குழந்தைகளுக்கு புராணங்களை கற்றுக்கொடுக்கலாமா?

kali

குழந்தைகளுக்கு மதம்

ஜெ வணக்கம்,

இந்த வருடம் தொடக்கத்தில் இருந்து குழந்தைகளுக்கு (10 மற்றும் 5 வயது) மகாபாரத கதையை ஒலி புத்தக வடிவில் கேட்கவைக்கலாம் என்று அமேசானில் உள்ள இஸ்கான் அமைப்பின் ஆங்கில மதிப்பின் மாதிரியை கேட்டேன்

அந்த மாதிரியில்; விச்சித்திரவீரீயன் இறந்து விடுகிறான். நியோக நியதி படி அம்பிக்கையையும் அம்பாலிகையையும் கருவுற செய்ய முடிவெடுக்க படுகிறது. விச்சித்திரவீரீயனின் அண்ணனின் துணையுடன்.அம்பிகை பீஷ்மரை எண்ணியபடி சிறு உவகையுடன் மஞ்சத்தில் அமரந்திருக்க, ஓரு கரிய அழுக்கு படிந்த மானிடன்அவளை அணைத்து அவளை திடுக்கிட செய்கிறான்.

நமது புராணங்களில், குறிப்பாக பாரததில் இப்படி எடுக்கு மடக்கான இடங்கள் நிறைய உள்ளன்.  இதை எனது பிள்ளைகள் கேட்டால், “What her husband’s brother kissed her!!!” என்று சிரிக்க ஆரம்பித்திவிடுவார்கள். இன்னும் சில வருடங்களில், “What he forced upon her and she was shivering and closed her eyes!!!!. How disgusting?. Doesn’t No means No”  என்று முகம் சுழிப்பான்கள்.

அந்த காலத்தில் அப்படிதான், கிரக்க மற்றும் ரோம புராணங்களில் இல்லாததா? என்று எதிர் வினையாற்றலாம். ஆனால் கிரக்க மற்றும் ரோம புராணங்களில் வரும் கதை மாதர்கள் இன்று வெறும் கதை மாதர்கள் மட்டும்தான். நமது புராணங்களில் வரும் கதை மாந்தர்கள் வாழும் தெய்வங்கள். எனது பெரியவனிடம், உன் பெயரில் உள்ள நட்சத்திரம்தான் நிலையானது, உலகுக்கே வழிகாட்டி என்று சொல்லியிருக்கிறேன்.

சில வருடங்கள் முன்பு எனது மனைவின் நண்பி தனது பையன்களுக்கு இந்திய புராணங்கள் தொடர்பான காணோளிகளை பார்க்க தடை செய்திருப்பதாகவும், அந்த புராணங்களிலுள்ள வன்முறை தான் காரணம் என்றும் கூறியிருந்தார். டாம் அண்ட் ஜெர்ரி, சூப்பர்மேன், ஸ்பைடர்மேன், பேட்மேன் போன்றவற்றில் இல்லாத வன்முறையா என்று நினைத்துக் கொண்டேன்.

2.0 பட கட்டுரைகள் ஒன்றில் குறிப்பாக ஜூராசிக் பார்க் படத்தை குறிப்பிட்டு, குழந்தைகள் இக்கதைகளில் உள்ள வன்முறையை உயிர்களின் ஆற்றலின் உச்சம் என்று ஆக்க பூர்வமாகவே உள்வாங்கிக் கொள்கிறார்கள் என்று எழுதியிருந்தீர்கள். அதற்கு உதாரணமாக குழந்தைகளிடேயே டைனசோர்களும், டைனோசர் பொம்மைகளும் எவ்வளவு கொண்டாட படுகிறது என்று உதாரணமும் கொடுத்து இருந்தீர்கள். எனக்கு அது ஒரு தெளிவை கொடுத்தது.

அது போல இந்த எடுக்கு மடக்கு விஷயங்களுக்கும் ஒரு தெளிவளித்தால் நன்றாக இருக்கும்.

