‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-38

ele1காந்தாரியின் அரண்மனையில் தன் ஒற்றை விழி இமைக்காது வெறித்திருக்க இரு கைகளும் வெறுங்காற்றிலிருந்து எதையோ துழாவி எடுப்பதுபோல் அலைபாய ஏற்ற இறக்கங்களோ உணர்ச்சிகளோ அற்ற சீர் குரலில் ஏகாக்ஷர் சொன்னார். அரசி, குருக்ஷேத்ரத்தில் இந்த இளங்காலையில் நான் காண்பது பத்மவியூகம் பொறியென உயிர்கொள்வதை. தாமரையில் அடித்தண்டென சகுனி தன் பதினெட்டு செய்தி முரசுகளுடனும் நூற்றெட்டு கொம்புகளுடனும் கூடிய செய்திமாடத்தை நிறுவி அதை சுற்றியும் காந்தாரப் படைகளை வட்டமாக அமைத்து நிலைகொண்டிருக்கிறார். ஆயிரம் கூண்டுகளில் செய்திபுறாக்கள் சிறகொடுக்கி கழுத்துக்களை உள்ளிழுத்து விழி மயங்கி அமர்ந்திருக்கின்றன. தொலைசெய்திக்குரிய நூறு கழுகுகள் தோலுறைகளால் தலை மூடப்பட்டு இரும்புக்கூண்டுகளுக்குள் உடல் குறுக்கி அமர்ந்துள்ளன. புரவிகளில் செல்லும் தூதர்கள், ஓலை எழுத்தர்கள் என அனைவரும் அங்கு வந்து சேர்ந்துவிட்டிருக்கின்றனர்.

கவசங்களணிந்து படைக்கலங்கள் சூடிய படைவீரர்கள் வாழ்த்தொலிகளோ அறைகூவல்களோ இல்லாமல் இரும்புக்குறடுகள் மண்ணில் சீராக விழுந்தொலிக்கும் தாளங்கள் இணைந்தெழுந்த ஒலியலைகள் மட்டும் நிறைந்திருக்க நிரைவகுத்து படையென்றாகின்றனர். ஆணையொலிகள் ஆங்காங்கே எழுகின்றன. சிறு சுடர்களால் சுழற்றி காற்றிலெழுதி கட்டளைகளை அளிக்கின்றனர் படைத்தலைவர்கள். இருளில் இரும்புக் கவசங்களும் கேடயங்களும் வாள்களும் மின்னும் ஒளியால் அங்கு நீர்நிலையொன்று அலைகொள்வதுபோல் தோன்றுகிறது. தாமரைச்சூழ்கையில் ஒவ்வொரு இதழும் தன்னை அமைத்துக்கொண்டது. அதன் குவிமுனையில் தலைமைப் பெருவீரன் நின்றிருந்தான். அவனுக்கு இருபுறமும் வில் வளைவென வேல்களை ஏந்திய புரவிப்படை வீரர்கள் நின்றனர். அவர்களின் நிரைக்குள்ளே தேர் வில்லவர்கள். அவர்களுக்கு இருபுறமும் எரிவேலேந்திய காலாட்படையினர் நின்றனர்.

அஸ்வத்தாமன், சல்யன், பூரிசிரவஸ், சுபலர், துரியோதனன், சுபாகு, துரோணர், கர்ணன் உள்ளிட்ட பதினெட்டு கௌரவப் பெருவீரர்கள் முதன்மை கொள்ள அமைந்த பதினெட்டு இதழ்கள் தாமரையின் உள்ளிதழ் வட்டமென அமைந்திருந்தன. அதைச் சூழ்ந்து மத்ர, கேகய, கோசல, வங்க, கலிங்க, அங்க, மாளவ, அவந்தி, கூர்ஜர, சிபி, சௌவீர, பால்ஹிக, திரிகர்த்த நாட்டுப் படைகளின் நூற்றெட்டு இதழ்கள் செறிந்திருந்தன. படையமைவு முன்பே தோண்டி வைக்கப்பட்ட பள்ளத்தில் நீர் ஓசையின்றி சென்று நிறைவதுபோல் புலரிக்கருக்கிருள் மறைவதற்குள்ளாகவே முழுமை பெற்றது. விடிவெள்ளி துலங்கி வானில் நின்றிருக்க ஒவ்வொருவரும் அவ்வப்போது விழிதூக்கி அதை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

ele1முற்புலரியில் சுருதகீர்த்தி வந்து தன் தோளைப்பற்றி எழுப்புவது வரை அபிமன்யு துயின்று கொண்டிருந்தான். அதற்கு முன், காலை முரசொலி எழுந்ததுமே ஏவலர் பலமுறை அவனை எழுப்பியிருந்தனர். எப்போதுமே புலரியில் எழுவதற்கு அவனால் இயல்வதில்லை. இரவில் எத்தனை களைத்திருந்தாலும் நெடும்பொழுது அவன் துயில்வதும் இல்லை. இரவில் படைவீரர்களிடம் சொல்லாடிக்கொண்டோ சூதாடிக்கொண்டோ களியாட்டமிடும் அவனிடம் வந்து “இளவரசே, நெடும்பொழுதாகிறது. புலரியில் தாங்கள் எழுந்தாகவேண்டும். பிந்தி துயில்வது அதற்கு ஊறு” என்று அவனை எச்சரித்து வற்புறுத்தி மன்றாடிக்கொண்டிருக்கும் ஏவலர்களே புலரியில் அவனிடம் வந்து “இளவரசே, எழுக! முரசொலி முழங்கத்தொடங்கிவிட்டது! இளவரசே, கொம்பொலிகள் எழுகின்றன. இன்னும் பொழுதில்லை” என்று உலுக்கவும் வேண்டியிருக்கும்.

