‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-34

ele1மூன்று மாதகாலம் பிரக்ஜ்யோதிஷம் துயரம் கொண்டாடியது. அனைத்துக் கொண்டாட்டங்களும் கைவிடப்பட்டன. ஒற்றைமுரசு மட்டுமே அரண்மனையிலும் கோட்டையிலும் ஒலித்தது. நாட்டைச் சுற்றியிருந்த சிற்றூர்களிலும் காடுகளிலும் விரிவாகத் தேடிவிட்டு ஒற்றர்கள் ஒவ்வொருநாளும் வந்துகொண்டிருந்தனர். இளவரசன் மறைந்துவிட்டான் என்பது மீண்டும் மீண்டும் உறுதியாகியது. சிறுநம்பிக்கையைப் பேண ஒவ்வொரு எதிர்ச்செய்திக்குப் பின்னரும் உள்ளம் முயன்றது. அந்த நம்பிக்கையையே இலக்காகக் கொண்டு வந்து அறைந்தன அடுத்த செய்திகள்.

காவகர் நிமித்திகர்களை அழைத்து இளவரசன் உயிருடன் இருக்கிறானா என்று உசாவினார். “அமைச்சரே, அவர் உயிருடன் இருக்கிறார். தன் தெய்வத்தால் பேணப்படுகிறார். பேராற்றல் மிக்கவராக திரும்பி வருவார். பெரும்புகழ்பெற்ற மன்னராக, நிகரற்ற மல்லராக திகழ்வார். வரவிருக்கும் மாபெரும் போர் ஒன்றில் பாரதவர்ஷத்தின் நிகரற்ற வீரன் ஒருவனால் கொல்லப்படுவார். அவரைக் கொன்று ஆட்கொள்ள பிரம்மத்தின் வடிவென மானுடன் ஒருவன் மண்ணிலெழுவான்” என்றனர் நிமித்திகர். அச்சொல் பகதத்தரை உயிர்வாழச்செய்யும் அமுதமாக அமைந்தது. அவர் நோய்மீண்டு எழுந்தார். அரண்மனையில் ஒவ்வொன்றும் நிலைமீண்டன.

பிரக்ஜ்யோதிஷத்தின் குடிகளும் அதை விரும்பினர். அவர்கள் இளவரசனை ஏளனம் செய்த பெரும்பிழைக்கு ஈடுசெய்ய எண்ணினர். ஆகவே மறைந்த இளவரசன் அவர்களின் இல்லங்களிலெல்லாம் தெய்வமென அமர்ந்திருந்தான். அவனை ஓவியர் ஒருவர் யானைப்பாவையுடன் விளையாடும் வடிவில் பட்டில் வரைந்திருந்தார். அதையே சிற்பமென்றாக்கி அவர்கள் நிறுவிக்கொண்டனர். களியானையுடன் அமர்ந்திருந்த சிறுவனாகிய பகதத்தன் பின்னாளில் வந்த சிலைகளில் அந்த யானைமேல் அமர்ந்திருந்தான். யானை பெரிதாகியபடியே செல்ல மாமதவேழத்தின் மேல் அமர்ந்திருக்கும் சிறுவனாக அவன் உருமாறினான். அவன் மறைந்த நாளில் இல்லங்களில் களிமண்ணில் அவன் உருவை நிறுவி பாலன்னம் படைத்து வழிபட்டனர்.

அரண்மனையிலிருந்து பகதத்தன் மறைந்தது தற்செயலாக நிகழ்ந்தது. அவையில் நிகழ்ந்த சிறுமையால் துயருற்ற அவன் எவரையும் பார்க்க விழையவில்லை. எவரும் தன்னை காணாமல் எங்கேனும் ஒளிந்துகொள்ள விழைந்தான். ஆகவே அரண்மனையில் இருந்து மெல்ல வெளியேறிச்சென்று அங்கே இடைநாழியிலிருந்த கூடை ஒன்றுக்குள் புகுந்து மறைந்துகொண்டான். அரண்மனையிலிருந்து அழுக்குத்துணிகளை சலவைக்காரர்களிடம் கொண்டுசெல்லும் கூடை அது. அதை வண்டியில் ஏற்றி அவர்கள் பிரம்மபுத்ரைக்கு கொண்டுசெல்லும்போது அவன் துயின்றுகொண்டிருந்தான்.

