இந்தியப்பயணம் வாங்க
அன்புள்ள ஆசானுக்கு ,
நலம் என்று நம்புகிறேன். வழக்கமாக தேர்வுக்கு படிக்கும் நேரங்களில் தங்களின் பயணக்கட்டுரைகளை படிப்பேன். (புனைவுகளை இந்த நாட்களில் தவிர்ப்பேன்). அது செயலற்று ஒரே இடத்தில் இருந்து பாடங்களை படித்துக்கொண்டு இருப்பதற்கு ஒரு விடுபடலாக எனக்கு இருக்கும் , அப்படிதான் சென்ற ஆண்டு தங்களின் குகைகளின் வழியே மற்றும் நூறு நிலங்களின் மலை பயணங்களை வாசித்து தேர்வுக்கும் படித்துக்கொண்டு இருந்தேன். அது இருக்கும் இடத்தை விட்டு உங்களுடன் பயணம் செய்த ஒரு அனுபவத்தை தரும் . அப்படி இந்த ஆண்டு இந்திய பயணம் வாசிக்க துவங்கினேன் , புத்தகம் வாங்கி ஆறு மாதங்களுக்கு மேல் இருக்கும் என்றாலும் இந்த நாட்களுக்காக அவற்றை ஒதுக்கி வைத்திருந்தேன்.
இந்தியாவின் பன்முகத்தன்மை கட்டுரையின் அடி நாதமாக ஒழித்துக்கொண்டே இருந்தது. இந்திய நிலத்தின் மக்கள் அவர்களின் வாழ்க்கை முறை மற்றும் வைச , வைணவ , பௌத்த , சமண தலங்கள் என்று அனைத்தும் குறித்து உங்கள் விவரணைகள் , அதில் வரலாறையும் சொல்லி செல்லும் உங்கள் கூறுமுறை என்று கட்டுரைகள் நான் செல்லாத பல இடங்களுக்கு என்னை அழைத்துச்சென்றது.
நான் ஒரே ஒரு முறை மட்டுமே இந்திய நிலத்தில் பயணத்திருக்கிறேன். அதுவும் கல்லூரி சுற்றுலா என்பதால் பொதுவான சுற்றுலா தலத்திற்கு சென்ற தோடு சரி , இப்படி பல பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என்ற மன கிளர்ச்சியை எப்போதும் உங்கள் பயணக்கட்டுரைகள் தரும் இந்த முறை சற்று மிகுதியாக தந்து விட்டது.
இந்த இந்திய மண்ணில் பித்தெடுத்து அலைந்து திரிய வேண்டும் என்று தோன்றுகிறது. கண்டிப்பாக வரும் காலங்களில் இப்படி சில பயணங்களை மேற்கொள்வேன் .நன்றி ஜெ .
சுகதேவ்.
மேட்டூர்.
அன்புள்ள ஜெ
இந்தியப்பயணம் நூலை ஒரு சின்ன பயணத்தில் ஒன்றரை மணிநேரத்தில் வாசித்து முடித்தேன். கச்சிதமான சின்ன நூல். போகிறபோக்கில் எழுதப்பட்ட குறிப்புகளில் வந்துகொண்டே இருக்கும் தனிப்பட்ட அவதானிப்புகள்தான் இந்நூலின் பலம். இந்தியாவின் பண்பாடு, மக்களின் இயல்பு பற்றியெல்லாம் வரிகள் வந்தபடியே இருக்கின்றன.
அவ்வேளையில் அங்கே நீத்தார்கடன்செய்யும் மக்கள் திரள் கரையிலிருந்து கங்கைக்கு வெள்ளம் போல இறங்க காசியே பெரிய தேனீக்கூடு போல முழங்கிக் கொண்டிருந்தது.
என்பதுபோன்ற அற்புதமான வர்ணனைகள் காட்சிகளை கண்ணெதிரே நிறுத்துகின்றன. என்ன ஆச்சரியம் என்றால் மெய்யாகவே காட்சிகளைக் காட்டும் டாக்குமெண்டரிகளுக்கு இந்த ஆற்றல் இல்லை. மொழியில் ஒருவிஷயத்தை வாசிக்கும்போதுதான் நாம் உண்மையாகவே காண்கிறோம்.
மத்தியப்பிரதேசத்தின் இப்பகுதியில் பல ஆறுகள் குறுக்காக ஓடுகின்றன. எல்லா ஆறுகளுமே நீர் நிறைந்தவை. வேளாண்மை நடப்பதைக் காணமுடிந்தது. மேலும் மேய்ச்சலும் அதிகமென்பதை அவ்வப்போது கண்ணில் பட்ட பெரும் பசுக்கூட்டங்கள் காட்டின. ஆனால் நாங்கள் கொடிய வறுமையையே எங்கும் கண்டோம்.
என்றவரிகள் வழியாக எது இந்தியாவின் பிரச்சினை என்று கூர்மையாகச் சொல்லப்படுகிறது. சமீபத்தில் மத்தியப்பிரதேசப் பயணம் செய்த பத்ரி சேஷாத்ரியும் இதையே சொல்லியிருக்கிறார். ஏறத்தாழ இதே வரி. அதாவது கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப்பின்னர்.
ஜெயராமன்