விமானநிலையப் பிச்சை

Tamil_News_large_1775293

நான் உலகின் சிறிதும் பெரிதுமான பல விமானநிலையங்களில் இருந்து பயணம் செய்திருக்கிறேன். ஆப்ரிக்காவின் மிகச்சிறிய விமானநிலையங்களில்கூட. இந்தியாவிலேயே ராய்ப்பூர் போன்ற மிகமிகச்சிறிய விமானநிலையங்களில் இருந்தும் விமானம் ஏறியிருக்கிறேன். இதுவரை வேறெங்குமே காணாத ஒரு வழக்கம் தமிழக விமானநிலையங்களில் உண்டு. கழிப்பறைப் பிச்சை.

சென்னை, திருச்சி இரு விமானநிலையங்களிலும் கழிப்பறைகளில் துடைப்பத்துடன் சீருடையில் நின்றிருக்கும் பணியாளர்கள் கைநீட்டி பிச்சை எடுப்பார்கள். சென்னையில் காகிதக் கைக்குட்டையை கத்தையாக கையில் வைத்துக்கொண்டு ஒருவர் நிற்பார். நாம் கழிப்பறையிலிருந்து ஈரக்கையுடன் அங்குமிங்கும் தேடி வெளியே வந்தால் அந்த கைக்குட்டையில் ஒன்றை எடுத்து நீட்டி காசு கேட்பார். கழிப்பறைக்குள் நின்று கும்பிட்டு “குடுத்திட்டுப்போங்க சார்!” என அதட்டுவார்கள் சிலர்.

சென்ற 27-1-2019 மாலை கோவை விமானநிலையத்திலிருந்து டெல்லி கிளம்பியபோது கழிப்பறைக்குள் ஒருவர் துடைப்பத்துடன் நின்றார். நான் திரும்பும்போது கும்பிட்டு “காசு குடுங்க” என்றார். நான் “என்னய்யா பிச்சை எடுக்கிறியா?” என்றதும் “சரி சரி போங்க” என்றார். நான் உண்மையில் கூசிப்போனேன். விமானநிலையம் என்பது ஒரு நாட்டின், ஒரு நகரின் வரவேற்பறை. அங்கே இச்சிறுமையை பரிமாறுவது நம்மை நாமே அவமதித்துக்கொள்வதுபோல. அத்துடன் இந்த ஊழியர்கள் எவரும் குறைவான ஊதியம்பெறும் அடிப்படைத் தொழிலாளர்கள் அல்ல. இதில் ஊதியம் உண்டு என்பதனாலேயே வழக்கமாக கழிப்பறைப் பணிகளுக்கு வரும் அடித்தள மக்களை பின்தள்ளி இதில் பிறர் ஈடுபடுகிறார்கள். அவர்களுக்கு இந்தப்பிச்சை ஓர் உபரி வருமானம். ஆனால் ஒரு நகரையே கீழ்மைசெய்து இதை ஈட்டுகிறார்கள்.

நான் கோவை விமானநிலைய நிர்வாகத்திற்கு மின்னஞ்சல் வழியாக ஒரு புகார் அளித்தேன். எந்த மறுமொழியும் இல்லை. ஆகவே டெல்லி விமானநிலைய நிர்வாக அமைப்புக்கு இன்னொரு கடிதம் அனுப்பினேன். விசாரித்து நடவடிக்கை எடுப்போம் என்று ஒரு மின்னஞ்சல் வந்தது. என் புகாருக்கு ஓர் எண்ணும் அளிக்கப்பட்டது. கோவை விமானநிலைய அதிகாரிகளுக்கு அவர்கள் அளித்த கடித நகலும் எனக்கு அனுப்பப்பட்டது.

ஒருவாரம் கழித்து நேற்று 3-2-2019 காலை கோவை விமானநிலையம் வந்திறங்கினேன். அதே கழிப்பறையில் இன்னொருவர் சீருடையுடன், துடைப்பத்துடன் நின்று பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். அவரை ஒரு புகைப்படம் எடுத்து மேலும் ஒரு புகாருடன் மீண்டும் அனைத்து அதிகாரிகளுக்கும் அனுப்பினேன். மீண்டும் அதே மின்னஞ்சல்கள் அச்சு அசலாக அப்படியே வந்தன. அவை அனைத்துமே தானியங்கி மின்னஞ்சல்கள். இக்குறைகளை வாசிக்க மறுமுனையில் ஆளே இல்லை.

இந்தியா கணினிமயமாக ஆனதன் சாதனைகளில் இது ஒன்று. ரயில், விமானம், தூய்மை இந்தியா என எதைப்பற்றியும் புகார் அளிக்கலாம். உடனடியாக பணிவான எதிர்வினைகள் வரும். அரசு இயந்திரம் செயல்படுகிறது என்னும் சித்திரம் உருவாகும். ஆனால் அது வேறு இயந்திரம். எந்தப் புகாருக்கும் எந்தவகையான மாற்றமும் அதிகாரிகளிடமிருந்து வராது. அவர்கள் வேறெங்கோ இருக்கிறார்கள்.

இனி ஒன்றும் செய்வதற்கில்லை. கோவை மக்களிடம்தான் முறையிடவேண்டும். இப்படி விமானநிலையத்திற்குள் பிச்சை எடுப்பது கோவையை இழிவுசெய்வது. கோவை இன்று ஒரு தொழில்மையம், பண்பாட்டு மையம், சுற்றுலாமையமாக ஆகிவருகிறது. முதல்முறையாக இங்கே வரும் ஒருவரின் உள்ளத்தில் மிகக்கீழான ஒரு சித்திரத்தை இது உருவாக்கிவிடும். அனைத்துவகையிலும் கோவைக்காரர்களுக்கு இது இழப்பு. அவர்கள் பலதளங்களில் மெல்ல மெல்ல உருவாக்கும் எல்லா நற்பெயர்களும் அழியும். அது பொருளியலாகக்கூட இழப்பே. சேவை, கச்சிதம், மரியாதை போன்றவைகூட வணிகமதிப்பு பெற்றுவரும் காலம் இது. கோவையின் மூத்தகுடிகள் இதை கருத்தில்கொள்ளவேண்டும்.

முந்தைய கட்டுரைஜெயமோகன் பார்வையில் ஈழ இலக்கியம்: ரஸஞானி
அடுத்த கட்டுரைகல்பற்றா நாராயணனுக்கு விருது