இரவில் சீற்றத்துடன் “செல்க, மூடா! நான் எப்போது துயிலவேண்டுமென்று ஆணையிடும் உரிமையை உனக்கு யார் அளித்தது? நான் இளவரசன்! விரும்பியதைச் செய்வேன். விலகு! இல்லையேல் உன் சங்கை அறுப்பேன்” என்று சீறுபவன் புலரியில் முதலில் சிணுங்கலுடன் உடல் சுருட்டிக்கொள்வான். அப்போது அகவை முதிராத குழவி போலிருப்பான். கருக்குழந்தையென உடலை மடித்து நெஞ்சோடு கைசேர்த்து அவன் துயில்கையில் முலையருந்தும் குழந்தையின் உதடுகள்போல் முகம் கூர் கொண்டிருக்கும். மீண்டும் மீண்டும் அவனை எழுப்பும் ஏவலர் அவனிடமிருந்து வசைச்சொற்கள் பீறிட கைகள் நெளிந்து எழுகையில் சற்று பின்னடைந்து நின்று “புலரி எழுந்துவிட்டது, அரசே. என் கடன் இது” என்று மீண்டும் சொல்வார்கள். “செல்க! நானறிவேன்!” என்று சொல்லி அவன் மீண்டும் புரண்டுபடுப்பான்.

அன்று காலை பலமுறை எழுப்பிய பின் ஏவலரே தயங்கி குடிலுக்கு வெளியே சென்று நின்றுவிட்டனர். அபிமன்யு அரைத்துயிலில் குழறலாக ஏதோ சொன்னான். சிறுவர்களுக்குரிய நகைப்பொலி எழுந்தது. மீண்டும் மெல்லிய குறட்டையொலி கேட்கத் தொடங்கியது. சிறு குழந்தைகளுக்குரிய புறாக்குறுகல் போன்ற குறட்டையொலி அது. புரவிக்குளம்படி எழ இருளுக்குள் இருந்து பந்தவெளிச்சத்தில் தோன்றிய சுருதகீர்த்தி வந்திறங்கி “என்ன ஆயிற்று? இன்னுமா உங்கள் இளவரசர் எழவில்லை?” என்று கேட்டபடி அணுகியபோது “தாங்களே எழுப்புங்கள், இளவரசே. இதற்குமேல் எங்களுக்கு செல்கை இல்லை” என்று ஏவலன் சொன்னான்.

சுருதகீர்த்தி குடிலுக்குள் சென்று மஞ்சத்தில் மரவுரியைப் போர்த்தியபடி கருக்குழவிபோல் உடல்சுருட்டிப் படுத்திருந்த அபிமன்யுவின் தோளை அறைந்து “எழுக!” என்றான். “என்ன! என்ன!” என்றபடி புரண்ட அபிமன்யு சுருதகீர்த்தியைக் கண்டு சலிப்புடன் உடலை நெளித்து “இன்னும் சற்று பொழுது… இன்னும் சில கணங்கள், மூத்தவரே” என்றான். “இதற்கு மேல் துயின்றால் நீ களத்திற்கு எழவேண்டியதில்லை. இங்கேயே படுத்துக்கொள்” என்றபடி சுருதகீர்த்தி எழுந்தான். அவன் கையைப்பற்றி நிறுத்தி “இங்கேயே இருங்கள், மூத்தவரே. இன்னும் சில கணங்கள். என் இமைகள் எடைகொண்டிருக்கின்றன” என்றான் அபிமன்யு.

சுருதகீர்த்தி எதிர்பாராத கணத்தில் அவன் இரு கைகளையும் பற்றி விசையுடன் தூக்கி நிறுத்தினான். அவன் தோளைப்பற்றி பலமுறை உலுக்கி “விழித்துக்கொள்!” என்றான். அபிமன்யு “என்ன செய்கிறீர்கள்! என் தலை சுழல்கிறது!” என்றபடி கைகளை விரித்து சோம்பல் முறித்து “நான் நேற்றிரவு துயில நெடும்பொழுதாகியது” என்றான். “அதுதான் அனைவருக்கும் தெரியுமே. இங்கு பின்னிரவில்கூட விளக்கொளி தெரிந்தது என்று சொன்னார்கள்” என்றான். “நான் படைநிரைகளைச் சென்று பார்த்துக்கொண்டிருந்தேன். மீண்டுவந்து அவற்றை சுவடியிலும் நோக்கினேன்” என்றபின் “தந்தை எப்படி இருக்கிறார்?” என்றான்.

“உளம் சோர்ந்திருக்கிறார். நேற்று அவர் வாழ்வின் மிகப் பெரிய இழிவொன்றை சந்தித்ததாக எண்ணிக்கொண்டிருக்கிறார்” என்றான் சுருதகீர்த்தி. “அது இழிவேதான். அக்கீழ்மகனின் கையிலிருந்து உயிர்பெற்று மீள்வதைவிட சிறுமை பிறிதொன்றுமில்லை” என்றபின் அபிமன்யு “ஆனால் தந்தைக்கு அவ்விழிவு தேவைதான்” என்றான். “ஏன்?” என்று சுருதகீர்த்தி விழிசுருக்கி கேட்டான். “அத்தனை பெருமைகளையும் ஒருவரே அடைகையில் மறுதட்டில் சற்று இழிவு இருப்பது நன்றல்லவா?” என்று அபிமன்யு சொன்னான். பின்னர் உரக்க நகைத்து “எண்ணி நோக்குக, மூத்தவரே! பாரதவர்ஷத்தின் ஆண்மையின் அடையாளம் என்று புகழப்படுபவரின் உடலில் உள்ள பெண்மையைப்பற்றி… எத்தனை பெரிய நிகர் செய்தல் அது. தெய்வங்களும் அவ்வப்போது சிரிக்கத்தான் செய்கின்றன” என்றான்.

