது” என்றபடி இரு கைகளையும் விரித்து அவனுக்குக் காட்டினார். “நான் பிறந்தபோது என் இந்த கைகளைக் கண்டு வயற்றாட்டியே அஞ்சினாள். எனக்கு எந்தை பிருஹத்காயர் என்று பெயரிட்டார். என் பிறவிச்செல்வமென்று இதை எனக்குச் சொல்லி புகுத்தினர். என் குடியின் காவல்தெய்வமே என் கைகளாக எழுந்தது என்றனர்.”

“எப்போதும் இரு தோழர்கள் என என்னுடன் இருந்தன இவை” என்றார் பிருஹத்காயர். விழிகள் சரிய அவர் ஏதோ தெய்வம் ஒன்றிடம் சொல்பவர்போல பேசினார். “இவற்றுக்கு ஒவ்வொரு நாளும் கடுமையான பயிற்சி அளிக்கப்பட்டது. அதற்கான திறன்வாய்ந்த போர்ப்பயிற்சியாளர்களை பாரதவர்ஷம் முழுக்க தூதர்களை அனுப்பித் திரட்டினார் எந்தை. என் பெருங்கைகள் புகழ்பெற்றபோது ஒவ்வொரு நாளும் பாகுபலியினர் விருஷதர்புரத்திற்கு தேடிவந்தனர். அவர்கள் அனைவரையும் அறைந்து வீழ்த்தி வென்றேன். பின்னர் அவர்களை வெல்வதையே பயிற்சியாகக் கொண்டேன். என்னை வெல்ல ஷத்ரியர்களில் பீஷ்மராலும் பால்ஹிகராலும் முனிவர்களில் பலாஹாஸ்வராலும் பரசுராமராலும் மட்டுமே இயலும் என்று நிறுவப்பட்டது.”

“மெல்ல மெல்ல என் கைகள் பொருள்மாறிக்கொண்டிருந்ததை நான் உணரவில்லை. அவை ஒவ்வொரு நாளும் புகழ்மொழிகள் கேட்டு திமிர்த்தன. ஒருநாள் அவையில் வடபுலத்துச் சூதன் ஒருவன் அவற்றைப் புகழ்ந்து பாடிக்கொண்டிருந்தபோது நான் கைகளை இறுக்கியும் தளர்த்தியும் தசைகளை துள்ளச்செய்துகொண்டிருப்பதை நானே உணர்ந்து திடுக்கிட்டேன். மேடையில் தசைத்திறன் காட்டும் மல்லனைப்போல. அரசனுக்குரிய செய்கை அல்ல அது. அவையிலிருந்தோர் விழிகளை பார்த்தேன். எவருக்கும் அது விந்தை என்றும் தெரியவில்லை. அவ்வாறென்றால் அவர்கள் நோக்க நான் அதை தொடர்ந்து செய்துவந்திருக்கிறேன். ஆனால் என்ன உணர்ச்சியை வெளிப்படுத்தவேண்டும் என்று அறியாதவர்களாக அவர்கள் தங்கள் விழிகளை என்மேல் நிலைக்கச் செய்திருந்தனர்.”

“நான் என் கைகளை அசைவற்று நிறுத்த முயன்றேன். என் முழு உளவிசையாலும் அவற்றை இழுத்தேன். அப்போது அறிந்தேன், அவை என் கட்டுப்பாட்டில் இல்லை என்று” என்று பிருஹத்காயர் தொடர்ந்தார். “அவை என் உடலை தங்கள் பீடமெனக் கொண்ட ஆழுலகத்து நாகதெய்வங்கள். அவை தங்கள் களியாட்டை தாங்களே இயற்றிக்கொண்டன. தங்கள் பலிக்கொடைகளை தாங்களே எடுத்துக்கொண்டன. மற்போர்களில் நான் எதிரிகளை பெரும்பாலும் தலையில் ஓங்கி அறைந்து கொல்வேன். அது என் விழைவல்ல என கண்டுகொண்டேன். அதன்பின் போரில் எதிரியை கொல்லவேண்டாம் என முடிவெடுத்தேன். ஒவ்வொரு கணமும் உளம்நட்டிருந்தேன். ஆனால் மற்போர் தொடங்கியதுமே சீறி நெளிந்த என் கைகள் அந்த திரிகர்த்த நாட்டு மல்லனை அறைந்து பலிகொண்டன.”

