வானம் வசப்படும் காட்டும் அன்றைய உலகம்

vaanam vasappadum

அன்புள்ள ஐயா

வானம் வசப்படும் வாசித்தேன்.  முடிவு பெறாத ஒரு வரலாற்றுப் புனைவு , பிரபஞ்சன்  நினைவுகளை துயருடன் கிளர்த்தியது. பிரெஞ்சு  காலனியத்திற்கு அடிமைப்பட்டிருந்த புதுச்சேரி வாசிகளின் துயரும் அரசியல் சதிகளும் அடிமைகளாக விற்கப்பட்டவர்களின் வாழ்க்கையும் நிலத்தின் வாசனையுடன் வட்டார வழக்கில்  வங்கக் கடல் காற்றில் வீசிக்கொண்டிருக்கிறது.  ஒவ்வொரு 100 கிலோ மீட்டர் இந்தியாவிற்குள் பயணம் செய்யும்போதும் மக்கள் வாழ்வு முறை மாறுகிறது என்று ஓரிடத்தில் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

சில ஐயங்கள்

1 புதினத்தை முழுதாய்ப் புரிந்து கொள்ள மூலப் படியாகிய ஆனந்தரங்கம்பிள்ளையின் டைரி நூலையும் சேர்த்துப் படிக்க வேண்டுமா?

2 இந்த புதினத்தை , (டைரிக்குறிப்பு நூலை அடிப்படையாகக் கொண்டு) எழுதி நிரப்பும் ஒரு களி விளையாட்டை அறிவிக்கிறீர்களா? அது ஒரு நல்ல எழுத்துப் பயிற்சியாகக் கூடுமா? (காப்புரிமை குறுக்கிடாத பட்சத்தில்) (முதலில் நினைவுக்கு வருபவர் கடலூர் சீனு)

3 இடிக்கப் பட்ட வேதபுரிசுவரர் கோயில் திரும்பக் கட்டப் பட்டதா?

4 பிரென்சு அதிகாரிகள் 1750 களில் பிரிட்டிஷ் போலவே கொடூரமாக இருந்திருக்கிறார்கள். கவர்னரே லஞ்சம் பெறுகிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. பிரிட்டிஷ் அரசும்  இது போன்றதா?  (ஊமைச் செந்நாயில் இது குறித்த வரைவு உள்ளது. மேலும் வேறு இடங்களிலும் அதிகாரிகள் ஊழலை ஆதரித்தார்கள் என்று குறிப்பிட்டுள்ளீர்கள்). மேற்கு அரசமைப்பு எப்போது ஜனநாயக, ஊழல் குறைந்த நிர்வாக  விழுமியங்களை கைக்கொண்டது? ஒருவேளை ஜனநாயக பரிணாம வளர்ச்சியில் நாமும் ஊழலின்மை பருவத்தை அடைவோமா?

5 குவர்னர் முன் இந்திய அதிகாரிகள் நடந்து கொள்ளும் முறை , தற்கால நவீன நிர்வாக அமைப்பில் ஒரு வீழ்படிவாக காணக்கிடைக்கிறது. இந்த அனுமதிக்கப்பட்ட நிர்வாக இயல் அடிமை முறை ராணுவ, போர்க்காலத் தேவைகளில் இருந்து வந்தது என்றால், அமைதிச் சூழலில் தனியார் மற்றும் அரசுத் துறை அலுவலகங்களுக்குள் அன்றாடம் நடிக்கப் பெறும் நவீன  முறைமை ஆடல்களை (administrative protocol, Orderly system) போன்றவற்றை எப்படிப் புரிந்து கொள்வது?

6 நிர்வாக அமைப்பின் உள்ளீடின்மைகளையும் போலித்தன்மைகளையும் பகடிசெய்யும் மேற்கத்திய ஆக்கங்களை அறிமுகப் படுத்த வேண்டுகிறேன். ( சார்லி சாப்ளினின் The Modern World போன்றவை)

