இந்த ஆண்டுக்கான மொழியாக்கத்திற்குரிய சாகித்ய அக்காதமி விருது குளச்சல் மு யூசுப் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழின் முக்கியமான மொழிபெயர்ப்பாளர் யூசுப். மலையாள வட்டாரவழக்கை மிகச்சிறப்பாக தமிழாக்கம் செய்தவர். தமிழில் அதற்கு நெருக்கமான நாஞ்சில்நாட்டு வட்டாரவழக்கை கையாள்பவர். குறிப்பாக வைக்கம் முகம்மது பஷீர், புனத்தில் குஞ்ஞப்துல்லா போன்றவர்களின் மலபார் இஸ்லாமிய மொழிவழக்கை அழகிய நாஞ்சில் இஸ்லாமிய புழக்கமொழியில் அவர் மொழியாக்கம் செய்யும்போது ஏறத்தாழ மூலத்தின் சுவை நிகழ்கிறது.
சரளமான உரைநடை அவருடையது, அதே சமயம் அது பெரும்பாலும் மூலத்தை அணுக்கமாகத் தொடரும் மொழியும்கூட. அவருடைய நூல்கள் அனைத்துமே வாசகனை ஈர்த்துச்செல்லும் ஒழுக்கு கொண்டவை என்பதனால் ஏமாற்றாதவை. மொழியாக்கத்தில் இது இன்று மிக முக்கியமான ஒரு தகுதி.
மொழியாக்கம் செய்பவரின் அகமொழியின் ஒழுக்கே உரைநடையின் அழகாக வெளிவரவேண்டும் என்பது என் கொள்கை. அதை யூசுப்பின் மொழிநடையில் காணலாம். அந்த நடையிலுள்ள ஒழுக்கு அவருடைய உள்ளத்தின் வெளிப்பாடு. மூல ஆசிரியர் யூசுப்பின் மொழிநடையில் அவர் செலுத்தும் செல்வாக்காகவே வெளிப்படுகிறார். புனத்தில் குஞ்ஞப்துல்லாவின் மீசான்கற்களில் யூசுப்பின் மொழிநடை நவீனத்துவச் சாயல் கொண்டதாகவும் பஷீரின் கதைகளில் அதுவே நாட்டார்தன்மையும் விளையாட்டுமனநிலையும் கொண்டதாகவும் இருப்பது இதனால்தான். திருடன் மணியன்பிள்ளையின் கதை அவருடைய மொழியாக்கத் திறனுக்கு சிறந்த உதாரணம்.
யூசுப்புக்கு வாழ்த்துக்கள்.