சுருதகீர்த்தி அவன் முகத்தையே கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தான். அபிமன்யு அர்ஜுனனைப்பற்றி பெரும்பாலும் ஒன்றும் சொல்வதில்லை. ஆனால் பேசும்பொழுதெல்லாம் அதில் பிறிதொரு பொருளிருக்கிறதோ என்ற எண்ணம் சுருதகீர்த்திக்கு வராமலிருந்ததில்லை. “நன்று! நீ உடல்தூய்மை செய்வதற்கெல்லாம் பொழுதில்லை. முகம் கழுவி உணவுண்டு கவசங்களை அணிந்து கொள். இன்னும் சிறு பொழுதே உள்ளது” என்று சுருதகீர்த்தி சொன்னான். அபிமன்யு கைதட்டி வாசலில் நின்ற ஏவலனை உள்ளே அழைத்தான். அவன் தாலத்தை கொண்டு நீட்ட அதில் முகம் கழுவி வாய் கொப்பளித்து சிறிது நீரள்ளி தலையில் தெளித்து கைகளால் கோதி பின்னால்விட்டான். “கவசங்களை கொண்டு வருக!” என்றான்.

சுருதகீர்த்தி “இன்று நீ பல்தூய்மை செய்து கொள்ளலாம். இன்று உன் பிறந்தநாள்” என்றான். “இன்றா?” என அபிமன்யு முகம் சுளித்தான். “இன்றென்றும் கொள்ளலாம். நீ பிறந்த மீன் இன்று. பிறந்த மாதம் வரவிருப்பது” என்றான் சுருதகீர்த்தி. “நன்று! இதை என் பிறந்தநாளென்று கொள்கிறேன்” என்றபின் “விழுது” என்றான். ஏவலன் கொண்டு வந்த ஆலம்விழுதால் பற்களை துலக்கியபடி “மீண்டும் அதே கனவு!” என்றான். “இளமையில் உன்னை ஈன்றபோது துணியால் சற்று அழுத்தமாக சுற்றியிருப்பார்கள். அத்தகையோருக்கு வாழ்நாள் முழுக்க எதிலோ சிக்கிக்கொண்டிருப்பது போன்ற கனவுகள் எழும் என்ற கேட்டிருக்கிறேன். மருத்துவர் சூக்தர் ஒருமுறை என்னிடம் சொன்னார்” என்றான் சுருதகீர்த்தி.

“உங்களுக்கு வரும் கனவென்ன?” என்று அபிமன்யு கேட்டான். “பற்றிஎரிவதுபோல. நான் எங்கோ படுத்திருக்கிறேன். என்னுடைய வலது காலின் நகக்கணு அனல்துளிபோல் மின்னும். நான் பார்த்துக்கொண்டிருக்கையிலேயே என்னுடல் பற்றி எரியத்தொடங்கும். மெழுகுபோல உருகி எரிந்து நாற்புறமும் வடிந்து கொண்டிருப்பேன். நூறுமுறை அந்தக் கனவு எனக்கு வந்துள்ளது” என்றான். “மூத்தவரே, இக்கனவுகள் எதையாவது சுட்டுகின்றனவா?” என்றான் அபிமன்யு.

“எதை சுட்டினாலென்ன? வாழ்வும் இறப்பும் வேறெங்கோ முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்தையும் இணைத்துப்பின்னி விரிந்திருக்கும் அந்தப் பெருந்திட்டத்தில் ஒரு துளியினும் துளி இங்கு தெறித்து நம் முன் வந்து கிடந்து என்னை பார் என்கிறது. அதை பார்த்து நாம் அம்முழுமையை ஒருபோதும் உணர முடியாது. வீண் எச்சரிக்கையையும் அச்சத்தையுமே அடைவோம். அதை ஒரு அழகிய கலைநிகழ்வென்று மட்டுமே கொண்டு முன்செல்வது நன்று” என்றான் சுருதகீர்த்தி. “தவிர்க்கமுடியாமைகளைப் பற்றி பேசுபவன் ஒருபோதும் வீரனாக இங்கு வாழ்வதில்லை.”

“இன்று தந்தை களம் நிற்கப்போவதில்லையா?” என்று அபிமன்யு கேட்டான். சுருதகீர்த்தி “அவர் மிகவும் உளம் தளர்ந்திருக்கிறார். ஆனால் அவரின்றி நமது படை எழாது” என்றான். “அவர் உளம் தளர்ந்திருக்கிறார் என்பது பிற எவரையும்விட அவர்களுக்குத் தெரியும். அவரையோ அரசரையோ சிறைபிடிப்பதற்கான சூழ்கைகளை அவர்கள் அமைப்பார்கள்” என்றான் அபிமன்யு. “ஆம், அவர்கள் மலர்சூழ்கை ஒன்றை அமைத்திருப்பதாக சொல்லப்படுகிறது” என்றான் சுருதகீர்த்தி. “மலர்சூழ்கை எதற்குரியது?” என்று அபிமன்யு கேட்டான். “அது ஒருவனை முழுப் படையும் சூழ்ந்துகொண்டு சிறைபற்றுவதற்குரியது. மலருக்குள் வண்டென உள்ளே செல்பவன் சிக்கிக்கொள்வான்” என்று சுருதகீர்த்தி சொன்னான். அபிமன்யு “சூழ்கைகள் அனைத்துமே எவரேனும் சிக்கிக்கொள்வதற்குரிய பொறிகள்தான்” என்றபின் வாய்கழுவி மீண்டும் நீரள்ளி தலையில் விட்டு நீவினான். “மெய்தான். எல்லா சூழ்கைகளும் கண்ணிகளே” என்றான் சுருதகீர்த்தி.