“தலை உடைந்து மூக்கில் குருதி வழிய அவன் விழுந்து கிடந்து நெளிவதை நோக்கிக்கொண்டிருந்தேன். என் கைகள் இரை விழுங்கிய மாநாகங்கள்போல நிறைவுடன் மெல்ல ஒன்றையொன்று தழுவிக்கொண்டு நெளிந்தன” என்றார் பிருஹத்காயர். “அதன்பின் அவற்றை அஞ்சத்தொடங்கினேன். அவற்றை தவிர்க்க முயன்று இறுதியில் கண்டடைந்தேன், அவை என் பிறப்புக்கு முன்னரே என்னை கண்டடைந்தவை என்று. அவற்றை என்னால் எவ்வகையிலும் வெல்லவோ தவிர்க்கவோ இயலாது. பின்னர் அவற்றுக்கு என்னை அளித்தேன். அவை என்னை கொண்டுசெல்ல ஒப்புக்கொண்டேன். பாரதவர்ஷத்தின் பெருவீரனாக என்னை நிலைநிறுத்தின அவை. என் குடியை களங்களில் வாகைமலர் சூடச் செய்தன. சிந்துநாடு அகன்றது. விருஷதர்புரம் பொலிந்தது.”

“ஆனால் அவற்றுக்கு நான் பலிக்கொடை அளித்துக்கொண்டே இருந்தேன். ஒருநாள் கனவில் வால்தழுவி தலைவிரித்து நின்ற இரட்டை நாகங்களாக அவை என் முன் தோன்றின. நான் அஞ்சி கைகூப்பி நின்றேன். உன் தமையனை பலிகொள்ள விழைகிறோம் என்றன. எந்தையரே, தெய்வங்களே என நான் கூவினேன். ஆம், அந்த பலியால்தான் நாங்கள் இனி நிறைவுறுவோம் என்றன. தெய்வங்களே, தெய்வங்களே என நான் கதறி அழுதேன். நாங்கள் உனக்கு அளிப்பவை அரியவை. நீ இன்று பேரரசு ஒன்றின் இணையரசன். அக்கொடைக்கு நிகரான பலியையே நாங்கள் விழைகிறோம் என்றது ஒரு நாகம். இனி இணையரசனுக்குரிய அரியணையில் அமரமாட்டோம் என்றது இன்னொரு நாகம். நான் கண்ணீர்விட்டு கைகூப்பினேன். நிகரென்று பிறிதொருவனை ஒப்போம். விஞ்சும் எவரையும் வெல்வோம் என்றன அவை.”

“விழித்துக்கொண்ட பின் நான் பித்தனைப்போல ஏங்கி அழுதேன். ஆனால் எவரிடமும் சொல்லவில்லை. என் மூத்தவர் முன் செல்வதையே ஒழிந்தேன். அவர் இல்லை என்றே எண்ணிக்கொண்டேன். விருஷதர்புரத்திலேயே பெரும்பாலும் இருக்காமலானேன். ஆனால் என் நாகங்கள் தங்கள் வழியை தாங்களே சமைத்து இலக்கு நோக்கி சென்றுகொண்டிருந்தன. அவை சீறி எழுந்தபோது, வலது நாகம் அவரை அறைந்து கொன்றபோது நான் உளம் உறைந்து நோக்கிக்கொண்டிருந்தேன். அந்த கணத்தில் அறிந்தேன், பெரும்தீச்சொற்கள் ஆணவத்தை இனிக்கச் செய்யும் நற்கொடைகள் என மாற்றுருக்கொண்டே வந்தமையும் என. அந்நாகங்களின் முதன்மைப் பலி நானே என.”

