சந்தையும் திருவிழாவும்

crowd in kizhakku stall

பேருருப் பார்த்தல்

புத்தகக் கண்காட்சி – ஒரு குமுறல்

புத்தகக் கண்காட்சி 2018

இனிய ஜெயம்

இங்கே நிகழ்ந்துகொண்டிருப்பது  சந்தை அமைப்புக்கும் ,திருவிழா எனும் பண்பாட்டு அமைப்புக்கும் இடையே ஆன கயிறுஇழுக்கும் போட்டி . ஒவ்வொரு ஆண்டும் சந்தை அமைப்புதான்  வெல்வதாக தெரிகிறது . சிந்தனைக் களமும் ,செயற்களமும் ஒரு நாணயத்தின் இரு பகுதிகள் போல செயல்பட்டு ,அதன் வழியே வரலாறு தொழிற்படுகிறது எனக்கொண்டால் , சிந்தனைக் களத்தின் அடிப்படை கட்டுமானங்களை உருவாக்கும் அனைத்து காரணிகளையும் ,ஆளுமைகளும் ஒருங்கிணைக்கும் களமாக புத்தகத் திருவிழா இருக்கிறது .ஆக என்நிலையிலும் இவை புத்தக சந்தை அல்ல . புத்தகத் திருவிழாதான் . இந்த முழுமைப் புரிதலில் நின்றே தமிழ் நிலமெங்கும் இந்த திருவிழாக்கள் ஒருங்கு செய்யப்பட வேண்டும் .

அதே சமயம் தமிழகஅரசு கைவிட்டு ,பொது  நூலகங்கள் எல்லாம் பாடையில் ஏறிவிட்ட , மொபைலுக்குள் சமூகமூளை சுருங்கி விட்ட இன்றைய சூழலில், பதிப்பகங்களை அடிப்படையாக கொண்டு செயல்படும் இந்த திருவிழாக்களில், பதிப்பகங்கள் எத்தனை உள்ளே வந்தாலும்,முதலுக்கு மோசமில்லை எனும் நிலை பதிப்பகங்களுக்கு கிடைக்க வேண்டும் . மாறி மாறி குற்றம் சுமத்துவதை விடுத்து பரஸ்பரம் உரையாடி கடக்க வேண்டிய இடர் இது .

உதாரணத்துக்கு ஒன்றைப் பார்ப்போம் .ஒரு பதிப்பகம் ஒரு கடை போட முப்பத்தி ஐந்து ஆயிரம் வரை அடிப்படை தொகை ஆகும் . நூறு தலைப்புக்கு மேலே கைவசம் இருந்தால் ஒரு கடை போதாது .ஆக இரண்டு கடைக்கு எழுபதாயிரம் . பத்து நாட்கள் விழா என கொண்டால் நாளொன்றுக்கு ஒரு பதிப்பகம் எழாயிரம் செலவு செய்ய வேண்டும் ,ஆட்கள் உணவு இதர செலவு மூவாயிரம் .ஆக நாளொன்றுக்கு பத்தாயிரம் ,பத்து நாளுக்கு ஒரு லட்சம் . சராசரியாக நாளொன்றுக்கு ஒரு லட்ச ரூபாய் கல்லா கட்ட வேண்டும் . அப்படி ஆனால்தான், பத்து சதம் தள்ளுபடி ,பத்து சதம் செலவு  வரவுக்கும் செலவுக்கும் சரி எனும் நிலையில் நிற்கும் . எண்ணூறு கடைகள்  இந்த வருட சந்தையில் .   இது ஒரு பண்பாட்டு நிகழ்வு என நம்பும் ஒரு முப்பது பதிப்பகங்களை தவிர்த்து விட்டு பார்த்தால்,பிறர் சந்தைக்கு வந்து கடை போட்டு லாபம் பார்க்க வந்தவர்கள் மட்டுமே . அவர்களுக்கு கல்லா பெட்டிதான் முதல் இலக்கு .பண்பாட்டை குறித்து விழா அமைப்பாளர்கள் ஏதேனும் மட்டுருத்தினால்தான் உண்டு .

விழா அமைப்பாளர்கள் இன்னமும் கொஞ்சம் தெளிவாக திட்டமிடலும் ,ஒருங்கிணைவும் கொள்ள வேண்டிய தருணம் இது .   ஒரு பண்பாட்டு நிகழ்வு எனும் வகையில் இனி வரும் காலங்களிலேனும்  ,பாடத்திட்ட நிலவரங்களுக்கு வெளியில் செயல்படும் நூல்களுக்கு முன்னுரிமை செய்யும் வகையில் அரங்கு அமைய வேண்டும் . அந்த அரங்கிலும் தீவிர இலக்கியத்தில் செயல்படும் பதிப்பகங்கள் மையத்தில் இடம் பெறும் வகையில் அரங்கு அமைய வேண்டும்.

