உரையாடும் காந்தி – இளையோர் சந்திப்பு – கோவை

gandhi

 

இளையவர்களின் மனச்சக்தியையும் செயலூக்கத்தையும் நம்பியே கடைசிவரை காந்தியின் ஆத்மா துடித்துக்கொண்டிருந்தது. இன்று, இந்தியதேசத்தின் மொத்த சனத்தொகையில் 65 சதவீதம் மனிதர்கள் 35 வயதுக்குட்பட்ட இளையோர்கள். சிந்தனையளவில் நமக்கு இளந்துடிப்பு இரத்தம் நரம்புகளுக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது. பூமிக்கிரகத்தின் பழமையான தேசங்களிலும் ஒன்றாகவும், இளையசக்திகளின் திரளாகவும் இந்தியதீபகற்பம் ஒரே சமயத்திலிருக்கிறது.

காந்திய எதிர்ப்பு என்பதும் அஹிம்சை மீதான அவதூறு என்பதும் இன்றைய இளைஞர்களிடத்து ஒரு கிளர்வை உருவாக்கி விமர்சிக்கத் தூண்டுகிறது. காந்தியம் சரியா தவறா என்பதற்கான துவக்கயுரையாடல்கள் ஏதும் துவங்கப்படாமலேயே, அவர்மீதும் அவரைத்தொடர்பவர்கள் மீதும் கவிழ்க்கப்படும் வெறுப்புணர்ச்சியென்பது ஒற்றைப்படையான சித்தாந்தமாக்கலின் சார்புநிலையா என ஐயப்படவைக்கிறது. ஒன்று காந்தியை கடவுளாக்குவது, இன்னொன்று கயவராக்குவது. இவ்விரண்டு நிலைப்பாடுகளுக்கு இடையேயான தனிஊசல்தான் இந்திய மனது.

‘உரையாடும் காந்தி’ என்னும் புத்தகம், தன்னை அனலிட்டுப்பொசுக்கும் வெறுப்புமனங்களோடு காந்தியதத்துவத்தின் நடைமுறை சாத்தியங்களையும் சாத்தியமின்மைகளையும் உரையாடவைக்கிறது. அவரவர் கரைகளில் நின்று கத்திக்கொண்டே இருக்காமல், இருவருக்குமான பொதுநதியில் இறங்கி கால்நனைக்கச் சொல்கிறது ஜெயமோகனின் காந்தியக்கோணங்கள். அதன் புறவெளிப்பாடே திரு.அ.மார்க்ஸ் அவர்களுக்கான இந்நூலின் காணிக்கை.

கோவை பி.எஸ்.ஜி கல்லூரி பேராசியர்களும் கல்விமாணவர்களும் ஒன்றிணைந்து ‘நிலாமுற்றம்’ என்ற தனிப்பெயரில் தொடர்ச்சியாக உரையாடுகிறார்கள். ஒரு கல்லூரியின் வகுப்பறைச்சுவர்களுக்குள் இத்தகைய உரையாடல்தளம் என்பது, கூடுகளுக்குள் அனத்தும் புறாக்களைப்போல ஒரு இருத்தலை சுற்றுவெளிக்கு ஒலிக்கிறது. நாடகக்கலைஞரும் தமிழ்த்துறைப் பேராசிரியருமான ராம்ராஜ் அவர்கள் இக்கூடுகை நிகழ்வினை சமரசமில்லாமல் முன்னெடுத்துப்போகிறார். குயவன் சக்கரத்தின் சுழற்றுத்தடி போல தன்னை வார்த்துக்கொள்வதற்கான ஒரு புறவிசைக்கருத்தியலை மாணவமனங்கள் இந்நிகழ்வின் வாயிலாக கண்டடைகிறார்கள். ஒருவித சுயஅடைகாத்தலுக்குப் பிறகு வேறொன்றாய் அவர்கள் பரிணமிக்கிறார்கள்.

ஒரு சித்தாந்தவிதையாக, உரையாடும் காந்தியை வாசித்தலுக்குப் பின்னான தங்களுடைய அனுபவப்பகிர்வினையும் கேள்விபதில் உரையாடல்களையும் தோழமைகள் முருகானந்தம் மற்றும் கண்ணன் தண்டபானி இருவரும் நிகழ்த்தப்போகிறார்கள். நாளை நிகழவிருக்கும் இக்கருத்துரையாடல் நவீனகாந்தியம் பற்றியான நம் எண்ணங்களின் எல்லைப்பரவலாக்குதலை அங்குலமாவது அதிகரிக்கும் என நம்புகிறோம்.

