பத்ம விருது – கடிதங்கள்

nambi-narayanan-759

தேசத்தின் இரு தலைவணங்குதல்கள்.

கே.கே.முகம்மது அவர்களுக்கு பத்ம விருது

அன்புள்ள சார்!

இஸ்ரோ முன்னாள் அறிவியலாளர் திரு நம்பி நாராயணன் அவர்களுக்கு பத்ம பூஷன் அறிவிதுள்ளார்கள்.

இரண்டு மாதத்திற்கு முன்பு அவரை எங்கள் பத்திரிகைக்காக பேட்டி எடுத்தேன். பேட்டி முடிக்கும் தருவாயில் உங்களை தெரியுமா என்று கேட்டேன்… அவருடையதும் நாகர்க்கோயில் என்பதினால்.

மிகவும் சிலாகித்து பேசினார் உங்களை பற்றி. ‘இங்க மலையாளம் கலந்த தமிழ் ஒன்னு இருக்கு. அத ரொம்ப பிரமாதமா எழுதுவார் அவர். ‘ஒழிமுறி’ அப்படீன்னு ஒரு படம். பாத்திங்களா? அற்புதமான படம்… பாருங்க. அவர்தான் எழுதின்னார். நான் அவருடைய ரசிகன்… ஆனா பாருங்க இது வரைக்கும் பேசினத்தே இல்ல..’என்றார்.

எனக்கு குதூகலமாக இருந்தது.

இந்தியாவிற்கு முதல் முறையாக லீகுய்ட் ப்ரோபெல்லெண்ட் ராக்கெட் இன்ஜின் ‘விகாஸ்’ வடிவமைத்தவர். ஜியோ ஸின்ஸ்ரனிஸ்ட் என்ஜின் தொழில் நுட்பத்தை இங்கு கொண்டு வர படாத பாடுபட்டவர். யாரோ யாருக்காகவோ பின்னிய  சதி வழியில் சிக்கி ‘தேச துரோகி’யாக உளவாளி பட்டம் பெற்றவர். மிக நீண்ட சட்ட போராட்டம் செயதவர். அவருக்கு இந்தியாவின் உயர் விருது கிடைத்திருப்பது ஒரு அறத்தானின் வெற்றி என்று மகிழ்ச்சி கொள்ள செயகிறது.

அன்புடன்,

ராஜு

அன்புள்ள ஜெ

பத்ம விருதுகள் பற்றிய குறிப்புகள் மனம் நெகிழச்செய்தன. எதிர்மறைச்செய்திகளையே ஒவ்வொரு நாளும் வாசிக்கும் துரதிருஷ்டம் கொண்ட என்னைப்போன்ற எளிய வாசகர்கள் உங்கள் தளம் நோக்கி வருவதற்கான காரணம் இதில் வெளிப்படும் நம்பிக்கைதான். நம்பிக்கையூட்டும் இலட்சியவாதிகளின் அறிமுகம். இன்றைக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டதுமே அனைத்து சமூக வலைத்தளங்களிலும் பங்காரு அடிகளாருக்கு விருது அறிவிக்கப்பட்டதைப் பற்றிய காழ்ப்புகள் நக்கல்கள் கிண்டல்கள் மட்டுமே இருந்தன. அது என்னவாக இருக்கட்டும். ஒருவர் கூடவா இந்த விருதுகளை பெற்றிருக்கும் மேன்மக்கள் பற்றி அறிந்திருக்கமாட்டார்கள் என்ற ஏக்கம் எனக்கு ஏற்பட்டது. உண்மையில் கீழ்மையிலேயே திளைப்பவர்களால் அதை மட்டுமே பார்க்க முடிகிறது என நினைத்துக்கொண்டேன்.

இந்த விருதுகள் பெறுபவர்களில் பலரை நீங்கள் உங்கள் தளம் வழியாக ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறீர்கள். உண்மையில் இவ்வாறு விருதுகள் அறிவிக்கப்படும்போது நம் மொழி, மாநில எல்லைக்கு அப்பால் இந்த விருதுகள் பெற்றவர்களை விரிவாக அறிமுகம் செய்யும் குறிப்புகள் பிரசுரமாகவேண்டும். அப்படியாவது இந்த மேன்மக்களை நாம் அறிமுகம் செய்துகொள்ளவேண்டும். துரதிருஷ்டவசமாக நம் ஊடகங்களுக்கு அந்த ஆர்வம் ஏதும் இல்லை

ராம்சந்தர்

அன்புள்ள ஜெ

பத்மவிருதுகள் பெற்றவர்களைப்பற்றிய உங்கள் குறிப்பு மனம்நெகிழச்செய்தது. கே.கே.முகம்மது, நம்பி நாராயணன், நானாஜி ஆகியோரைப்பற்றி முன்னரும் எழுதியிருக்கிறீர்கள். மிகப்பெரிய சாதனைகளைச் செய்தவர்கள். தங்கள் இலட்சியங்களில் உறுதியாக நின்றவர்கள் இவர்கள். அதிலும் நம்பி நாராயணனைப்பற்றிய குறிப்பு கண்களில் நீர் வரச்செய்தது

அருண்.கே.ஆர்

முந்தைய கட்டுரைஎஸ்.ரா. – கடிதங்கள்
அடுத்த கட்டுரைஆயிரங்கால்களில் ஊர்வது