நதிக்கரையில் அவர்கள் வண்டியை நிறுத்தி கூடைகளை இறக்கி அடுக்கிவிட்டுச் சென்றனர். அவன் வெளியே வந்தபோது அங்கே முதிய சலவைக்காரர் சிலர் மட்டுமே இருந்தனர். அவன் அங்கே நின்றிருந்த பரிசல் ஒன்றில் ஏறி அமர்ந்தான். அதன் கயிற்றை என்னவென்று அறியாமல் பிடித்து இழுத்து அவிழ்த்தான். பரிசல் நீர்ப்பெருக்கில் செல்லத் தொடங்கியது. அதன் விசைகொண்ட சுழற்சியால் தலைசுற்றி அவன் அதிலேயே மயங்கி விழுந்தான். அவன் மீண்டும் விழித்துக்கொண்டபோது ஆற்றிடைக்குறை ஒன்றில் பரிசல் சிக்கி நின்றிருந்தது. அவன் அதில் இறங்கி சேற்றுப்பரப்பில் அமர்ந்துகொண்டான்.

அங்கே அவனுக்கு உணவு ஏதும் கிடைக்கவில்லை. பசி தாளாமல் அவன் கதறி அழுததை எவரும் கேட்கவில்லை. இருள் மூடிக்கொண்டிருந்தது. அவன் அங்கிருந்த நாணல்களைப் பிடுங்கி உண்ணமுயன்று முடியாமல் வான்நோக்கி கூவினான். இரவில் அப்பாலிருந்த நாணல்கரையிலிருந்து ஆற்றில் இறங்கி நீந்திவந்த யானைக்கூட்டம் ஒன்று ஆற்றிடைக்குறையில் ஏறி அங்கிருந்த பேய்க்கரும்புகளை பிடுங்கி உண்டது. அக்கூட்டத்தில் இருந்த பிடியானை ஒன்று அவன் அகவையே கொண்ட ஆண்குழவி ஒன்றை உடன் கொண்டு வந்திருந்தது. அந்தக் குழவிக்களிறு அவன் அழுகையைக் கண்டு அருகே வந்து கூர்ந்து நோக்கியது. பின்னர் அவனை தன் துதிக்கையால் தூக்கி கொண்டுசென்று தன் அன்னையிடம் நிறுத்தியது.

அன்னை தன் மைந்தனுடன் வந்த மானுடச்சிறுவனைக் கண்டு சினம்கொண்டு தாக்க வந்தது. ஆனால் இளங்களிறு அன்னையை தடுத்து அச்சிறுவனுக்கு காப்பளித்தது. அன்னையிடம் அவனுக்கு முலையூட்டும்படி சொன்னது. அன்னை மைந்தனுக்குப் பணிந்து பகதத்தனின் மேல் தன் காலை தூக்கி வைத்து அவன் முகத்தில் பாலை பீய்ச்சியது. பகதத்தன் அந்த அமுதை அருந்தி உயிர்மீண்டான். இளங்களிற்றின் களித்தோழனாகி இரவெல்லாம் விளையாடினான். அக்களிற்றுக்குழவி யானைகளில் அரிதான ஒன்றாக இருந்தது. பிற யானைகளைவிட நினைவிற்கொள்ளவும் எண்ணவும் திறன் அதனிடமிருந்தது. யானைகள் எவற்றிலும் இல்லாத விழைவும் கற்பனைத்திறனும் கொண்டிருந்தது. ஆகவே யானைக்குலமே அறிந்திராத வஞ்சமும் கொடுமைகளில் விருப்பும் அதனிடமிருந்தது. தான் தேடியது மானுடனை என அது அவனைக் கண்டதுமே அறிந்தது. அவனுடன் ஆடி அது மானுடன் ஆனது. அவன் யானையென்றானான்.

இளங்களிற்றின் மீதேறி ஆற்றைக் கடந்து காட்டுக்குள் சென்றான். அங்கே யானைக்கூட்டத்தில் ஒருவனாக மாறினான். யானைப்பால் உண்டு வளர்ந்தவன் மிக விரைவிலேயே பெருந்தோள்கொண்டவனாக ஆனான். மரங்களை வெறுங்கையால் அறைந்து உலுக்குபவன். காட்டெருமைகளை கொம்புகளைப் பற்றி தூக்கிச் சுழற்றி வீசுபவன். ஆனால் அவன் விழிக்கூர் மட்டும் குறைவாக இருந்தது. கைதொடும் அண்மைக்கு வருவதையே அவனால் காணமுடிந்தது. அவனுக்கில்லாத விழிக்கூரும் செவிநுண்மையும் யானைக்கு இருந்தது. எனவே எப்பொழுதும் அவன் யானைமீதே இருந்தான். அவர்கள் ஓருடல் என்றாயினர். அவன் தான் என எண்ணுகையிலேயே யானைமேல் அமர்ந்தவனாகவே அகவுரு விரிந்தது. உயரத்திலிருந்து குனிந்த நோக்குடன் மூன்று கைகளுடன் நான்கு தூண்கால்களை எடுத்துவைத்து அசைந்தாடிச் செல்பவனாகவே அவன் தன்னை கனவிலும் கண்டான்.