அன்புடன்

ஆர் ராகவேந்திரன்

கோவை

Dupleix_Jean_Francois_estampe

அன்புள்ள ராகவேந்திரன்

பிரபஞ்சனின் வானம் வசப்படும் முற்றுப்பெறாமல் முடிக்கப்பட்டது – தினமணி ஆசிரியராக புதிதாக வந்த மாலன் அதை உடனடியாக முடிக்கும்படி சொன்னதாக பிரபஞ்சன் சொன்னார். அது தொடர்கதைகள் காலாவதியாகி வந்த காலம். குமுதத்தில் வந்துகொண்டிருந்த ஒரு துப்பறியும் கதையை அதற்கு ஆசிரியராக வந்த சுஜாதா அப்படியே முடிக்கும்படி ஆசிரியர்குழுவிடம் சொன்னார். ஒரு வாசகர் கடிதம்கூட வரவில்லை. அதை சுஜாதாவே என்னிடம் சொன்னார். ஆகவே அத்தொடர்கதை அதற்குரிய இயல்பான முடிவை அடைந்த்து. பிரபஞ்சன் அதை முடித்திருக்கலாம். நீண்ட கால அவகாசம் இருந்த்து. ஆனால் அவர் உள்ளம் அதிலிருந்து விலகிவிட்டது. சொல்லப்போனால் அவர் புனைகதைகளில் இருந்தே விலகிவிட்டார்.

அ. பிரபஞ்சனின் நாவலை வாசிக்க ஆனந்தரங்கம்பிள்ளை தினப்படி சேதிக்குறிப்பை வாசிக்கவேண்டியதில்லை. ஆனந்தரங்கம்பிள்ளையின் மொழி பழைமையானது—கொஞ்சம் பழைய பைபிள் போலவே ஒலிக்கும். கனகராய முதலியார் என்பவரும் தினப்படி சேதிக்குறிப்பு எழுதியிருக்கிறார். அவற்றை படித்தால் பிரபஞ்சன் நாவலை மேலும் நுட்பமாக புரிந்துகொள்ளமுடியும், அவ்வளவுதான்.

 துபாஷ் ஆனந்தங்க பிள்ளை

துபாஷ் ஆனந்தங்க பிள்ளை

ஆ. இன்று அந்நாவலை ஒருவர் எழுதி முடிக்கலாம். வானம் வசப்படும் நாவலின் முடிவுப்பகுதி என அவர் சொல்ல்லாம்—அதில் பதிப்புரிமைச் சிக்கல் இல்லை. ஆனால் அவர் பிரபஞ்சன் எழுதிய பகுதியுடன் சேர்த்து தன் நாவல்பகுதியையும் வெளியிடவேண்டும் என்றால் பதிப்புரிமைச் சிக்கல் உண்டு. வாரிசிடம் முறையான எழுத்துபூர்வ அனுமதி பெறவேண்டும். அதைவிட பிரபஞ்சன் எழுதியதையே மீண்டும் விரித்து எழுதி முடித்து தன் நாவலாக வெளியிடலாம். வானம் வசப்படும் என்றே தலைப்பும் வைக்கலாம். பதிப்புரிமைப்பிரச்சினை இருக்காது. அது படைப்பிலக்கியச் செயல்பாட்டின் ஒரு பகுதியே. காம்யூவின் அந்நியன் கூட மறுகோணத்தில் எழுதப்பட்டுள்ளது

இ. வேதபுரீஸ்வரர் ஆலயம் இன்றில்லை. அது மீட்டுக்கட்டப்படவில்லை. பொதுவாக ஆங்கிலேயர் தவிர்த்த ஐரோப்பியர் அனைவருமே சென்ற இடங்களின் பண்பாட்டையும், பண்பாட்டுச் சின்னங்களையும் அழித்துள்ளனர். ஆங்கிலேயருக்கு இரண்டு முகம். அவர்களின் அரசநிர்வாகம், வணிகம் வேறு.  அவர்களின் பண்பாட்டு நடவடிக்கைகள் ஆன்மிகத்தேடல்கள் வேறு. இரண்டுக்கும் சம்பந்தமே இல்லை. இந்த இரட்டை இயல்பை புரிந்துகொள்ளாமல் ஆங்கிலேயரை வகுத்துக் கொள்ள முடியாது.

ஆங்கிலேய அறிஞர்கள் இந்திய வரலாற்றையும் பண்பாட்டையும் மீட்டெடுத்தவர்கள். இந்தியக் கலைச்செல்வங்களை பேணியவர்கள். அறிவியக்கத்தில் நம் முன்னோடிகள் பெரும்பாலானவர்கள் அந்த கலாச்சாரவாதிகளான ஆங்கிலேயர்களே. பிரெஞ்சுக்காரர்கள் அவ்வகையில் ஆங்கிலேயர்களுடன் ஒப்பிடத்தகுதியற்றவர்கள்.