அன்புடன்

சதீஷ் கணேசன்

அன்புள்ள சதீஷ்,

இதே கேள்வியை பெரும்பாலும் இதே வார்த்தைகளில் நண்பர் ஒருவர் கேட்டு நான் மறுமொழி சொல்லியது நினைவுக்கு வருகிறது. அது நடந்தது அமெரிக்காவில். நீங்கள் லண்டனில் இருக்கிறீர்கள்.

அந்த நண்பர் சொல்லிக்கொண்டே இருந்தபோது அந்தப் பூங்காவில் சற்று அப்பால் ஒரு ஜோடி ஆவேசமாக முத்தமிட்டுக்கொண்டிருந்தார்கள். நான் “இந்தியாவிலிருந்து ஒரு குழந்தை வந்து அதை பார்த்தால் கலாச்சாரக்குழப்பத்தை அடையும். உங்கள் பிள்ளைகள் அதை எப்படி பார்க்கிறார்கள்?” என்றேன். “நாங்கள் இதை சின்னக்குழந்தையாக இருக்கும்போதே குழந்தைகளுக்கு சொல்லி புரியவைப்போம். ஆணும்பெண்ணும் நெருக்கமாக இருப்பது தவறில்லை என்றும், அதை தவறாக பார்ப்பதும் உற்றுநோக்குவதும்தான் பிழை என்றும்ம் அறிவுறுத்துவோம். அவர்கள் அதை தவறாக பார்ப்பதில்லை” என்றார்.

“இப்படி நேரடியான ஒன்றையே குழந்தைக்கு ஆரோக்கியமான வகையில் புரியவைக்க முடிகிறது என்னும்போது மரபை புரியவைப்பதில் என்ன சிக்கல் இருக்கமுடியும்? அந்த விஷயங்கள் மிகத் தொலைவில் உள்ளன. நூல்களில் உள்ளன. அவற்றின் காலப்பின்னணியை, குறியீட்டுப்பொருளை குழந்தைக்கு சொல்லி விளங்க வைக்கமுடியாதா என்ன?” என்று கேட்டேன்.

மேலைநாட்டுக் குழந்தைகள் கிரேக்கத் தொன்மக்கதைகளை இயல்பாகவே அணுகுகிறார்கள். அவற்றிலுள்ள வன்முறை திரைக்காட்சியாகவே அவர்கள்முன் ஓடுகிறது. குழந்தைகளை வன்முறைநீக்கம், காமநீக்கம் செய்யப்பட்ட ‘ஸ்டெரிலைஸ்ட்’ சூழலில் வளர்க்கமுடியும் என்பதைப்போல மடத்தனமான சிந்தனை வேறில்லை. அப்படி வளரும் குழந்தை எப்படி உலகை, வரலாற்றை புரிந்துகொள்ளும்? வரலாறு, பண்பாடு எல்லாமே அப்படி உருவானவைதானே?

குழந்தைகளுக்கு மகாபாரதத்தை விரிவாகவே சொல்லலாம். ஆனால் வெறுமனே கதையாக மட்டும் அல்ல. குழந்தைகள் சந்தேகம் கேட்டால் அந்தக்கால சமூக அமைப்பு, ஒழுக்கநெறிகளும் அறங்களும் படிப்படியாக உருவாகி வந்த விதம், இன்றும் உலகின் பலபகுதிகளில் நாம் அறியாத, ஏற்கமுடியாத ஒழுக்கங்களும் அறங்களும் இருப்பது ஆகியவற்றை தெளிவாகவே விளக்கலாம். அது குழந்தைக்கு வரலாற்றுப் புரிதலை உருவாக்கும். பண்பாடு சார்ந்த குறுகிய பார்வைகள், ஒவ்வாமைகளை இல்லாமலாக்கி விரிந்த உலகம் ஒன்றை பார்க்கவைக்கும்.