“இன்று நம் படைகள் சற்று வெற்றிக்களிப்பில் உள்ளன என்று அவர்கள் அறிவார்கள். நேற்று அங்கநாட்டரசனால் உயிரளிக்கப்பட்டமையால் சிறுமை கொண்டுள்ள நம் தந்தை சீற்றம் கொண்டு மிகையான ஊக்கத்துடன் எழுவாரென்றும் அவர்கள் எண்ணியிருப்பார்கள். நாம் பொறிக்குள் சென்று சிக்குவதற்கான வாய்ப்புகளே மிகுதி” என்றான் அபிமன்யு. “ஆனால் தந்தை போருக்கெழுவதற்கே உளமில்லாதவராக, ஆற்றல் முழுக்க வடிந்து போய் அமர்ந்திருப்பதாக சொல்கிறார்கள். புலரியில் அவரை எழுப்பி கவசமணியச் செய்யச் சென்ற ஏவலர்கள் அவர் கவசமணிய விழையாமையை வந்து சொல்ல சிறிய தந்தை நகுலரும் சகதேவரும் அவரைப் பார்க்கச் சென்றிருக்கிறார்கள்” என்று சுருதகீர்த்தி சொன்னான்.

“அவர் எழுவார். ஏனெனில் எழாமல் இருக்க அவரால் இயலாது. ஆனால் தளர்ந்த வில்லுடன் அவர் போருக்குச் செல்வாரென்றால் அங்கனால் கொல்லப்படுவார்” என்று அபிமன்யு சொன்னான். “கொல்லப்படுவதா? அவரா?” என்று சீற்றத்துடன் சுருதகீர்த்தி கேட்டான். “ஏன் அவர் மானுடரல்லவா? அம்புகள் அவரை துளைக்காதா என்ன?” என்றான் அபிமன்யு. சுருதகீர்த்தி “ஆம், மானுட அம்புகளால் அவர் துளைக்கப்படமாட்டார். அதை நிமித்திகர்கள் சொல்லியிருக்கிறார்கள்” என்றான். “நிமித்திகர்கள் அவ்வாறு சொல்லிச் சொல்லி பலவற்றை ஏற்றி அவரை மானுடனல்ல என்று தானும் நம்ப வைத்திருக்கிறார்கள். அந்நிலையில்தான் இப்படி எவரேனும் சிறுமை செய்து அனுப்புகையில் உடைந்து வீணனென அமர்ந்திருக்கிறார்” என்று அபிமன்யு சொன்னான்.

கவசங்களைக் கட்டியபடி குனிந்து நின்று “இன்று தளர்ந்த வில்லுடன் சென்று அங்கன் முன் நிற்பார். அவன் அம்புகளால் கழுத்தறுந்து வீழ்த்தப்படுவார். அதை நான் அருகிலெனக் காண்கிறேன்” என்றான். சுருதகீர்த்தி சீற்றத்துடன் எழுந்து “நிறுத்து. அவர் மைந்தனென நானிருக்கிறேன். என் கண் முன் ஒருபோதும் அது நிகழாது” என்றான். “எனில் அதற்கு முன் உங்கள் தலை வெட்டுண்டு வீழ்த்தப்பட்டிருக்கும்” என்றான். “இப்போது அங்கரை தெய்வமென்றாக்குபவன் நீ” என்று சுருதகீர்த்தி சொன்னான். “மூத்தவரே, அவன் ஏறக்குறைய தெய்வமேதான். அவனிடமிருக்கும் அம்புகள் எவருடையவை? பதினெட்டு முறை பாரதவர்ஷத்தை சுற்றி வந்து ஷத்ரிய குடியை வேரறுத்து அனல்குலத்து ஷத்ரியர் என்னும் நிகர்குடியை உருவாக்கி பாரதவர்ஷத்தை புரட்டியமைத்த பரசுராமனின் அம்புகளல்லவா? அதிலிருக்கும் சீற்றத்தையல்லவா நூறு தலைமுறைகளாக இங்கு ஷத்ரியர்கள் அஞ்சிக்கொண்டிருக்கிறார்கள்? இன்று அந்த அம்புகளில் காண்டவக் காட்டின் எஞ்சிய நஞ்சும் ஏறியிருப்பதாக சூதர்கள் சொல்கிறார்கள்” என்றான் அபிமன்யு.

சுருதகீர்த்தியை நோக்கி கைசுட்டி “அங்கு ஒரு அம்பு காத்திருக்கிறது நம் தந்தைக்காக. அது நீள்தவம் செய்த நஞ்சு. தவங்கள் ஒருபோதும் வீணாவதில்லை” என அவன் சொன்னான். “அதிலிருந்து எளிதில் ஒழிய அவரால் இயலாது. ஏனெனில் அவரே தனக்கென கொளுத்திக்கொண்ட சிதைநெருப்பு அது. அது அவரைத் தேடி வரும். வஞ்சம் கொண்ட நாகத்திலிருந்து விண்வாழும் மூவிழியனே தப்ப இயலவில்லை. அதை தன் கழுத்தின் அணியென ஆக்கி இன்றும் பேணிக்கொண்டிருக்கிறார் என்கிறார்கள்” என்றான்.