ஒருநாள் அவன் தன் கனவில் பிரக்ஜ்யோதிஷத்தின் மாளிகையை கண்டான். அங்கே ஓர் அரியணையில் எலும்புரு போன்ற முதியவர் ஒருவரை அமரச்செய்திருந்தனர். அவர் மணிமுடிசூடி கையில் செங்கோல் ஏந்தியிருந்தார். அவருக்கு முன் ஒரு யானை நின்றிருந்தது. அவர் அதனுடன் மெல்லிய குரலில் பேசிக்கொண்டிருந்தார். விழித்தெழுந்ததும் அவன் அக்காட்டிலிருந்து கிளம்பினான். பிரம்மபுத்ரையை நீந்திக்கடந்து மறுகரையில் ஏறி நாணற்சதுப்புகள் வழியாகவும் மூங்கில்காடுகள் வழியாகவும் நடந்து பலநாட்களுக்குப் பின்னர் பிரக்ஜ்யோதிஷத்தை வந்தடைந்தான். முதற்புலரியில் செவிவிரிந்த பெருங்களிற்றின்மேல் ஏறிவந்து நின்றவனை கண்டதுமே பிரக்ஜ்யோதிஷத்தின் படைவீரர்கள் அவன் யார் என கண்டுகொண்டனர். “இளவரசர் வருகை! இளவரசர் நகர்புகுகை!” என முரசொலிகள் முழங்கத் தொடங்கின. கோட்டைமேல் இளவரசனுக்குரிய கொடி எழுந்தது.

பிரக்ஜ்யோதிஷத்தின் மக்கள் தெருக்களில் கூடி வாழ்த்துக் குரலெழுப்பினர். சிலர் நெஞ்சிலறைந்து அழுதனர். அரிமலர் அள்ளித்தூவி ஆடைகளை வீசி படைக்கலங்களை தூக்கி ஆட்டி வெறிக்கூச்சலிட்டு நடனமாடினர். இளவரசன் வந்துகொண்டிருப்பதை பகதத்தர் அறிந்தார். படுக்கையில் பூசணம்பூத்த தோலும் வெறித்த விழிகளும் மஞ்சள்படிந்த பற்களுமாகக் கிடந்த அவரை தூக்கிக் கொண்டுவந்து உப்பரிகையில் அமர்த்தினர். அவர் தொலைவில் செம்மண் குன்று ஒன்று அசைந்தாடி வருவதை கண்டார். அதன்மேல் ஆடையேதும் அணியாமல் அமர்ந்திருந்த பேருருவனே தன் மைந்தன் என விழிதெளியாமலேயே உணர்ந்தார். அணுகிவந்த பகதத்தன் முற்றத்தை அடைந்ததுமே அந்த இடத்தை அடையாளம் கண்டான். கைதொழுது நின்றிருந்த அமைச்சரிடம் “என் தந்தையை பார்க்கவேண்டும்” என்றான்.

தந்தை அவனைக் கண்டதும் படுக்கையிலிருந்து எழுந்துவிட்டார். சொல்கூடாமல் தொண்டை தவிக்க அவனை அள்ளி நெஞ்சோடணைத்தார். “நீ நரகாசுரன்! நீ ஹிரண்யன்!” என்று அவர் சொன்னபோது சொற்கள் உடைய அழுகை பெருகி எழுந்தது. “நீணாள் வாழ்க! நீடுபுகழ் கொள்க!” என்று அவர் அவன் தலையை முகர்ந்தார். அன்றிரவே முதிய பகதத்தர் உயிர்துறந்தார். பதினெட்டு நாட்களுக்குப் பின் பகதத்தன் பிரக்ஜ்யோதிஷத்தின் அரசனாக முடிசூட்டிக்கொண்டான்.

பகதத்தரின் பட்டத்து யானைக்கு நிமித்திகர்கள் கூடி சுப்ரதீகம் என்று பெயரிட்டார்கள். அவர் அரசராகப் பட்டமேற்றபோது அந்த யானை பட்டத்துயானையாக ஆகியது. அதை அவர் யானைகளுக்குரிய ஒலியால்தான் அழைத்தார். வேறெவரும் அழைத்தால் அது செவிகோட்டுவதுமில்லை. ஆயினும் அதற்கு பூசைகளுக்காகவும் சடங்குகளுக்காகவும் அரச அறிவிப்புகளுக்காகவும் பெயர் தேவைப்பட்டது. ஆகவே நிமித்திகர்கள் கூடி அதற்கு பெயரிடும் சடங்கு ஒன்றை நடத்தினர். மதங்கநூல் முறைமைப்படி அரண்மனை முற்றத்தில் பெருங்களம் ஒன்று வரையப்பட்டது. அதில் எட்டு திசைகளும் அடையாளப்படுத்தப்பட்டன. கிழக்கே இந்திரனின் அமராவதியும் தென்கிழக்கே அனலவனின் தேஜோபுரியும் தெற்கே யமனின் சம்யமனியும் தென்மேற்கே நிருதியின் கிருஷ்ணாஞ்சனையும் மேற்கே வருணனின் சிரத்தாவதியும் வடமேற்கே வாயுதேவனின் கந்தவதியும் வடக்கே குபேரனின் மஹோதயமும் வடகிழக்கில் சிவனின் யசோவதியும் அடையாளப்படுத்தப்பட்டன. அங்கே திசைத்தெய்வங்கள் நிறுவப்பட்டன. இந்திரனை வைரக்கல்லாகவும் அனலவனை சுடர்விளக்காகவும் யமனை காகச்சிறகாகவும் நிருதியை நாகச்சுருளாகவும் வருணனை குடநீராகவும் வாயுதேவனை மயிலிறகாகவும் குபேரனை பொன்நாணயமாகவும் சிவனை முப்புரிவேலாகவும் நிறுத்தி பூசை செய்தமைத்தனர்.

