உலோகம் – கடிதம்

ulogam-47236

வணக்கம்,

நேற்று உலோகம். உள்ளம் செயல்படும் விதத்தையே நான் கவனித்துக்கொண்டிருந்தேன். சார்லஸ் எவ்வளவு கவனமாக இருந்தும் சில சமயங்களில் எப்படியும் உள்ளம் போக்குகாட்டிவிடுகிறது. கொஞ்ச காலமாகவே உள்ளம் ஏன் ஒரு நிலையில் இருப்பது ஒரு கணத்தில் சட்டென நேர் எதிர் நிலைக்கு செல்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியாமல் இருந்தது. இப்போது கூறும் சொற்களே கூட உலோகத்துக்கு பிறகு தெளிவானதே.

சில சமயங்களில் உள்ளம் ஒரு நம்பிக்கையில் மிகச் சௌகரியமாக இருந்துகொண்டு நான் இப்படி இருக்கிறேன் என்று சொல்லிக் கொள்கிறது. நான் ஒரு முறை அக்காவிடம் ஒன்றைப் பற்றிப் பேசினேன் குதூகலத்துடன், இன்ன இன்ன காரணங்களால் தான் நீ இப்படி நினைத்துக்கொள்கிறாய் என மிகச் சாதாரணமாகச் சொன்னதும் உள்ளம் பதைக்கத் தொடங்கிவிட்டது. பிறகு நேர் எதிர் திசையின் முனைக்குச் சென்று அந்த யதார்த்தத்தை ஒப்புக்கொள்ள மறுத்து நீ இதை எதற்கு அக்காவிடம் சொல்லித் தொலைத்தாய் என்று அடம்பிடித்தது. இரண்டு மூன்று நாள்கள் கழிந்து சமநிலைக்கு வந்தது. ஒரு விதமான பாவனை நிலையிலேயே இருக்கிறதோ என்று கூட நினைத்துக்கொண்டேன். பிறகு தேவதேவன் அவர்களின் ஒரு வரி நினைவுக்கு வந்தது ‘உயிரின் சுபாவம் ஆனந்தம்’. அந்தந்தக் கணத்தில் வேறேதும் நினையாமல் தீவிரமாகச் செயல்படுவது பிறகு யோசித்தால் ஏனப்போது அப்படி நடந்துகொண்டது என்று தோன்றினாலும் உள்ளம் தன் இயல்பு நிலைக்கு (அ) தான் விரும்பும் ஆனந்த நிலைக்கு ஏதோ வகையில் திரும்பிக்கொள்கிறது. கிட்டத்தட்ட ஆட்டைப்போல, நாம் ஒருபுறம் விரட்டினால் அது தீர்மானித்துவிட்ட திசைக்கு சட்டெனத் திரும்பிவிடும்.

சார்லஸின் வைஜெயந்தி உடனான பழக்கத்தில் தனது உள்ளம் எப்படியெல்லாம் ஆடிக்கொண்டிருக்கிறது என்பதில் சில இடங்களை அனுபவித்திருக்கிறேன் என்பதை இப்போது தெளிவாக உணர்கிறேன்.

இறுதியில் சார்லஸ் பொன்னம்பலத்தாரை சுட்டதற்குப் பிறகு முகத்தை உதைத்ததைப் பற்றி சார்லஸ் ஏதும் சொல்லவில்லை. ஆனால் பொன்னம்பலத்தாரின் உள்ளம் எப்போதுமே நான் நல்லவன் என்று சொல்லிச் சொல்லியே தான் உள்ளூர உணர்ந்த ஒன்றை மறைத்து பாவனையிலேயே இருக்கிறது. ஒரு முறை இருவரும் காரில் செல்லும்போது துப்பாக்கியைப் பற்றி உரையாடிக் கொள்வர், அந்த கணம் சார்லஸின் உள்ளம் தான் நம்பும் ஒன்று மறுக்கப்படுவதை விரும்பாமல் பொன்னம்பலத்தாரை முடித்துவிடவும் எண்ணுகிறது. அவரோடு நெருக்கமாக இருப்பதுபோலப் பட்டாலும் உள்ளூர அவரை எதிர்முனைக்குத் தள்ளிவிட்டிருக்கிறது. அது, எதற்கும் கையாலாகாதவன் நீ, நான் உன்னைவிட மேம்பட்டவன், என்னை மறுக்கிறாயா என்பதன் வெளிப்பாடே அந்த உதை என்று படுகிறது.