ஜயத்ரதன் அவரை நோக்கிக்கொண்டிருந்தான். அவர் விழிகள் வெறித்திருந்தன. “காட்டில் இத்தனை நாள் நான் என்ன செய்தேன் என்று அறிவாயா?” தன் ஏளனத்தை திரட்டிக்கொண்டு “தவம் செய்தீர்கள் என்றார்கள். தவம் செய்து எதை ஈட்டப்போகிறீர்கள் என்று நான் எண்ணிக்கொண்டேன்” என்றான் ஜயத்ரதன். “ஈட்டவில்லை, இழந்துகொண்டிருந்தேன். விழைவை, ஆணவத்தை. எஞ்சுவது உன்மேல் நான் கொண்ட இந்தப் பற்று ஒன்றே. இதை என்னால் இழக்க இயலாதென்று கண்டேன். அவ்வறிதலும் ஒரு பேறுதான். ஒருவன் தன் எல்லைகளை உணர்வதுகூட ஒருவகை ஞானம்தான்.”

ஜயத்ரதன் அவர்மேல் எழும் அந்த வெறுப்பை அவனே வியப்புடன் நோக்கிக்கொண்டிருந்தான். “நான் உயிருடனிருந்து தங்களுக்கு அளிப்பதென்ன?” என்று கேட்டான். அவரிடம் மீண்டும் அந்த வெற்றுச்சிரிப்பு எழுந்தது. “நான் விழியிழந்தவன் என ஓர் அந்தணன் சொன்ன சொல்லை நினைவுறுகிறாயா?” என்றார். ஜயத்ரதன் “ஆம்” என்றான். “உன்னால் கூன்முதுகில் அறையப்பட்ட அந்தணனின் சொல் அது… உன்னை நோக்கமுடியாதவனாகவே அன்றும் இன்றும் இருக்கிறேன். விழியிழந்தோன் மைந்தர்கள் எல்லை வகுக்கப்படாத உலகு கொண்டவர்கள். அவர்கள் சிதறியழியக்கூடும், கடந்துசென்று மீளவும் ஆகும்” என்றார் பிருஹத்காயர்.

“என் விழியின்மையால் உன்னை சூழ்ந்திருந்தேன்” என பிருஹத்காயர் தொடர்ந்தார். “உன் தலையை மண்தொடச் செய்பவன் தலைசிதறி அழிவான் என்னும் சொற்பேற்றை நான் மாருத்ரனிடமிருந்து பெற்றேன். அச்சொல்லால் அரணமைக்கப்பட்டு நீ இதுவரை வாழ்ந்தாய். எண்ணுவன அனைத்தையும் இயற்றி ஆணவத்தை பெருக்கிக்கொண்டாய். அனைத்துக் கீழ்மைகளிலும் திளைத்தாய்.” ஜயத்ரதன் கசப்புடன் புன்னகைத்து “ஆம், எனக்காக நீங்கள் இயற்றும் தவத்திற்கு ஈடுசெய்யவேண்டாமா?” என்றான். “அறிவிலி!” என்று அவர் கையை ஓங்கினார். எழுந்த கை நாகபடம் என நின்று ஆடி பின்னர் தாழ்ந்தது. இரு கைகளும் ஒன்றை ஒன்று தழுவிக்கொண்டன. நெளிந்து விலகின.

மூச்சிறுக விரல்களை சுருட்டிகொண்டு குரல் தாழ்த்தி பிருஹத்காயர் “அறிவிலி!” என்று முனகிக்கொண்டார். தலையை அசைத்த பின் “என் தமையன் துணைவியின் தீச்சொல் என் பின் உள்ளது. நான் மைந்தர்துயரால் உயிர்விடுவேன் என. நான் தப்பி ஓடிக்கொண்டிருப்பது அச்சொல்லில் இருந்தே. என் தவம் அதற்காகவே” என்றார். அவன் விழிகளை நோக்கி நிலைத்த விழிகளுடன் “நான் விண்புகும் பொருட்டு நீ இங்கிருக்கவேண்டும். எனது நீர்க்கடனை நீ இயற்ற வேண்டும். மூச்சுலகில் நீ அளிக்கும் ஒரு கைப்பிடி நீர் எனக்கு வந்து சேரவேண்டும். இப்பிறவியில் தெய்வங்களிடம் நான் கோருவது இது ஒன்றே” என்றார்.

