புத்தகக் கண்காட்சி – கடிதங்கள்

crowd in kizhakku stall

பேருருப் பார்த்தல்

அன்புள்ள ஜெமோ,

முதன்முறையாக புத்தக விழாவிற்கு வந்திருந்தேன். திருவிழாவில் தொலைந்த குழந்தையைப்போல் என் மனைவியுடனும் மகள்களுடனும் புத்தகங்களின் கதகதப்பான அணைப்பில் திரிந்தோம். நீங்கள் குறிப்பிட்டது போல் தமிழ் அறிவுச்சூழலின் மிகத்துல்லியமான உரையாடல்களம் இந்த விழா. பொது இரசனையுடன் நவீன எழுத்தும், பொதுப்பண்பாட்டுடன் தலித்தியம் மற்றும் தமிழ்த்தேசியப்பண்பாடும் பொரும் அழகான சிந்தனைக்களம் மிக இயல்பாகவே அமைந்தது.

விமானப்பயணத்தின் எடைக்கணக்குகளை மனதில் கொண்டு அள்ளிய அத்தனை நூல்களையும் வாங்காமல் குறைத்துக்கொள்ள நேர்ந்தது.இருப்பினும் பனி மனிதனும் பொன்னியின் செல்வனும் பைக்குள் அழகாக வந்தமர்ந்தார்கள். அவர்களுடன் ராஜ்கெளதமனின் “பொய்+அபத்தம்->உண்மை” யும் வந்து சேர்ந்தார்.

விமானப்பயணத்தில் பனிமனிதன் புயல் போல வேகமாக வாசித்து முடித்தேன். நான் வாசித்ததிலேயே இவ்வளவு அறிவு மற்றும் தத்துவ சிந்தனை சார்ந்த குழந்தைகள் புதினம் இது தான். என் மகளுக்கு நல்ல புத்தகம். நான் விளக்க சிரமப்படும் பல சிந்தனை தரப்புகளை மிக எளிதாகக்கையளிக்கும் அற்புத நாவல். இதற்கு நான் என்றென்றும் கடன்பட்டிருக்கிறேன்.

அடுத்ததாக ராஜ் கெளதமனின் கட்டுரைத்தொகுப்புகளை எடுத்தேன். இரண்டாவது கட்டுரைய்லேயே (தமிழ் இலக்கியத்தில் தலித்துகள்) நான் புதையுண்டுவிட்டேன். ஒவ்வொரு வாக்கியமும் கூர் ஊசியைப்போல் குத்துகிறது. ஓர் கொலை வாளை எதிர்கொள்வது இதைக்காட்டிலும் எளிதானது. கொலை வாள் உடலின் ஒரு பாகத்தை சிதைக்கும்,வலி தரும் அல்லது உயிரைக்குடிக்கும். ஆனால் ராஜ் கெளதமனின் ஒவ்வொரு சொல்லும் ஓர் ஊசி முனை.அதன் இலக்கு பொது சமுதாயத்தின் மனசாட்சி. பொது சமுதாயத்தின் அங்கமாய் அதன் கனிகளை உண்ட ஒவ்வொருவருக்கும் மனதில் தைக்கும் முட்களஞ்சியமாக இருக்கிறது அவர் வரிகள்.ஆனால் அது தைத்தபின் விளைவது ஞானத்தின் திறப்பு மட்டுமே.

என் வயது 42.எனக்கு இந்த வயதில் வாய்த்த இந்த பிரக்ஞை இன்றைய இளைஞர்களுக்கு சீக்கிரம் வாய்க்கட்டும்.அதை உங்கள் அறிமுகம் வாயிலாக நிகழ்வது உங்கள் வாசகனாக எனக்கு நிறைவு. வெள்ளையானயின் காத்தவராயனை நேரில் கண்டது போன்ற ஒரு பிரமை.

வாங்காமல் விட்டு விட்ட விஷ்ணுபுரத்தையும் சாருவின் ஸீரோ டிகிரியையும் ப.சிங்காரம் அவர்களின் புயலிலே ஒரு தோணியையும் கிண்டிலில் வாங்கி விட்டேன். தமிழ் எழுத்துலகிற்கு என் தலை தாழ்த்திய நன்றிகள்.