அந்த எட்டு திசைகளுக்கும் எட்டு திசையானைகள் நிறுவப்பட்டன. கிழக்கே ஐராவதமும் அதன் பிடியாகிய அஃபுருமையும் வெள்ளிக் குட வடிவில் அமைக்கப்பட்டன. தென்கிழக்கே புண்டரீகன் அவன் துணைவி கபிலையுடன் செம்புக்குட வடிவில் நிறுவப்பட்டான். தெற்கே வாமனன் என்னும் திசையானை தன் பிடியாகிய பிங்கலையுடன் வெள்ளீயத்தால் உருளைவடிவில் வார்க்கப்பட்டு நிறுவப்பட்டான். தென்மேற்கே குமுதன் துத்தநாக உருளையாக வடிக்கப்பட்டான். அவன் துணைவி அனுபமை அருகே நின்றாள். மேற்கே காரீய உருளையாக அஞ்சனன் தன் துணைவி தாம்ரகர்ணியுடன் அமைந்தான். வடமேற்கே புஷ்பதந்தன் ஒரு இரும்புக் கிண்ண வடிவில் துணைவி சுஃப்ரதந்தியுடன் நிறுவப்பட்டான். வடக்கே சார்வபௌமன் அங்கனையுடன் பாதரச உருளை வடிவில் நின்றான். வடகிழக்கே சுப்ரதீகன் தன் பிடியாகிய அஞ்சனாவதியுடன் பொற்குடத்தின் வடிவில் அமைந்தான்.

யானையை அவிழ்த்துவிட்டு முரசுகளை முழக்கிக்கொண்டிருந்தார்கள். பெருங்களத்தில் நுழைந்த கட்டுகளற்ற களிறு ஒவ்வொன்றாக துதிக்கையால் தொட்டு நோக்கி ஆராய்ந்த பின் சென்று வடகிழக்கில் நிலைகொண்டது. “பணிக சிவம்! பணிக சிவம்!” என்று வாழ்த்தொலிகள் எழுந்தன. யானையை சென்று தளைத்து அதற்கு சுப்ரதீகம் என்று பெயரிட்டனர். கொட்டிலில் இருந்து அதற்கு இணங்கிய பிடியானை ஒன்றை அழைத்து வந்தனர். அதன் பெயரை அஞ்சனாவதி என்று மாற்றினர். சுப்ரதீகம் ஒவ்வொருநாளும் என வளர்ந்தது. யானைகள் எதற்கும் அமையாத பேருருவை அடைந்தது. அதன்மேல் அமர்ந்திருக்கையில் காலுக்குக் கீழேதான் அரண்மனையின் அடுத்த பெருங்களிற்றின் முதுகு தெரியும். அதன் காதுகள் இருபுறமும் வீசும் காற்றில் அருகிருக்கும் கொடிகள் பறக்கும். அதன் மூச்சுபட்ட இடத்தில் குழிகள் விழுந்து பலநாட்கள் நிரம்பாமலிருக்கும். அது பெருமரங்களை செடிகளைப்போல பிழுதது. நாளொன்றுக்கு ஆயிரம் கவளம் அன்னம் உண்டது. ஆணையிடப்படாமலேயே எண்ணங்களை புரிந்துகொண்டது. அணிகளை தானே எடுத்து பூட்டிக்கொண்டது.

அது யானையே அல்ல, கந்தர்வன் ஒருவன் யானையென வடிவுகொண்டிருக்கிறான் என்றனர் சூதர். பாரதவர்ஷம் முழுதிலும் இருந்து அந்த யானையைப் பார்க்க யானைமருத்துவர்களும் யானைப்பாகர்களும் தேடிவந்தனர். பூத்த வேங்கைமரம் காற்றில் நின்றுலைவதுபோல முகத்திலும் செவிகளிலும் செம்பூப் பரப்புடன் நின்றிருக்கும் சுப்ரதீகம் எவரையும் தன்னருகே வர விடுவதில்லை. அரசர் அன்றி எவரும் அதன்மேல் ஏறவும் இயல்வதில்லை. அரசர் அந்த யானையுடன் தன் பொழுதில் பெரும்பகுதியை கழித்தார். அவரால் அணுக்கமாக புரிந்துகொள்ளத்தக்க மொழி அந்த யானை பேசுவதே என்று அமைச்சர்கள் சொன்னார்கள். அரசமுடிவுகளையேகூட சுப்ரதீகத்திடம் ஒரு சொல் கேட்டுத்தான் அவர் எடுத்தார்.