இதை நினைத்து யோசித்துப் பார்க்கும்போது எனது செயலையே எண்ணிக்கொள்கிறேன், சிலரால் நாம் மறுக்கப்படும்போது உள்ளம் ஏதோவொரு தருணத்தில் அவர்களை மறுக்க சிறுமைப்படுத்த தக்க தருணத்தில் எதிர்பார்த்திருந்து செயல்பட்டுவிடுகிறது. அது அந்த ஒரு கணம் தான். அதைத் தாண்டிய உடனே ஏன் இப்படி நடந்து கொண்டேன் என்றும் யோசிக்க வைக்கிறது. ஆனால் பின்னர் வருத்தப்பட்டு என்ன செய்வது என்றும் தோன்றுகிறது. இப்போது எண்ணிப்பார்த்தால் நாம் நம்மை கட்டுப்படுத்தி உள்ளத்தை கட்டுக்குள் வைத்திருப்பதான எண்ணத்தில் இருந்தாலும் உண்மையில் அது செயல்படுகிறதை சில வேளைகளில் மட்டுமே நாம் கவனிக்கிறோமோ என்றும் தோன்றுகிறது. ஏதோ ஒரு வகையில் ‘நான்’ என்பதை இறுகப் பிடித்திருக்கிறோம்.

சார்லஸை நோக்கி ரெஜினாவின் அந்த பார்வை, அந்த ஒரு இடம் புரிந்துகொள்ள முடியாததாக இருந்தது. முன்னால் ஏதோ ஒன்றை தவரவிட்டிருக்கிறேன் என்று பட்டும் கதையோட்டத்தை நிறுத்தி மீண்டும் திரும்ப முன்னால் செல்லவில்லை. மறுவாசிப்புக்கு வைத்திருக்கிறேன். வாசிப்பு ஒரு வகையில் நான் என்னைப் புரிந்துகொள்ளவும் தொகுத்துக் கொள்ளவும் உதவுகிறது. முன்பு மிகுந்த உளச்சோர்வில் இருந்தேன், ஒரு ஒரு ஆண்டுக்காலம் இருக்கும். காரணம் இதுதான் என்று வகுத்துக்கொள்ள முடியவில்லை, யூகமாக ஒரு வரைவை இப்போது ஒருவாறாக அடுக்கி வைத்திருக்கிறேன். அதிலிருந்து மீண்ட காரணத்தையும் யூகமாகவே யோசித்து வைத்திருக்கிறேன். ஆனால் மீண்டது ஒரே நாளில். இப்போதும் ஆச்சர்யமாகவே இருக்கிறது. இதுவும்கூட மெய்யான காரணத்தை அறிய தேவையில்லை என உள்ளத்தின் பாவனையோ என்னவோ தெரியவில்லை, சிலவற்றை அறிய முடியாமல் இருப்பதுகூட நல்லதுதான் என்றும்படுகிறது, தேடிக்கொண்டே வாழலாம், அது நல்ல இன்பமாகவும் இருக்கும்போல….

முன்பு கூறிய பிறரை மறுக்கும் தருணம் ஒன்று இன்று வாய்த்தது, ஆனால் அவ்வாறு செய்யவில்லை, உள்ளுக்குள் சிரித்துக்கொண்டேன், இப்போது நான் கொஞ்சம் விழிப்புடன் இருந்துவிட்டேன்.

இதையெல்லாம் இப்போது தாத்தா தனது இறுதியை நெருங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் அருகில் அமர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறேன். உறவுகளுக்குள் பெரிதாக காரணமின்றியே, அமர்ந்து பேசினால் ஒன்றுமில்லாத, ஆனால் பேசாமலேயே அதெப்படி அப்படி, என்று போக்குவரத்தே நின்றுபோனவர்கள், வெளிக்காட்டிக்கொள்ளாமல் இயல்பாக பேசியும்கொண்டனர். சிலர் பேசாமல் ஒத்திசைந்தும் சென்றனர். ஒரே நேரத்தில் பலரும் கூடியிருக்க ஒவ்வொரு உள்ளமும் எப்படி வெளிப்படுகிறது என்பதையும் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.  புடவியின் அருநிகழ்வு ஒன்று முடிந்து மீண்டும் துவங்குவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது.

பேரன்புடன்

பாரதி.

உலோகம் -கடிதங்கள்

உலோகம் ஒரு மதிப்பீடு

உலோகம்- சாகசம் மர்மம்

உலோகம்,கடிதம்

உலோகம்-கடிதம்

உலோகம்: கடிதம்

முந்தைய கட்டுரைமோகன் வாறே !
அடுத்த கட்டுரைநீர்க்கூடல்நகர் – 1