ஜயத்ரதன் “அத்தனை மைந்தரையும் தந்தையர் இக்கடனால் கட்டி இப்புவியில் நிறுத்தியிருக்கிறார்கள்” என்றான். “அது தெய்வங்கள் மைந்தனுக்கும் தந்தைக்குமிடையே போடும் பிணைப்பு” என்று பிருஹத்காயர் சொன்னார். “இந்தக் கைகளால் உன்னை நான் தொட்டதில்லை. ஒவ்வொரு நாளும் கணமும் உன்னையே எண்ணிக்கொண்டிருக்கிறேன். நூறுநூறாயிரம் முறை சித்தத்தால் உன்னைத் தழுவி உச்சிமுகர்கிறேன். இப்புவியில் நாம் மிக விரும்பியவற்றை துறப்பதே தெய்வங்களுக்கு நாம் அளிக்கும் மிகச் சிறந்த பலிக்கொடை என்பார்கள். நான் உன்னைத் தொடும் விழைவையே மாருத்ரனுக்கு அவியென அளித்தேன்.”

“உன்னை பார்க்கையில் எல்லாம் என் கை என்னை மீறி எழுந்து உன்னை தொட வருவதை கண்டேன். ஆகவேதான் உன்னை முற்றாகவே தவிர்த்தேன். நாட்டையும் நகரையும் விடுத்து காடேகினேன்” என்றார் பிருஹத்காயர். “இக்கணம்கூட என் உடலும் உள்ளமும் ஏங்கும் ஒரே இன்பம் உன்னை தொடுவதுதான். அதை உள்ளத்தால் ஒறுக்கும்தோறும் வளர்ந்து என்னை சூழ்ந்திருக்கிறது. இக்கைகளை பார், இவை உன்னைத் தொடுவதற்காக துடிக்கின்றன.” ஜயத்ரதன் சிரித்தபடி எழுந்துகொண்டு “இல்லை தந்தையே, அவை என்னை அறைவதற்காகவே எழுந்தன” என்றான். அவர் “அறிவிலி!” என்றார். “இன்று அவையில் எழுந்தது முதல் பலமுறை நீங்கள் என்னை நோக்கி கையோங்கிவிட்டீர்கள்” என்றான் ஜயத்ரதன்.

“இப்பிறப்பில் உனைத் தொடும் பேறு எனக்கில்லை” என்றார் பிருஹத்காயர். அவர் குரல் உடைந்தது. “நான் மண் நீங்கும்போது இறுதியாகக்கூட உன்னை தொடலாகாதென்று நோன்பு கொண்டிருக்கிறேன். விண்ணில் நீ வந்து சேர்கையில் அங்கு நின்று இரு கைகளாலும் உன்னை அள்ளி நெஞ்சோடணைத்து உன் குழல் மணத்தை முகர்வேன். இங்கு நான் எஞ்சவிட்டுச் செல்லும் அனைத்தையும் அங்கு பெறுவேன்.” அவர் உதடுகள் நெளிய முகத்தை இறுக்கியபடி தலைகுனிந்தார். உடல் நடுங்கிக்கொண்டே இருந்தது.