யானையும் அவரும் சேர்ந்தே படைப்பயிற்சி எடுத்தனர். அவர் தேரிலோ புரவியிலோ ஏறுவதில்லை. அனைத்து நகருலாக்களும் வேட்டைகளும் யானைமேலேயே. போரிலும் அவர் யானைமேல்தான் தோன்றினார். யானைமேல் அமர்ந்திருப்பது போரில் அம்புகளுக்கு எளிதில் இலக்காவது என்றாலும் அவர் எடைமிக்க கவசங்கள் அணிந்து அதன் மத்தகத்தின்மீதே அமர்ந்திருந்தார். அவர் கையில் இருந்த வில் மிக நீளமான நிலைவில்லைவிட இருமடங்கு பெரியது. அவர் தொடுக்கும் அம்புகள் எறிவேலைவிட எடையும் நீளமும் கொண்டவை. சுப்ரதீகம் தன் துதிக்கையில் சங்கிலியில் கோத்த கதையுருளையை எடுத்துச் சுழற்றி வீசி திரும்ப இழுத்துப் போரிடும் ஆற்றல்கொண்டிருந்தது. களத்தில் அவர்கள் போரிடும் திறனைக் கண்டவர்கள் அவர்கள் இருவரும் ஒற்றை உடலே என்று உணர்ந்தனர். ஆணைகள் இல்லாமல், சொற்களே எழாமல் அவர்கள் ஒரே எண்ணத்தை பகிர்ந்தனர். சுப்ரதீகம் தன் கதையை சுழற்றி வீசி தேர்களை நிலையழியச்செய்யும் கணத்தில் பகதத்தரின் அம்புகள் வந்து தேரோட்டியை கொன்றுவீழ்த்தும்.

திரிஹஸ்தன் என்றும் கஜபாகு என்றும் பகதத்தர் அழைக்கப்பட்டார். கிழக்கே எழுந்துவந்துகொண்டிருந்த இருபது நாடுகளை வென்று பிரம்மபுத்ரையின் கரையை முழுக்க தன் ஆட்சிக்குள் அடக்கிய பகதத்தரின் காலத்தில் பிரக்ஜ்யோதிஷம் பெரும்புகழ் பெற்றது. செல்வமும் ஆற்றலும் கொண்டு கிழக்கின் யானை என்று பெயரீட்டியது. அவர் வங்கத்துடனும் கலிங்கம், பௌண்டரம், அங்கம், சுங்கம் ஆகிய இணைநாடுகளுடனும் நல்லுறவை உருவாக்கிக்கொண்டு ஒரு படைக்கூட்டை அமைத்தார். ஆகவே கிழக்கில் எந்த அயல்நாடும் படைகொண்டு செல்ல அஞ்சும் நிலை உருவாகியது. ஆற்றுவணிகத்தால் செல்வம் பெருகியமையால் ஆறு நாடுகளுக்கு நடுவில் பூசல்கள் எவையும் உருவாகவில்லை. மூன்று அஸ்வமேத வேள்விகளைச் செய்து பகதத்தர் அந்தணரின் வாழ்த்துக்களை பெற்றார். ஆனால் தன் குருதியினரான அசுரகுடியினருக்கு பொருளும் படைக்கலமும் கொடுத்து ஆற்றல்மிக்க படை ஒன்றையும் திரட்டிக்கொண்டார்.

பகதத்தரின் அன்னை சுதீரை யவன அரசன் அமூர்த்தரின் மகள். வடமேற்கே பெரும்பாலையின் விளிம்பில் வாழும் யவனர்கள் அதற்கும் மேற்கே, பாலைநிலங்களுக்கும் அப்பாலிருந்து வந்தவர்கள். வெண்ணிற உடலும் நீலவிழிகளும் செந்நிறக் குழலும் கொண்டவர்கள். பேருருவர்கள். தன் குடியின் கரிய சிற்றுடல் வடிவை களைய விரும்பிய முதிய பகதத்தர் பிற குடியினர் பெண்கொடுக்கவோ கொள்ளவோ தயங்கிய யவனர்களிடம் குருதியுறவு கொண்டார். அதன் விளைவாக யவனத்தின் படைத்துணையை அவர் அடைந்தார். பகதத்தரும் யவன இளவரசியான சுஸ்மிதையை மணந்தார். அவருக்கு பதினெட்டு மைந்தர்கள் பிறந்தனர். அவர்களில் மூத்தவனாகிய வஜ்ரதத்தன் இணையான தோள்வல்லமை கொண்டிருந்தான். அவனால் சுப்ரதீகத்தை மட்டுமே அணுக முடியவில்லை.