சுருதகீர்த்தி “நீ சொல்ல வருவதென்ன என்று நன்கு புரிகிறது எனக்கு” என ஏளனத்துடன் சொன்னான். “தந்தைக்கு மேல் எழ விரும்புகிறாய். அவர் வீழ்ந்த இடத்திலிருந்து எழுந்து அவ்வஞ்சத்தை முடித்து புகழ்கொள்ள விரும்புகிறாய். அது நிகழாது. களத்தில் நீயும் நானும் விழுவோம். அவர் ஒருபோதும் விழமாட்டார். ஏனெனில் நம் அம்புகள் நமது எண்ணங்களிலிருந்தும் உணர்வுகளிலிருந்தும் வருகின்றன. அவரது அம்புகள் அவருள் நிறைந்திருக்கும் இன்மையிலிருந்து வருகின்றன. அவ்வின்மையை இங்கு வாழ்ந்து எவரும் ஈட்டிக்கொள்ள இயலாது. இங்குள்ள வாழ்வை ஒவ்வொரு கணமும் துறந்துதான் ஈட்டிக்கொள்ள இயலும்” என்றான்.

“அவரை இந்த அனைத்திலிருந்தும் விடுவித்து கைபற்றி அப்பால் அப்பால் என்று அழைத்துச்செல்லும் ஆசிரியர் அவருக்கு இருக்கிறார். நீயும் நானும் இங்கே விழைவால், வஞ்சத்தால் செயல்வலைப் பின்னலில் சிக்கியிருப்பவர்கள்” என்றான் சுருதகீர்த்தி. “இளைய யாதவரின் படைக்கலம் நம் தந்தை என்பதை நீ மறந்துவிட்டாய். நாம் ஊழின் படைக்கலங்கள். அவர் இறையுருவாக மண்ணில் எழுந்தவரின் படைக்கலம். ஒருபோதும் அது மானுடர் முன் தாழாது. ஐயமே வேண்டாம், அவர் எடுத்த இலக்கு தவறாது” என்றபின் சுருதகீர்த்தி வெளியே சென்றான்.

அபிமன்யு “பொறுங்கள் மூத்தவரே, நானும் வருகிறேன்” என்றபின் சிறுபீடத்தில் அமர்ந்தான். ஏவலர் அவனுக்கு காலில் கவசங்களை அணிவிக்கத் தொடங்கினர். “நீ கிளம்பி வா. நான் படைமுகப்புக்குச் செல்கிறேன்” என்றான் சுருதகீர்த்தி. அபிமன்யு உரக்க நகைத்து “இன்று படைமுகப்பில் தந்தை நிற்க வேண்டியதில்லை, அவர் தளர்ந்திருக்கிறார் என்று அவரிடம் சொல்லுங்கள். இன்று நான் அங்கனுடன் பொருதுகிறேன். அவனுடைய அந்த வெல்ல முடியாத அம்புகளை எப்படி வெல்வதென்று நம் படைகளுக்கு காட்டுகிறேன்” என்றான். அவனை ஒரு கணம் நோக்கிவிட்டு சுருதகீர்த்தி புரவியில் ஏறிக்கொண்டான்.

ele1அபிமன்யு படைமுகப்புக்குச் சென்றபோது அனைத்தும் முற்றொருங்கிவிட்டிருந்தன. ஒவ்வொரு கணமும் முரசின்மீது கழைக்கோல் விழும் என்று எதிர்பார்த்தவர்களாக படைவீரர்கள் நின்றிருந்தனர். அவனுடைய தேர் உருண்டு வருவதன் ஓசை படைமுகப்பில் சிறிய அலைகளை எழுப்பியது. தேர் சென்று நின்றதும் அபிமன்யு தேர்த்தட்டில் எழுந்து நின்று கைகளைக் கோத்து நெட்டிமுறித்தபின் தன் வில்லை எடுத்து தேர்த்தட்டில் ஓசையெழ ஊன்றி அதன் நாணை வலக்கையால் வருடினான். அந்த ஓசை கேட்டு அருகிலிருந்த தேரில் இருந்து சதானீகன் திரும்பி நோக்கி “ஏன் இத்தனை பிந்திவிட்டாய்? இன்று நமது படைகள் ஹஸ்தவியூகம் அமைத்துள்ளன” என்றான்.

அபிமன்யு அதை பொருட்படுத்தவில்லை. “அவர்கள் அமைத்துள்ள மலர்ச்சூழ்கையை எதிர்ப்பதற்கான வழி இது ஒன்றே” என சதானீகன் தொடர்ந்தான். “ஐந்து விரல்களாக நமது படைகள் உருப்பெற்றுள்ளன. அனைத்து விரல்களையும் சென்று தொடும் கட்டை விரலாக மூத்த தந்தை பீமசேனர் எல்லையில் நின்றுள்ளார். சுட்டுவிரலென மூத்த தந்தை அர்ஜுனரும், நீள்விரலென திருஷ்டத்யும்னரும், நாகவிரலென சாத்யகியும், சிறுவிரலென சிகண்டியும் அமைய நமது படை அணிகொண்டுள்ளது” என்றான். அபிமன்யு “நாம் எப்போதும் சூழ்கைகளை சிறப்பாகவே அமைக்கிறோமோ?” என்றான்.

