அலஹாபாத் கும்பமேளாவை நோக்கி…

dji_0076

இன்று அதிகாலை விமானத்தில் கோவையிலிருந்து கிளம்பி டெல்லி சென்று அங்கிருந்து ஆக்ரா வழியாக அலகாபாத்துக்கு மகாகும்பமேளா பார்க்கச் செல்கிறோம். திடீரென்று போட்ட திட்டம். நான் 23 அன்றே நாகர்கோயிலில் இருந்து கிளம்பி கேரளத்தில் பட்டாம்பிக்குச் சென்று அங்கே ஜனவரி 24 அன்று பட்டாம்பி கலைக்கல்லூரியில் ஒரு கவிதை கருத்தரங்கில் பேசினேன். அங்கிருந்து கோவை.

கோவையிலிருந்து என்னுடன் ஈரோடு கிருஷ்ணன், ஈஸ்வரமூர்த்தி, திருப்பூர் ராஜமாணிக்கம், நெல்லை சக்தி கிருஷ்ணன் ஆகியோர் வருகிறார்கள். சென்னையிலிருந்து விமானத்தில் வழக்கறிஞர் செந்தில், வினோத் ஆகியோர். பெங்களூரிலிருந்து ஜி.எஸ்.வி நவீன், பெங்களூர் கிருஷ்ணன், ஏ.வி.மணிகண்டன் ஆகியோர். லண்டன் நண்பர் முத்துக்கிருஷ்ணனும் சிங்கப்பூர் சரவணன் விவேகானந்தனும் நேரடியாக வருகிறார்கள்.

IMG_20190126_233329

உத்தரப்பிரதேசம் அலகாபாதில் நடைபெறும் மகாகும்பமேளா உலக அளவில் மிக அதிகமாக மக்கள் கூடும் திருவிழா. கங்கை யமுனை மற்றும் மண்ணுக்கடியில் ஓடும் சரஸ்வதி ஆகியவை கலக்கும் திரிவேணிசங்கமம் என்னும் ஆற்றுக்கூடுகையில் நீராடுவதுதான் இந்த விழா. இவ்வாண்டு தை 15, மகரசங்கிராந்தி அன்று தொடங்கி மார்ச் வரை நிகழ்கிறது.

இதன் சோதிடக்கணக்குகள் சூரியனை அடிப்படையாகக் கொண்டவை. இதன் புராணங்கள் ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு வகையானவை. அடிப்படையில் இது இந்தியா என்னும் மாபெரும் பண்பாட்டுவெளி ஒற்றைப்புள்ளியில் குவிவது. அத்தனை மதப்பிரிவுகளும், சமணமும் பௌத்தமும் சீக்கியமும் உட்பட, கங்கைக்கரையில் குவிந்து நீராடுவது.

ஏற்கனவே ஹரித்வார் கும்பமேளாவுக்கு 2010-இல் நண்பர்களுடன் சென்றிருக்கிறேன். இது இந்தியாவை கண்கூடாக காணும் ஓர் அனுபவம். வெவ்வேறு இன மக்கள். வெவ்வேறு ஆடைகள். வெவ்வேறு மொழிகள். முற்றிலும் மாறுபட்ட ஆசாரங்கள். நூற்றுக்கணக்கான மடாதிபதிகள். அவர்களுக்கு சம்பந்தமே இல்லாத அலையும் துறவிகள். இந்தியா என்னும் இந்தத் தொல்நிலம், உலகப்பண்பாடுகளின் உச்சங்களில் ஒன்று, நம் முன் உயிர்ப்புடன் நிகழ்ந்துகொண்டிருப்பதைக் காண்பது ஒரு வியனுருக் காண்டல்.

அகத்தேடல்கொண்ட எந்த இந்திய எழுத்தாளனுக்கும் அகம் கொந்தளித்து எழச்செய்யும் தருணம் இது. இத்தனை போர்கள் பஞ்சங்கள் பிளவுபடுத்தும் அரசியலுக்கு அப்பாலும் இந்தியா ஏன் ஒன்றாகவே நீடிக்கிறது என்பதற்கு வான்பிளக்கும் ஒலியுடன் சொல்லப்படும் மறுமொழி.

SAM_0071

ஹரித்வார் கும்பமேளா பதிவுகள் 

கும்பமேளா – 8

கும்பமேளா – 7

கும்பமேளா – 6

கும்பமேளா – 5

கும்பமேளா – 4

கும்பமேளா – 3

கும்பமேளா – 2

கும்பமேளா – 1

கும்பமேளா பயணம்

 

 

முந்தைய கட்டுரைஒரு பயணத்திற்கு என்னதான் தேவை?
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-35