ele1அஸ்தினபுரியின் அரசனுடன் அணுக்கம் கொண்டிருந்த அங்கம், வங்கம், கலிங்கம், சுங்கம், பௌண்டரம் என்னும் ஐந்துநாடுகளின் கூட்டமைப்புடன் சேர்ந்து பகதத்தரும் குருக்ஷேத்ரப் போர்க்களத்திற்கு சென்றார். தன் முதல் மைந்தன் வஜ்ரதத்தனை அரசுப்பொறுப்பளித்து நிறுத்திவிட்டு ஏழு மைந்தருடன் கிளம்பினார். அவருடைய விழிநோக்கு மிகவும் குறைந்துவிட்டிருந்தது. இமைகள் எடைகொண்டு சுருங்கி கண்களுக்குமேல் விழுந்திருந்தமையால் அவற்றை மேலே தூக்கி பட்டுச்சரடு ஒன்றால் நெற்றியுடன் சேர்த்துக் கட்டியிருந்தார். களத்தில் அவருடைய விழிகளை மட்டும் எண்ணியவர்கள் கொல்லப்பட்டார்கள். அவர் சுப்ரதீகத்தின் விழிகளால் அனைத்தையும் நோக்கிக்கொண்டிருந்தார். ஐம்புலன்களுக்கும் அப்பாலிருந்த யானையின் தனிப்புலன் ஒன்று அவரை நோக்கி குறிவைக்க எழுந்த விற்களையே அவருக்கு காட்டியது. அக்குறி தேர அம்பெடுத்தவன் அதை தொடுப்பதற்குள் நெஞ்சுடைந்து சரிந்தான். யானை அங்கிருந்த ஒவ்வொருவரின் கனவுக்குள்ளும் புகுந்தது. அதை அவர்கள் தங்கள் உள்ளத்தில் அணுக்கமாக நோக்கிக்கொண்டிருந்தனர். அங்கே அந்த யானையின் விழிகள் கொலைத்தெய்வங்களின் நோக்கு கொண்டிருந்தன.

யவனர்கள் எண்ணிக்கை குறைந்தவர்கள். ஆனால் மிக விரிந்த நீள்நிலத்தை அவர்கள் தங்கள் ஆட்சியின்கீழ் வைத்திருந்தனர். எனவே தங்களுக்குரிய விற்கலைகள் சிலவற்றை அவர்கள் உருவாக்கியிருந்தனர். அவற்றிலொன்று அவர்களால் சிலாஸ்திரம் என அழைக்கப்பட்டது. இரும்பாலான எடைமிக்க நீள்வில் அது. அதை மலைச்சரிவில் தொங்கி இறங்கும் பாறையுடன் பிணைத்த கயிற்றால் வளைத்து எடைமிக்க பெரிய அம்புகளை கீழ்நோக்கி செலுத்துவார்கள். யானை மத்தகத்தை, கரும்பாறையை, இரும்புக் கவசத்தை ஒற்றை அறையால் பிளக்கும் ஆற்றல்கொண்டிருந்தன அந்த அம்புகள்.

அவர்கள் தங்கள் அம்புகளில் மலையிடுக்குகளில் ஊறித்தேங்கியிருக்கும் கரிய கன்மதத்தை வெட்டி எடுத்து பொருத்தி பயன்படுத்தினர். முன்பு அனலவன் மண்மகள்மேல் காமம் கொண்டு அணுகியபோது அன்னை அவனை உதறி ஏளனம் செய்து விலக்கினாள். சினமும் ஆற்றாமையும் கொண்ட அனலவனின் காமம் மேலும் பெருகியது. அப்போது வெளியான உயிர்க்குருதி அப்பாறையிடுக்குகளில் படிந்து கரிய மண்ணாக மாறி இறுகியிருந்தது. கல்லால் மெல்ல உரசினாலே பற்றிக்கொள்ளும். அதில் தோன்றும் அனல் வஞ்சம் கொண்டது. கெடுமணத்துடன் வெடியோசை எழுப்பி பெருகி எழும். நீரூற்றினாலும் அணையாத சீற்றம் கொண்டது. நஞ்சுமிழ்ந்து வானில் நின்றாடும்.