அதிலிருந்த ஏளனத்தை புரிந்துகொண்ட சதானீகன் “இன்று அவர்கள் நம்மில் ஒருவரை கொன்றோ சிறைபிடித்தோ மீள்வோம் என்று வஞ்சினம் உரைத்து வந்துள்ளதாக செய்தி வந்துள்ளது. மறுவஞ்சமாக நாம் அவர்களில் சிலரை பற்றிக்கொண்டுவர எண்ணியிருக்கிறோம்” என்றான். “நம் இலக்கு யார்?” என்று அபிமன்யு கேட்டான். “அங்கர். அல்லது கௌரவ அரசர். அவர்களின் இலக்கு நம் அரசர் என்று தோன்றுகிறது.” அபிமன்யு “ஏன் இளையவராக இருக்கக்கூடாதா?” என்று சிரிப்புடன் கேட்டான். “என்ன சொல்கிறாய்?” என்று சதானீகன் கேட்டான். “தந்தை வில் தளர்ந்து இருப்பது படைகள் அனைவருக்கும் தெரியும். அவரை இலக்கு வைத்து அவர்கள் வந்திருக்கலாமல்லவா?” என்றான் அபிமன்யு.

“அவரை அத்தனை எளிதாக பிடிக்க இயலாது” என்று சதானீகன் சொன்னான். “ஆம், அதன் பொருட்டே இப்படை சூழ்கை அமைக்கப்பட்டிருக்கலாம். அவர் உளம் தளர்ந்திருக்கிறார். உளம் தளர்ந்திருப்பவர்கள் தங்களால் இயல்வதற்கு அப்பால் ஒரு பெருஞ்செயலை செய்யும்பொருட்டு துணிந்தெழுவது எங்கும் நிகழ்வதுதான். அச்செயலினூடாக தங்கள் சோர்வை நீக்கி ஆற்றலை திரட்டிக்கொள்ள இயலுமென்று அவர்கள் எண்ணுவார்கள். அரிதாக அது நிகழவும் செய்யும். பெரும்பாலும் அச்செயல் அவர்களை கீழே தள்ளி காலால் மிதித்து கூழாக்கிவிடும்” என்றான் அபிமன்யு.

சதானீகன் அச்சொற்களால் கசப்படைந்து “அவர் என்ன செய்யவேண்டுமென்பதை கற்பிக்கும் இடத்தில் நாம் எப்போதுமிருந்ததில்லை” என்றான். “ஆம், ஆனால் சுட்டுவிரல் நீட்டி இன்று அந்தப் பொறியை தொடப்போகிறது நம் படை. அது கவ்வி துண்டித்து எடுத்துக்கொள்ளப்போகிறது” என்று அபிமன்யு சொன்னான். “எனில் நீ சென்று அவரை மீட்பாய் போலும்” என்று ஏளனமாக சதானீகன் கேட்டான். “ஆம், அவர் சிக்கிக்கொண்டால் அங்கு சென்று அவரை மீட்டு வரும் ஆற்றல் கொண்டவன் நான் மட்டுமே. மீட்டுக்கொண்டு வருவேன். அதன் பின் அவரைப் பார்த்து ஒரு சொல்கூட உரைக்காமல் தலைவணங்கி மீள்வேன். என் கண்களை அவர் சந்திக்கமாட்டார். அங்கனின் கையிலிருந்து உயிர்பெற்று மீண்டதற்கு நிகரான துயரை அப்போது அடைவார். ஒருவேளை எங்களுக்குள் இருக்கும் கணக்கு அப்போது நிறைவேறக்கூடும்” என்றான் அபிமன்யு. சதானீகன் மறுமொழி சொல்லாமல் தன் தேரை திருப்பி அப்பால் கொண்டுசென்றான்.

போர்முரசுகள் ஒலிக்கத் தொடங்கியதும் அபிமன்யு நாணொலி எழுப்பியபடி “வெற்றிவேல்! வீரவேல்!” என்று கூவிக்கொண்டு பாஞ்சாலத்தின் வில்லவர்படை தன்னை இருபுறமும் சூழ்ந்து துணைவகுக்க கௌரவப் படைகளின்மேல் பாய்ந்தான். போர் தொடங்குவதற்கு முந்தைய கணம் வரை தன் அகம் பலநூறு துண்டுகளாக சிதைந்து ஒன்றுடன் ஒன்று உரசி முட்டிக்கொண்டிருப்பதாக அவன் உணர்வதுண்டு. போர் தொடங்கிய கணமே அவன் முற்றிலும் மறைந்து அத்தேரில் அவன் வில் மட்டும் நின்று கொந்தளித்துக்கொண்டிருக்கும். அதிலிருந்து அவனை மீறியே என அம்புகள் எழுந்துகொண்டிருக்கும். கணமொழியாது அலைகளை ஏவும் பெருங்கடல் வளைவு என அவன் வில்லைப்பற்றி சூதர்கள் முன்பு பாடியிருந்தனர். ஒவ்வொரு கணமும் அவன் முற்றொழிந்து மறுகணத்தை நோக்கி சென்று கொண்டிருந்தான். போரின் திட்டமிடல்களும், திட்டத்தை மீறி எழுதல்களும், பின்னடைதல்களும், வீறுகளும், சோர்வுகளும், சூழ்ச்சிகளும், வஞ்சினங்களும் அனைத்தும் பிறிதொருவனால் நிகழ்த்தப்பட அவன் அப்பால் நின்று அதை நோக்கிக்கொண்டிருப்பான்.

தொலைவில் விரிந்திருந்த கௌரவப் படையின் பெருந்தாமரையை அவனால் அந்தத் தேரிலிருந்து பார்க்க இயலவில்லை. அதன் இதழ்கள் ஒவ்வொன்றும் முனை நீண்டு குவிந்த அலைகள் வடிவிலிருந்தன. அவனுக்கு முன்னால் இருந்த இதழில் பூரிசிரவஸும் சலனும் சோமதத்தரும் பால்ஹிகக் கூட்டமைப்பின் வில்லவரும் இருந்தனர். அவன் பூரிசிரவஸுடன் வில் கோத்து பால்ஹிகர்களின் தேர்வீரர்களை அம்பால் அறைந்து வீழ்த்திக்கொண்டிருந்தான். பூரிசிரவஸ் தன் உடன் பிறந்தவர்கள் அனைவருக்கும் கையசைவால் ஆணையிட்டுக் கொண்டு அவ்வடிவை காத்தபடி போரிட்டான்.