குழந்தைக்கு இன்று மரபைக் கற்பிப்பதில் உள்ள சிக்கல் இன்றைய நவீன வாழ்க்கையின் மதிப்பீடுகள், அறிவியல் சார்ந்த அறிதல்முறை ஆகியவற்றுக்கும் மரபுக்கும் இடையே உள்ள இடைவெளிதான். அப்படி ஒரு இடைவெளி உண்டு என அக்குழந்தைக்கு சொல்லுங்கள். அறிவியலை கற்பதுபோல நேரடிப்பொருளில் மரபை அறியக்கூடாது என விளக்குங்கள். குழந்தைக்கு நேரடியாகவே கதைகளை சொல்லலாம், விளக்கங்கள் இல்லாமல். எப்போது  அது நவீனக் கல்வி அதற்கு அளித்த வினாக்களை முன்வைக்கத் தொடங்குகிறதோ அப்போது அதற்கு நீங்கள் விளக்கியாகவேண்டும்.

நான் என் மகனுக்கு 5 வயதிலும் 10 வயதிலும் மகாபாரதக்கதையை முழுமையாகவே சொன்னேன். அதை ஒலிநாடாவில் பதிவுசெய்திருந்தேன். பலநண்பர்கள் அதை கேட்டிருக்கிறார்கள். அதில் நியோக முறையை மிகமிக விரிவாக விளக்கியிருந்தேன். அவன் கதைகேட்டுப் பழகியவன் என்பதனால் ஆர்வத்துடன் கேட்டு புரிந்துகொண்டான். அன்றைக்கு தொற்றுநோய்கள் மிகுந்திருந்தன, சிங்கம்புலிகள் நிறைந்திருந்தன, ஆகவே மக்கள் தொகை மிகவும் குறைவு என்று சொன்னேன். [‘பாம்பு கடிச்சு செத்திருவாங்க!’ என அவன் நடுவே கூச்சலிட்டான்] எப்படியாவது மக்களை பெற்றாகவேண்டும் என்பது அன்றைக்கு மிகமுக்கியமானது என்று விளக்கி ஆகவே நியோக முறை அன்றிருந்தது, அது உலகின் பலநாடுகளில் உள்ளது, மனித இனம் இப்படித்தான் வளர்ந்து வந்துள்ளது என்று விளக்கினேன். அவனுக்கு எந்தக்குழப்பமும் இல்லை.

பிள்ளையார் முஞ்சூறுமேல் ஏன் அமர்ந்திருக்கிறார் என்றால் மண்மேல் வாழும் உயிரினத்தில் பெரியது யானை, மண்ணுக்கு அடியில் வாழ்வனவற்றில் பெரியது பெருச்சாளி. அந்த அடையாளம் ஓர் ஆழமான குறியீடு, அது இந்தப்பிரபஞ்சத்தின் ஓர் அமைப்பை குறிக்கிறது என்று சொல்லுங்கள். காளி ஏன் கொடூரமான தெய்வம் என்றால் சூரியன் உதிக்கும்போது அழகாக இருக்கும் வானம்  இரவில் அச்சமூட்டுகிறது அல்லவா, அதுபோல அழகும் குரூபமும் நன்மையும் தீமையும் கடவுளே என நம் முன்னோர் வழிபட்டனர் என விளக்குங்கள். குழந்தை முழுமையாக புரிந்துகொள்ளாது, ஆனால் நீங்கள் நினைப்பதைவிட அதிகமாகவே புரிந்துகொள்ளும். என் அனுபவம் அது.   குழந்தை மனதுக்குள் அது பெருகும். போகப்போக அதன் புரிதல் வளரும். ஒவ்வாமையை உருவாக்கினீர்கள் என்றால் ஒரு மாபெரும் மரபின் செல்வத்தை அதற்கு இல்லாமலாக்குகிறீர்கள்.