 

நிலாமுற்றம்

இடம் – பி.எஸ்.ஜி கலைக்கல்லூரி

நாள் – 23-1-2019

நேரம் – மாலை 5:30 மணிக்கு

 

இலண்டன் வட்டமேசை மாநாட்டுக்கு முந்தைய இரவில் அம்பேத்காரும் காந்தியும் ஒரே அறையில் தங்கியிருந்தார்கள். நள்ளிரவு நெருங்கும் நேரத்தில் காந்தி உறங்கமுற்பட, அம்பேத்காரோ மேசைவிளக்கின் கவிழ்மஞ்சள் ஒளியில் ஒரு புத்தகத்தை வாசித்து புரட்டியபடி இருந்தார். ‘உடல்நலமும் அதிமுக்கியம், தூங்கச்செல்லுங்கள்’ என அம்பேத்காரிடம் காந்திகூற “உங்கள் சமூகம் விழித்துவிட்டது, ஆகவே நீங்கள் உறங்கலாம். ஆனால் என் சமூகம் இன்னும் விழுத்தெழவில்லை. ஆகவே என்னால் உறங்கவியலாது” எனச்சொல்லி குறிப்பெடுக்கத் துவங்குகிறார் அம்பேத்கார். தன் மக்களுக்களின் விழித்தலுக்காக தானுறங்காத ஒரு நிகராளுமையின் உடல்நலத்தைப்பற்றியும் ஓய்வெடுத்தல்பற்றியும் உரையாடும் ஒரு எளியமனம் காந்திக்கு இருந்திருக்கிறது.

எதிரெதிர் கருத்துருக்களை தங்களளவில் உருவகித்துக்கொண்ட இவ்விரு ஆளுமைகளும் உரையாடிக்கொண்ட புறச்சொற்களைத்தாண்டி, அகத்தாழத்தில் பேசிக்கொண்ட சுயவுரையாடல்கள் இன்னமும் பேசவோ எழுதப்படவோ இல்லாத வரலாறாக பின்மறைந்துநிற்கிறது. ஒரு தனிமனிதன் விழிப்புணர்ச்சி அடையவேண்டும் என்கிற ஒற்றைநோக்குதான் எத்தகைய சித்தாந்தத்துக்கும் அடிப்படை. பண்பாட்டு ஆய்வாளர் ராஜ்கவுதமன் வரிகளில் சொன்னால், ‘அதிகாரத்திற்கு எதிரான மனவிசைதான் தலித் என்பதே தவிர, அது ஒரு சாதியல்ல’ என்ற பொருள்கொள்ளலை நாம் சென்றடைந்தாகவேண்டும். நம்மிலிருந்து நாம் முளைத்து வளர்வடையவேண்டும்.

முதற்கட்டமாக கோவை மற்றும் ஈரோடு சுற்றுப்புறத்தில் அமைந்திருக்கும் ஐந்து கல்லூரிகளில் இந்த ‘உரையாடும் சந்திப்புகள்’ நிகழவிருக்கிறது. மாற்றுமனங்களோடு புன்னகையோடு உரையாடும் ஒரு குணப்பண்பை நமக்குள் வளர்த்தெடுக்க இவைகள் உதவும். கருத்துமுரண்களுக்குள்ளும் ஒருத்தருக்கொருத்தர் அன்புகோர்த்து நிற்கமுடியுமென ஒரு அறிவுத்தெளிவை நாம் அகப்படுத்துவோம். மனிதர்களை வாசிக்கத் துவங்கியிருக்கும் நவயுக குழந்தைகளுக்கு இப்பண்பு ஒரு சமூகக்குணமாக மனம்பதியும்.

வாருங்கள், உள்ளத்திலிருந்து ஒரு உரையாடலை நிகழ்த்த முயற்சிப்போம். அதுதான் முன்நடத்திச்செல்லும் ஒரு சமூகத்துக்கான பொதுநெறி. காந்தியை அடைவது பற்றியல்ல, நமக்குள் காந்தியை அனுமதிப்பதுபற்றியே நாம் இன்னும் பேசவேண்டியிருக்கிறது.

தன்னறம் நூல்வெளி

குக்கூ காட்டுப்பள்ளி

 

முந்தைய கட்டுரைதீ
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-31