போர் இருபுறமும் விசை குவியாமலேயே நிகழ்ந்துகொண்டிருந்தது. தோள்கோத்து தழுவிப் புரண்டு போரிடப்போகும் மல்லர்கள் ஒருவரை ஒருவர் நோக்கியபடி வட்டக்களத்தில் தசையிளக சுற்றிவருவது போலவே அது நிகழ்ந்தது. முதன்மை வீரர்கள் எவரும் ஒருவரோடொருவர் கோத்துக்கொள்ளவில்லை. தாமரை இதழ் அகன்று விரிந்து மெல்ல சுழல ஜயத்ரதனால் நடத்தப்பட்ட படையிதழ் அபிமன்யுவின் முன் வந்தது. ஜயத்ரதன் உரக்க நகைத்தபடி “என்ன தயங்கிவிட்டீர்களா? உங்கள் படையில் ஒவ்வொருவரும் அஞ்சி விலகுகின்றனர்! வருக! இளவரசே வருக! உங்களுக்காகவே தேன் ஒருக்கி காத்திருக்கிறது மாமலர்” என்று கூவினான். “இதழ்கள் ஒருங்கட்டும். இன்று அவ்விருந்தை சிதைத்து உள்ளே வந்து உண்டு திரும்புவதே எங்கள் இலக்கு” என்று அபிமன்யு கூவினான்.

ஐந்து விரல் விரித்து கை மலருடன் போரிட்டது. ஐந்து விரல்களும் விரிந்து மலரை அள்ளிக்குலைக்க முயன்றன. மலர் மெல்ல சுழன்று அதை ஒழிய விரல்கள் குவிந்து இதழ்களை தனித்தனியாக கவ்விக் கிழித்து கசக்கியது. சிதைந்த இதழ்களின் வீரர்களை பின்னடையச் செய்ய சகுனியின் ஆணை எழுந்தது. “பின்னடைக! மீண்டும் ஒருங்கிணைக! சிதைந்த இதழ்கள் புல்லிவட்டங்களாகி தாமரையின் அடிவளையத்தை அமைத்துக்கொள்க!” புல்லிவட்டங்களிலிருந்து புதிய இதழ்கள் எழுந்து வந்து மீண்டும் மலரை முழுமைப்படுத்தின. ஒழியாது இதழ் முளைக்கும் தாமரை சுழன்றுகொண்டே இருக்க அதை அறைந்து பற்றிச் சுழற்றி ஊடுருவி போரிட்டது கை.

அபிமன்யு ஒவ்வொரு இதழையும் தாக்கி முன்னெழுந்து வந்த வீரர்களுடன் போரிட்டான். இறுதியில் கர்ணனை நேருக்கு நேர் சந்தித்தபோது உரக்க நகைத்தபடி “பெருவீரர்கள் ஒருவனுக்கு இலக்கு குறித்திருக்கிறீர்கள்! நன்று! அந்த அச்சம் இன்று மேலும் வளரும்” என்றான். “ஈயே, வீண் சொல்லெடுக்காது திரும்பிப் போ. இது வண்டுக்கு விரித்த வலை” என்று கர்ணன் சொன்னான். சீற்றம்கொண்டு “சிறியவனிடமிருந்து பெரிய அம்புகளை பெறுவீர்கள்” என்று வஞ்சினம் உரைத்து அபிமன்யு கர்ணனை அம்புகளால் அறைந்தான்.

மீண்டும் அவர்களிடையே அந்த நிகர்குலையா நெடும்போர் தொடங்கியது. கர்ணன் தன் அகவையை ஒவ்வொரு அம்புக்கும் குறைத்து இளையோனாகி அபிமன்யுவை அணுகவேண்டியிருந்தது. அபிமன்யு தன் அகவையை அம்புக்கு மேல் அம்பென வளர்த்து முதியவனாகி கர்ணனை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. கர்ணன் தன்னை விருஷசேனனாக உணர்ந்தான். அபிமன்யு தன்னை அர்ஜுனனாக உணர்ந்தான். இரு அம்புமுனைகளும் எங்கோ ஒரு புள்ளியில் சந்தித்துக்கொண்டன. அவை மட்டுமே அறியும் ஒரு சொல்லை பரிமாறிக்கொண்டன. கூரோடு கூர் சந்திக்கும்போது எழும் ஒரு நுண்சொல். செவி கேட்காததாக, விழியுணராததாக, உளம் அந்த முனையளவே கூர்ந்தாலன்றி சென்றடையாததாக இருந்தது அது.

தாமரை விரிந்து கையை பற்றியபின் கூம்பலாயிற்று. அதன் அழுத்தம் மேலோங்கி வருவதை உணர முடிந்தது. அதன் இருபுறத்திலிருந்த இதழ்களும் இறுகி ஒன்றை ஒன்று அழுத்திக்கொண்டே சென்றன. பீமனும் அர்ஜுனனும் தம் படைகளை பின்னெடுத்துக்கொண்டு சென்றனர். யுதிஷ்டிரர் அவ்விசைக்கு ஈடுகொடுக்க முடியாமல் தன்னுடைய சிறிய மெய்க்காவல் படையுடன் மையத்தில் தடுமாறினர். துரோணரின் படைகள் இதழெனக் குவிந்து வந்து எண்ணியிராக் கணத்தில் சரடென்றாகி நீண்டு யுதிஷ்டிரரை பற்ற வந்தன. துரோணர் வெறிகொண்டு அம்புகளை தொடுத்தபடி விரைந்து வந்தார். நோக்கியிருக்கவே அவர் மிக அருகே அணைந்துவிட்டார். அவர் அம்புகளால் யுதிஷ்டிரரின் மெய்க்காவல் படைகளிலிருந்த வீரர்கள் ஒவ்வொருவரும் அறைபட்டு அலறி வீழ்ந்தனர்.