“நீ அங்கு வரவேண்டுமெனில் நான் உன்னால் விண்ணேற்றப்படவேண்டும். நீ என்  மைந்தனென அங்கு வந்து சேரவேண்டும்…” என்றபோது அவர் இரப்பதுபோல தன் கைகளை நீட்டினார். தன் அகம் நெகிழ்வதைக் கண்டு அஞ்சி அதை நோக்கி தன்னிழிவுகொண்டு ஜயத்ரதன் உளம்பின்னடைந்தான். சலிப்புடன் “உங்கள் மேல் நம்பிக்கை கொள்க! உங்கள் கடுந்தவத்தால் சூழப்பட்டவன் அல்லவா நான்?” என்றான். “ஆம், உன்னை அவர்கள் அணுகவே முடியாது. அவ்வாறு படைசூழ்கைகளை உடைத்து அணுகிவந்து உன்னை அவன் கொன்றால் அவன் தலைவெடித்துச் சாவான். அதை அவனை ஆளும் இளைய யாதவன் அறிவான். நீ இரு நிலைகளில் காக்கப்பட்டவன்” என்றார். “ஆனால் இன்று அவையில் நிகழ்ந்தது என்ன என்று பின்னர்தான் உணர்ந்தேன். அது என்னை அச்சுறுத்துகிறது.”

முதல்முறையாக ஜயத்ரதன் உளக்கூர்மை அடைந்தான். “இன்று கொல்லப்பட்ட மைந்தன் அபிமன்யு மட்டும் அல்ல” என்றார் பிருஹத்காயர். “கௌரவப் பேரரசின் பட்டத்து இளவரசன் லக்ஷ்மணன் களம்பட்டிருக்கிறான். அதைப்பற்றி ஒரு சொல்கூட அவையாடலில் எழவில்லை. துரியோதனனும் துச்சாதனனும்கூட அதைப்பற்றி பேசவில்லை.” அதை அப்போதுதான் உணர்ந்து ஜயத்ரதன் “ஆம்” என்றான். “ஏன்?” என்றார் பிருஹத்காயர். ஜயத்ரதன் வெறுமனே நோக்கினான். “அபிமன்யு அறம்கடந்து கொல்லப்பட்டமை அவர்கள் அனைவரையும் துன்புறச் செய்கிறது. அதை கடந்துசெல்ல முயல்கிறார்கள்” என்றார் பிருஹத்காயர்.

“ஆம், அது இயல்பே” என்றான் ஜயத்ரதன். “இந்தப் போரில் இதுவரை நாம் அறம் மீறவில்லை. அவர்கள் அறம் மீறும்போதுகூட கௌரவ அரசர் நெறிநின்றே போரிடுகிறார்.” பிருஹத்காயர் “அபிமன்யுவின் இறப்புக்கு கௌரவப் படை துயர்கொண்டது. அவனை வாழ்த்திக் கூவியது” என்றார். “அபிமன்யு துரியோதனரால் வளர்க்கப்பட்ட மைந்தன்” என்றான் ஜயத்ரதன். “எண்ணுக மூடா, உடனிறந்தவன் பட்டத்து இளவரசன் லக்ஷ்மணன்! பேரியல்பும் கனிவும் கொண்டவன். நிறையுளத்தான் என குடிகளால் கொண்டாடப்பட்டவன்” என்றார் பிருஹத்காயர். “ஆயினும் கௌரவப் படை அபிமன்யுவுக்காகவே துயருறுகிறது.” ஜயத்ரதன் “அவர்களுக்கும் பிழையுணர்வு இருக்கலாம்” என்றான்.

“அறிவிலி!” என்றார் பிருஹத்காயர். “அந்தப் பிழையுணர்வு எங்கு சென்று நிற்கும் என உணர்கிறாயா? அவர்களின் ஆழுளம் பிழைநிகர் செய்ய விழையும். அதன்பொருட்டு உன்னை அவர்கள் பலியிடவும் கூடும்.” ஜயத்ரதன் சிரித்துவிட்டான். “சிரிப்பதற்குரியதல்ல இது. மானுட உள்ளங்களின் ஆடல் தெய்வங்களுக்கு நிகரான அறியமுடியாமையை சூடியது. அவர்கள் அறிந்து செய்யமாட்டார்கள். ஆனால் ஏதோ ஒன்று நிகழ்ந்து இப்பிழையுணர்வின் பெருந்துன்பத்திலிருந்து விடுதலைகொள்ள முடியுமென்றால் நன்றே என்று எண்ணுவார்கள்” என்றார் பிருஹத்காயர்.