அந்த அம்பையே தன் படைக்கலமாகக் கொண்டிருந்தார் பகதத்தர். அவர் கையிலிருக்கும் வில்லுடன் இணைக்கப்பட்ட சங்கிலி சுப்ரதீகத்தின் முன்னங்காலுடன் கட்டப்பட்டிருக்கும். தன் காலால் மிதித்து வில்லை அது வளைத்து அம்புபொருத்தச் செய்யும். யானைவிசை கொண்ட பேரம்பு தேர்முகடுகளை உடைத்தெறிந்தது. இரும்புக் கவசங்களை முட்டை ஓடுகள் என நொறுக்கியது. இடியோசையுடன் அது மோதியபோது அறைபட்டவர்கள் பின்னால் தெறித்துச்சென்று விழுந்தார்கள். சுவர்களை அம்புகள் ஊடுருவிச் செல்லும் என்றும் மரங்களை அறுத்து அப்பாலிடும் என்றும் நூல்களில் படித்தவர்கள் அதை நேரில் கண்டு திகைப்படைந்தனர்.

முதல்நாள் போரில் அவர் விராடருடன் தனிப்போர் புரிந்தார். சுப்ரதீகத்தின் கதையால் தேர் நொறுங்குண்ட விராடர் பாய்ந்து புரவியொன்றில் ஏறி கவசநிரைக்குள் புகுந்துகொண்டு பகதத்தரின் அம்பில் இருந்து தப்பினார். ஆனால் இடும்பர்குலத்து மாவீரன் கடோத்கஜனுடன் நிகழ்ந்த தனிப்போரில் அவர் பின்னடைந்தார். சுப்ரதீகத்தின் கதையிலிருந்து தப்ப வானில் பாய்ந்தெழுந்த கடோத்கஜன் கொக்கிக் கயிற்றை வீசி அதன் கழுத்துச்சரடில் கோத்துக்கொண்டு அது துதிசுழற்றிய விசையிலேயே தான் வானில் பறந்து அவரை தாக்கினான். சுப்ரதீகம் பின்னடி எடுத்துவைத்து அவரைக் காத்து கௌரவப் படைக்குள் கொண்டுசென்றது. அன்று அவருடைய எடைமிக்க நெஞ்சக்கவசம் உடைந்து தோளிலும் விலாவிலும் கடோத்கஜனின் கொக்கி சிக்கி கிழித்த புண்கள் உருவாயின.

களத்தில் அனைவராலும் அஞ்சப்பட்டவராக திகழ்ந்தார் பகதத்தர். பீமசேனரை அவருடைய யானை கதையால் நெஞ்சிலறைந்து வீழ்த்தியது. மயங்கி சரிந்த தந்தையை தருணத்தில் பாய்ந்துவந்த கடோத்கஜன் காத்து தூக்கி அப்பால் கொண்டுசென்றான். மீண்டு வந்த கடோத்கஜனை எண்ணியிராக் கணத்தில் தாக்கி தூக்கி வீசியது சுப்ரதீகம். தசார்ணத்தின் அரசன் ஹிரண்யவதனன் தன் மருகன் பெயர்மைந்தர்கள் சித்ரரூபனும் சித்ரசர்மனும் படைத்துணையாக பகதத்தரை எதிர்கொண்டான். அப்போரில் பகதத்தர் சித்ரரூபனையும் சித்ரசர்மனையும் கதையால் அறைந்து தேர்களை உடைத்து நிலத்தில் விழச்செய்து நீளம்புகளால் நெஞ்சுதுளைத்துக் கொன்றார். தனித்து நின்ற ஹிரண்யவதனன் கூச்சலிட அவனுக்கு பாஞ்சாலராகிய சிகண்டியில் பிறந்த பெயர்மைந்தர்களான ஷத்ரதர்மனும் ஷத்ரதேவனும் துணைசெய்ய ஓடிவந்தனர். பகதத்தர் ஷத்ரதர்மனின் இரு கைகளையும் பிறையம்பால் வெட்டி வீழ்த்தினார். அலறியபடி ஓடிவந்த ஷத்ரதேவனின் தலையை சுப்ரதீகம் அறைந்து உடைத்தது. தசார்ணனாகிய ஹிரண்யவதனன் அவர் அம்பால் கவசம்பிளந்து நெஞ்சு உடைந்து மறுபக்கம் சென்று நிலத்தில் தைத்த நீளம்பால் கொல்லப்பட்டான்.