அஞ்சி கை பதறி “பின்னடைக! பின்னடைக! ” என்று யுதிஷ்டிரர் கூவினார். “மந்தனுக்கு செய்தி சொல்க! இளையவர்கள் வருக! என்னை சிறைபிடித்து கொண்டுசெல்லும் இலக்கு கொண்டிருக்கிறார்கள்.” சல்யரும் சோமதத்தரும் இருபுறமும் துரோணரை காத்தனர். துரோணரின் அம்பு எல்லைக்குள் யுதிஷ்டிரர் வந்தார். அவருடைய கொடியும் தேர்மகுடமும் உடைந்தன. “நான் சிக்கிக்கொண்டேன்! என்னைக் காக்கும்பொருட்டு படையெழுக!” என்று யுதிஷ்டிரர் கூவினார். அருகே அபிமன்யுவின் கொடியைக் கண்டு “அபிமன்யுவை வரச்சொல்க! இந்தப் படைசூழ்கையின் முனையை அவன் உடைக்கட்டும்” என்றார். யுதிஷ்டிரரின் அழைப்பைக் கேட்டதும் கர்ணனுடன் பொருதிக்கொண்டிருந்த அபிமன்யு அக்கணமே தேரைத் திருப்பி பக்கவாட்டில் துரோணரின் படைகளை தாக்கினான். இடைமுறியா மழைபோன்ற அம்புகளால் துரோணரின் காவல்சுற்றத்தை வீழ்த்தி அவரை அறைந்து பின்னடையச் செய்தான். தேர்த்தட்டில் சோமதத்தர் அம்புபட்டு விழுந்தார். சல்யரின் வில் முறிந்து தெறித்தது. அவர் தொடையில் அம்பு பாய்ந்து தேர்த்தட்டில் அமர்ந்தார்.

துரோணரின் காவலர்படையில் வில்லவர் அனைவரும் விழ அவர் நிலையை உணர்ந்து தன் தேரை பின்னடையச் செய்தார். யுதிஷ்டிரர் “விடாதே! அப்படியே முன்னகர்ந்து செல்! சென்று தாமரை வளையத்தை உடை! அதன் மையத்தை அறை!” என்றார். “உடைகிறது! இதுவே தருணம். அதை முற்றாக சிதைத்தழித்துவிடு. செல்க!” என அபிமன்யுவிடம் ஆணையிட்டார். அபிமன்யு ஒருகணம் தயங்க “அஞ்சாதே! இத்தருணம் தெய்வக்கொடை! அவர்கள் வலுகுறைந்திருக்கிறார்கள். தாமரைச்சூழ்கையில் இது பெரும்பிளவு. உள்ளே செல்! அதன் மையத்தை சிதறடி! அவர்களுக்குக் காட்டு நாம் யாரென்று !” என்றார்.

அபிமன்யு துரோணரை அம்புகளால் அறைந்தபடி துரத்திச்சென்றான். அவனுடைய ஆற்றலைக் கண்டு அவர் கை ஓய்ந்துவிட்டது தெரிந்தது. “நில்லாதே, செல்! நீ சென்றுகொண்டிருக்கையிலேயே பீமனும் அர்ஜுனனும் வந்து உன்னை பின்துணைப்பார்கள். நமது படை நீள்வேல் என தாமரையை ஊடுருவிச்செல்லும்” என யுதிஷ்டிரர் கூவினார். “ஆணை! பீமனும் அர்ஜுனனும் எழுக… இளையோனை பின்தொடர்ந்து செல்க!” அபிமன்யு துணைப்படையுடன் வேல் வடிவு கொண்டு தாமரையை ஊடுருவிச் சென்றான். யுதிஷ்டிரர் அவர் இயல்பை மீறி வெறிகொண்டிருந்தார். முன்னர் எழுந்த அச்சம் அவரை நிலைகுலையச் செய்துவிட்டிருந்தது. “மந்தன் எழுக! இளையவன் எழுக! இளவரசனை பின்தொடர்ந்து செல்க! ஊடுருவல் அறுபடாது ஒற்றைச்சரடென அமைக!” என கைதூக்கி ஆர்ப்பரித்தார்.

“இளையவர் வந்துகொண்டிருக்கிறார், அரசே!” என்று அவருடைய செய்திக்காவலன் அறிவித்தான். “எங்கே மந்தன்?” என்று யுதிஷ்டிரர் கூவினார். “அவர் கௌரவ அரசருடன் பொருதுகிறார்… கிளம்பிவிட்டார்.” ஆனால் தாமரையின் வலப்பக்கத்திலிருந்து ஜயத்ரதனும் இடப்பக்கத்திலிருந்து கர்ணனும் நடத்திய இரு பேரிதழ்கள் வந்து ஒன்றுடன் ஒன்று சந்தித்து, ஒன்றுடன் ஒன்று இணைந்து மூடி அபிமன்யுவை கௌரவப் படைகளுக்குள் கொண்டுசென்று முற்றாக விழியிலிருந்து மறைத்தன.

முந்தைய கட்டுரைகுளச்சல் மு.யூசுப்புக்கு சாகித்ய அகாடமி
அடுத்த கட்டுரைபுத்தகக் கண்காட்சியில் – கடிதம்