அன்புடன்,

வா.ப.ஜெய்கணேஷ்

அன்புள்ள ஜெ

புத்தகக் கண்காட்சிக்கு ஓரிருமுறை சென்றிருக்கிறேன். ஆனால் எதற்காகச் செல்லவேண்டும், அதுதான் புத்தகங்களை சாதாரணமாக வாசிக்கிறோமே என்ற எண்ணம் ஏற்பட்டு நான் இப்போது செல்வதில்லை. உங்கள் குறிப்பு எனக்கு பெரிய ஒரு திறப்பாக இருந்தது. அதிர்ச்சியாகவும். எனென்றால் என்னுடைய தமிழிலக்கிய அறிமுகம் என்பது முழுக்கமுழுக்க புத்தகக் கண்காட்சி வழியாகக் கிடைத்ததுதான். நான் வேறெங்கும் எதையும் கற்றதில்லை. புத்தகக் கண்காட்சியில் சுற்றி அலைந்து கண்டடையும் வாங்கி வாசித்துத்தான் நான் இலக்கியத்திற்குள் வந்தேன். இலக்கியம் என் வாழ்க்கைக்கே அர்த்தமளிப்பதாக ஆகியது.

புத்தகக் கண்காட்சியின் சிரமங்களைப்பற்றியே எல்லாரும் எழுதுகிறார்கள். அது அளித்த கல்வியையும் கண்டுபிடிப்பையும் பற்றி எழுதவேண்டும். தமிழில் இன்றைக்கு இதற்குச் சமானமான ஓர் அறிவுத்திருவிழா வேறு இல்லை என்பதை பதிவுசெய்யவேண்டும் அந்தவகையில் கிறிஸ்டி என்ற பெண் புத்தக் கண்காட்சி பற்றி உங்களுக்கு எழுதிய கடிதம் மிக அற்புதமானது.புத்தகக் கண்காட்சியில் ஒரு புதியபெண். வீட்டுக்குள்ளேயே இருக்கும் அந்தப்பெண்ணுக்குத்தான் அது எவ்வளவு பெரிய கொண்டாட்டம். அறிவின் உலகத்திற்குள் நுழைவது, அறிவை கொண்டாடுவது அது. இன்றைக்கு பல எழுத்தாளர்கள் தங்களை மிகப்பெரிய அறிவாளிகளாக எண்ணிக்கொண்டு புத்தகக் கண்காட்சியை நையாண்டி செய்கிறார்கள். புத்தகக் கண்காட்சி ஒரு வாசகனுக்கு அவனுடைய திருவிழாநாள்.

ஆர். வினாயகம்

புத்தகக் கண்காட்சி, வாசகர்கள், எழுத்து…

புத்தகக் கண்காட்சி

இந்த புத்தகக் கண்காட்சியில்…

புத்தகக் கண்காட்சியில் ஒரு புதியபெண்

புத்தகக் கண்காட்சியின் பெண் -கடிதங்கள்

புத்தகக் கண்காட்சிப் பரிந்துரை

நாகர்கோயிலில் புத்தகக் கண்காட்சி

புத்தகக் கண்காட்சிப் பரிந்துரைகள் – கடலூர் சீனு

கோவை புத்தகக் கண்காட்சி -கடிதங்கள்

கோவை புத்தகக் கண்காட்சி -கடிதங்கள்

கோவை புத்தகக் கண்காட்சி,விருதுவழங்கும் விழா

கோவை புத்தகக் கண்காட்சி- இலக்கிய உரையாடல்கள்

காரைக்குடி புத்தகக் கண்காட்சி, தத்துவமும் நடைமுறையும் -கடிதங்கள்

புத்தகக் கண்காட்சி

புத்தகக் கண்காட்சியில் இந்திய நாவல்கள்

திருப்பூர் புத்தகக் கண்காட்சி

புத்தகக் கண்காட்சி-கடிதங்கள்

புத்தகக் கண்காட்சி 2011

இந்தப்புத்தகக் கண்காட்சியில் எனது நூல்கள்