நான் அரங்கில் இருந்த அன்று ,ஒலி அமைப்பு ஒன்று அமைதி காத்தது ,இல்லையேல் மரண மாசு போட்டு உயிரை உருவியது .  சினிமாவில் வேலை செய்யும் எவரேனும் கொண்டு ,நல்ல ஒலி, மற்றும் ஒளி அமைப்பு அரங்குக்குள் நிர்மாணிக்க வேண்டும் .  விழாவுக்குள் எந்த அரங்கில் எந்த எழுத்தாளர்,எந்த நட்சத்திரம் ,எந்த அரசியல் ,களப்பணி ஆளுமை  வந்திருக்கிறார் ,என்ன நூல் வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கிறது என அவ்வப்போது பொது மக்களுக்கு அறிவித்துக் கொண்டிருக்க வேண்டும் .

அரங்குக்கு உள்ளே இந்த முறை போல ,காப்பிகடையும் ஓட்டலும் தொடருமானால், புகை வெளியேற ஆங்காங்கே நல்லதொரு புகை போக்கி ,ஏதேனும் பற்றிக்கொண்டால் ,அணைக்கும் வழி வகைகள் , வெளியேற இடை வழி அனைத்தும் தொழில்பட்டிருக்க வேண்டும் .அரங்குக்குள் இருக்கும் காபி கடைகளுக்கு நியாப்படி வாடகை குறைவாக போட்டு ,காபி விலை குறைவாக கிடைக்க வழி செய்ய வேண்டும் .  உபசரிப்புக்காக காப்பி வாங்கிய பதிப்பாளர் ஒருவர் அவுன்ஸ் காப்பி முப்பது ரூபாய் என அறிந்து வெலவெலத்து நிற்பதை புன்னகையுடன் நான் காண நேர்ந்தது .  அரங்கப் பாதையின் மையத்தில் சீரான இடை வெளியில் , தேவை கொண்ட பொது ஜனம் சற்றே அமர்ந்து, ஆசுவாசம் கொண்டு மீண்டும் நடக்க , பலகையில் அறைந்து நிறுத்தப்பட்ட சிறிய சிறிய நாற்காலிகள் போடப்பட வேண்டும் .  புத்தக மூட்டையை சுமந்து செல்லும் டிராலிகள் சற்றே சுற்றி வர தனி பாதை போட வேண்டும் .  மக்கள்தான் முதல் வசதி பெற வேண்டியவர்கள் .

இந்த விழாவை ஒரு பண்பாட்டு நிகழ்வாக முன்னெடுக்க ,செயல்பட்டவர்களில் முதன்மையானவர் சுருதி டிவி கபிலன் . சுருதி டிவி வசம் இம்முறை  அமைப்பாளர்கள் பில் போட்டு தீட்ட உத்தேசம் கொண்டிருந்ததாக நண்பர்கள் வாயிலாக அறிந்தேன்.  சுருதி டிவி இல் தனிப்பட்ட முறையில் ஒரு வணிகம் இருக்கவே செய்கிறது ஆனால்இந்த விழாவில்  அவருக்கும் டில்லி அப்பளம் விற்க வந்தவருக்கும்  பாரிய பண்பு பேதம் உண்டு .இது போன்ற விஷயங்களில் அமைப்பாளர்கள் மிகுந்த கவனமுடன் நடந்து கொள்ள வேண்டும்.

அனைத்தும் மேலாக இத்தகு விழாக்களில், அரசு நிகழ்த்த வேண்டிய கூறுகளை ஒவ்வொரு முறையும் ,தவறாமல் ,சோர்வு இன்றி ,தொடர்ச்சியாக  அரசு நிர்வாகத்தின் கவனத்துக்கு எடுத்துச் செல்லவேண்டியது அமைப்பாளர்கள்தான். சலுகையாக அல்ல ,ஒரு கடமையாக இந்த விஷயத்தில் அரசு செய்ய வேண்டிய விஷயங்கள் நிறைய உண்டு . ரேஷன் கார்டு தோறும் பண்டிகைக்கு ஆயிரம் ரூபாயை கொண்டு சேர்க்கும் அரசை, அதே வழியில் வருடம்தோறும்  ஒரு நல்ல நூலை ,வீடு தோறும் சென்று சேரும் வழிவகையை செய்ய வைக்க முன் நிற்க வேண்டிவர்கள்,இந்த பண்பாட்டு அசைவை நிகழ்த்தும் அமைப்பாளர்கள்தான் .  இத்தனை நல்ல விஷயத்தை முன்னெடுக்கும் அவர்கள், இவற்றையும் விரைவில்  கவனத்தில் கொள்வார்கள் என நம்புவோம் : )

கடலூர் சீனு

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-44
அடுத்த கட்டுரைவானம் வசப்படும் காட்டும் அன்றைய உலகம்