பகதத்தர் அன்று காலை எழுகையில் தன் குடில்முன் வந்து அமர்ந்திருந்த சின்னஞ்சிறு பறவை ஒன்றை பார்த்தார். அது துயர்கொண்டிருந்தது. ஓசையின்றி அவரை நோக்கியபடி அருகிருந்த சிறு கழிமேல் அமர்ந்திருந்தது. அவர் அதை நோக்கிக்கொண்டிருந்தார். அது எழுந்து பறக்கவில்லை. அவர் அதன் சிறிய மணிக்கண்களை நோக்கினார். மேலும் அருகே சென்றார். அது எழுந்து பறக்குமென எதிர்பார்த்தார். பின்னர் பெருமூச்சுடன் அதை தவிர்த்துவிட்டு உள்ளே சென்று முகம் கழுவி மீண்டார். திரும்பி வந்து நோக்கியபோது அதை காணவில்லை. அவர் கவசங்கள் அணிந்து படைக்கலங்களுடன் சுப்ரதீகத்தை பார்க்கச் சென்றார். இரும்புக் கவசங்கள் அணிந்த யானை தொலைவில் இரும்புக்கூரைகொண்ட மண்டபம்போல் நின்றுகொண்டிருந்தது. அவர் அணுகுவதை உணர்ந்ததும் அதன் துதிக்கை நீண்டு வந்து அவரை தேடியது. அவர் அருகே சென்று நின்றார். அதன் துதிக்கை அவரை தழுவியும் வருடியும் முகர்ந்தும் மகிழ்ந்தது. சீறிய மூச்சொலியுடன் அது அவரை நோக்கி தலைகுலுக்கியது.

கிளம்பலாம் என அவர் பாகனுக்கு தலையசைத்த பின் கால் தூக்கும்படி அதன் விலாவில் தட்டி ஆணையிட்டார். ஆனால் யானை கால் தூக்கவில்லை. அவர் மீண்டும் மீண்டும் அதற்கு ஆணையிட்டார். என்ன ஆயிற்று அதற்கு என்று புரியாமல் காதைப் பிடித்து உலுக்கினார். அவர் சொல்லி அது செய்யும் வழக்கமில்லை. சொன்ன பின் செய்யாமலிருந்ததே இல்லை. “என்ன? என்ன?” என்று அவர் கேட்டார். “காலெடு… காலெடு” என்றார். யானை தலைகுலுக்கி உறுமியது. அவர் அதன் கண்களை நோக்கினார். மதம்கொண்டிருக்குமா என்ற ஐயம் எழுந்தது. விழியீரம் வழிந்த கரியதடத்தில் சிறிய பூச்சிகள் மொய்த்துக்கொண்டிருந்தன. மதக்கசிவு இல்லை. நோயுற்றிருக்குமா என்று ஐயம்கொண்டு சுற்றிவந்தார். அதன் கால்கீழிலும் வாலைச்சுற்றியும் கூர்ந்து நோக்கினார். நெறிவீக்கத்தின் பைகள் ஏதுமில்லை. கால்களில் புண்கள் இல்லை.

“துதிக்கையில் புண்கள் ஏதேனும் இருந்தனவா?” என்று அவர் பாகனிடம் கேட்டார். “இல்லை, அரசே. புண்கள் என பெரிதாக ஏதுமில்லை” என்றான். “பிறகென்ன?” என்றார். “நோய்கொண்டிருக்கிறதா?” என தனக்குத்தானே கேட்டபடி அதன் வாயருகே மூக்கை கொண்டு சென்று கெடுமணம் வீசுகிறதா என்று நோக்கினார். அதன் காதுக்குப் பின்னாலும் கழுத்திலும் கைகளால் அறைந்து நோக்கினார். சலிப்புடன் அதனிடமே “என்ன?” என்றார். அது தலையசைத்து உறுமியது. அவர் புரிந்துகொள்ளமுடியாமல் பாகனிடம் திரும்பி “என்ன?” என்றார். அவன் ஒன்றும் சொல்லவில்லை. அவர் தன் வில்லை எடுக்கும்படி கைகாட்டினார். ஏவலன் வில்லை எடுத்தபோது யானை மீண்டும் உரக்க உறுமியது.

அவருக்கு அதன் உள்ளம் புரிந்தது. கால் ஒன்று இழுத்துக்கொள்ள சற்று தடுமாறி அதன் முன்காலில் சாய்ந்துகொண்டார். அதன் கை நீண்டு வந்து அவர் தோளில் எடையுடன் படிந்தது. “ஆம்” என்று அவர் சொன்னார். அதன் காதை பற்றி அசைத்தபடி “ஆம்” என்று மீண்டும் சொன்னார். வில்லை ஒரு கையால் வாங்கிக்கொண்டு யானையின் கால்மூட்டில் கால்வைத்து ஏறி மேலே அமர்ந்தார். அது மீண்டுமொருமுறை ஆழ்ந்த குரலில் அமறியது. அதன் மத்தகத்தை தட்டி “ஆம்” என்று அவர் மீண்டும் சொன்னார். தன் ஏவலரை நோக்கி “கிளம்பலாம்” என்றார். யானையை அவர் மெல்ல தொட்டபோது அது தளர்ந்த காலடிகளுடன் நடந்தது. அவர் அந்தச் சிறிய குருவியை நினைத்துக்கொண்டு அதன் மேல் அமர்ந்திருந்தார்.

முந்தைய கட்டுரைகே.கே.முகம்மது அவர்களுக்கு பத்ம விருது
அடுத்த கட்டுரைஉல்லாலா – கடிதங்கள்