“தனித்தனியாக அவர்கள் உன்னை இழக்க எண்ணம் கொள்ளமாட்டார்கள். உன்மேல் பேரன்புகூட கொண்டிருக்கலாம். ஆனால் கூட்டாக உள்ளங்களை ஆள்வது பிறிதொரு தெய்வம். அது தனிமானுடரின் நெறிகளுக்கும் அறவுணர்வுக்கும் அப்பாற்பட்டது. தனிமானுடர்களாக அவர்கள் கொள்ளும் விழைவுகளையும் உணர்வுகளையும்கூட அது பொருட்படுத்துவதில்லை. வஞ்சினம் உரைத்து வெற்றி விழைந்து எழும் தனியர்களின் தொகைகளான பெரும்படை கூட்டாக தோல்வியையும் முற்றழிவையும் விரும்பி அடையக்கூடும் என்பதை நூல்கள் சொல்கின்றன” என்றார் பிருஹத்காயர். “அவர்களின் அந்தக் கூட்டு எண்ணம் உன்னை கொல்ல வழியமைக்கக்கூடும் என்று தோன்றியது. அவர்களை நம்பி உன்னை விட்டுவிடுவது மடமை என எண்ணினேன். ஆகவேதான் இங்கே வந்தேன்.”

“பிறிதொரு சொல்லில் இதையே கிருதவர்மரும் சொன்னார்” என்றான் ஜயத்ரதன். “என்ன?” என்றார் பிருஹத்காயர். “ஒன்றுமில்லை” என்றான் ஜயத்ரதன். பிருஹத்காயர் “நான் அஞ்சுவது இளைய யாதவனை. உனக்குக் காப்பென்று ஆகும் என் தவப்பேறை வெல்லும் வழி ஒன்றை அவன் கண்டுகொள்ளக்கூடும். அது என்ன என்று அறியேன். ஆனால் அவனால் அதுவும் இயலும்” என்றார். எழுந்து நிலையின்மையுடன் அறைக்குள் சுற்றி வந்தார். “என்னால் நான் செய்யவேண்டியதென்ன என்று முடிவெடுக்க இயலவில்லை. ஆனால் உன்னுடன் இருக்கவேண்டும் என்று தோன்றியது. அனைத்து திசைகளில் இருந்தும் உனக்கு உயிரிடர் வரக்கூடும்.”

ஜயத்ரதன் “நான் சலித்துவிட்டேன். நான் அஞ்சவில்லை என்று சொல்லமாட்டேன். ஆனால் அஞ்சி அஞ்சிப் பதுங்குவது என் இயல்பல்ல” என்றான். “ஒருநாள்தான்… நாளை பகலந்தி முடிய ஒருநாள். அதன்பின் நீ வாழ்வாய். நான் வெல்வேன். இப்பிறப்பிலேயே என் தீச்சொல்முடிச்சை அவிழ்த்துவிட்டு விண்ணேகுவேன்” என்றார் பிருஹத்காயர். “நான் துயில்கொள்ளவேண்டும்” என்றான் ஜயத்ரதன். “துயில்க! நானும் உன்னுடன் இக்குடிலிலேயே இருக்கிறேன்.” ஜயத்ரதன் “இங்கா?” என்றான். “ஆம், உன்னை நான் தனியாக விடக்கூடாது…” என்றார் பிருஹத்காயர். ஜயத்ரதன் பெருமூச்சுவிட்டான்.