ஈ. இந்தியாவில் ஊழல் உச்சகட்டத்தில் இருந்த காலகட்டம் பிரிட்டிஷ் ஆட்சிக்காலமே. அதை பல ஆய்வாளர்கள் பல கோணங்களில் விரிவாக எழுதியிருக்கிறார்கள். பிரிட்டிஷார் இந்தியாவுக்கு வந்த வெறும் இருபதாண்டுகளில் இங்கே மிகப்பெரிய அலுவலர் ஆட்சியமைப்பு ஒன்றை உருவாக்கிவிட்டனர். சொல்லப்போனால் அதுவே உலகிலேயே மிகப்பெரிய அலுவலர் ஆட்சியமைப்பு. அதை அவர்கள் அன்று ஊதியம் வழங்கி நிலைநிறுத்த முடியாது. அந்த அளவு நிதி அவர்களிடம் இல்லை. ஆகவே அன்றைய பிரிட்டிஷ் அரசூழியத்திற்கு ஊதியமாக அளிக்கப்பட்டது மிகச்சிறிய அடையாளத் தொகை மட்டுமே. ஊழல் செய்யும் வாய்ப்பே உண்மையான ஊதியம்.

இந்தியப் புனைகதையாளர்கள், புதுமைப்பித்தன் உட்பட, இதை பதிவுசெய்துள்ளனர். கவர்னர்கள், கலெக்டர்கள் போன்றவர்கள் பிரம்மாண்டமான ஊழல்கள் வழியாக பெரும் பணம் ஈட்டலாம் என்பதற்காகவே அப்பதவிகளை ஈட்டிக்கொண்டு இங்கே வந்தார்கள்.  இந்தியா அனைவருக்கும் வேட்டைக்களம்தான். பிரிட்டிஷ்நீதித்துறை லஞ்சத்தாலேயே நடந்தது என்பதை அ.மாதவையாவின் பத்மாவதி சரித்திரம் போன்ற நாவல்களில் வாசிக்கலாம்.

உ. அக்காலகட்டத்தில் நவீன அரசும், அதிகாரிவர்க்கமும், நிர்வாகமுறையும் உருவாகி வந்துகொண்டிருந்தது. அரசகுடிஆட்சிமுறை [aristocracy] யிலிருந்து அலுவலர்ஆட்சிமுறை [Bureaucracy] உருவம் கொண்ட காலம் அது. அரசகுடிஆட்சிமுறை தனிமனிதர்களைச் சார்ந்தது. அரசனில் மையம் கொண்டது. அரசனின் பிரதிநிதிகளாக கீழே கீழே என பல்வேறு ஊழியர்கள் ஆட்சியை நடத்தினர். அவர்கள் அனைவருமே குட்டிக்குட்டி அரசர்களே. அவர்கள் மேலிருக்கும் அரசர்களுக்கு மட்டுமே கடமைப்பட்டவர்கள். அந்த முறையே அரச ராணுவத்திலும் இருந்தது. எவருடைய பொறுப்பும் பணியும் பொதுவாக எழுதி வரையறை செய்யப்படவில்லை. கேள்வியற்ற பணிவுதான் ஒழுங்கு. பிறப்புதான் தகுதி.

பிரிட்டிஷ், பிரெஞ்சு அரசாட்சிகள் அவ்வாறுதான் இருந்தன. பிரிட்டிஷ் வைஸ்ராய்களில் அனேகமாக அனைவருமே பிறப்பால் பிரபுக்களே. உயர்பதவிகள் வகித்தவர்களும் பிறப்பால் அத்தகுதியை அடைந்தவர்கள்தான். His Excellency, His Highness, Your Honour, My Lord போன்ற அழைப்புகள்தான் நிர்வாகம் நீதித்துறைகளில் இருந்தன. ஆனால் அப்போதே மெல்லமெல்ல அலுவலர்ஆட்சிமுறை உருவாகத் தொடங்கிவிட்டது.