நித்ய சைதன்ய யதி இதை பலமுறை சொல்லியிருக்கிறார். குழந்தைகளுக்கு சமூகவரலாற்றை சொல்லமுடியும்.  குறியீடுகளை விளக்கமுடியும். கடந்தகால வரலாறுகளை கூறமுடியும். அறிவியல்கொள்கைகளைக்கூட விரித்துரைக்க முடியும். விளக்க உங்களுக்கு தெரிந்திருக்கவேண்டும். பெண்களின் நிலை அன்று ஏன் அப்படி இருந்தது என்று கேட்டால் சொல்லுங்கள், அன்றைய சமூகத்தில் பெண்கள் வழியாக பிறக்கும் பிள்ளைகள் முக்கியமானவர்கள் என்பதனால் அவர்கள் உடைமைகளாக கருதப்பட்டார்கள் என்று. அதுவே உலகம் முழுக்க இருந்த நிலை என்று. எப்படி மெல்லமெல்ல மக்கள்தொகை உலகளவில் கூடியபோது அந்த மனநிலை மாறியது என்று. நேற்றைய வரலாற்றுக்காக நீங்கள் மன்னிப்புகோர வேண்டியதில்லை. அதை புரிந்துகொள்ள முயன்றால் போதும்.

உங்கள் நண்பர் புராணங்களை பிள்ளைகளுக்கு விலக்கினார் என்றால் அவர் அவருடைய மனக்குறுகலை சிறையாக்கி பிள்ளையை அதில் கைதியாக்குகிறார் என்றே பொருள். ஆனால் இன்னொன்று உண்டு, எல்லாக் குழந்தைகளுக்கும் உரியவையல்ல இவை. சிலகுழந்தைகளால் கதைகளுக்குள் செல்ல முடியாது. இயல்பாகவே கற்பனைத்திறன் குறைவானவையாக இருக்கும். கவனிக்காத குழந்தைக்கு கதை சொல்லக்கூடாது. அதன் புரிதல்திறனுக்கேற்ப நம் கதையை நாமே சுருக்கிக் கொள்ளவேண்டும்.

அத்துடன் ஒன்று, இன்றைய சூழலில் எவர் சிறையிட்டாலும் தகவல்கள் சென்றுசேரும். பத்துவயதான பையன் பாலியல் இணையதளங்களை செல்பேசியில் பார்க்கநேரிடுவது சாதாரணமாக ஆகிவிட்டிருக்கிறது. ஒருநாள் உங்களைச் சுற்றி பாருங்கள். விளம்பரங்களில் இதழ்களில் தொலைக்காட்சியில் என்னென்ன உங்கள் குழந்தைகளின் கண்களில் படும் என. அனைத்தையும் குழந்தை புரிந்துகொள்கிறது. குழந்தைகள் வன்முறையை வேறுகோணத்தில் உயிரின் ஆற்றலாக உள்வாங்குகின்றன. காமத்தை அன்பு என விளங்கிக்கொள்கின்றன.

புராணங்களைப்பற்றிய அரைவேக்காட்டுப் புலம்பல்கள் எப்படியோ அவர்களிடம் வந்துசேரும். உக்கிரமாக பிரச்சாரம் செய்யப்படும் பிரச்சாரங்கள் அவர்களை ஆட்கொள்ளும். ஆகவே வரலாற்றுப் பின்னணியுடன், சமூகவியல் விளக்கங்களுடன், கலைசார்ந்த கோணத்தில் மரபை புரியவைப்பதே உகந்தது.

தயவுசெய்து பிள்ளைகளின் அறிவை நீங்கள் உங்கள் சிற்றறிவைக்கொண்டு வேலிகட்டாதீர்கள். அவர்கள் உங்களைவிட நான்குபக்கமும் திறந்த நவீன உலகம் நோக்கி செல்லவிருக்கிறார்கள். பிள்ளைகளுக்கு கற்பிக்காதீர்கள். நல்லுபதேசம் செய்யாதீர்கள். ஒழுக்கநெறிகளை திணிக்காதீர்கள். அவர்களுடன் சேர்ந்து பேசி உங்கள் புரிதலை வளர்த்துக்கொள்ளுங்கள்.

அறிவை கட்டுப்படுத்துவது அறியாமையை வளர்ப்பதேயாகும்.

ஜெ

குழந்தைகளுக்கான கதைகள் -கடிதங்கள்

எதிர்மறை மதச்சடங்குகள்

புராணமும் கதைகளும்- கடிதம்

முந்தைய கட்டுரைஏன் வரலாற்றை சொல்லவேண்டும்? – கடிதம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-42