குரல் கனிய பிருஹத்காயர் சொன்னார் “படுத்துக்கொள். அனைத்தையும் மறந்து துயில்கொள்… தந்தை இருக்கிறேன். என் அனைத்து ஆற்றல்களும் உனக்காகவே.” ஜயத்ரதன் உளம் உடைந்தான். மஞ்சத்தில் ஓசையுடன் அமர்ந்து கைகளால் முகம்பொத்தி விசும்பி அழத்தொடங்கினான். அவர் “அஞ்சாதே, மைந்தா. உன்னுடன் தவம் நிறைந்த நான் இருக்கிறேன். என்னுடன் மாருத்ரனின் அருள் உள்ளது. நீ வாழ்ந்து நிறைவுறுவாய்” என்றார். “தந்தையே…” என்றான் ஜயத்ரதன். “நீங்கள் என்னை தொட்டிருந்தால் நான் பிறிதொருவனாக ஆகியிருப்பேனா? இவ்விருளும் அலைக்கழிப்பும் அற்றவனாக சிறப்புற்றிருப்பேனா?”

அவன் சொற்கள் பிருஹத்காயரை நடுக்குகொள்ளச் செய்தன. “என்னை தொடுக… என்னை தழுவுக! குழவிப்பருவத்திலிருந்தே நான் விழைந்த ஒன்றை இன்றேனும் நான் அடைகிறேன்…” அவர் அறியாது எழுந்தபின் அமர்ந்துகொண்டு “வேண்டாம்” என்றார். “அவள் விழிகள் என் கண்முன் என தெரிகின்றன. வஞ்சம் ஒன்றே கதிரோன் என நாளும் விடியும் உலகில் வாழ்பவள். சிதையில் எரியும் வலியை கணம் கணமென அறியும் காலமுடிவிலியில் இருப்பவள். அவளுடைய தீச்சொல்” என்றார். ஜயத்ரதன் விழிகளில் நீருடன் அவரை நோக்கி அமர்ந்திருந்தான். “வேண்டாம், மைந்தா… இப்பிறவியில் வேண்டாம். என் கைகள்…” என்றார்.

“ஆம்” என அவன் பெருமூச்சுவிட்டான். கண்களை துடைத்துக்கொண்டான். அவர் “நாம் விண்ணுலகில் தழுவிக்கொள்வோம்” என்றார். அவன் இகழ்ச்சியுடன் உதடுகள் வளைய “விண்ணுலகு ஏகுவதற்கு முன் இங்கேயே உங்கள் கண்முன் நான் இறந்தால் என்னை தழுவிக்கொள்க! என் தலையை நெஞ்சோடணைத்துக்கொள்க! நான் அதை உணரப்போவதில்லை என்றாலும் இப்புவியில் நான் கொண்ட விழைவு நிறைவேறட்டும்” என்றான். துயர்மிக்க குரலில் “மைந்தா…” என்றார் பிருஹத்காயர். அவன் நோக்கை திருப்பிக்கொண்டான். அவர் சுவரில் விழுந்திருந்த அவன் நிழலை நோக்கினார். அதை தொடுவதற்காக கைநீட்டி பின்னர் தவிர்த்துக்கொண்டார். அவன் அதை உணர்ந்து மெய்ப்புகொண்டான். ஆனால் திரும்பி அவரை நோக்கவில்லை.

அவருடைய நீள்மூச்சொலி கேட்டு அவன் எண்ணம் கலைந்தான். திரும்பி அவரை நோக்கியபோது அவருடைய வலக்கையின் நிழல் தன் தலையை தொட்டுக்கொண்டிருப்பதை கண்டான். மரவுரி அணிந்து கல்மாலையும் உருத்திரவிழிமணிக் குண்டலங்களும் சடைமுடிப்பரவலுமாக அவர் மூவிழியன் என்று தோன்றினார். விழியிமைக்கும் ஒரு கணத்தில் முகத்தோற்றம் மாற விழியிழந்தவராகத் தெரிந்தார். அவன் நெஞ்சு துடிக்க கூர்ந்து நோக்கினான். விழியின்மையே அவர் முகமெங்கும் நிறைந்திருந்தது. தலையை திருப்பியிருந்தமையும், வாய் சற்று திறந்திருந்ததும் எல்லாம் திருதராஷ்டிர மாமன்னரையே நினைவுறுத்தின. இறுதியாக அவரை அஸ்தினபுரியின் அரண்மனையில் கனவுருத் தோற்றமாகக் கண்டதை அவன் நினைவுகூர்ந்தான். அப்போதும் அவர் விழியிழந்தவராகவே தோன்றினார்.