pra

முதன்மைக்காரணம் ஆட்சி செய்யவேண்டிய பரப்பு பிரம்மாண்டமானது. ஆகவே அனைத்துத் தரப்பிலிருந்தும் அலுவலர் தேவைப்பட்டனர். ஆட்சிக்கு உள்ளூர் அலுவலர்கள் கட்டாயம் எனும் நிலை இருந்தது. ஆகவே வரையறுத்து எழுதிவைக்கப்பட்ட ஆட்சிநெறிகளும் முறைமைகளும் மெல்ல உருவாகி வந்தன. ஒவ்வொரு பதவிக்கும் பொறுப்பும் கடமையும் வரையறை செய்யப்பட்டபோது தகுதியும் வரையறை செய்யப்படவேண்டியிருந்தது. அவ்வாறாக தேர்வுமுறை உருவாகி வந்தது. பணிமூப்பு போன்ற நெறிகள் உருவாகின. மெல்ல மெல்ல அதுவே அன்றாட நிர்வாகத்திற்கான சட்டங்களும் வழக்கங்களுமாக ஆகியது. இதுவே நம் அலுவலர் ஆட்சிமுறை உருவான பரிணாமம்.

அலுவலர் ஆட்சிமுறையில் முதலில் உருவாவது நடைமுறைசெயல்பாடு [practice]. பின்னர் அது வழக்கம் [custom] ஆகிறது. இறுதியாக சட்டம் [law] ஆக எழுதப்படுகிறது. ஒரு விஷயத்தைப்பற்றி சட்டம் இல்லையேல் வழக்கம் மேற்கொள்ளப்படும். வழக்கம் இல்லையேல் நடைமுறை மேற்கொள்ளப்படும் என்பது அலுவலர் ஆட்சிமுறையின் நெறி. ஆகவே அலுவலர் ஆட்சிமுறை உருவாகி அரைநூற்றாண்டுகாலம் நூற்றுக்கணக்கான அன்றாட ஆட்சிப் பிரச்சனைகளை எதிர்கொண்டு மெல்லமெல்லத்தான் ஆட்சிச் சட்டங்கள் உருவாகி வந்தன. அந்த ஆட்சிச் சட்டங்களின் ஒட்டுமொத்தமே இன்று அலுவலர் ஆட்சிமுறையை தாங்கி நின்றிருக்கும் அடித்தளம்.

ஆகவே அரசகுடி ஆட்சிமுறையிலிருந்து தொடர்ச்சியான செயல்பாடு மூலம் உருத்திரிந்து வந்ததே அலுவலர் ஆட்சிமுறை. அது ஓரளவேனும் உருவாகி நிலைகொள்ள நூறாண்டுகள் ஆகியது. இந்தியாவில் காலனியாதிக்கம் உருவான 1750-களில் அலுவலர் ஆட்சிமுறையின் மெல்லிய தொடக்கம் உருவாகியது. 1900-களுக்குப் பின்னரே அது தன்வல்லமையில் நின்றிருக்கும் அமைப்பாக உருவாகியது.

பிரபஞ்சனின் நாவல் பேசும் காலகட்டம் இந்தியாவில் அலுவலர் ஆட்சிமுறை உருவாகி வந்த காலகட்டம். அப்போது கிட்டத்தட்ட அரசகுடி ஆட்சிமுறையின் மனநிலைகளும், மரபுகளும்தான் இருந்தன. வியப்பிற்குரியது என்னவென்றால் இன்னமும்கூட மத்திய அரசுத்துறைகளில் பழைய அரசகுடி ஆட்சிமுறையின் பல முறைமைகள் கடைபிடிக்கப்படுகின்றன. அவை நடைமுறைநெறிகள் [protocol] எனப்படுகின்றன. அதற்கென நடைமுறைநெறி அலுவலர் [protocol officer] என ஒருவர் இருப்பார். ஓர் உயரலுவலரை எவர் எப்படி வரவேற்கவேண்டும், எவர் அடுத்தபடியாக வரவேற்க வேண்டும், என்னென்ன சொல்லவேண்டும், என்ன உடை அணிந்திருக்கவேண்டும் என்று மிக மிக விரிவான நெறிகள் உள்ளன. அவற்றில் பலவற்றை வாசித்தால் வெடித்துச் சிரித்துவிடுவோம், ஆனால் அவற்றை மீறமுடியாது.

ஜெயமோகன்

முந்தைய கட்டுரைபுதியவாசகர் சந்திப்பு – கடிதங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-45