புதியவாசகர் சந்திப்பு – கடிதங்கள்

mqdefault

புதியவாசகர் சந்திப்பு – ஈரோடு

அன்புநிறை ஜெ

சமீப காலத்தில் நாவல்கள் படித்துக்கொண்டிருக்கும் பொழுது என் மனம் பெரும் சஞ்சலத்திற்குட்பட்டது. முக்கியமாக கிருஷ்ணப்பருந்து, ஒரு புளியமரத்தின் கதை மற்றும் சில சிறுகதைகள் போன்றவற்றை வாசிக்கும் பொழுது, கதாபாத்திர உருவாக்கம் பற்றி பல எண்ணங்கள், பல சந்தேகங்கள் என் மனதில் எழுந்தது. இந்நிலையில், புதிய வாசகர் சந்திப்பிற்கான அறிவிப்பு கையில் தானாக வந்தடைந்த அமிர்தம் போன்ற பரவசத்தை கொடுத்தது. மிக்க மகிழ்ச்சி பெயர் பதிவு செய்துள்ளேன். இருபது நபர்களில் ஒருவராக தேர்வு ஆவேன் என்று நம்புகிறேன்.

பொதுவாக தங்களின் கூடுகைகள் ஒரு வகையில் புதிய வாசகர்களுக்கு ஒரு மினி விருப்ப பயிற்சி பட்டறையாகத்தான் இருக்கும். இந்நிலையில் தனிபட்ட முறையில் புதிய வாசகர்களுக்கான சந்திப்பு என்பது மிகப்பெரிய அறிவார்ந்த முன்னெடுப்பு, எங்களைப் போன்ற புதிய வாசகர்களின் மேல் தங்களின் நம்பிக்கையின் வெளிப்பாடு. சென்ற முறை ஈரோடு வெண்முரசு சந்திப்பிலும், பல புதிய தகவல்கள்களை எடுத்துக்கொண்டேன். இலக்கியம் பற்றி பேசுவதற்கு அத்தகைய ரம்மியமான இயற்கை எழில்லார்ந்த இடம் எவ்வளவு முக்கியத்துவம் என்றும், அது மிகச்சரியான தேர்வு, நம் மனமும் இலகுவாக இலக்கியத்தில் நாட்டம் செலுத்தும் என்பதையும் அனுபவித்து புரிந்துக்கொண்டேன்.

சந்திப்பில் சந்திக்க, மேலும் பல புதிய இலக்கிய கூறுகளை தங்கள் ஆசியுடன் கற்றுக்கொள்ள ஆர்வமுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்

அன்புடன்

ரா.பாலசுந்தர்

அன்புள்ள ஜெ

புதியவாசகர் சந்திப்பு நிகழ்ச்சிகளை நீங்கள் தொடர்ச்சியாக நடத்திவருகிறீர்கள். இந்நிகழ்ச்சிகளின் பயன் என்ன என்று என்னால் உணரமுடிகிறது. எவ்வளவுதான் வாசித்தாலும் ஓர் ஆளுமையின் உண்மையான தொடர்புதான் நம்மை ஒரு துறைக்குள் ஆழமாகச் செலுத்துகிறது. நான் ஒரு கணக்காயர், வழக்கறிஞர். என் துறையில் நான் உண்மையான கல்வியை எனக்கு சீனியராக இருந்த ஒருவர் வழியாகவே அடைந்தேன். அவரைக் கடந்துசெல்வதற்கும்கூட அந்த தொடக்கம் தேவைப்படுகிறது

தமிழிலக்கியச் சூழலில் சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், கி.ராஜநாராயணன், தேவதச்சன் போன்றவர்களின் தனிப்பட்ட உரையாடல்கள் வழியாக அடுத்த தலைமுறை வாசகர்கள் உருவாகி வந்ததைப்பற்றி நீங்கள் நிறையவே எழுதியிருக்கிறீர்கள். இன்றைய சூழலில் அவர்கள் செய்த்தை கொஞ்சம் அமைப்பு உதவியுடன் விரிவாகச் செய்கிறீர்கள். சுந்தர ராமசாமி நடத்திய காகங்கள் அமைப்பு போன்றவை செய்த பணிக்குச் சமானமானது இது. இப்போது தேவிபாரதியும் இதேபோல ஒரு சந்திப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கிறார். பெருமாள்முருகன், எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோரும் ஒழுங்கு செய்திருக்கிறார்கள். இது ஒரு முக்கியமான முயற்சி. என் வாழ்த்துக்கள்

டி.ராமகிருஷ்ணன்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-44
அடுத்த கட்டுரைவானம் வசப்படும் காட்டும் அன்றைய உலகம்