சிலகணங்கள் நோக்கியபின் மஞ்சத்தில் படுத்து கால்களை நீட்டிக்கொண்டான். அவர் பீடத்தில் அசைந்து அமர்ந்தார். அவன் நோக்காமல் “தாங்கள் படுத்துக்கொள்வதென்றால்…” என்றான். “தேவையில்லை, நான் துயிலப்போவதில்லை” என்றார் பிருஹத்காயர். அவன் கண்களை மூடிக்கொண்டான். கைகளை மஞ்சத்தில் படியவைத்து உடலை தளர்த்திக்கொண்டே இருந்தான். உடலில் களைப்பு நிறைந்து எடையுடன் பரவியிருந்தாலும் துயில் வரவில்லை. உடல் களைப்பை துறந்த பின்னர்தான் உள்ளம் துயிலை நாடும் போலும். ஏனென்றால் அது துயிலுக்குள் பிறிதொரு விழிப்பை அடைகிறது. அந்தக் கனவுள்ளத்திற்கு ஊக்கம்கொண்ட உடல் தேவையாகிறது.

அந்த ஒருநாளில் நிகழ்ந்தவை பற்றிய நினைவு அவனை திகைப்படையச் செய்தது. பற்பல காலஅடுக்குகளாக ஒரு முழு வாழ்க்கையே நிகழ்ந்துமுடிந்ததுபோல. திரும்பச் சென்று ஒவ்வொன்றையும் மீட்டு எடுக்கமுடியும் என ஏன் தோன்றுகிறது? அபிமன்யு எழுந்து வரலாம். லக்ஷ்மணன் தோன்றலாம். இழக்கப்பட்டவை அனைத்தும் மீளலாம். அதற்கான வாய்ப்பு இப்புடவியில் எங்கோ இருக்கக்கூடும். அருந்தவத்தால் அதை அடையமுடியும். ஆனால் அருந்தவம் இப்புவியின் எளிய துயர்களை வெல்லவும் இன்பங்களை அடையவும்தான் என்றால் எத்தனை சிறுமைகொண்டது அது! ஆயினும் கேட்ட கதைகளில் அனைவருமே இப்புவியில் பொருள்கொள்ளும் ஒன்றுக்காகவே புவிதுறந்து தவம் இயற்றியிருக்கிறார்கள். இதோ, இவர்கூட அவ்வாறுதான்.

பின்னர் விழித்துக்கொண்டபோது உடல்நடுங்கிக்கொண்டிருந்தது. எழுந்தமர்ந்து அறைமூலையில் பீடத்தில் அமர்ந்து திறந்த கதவினூடாக வெளியே நிறைந்திருந்த இருளை நோக்கிக்கொண்டிருந்த பிருஹத்காயரை பார்த்தான். அவருடைய பெரிய கைகள் ஒன்றையொன்று முத்தமிட்டுத் தழுவி பின்னி நெளிந்துகொண்டிருந்தன. அவனை அஞ்சி விழித்துக்கொள்ளச் செய்த கனவில் அவை இரு கரிய நாகங்களாக மாறி அவர் உடலில் இருந்து வழிந்திறங்கி அவனை நோக்கி வந்து உடலைச் சுற்றிக் கவ்வி இறுக்கி தலையை விழுங்கும்பொருட்டு வாய் திறந்து அணுகின என்பதை நினைவுகூர்ந்தான்.

முந்தைய கட்டுரைஎழுத்தாளனும் வாசகியும்
அடுத்த கட்டுரைசந்தையும் திருவிழாவும்