அறிவியல்புனைகதைகள் – கடிதங்கள்

sc

அறிவியல் புனைகதைகள் பற்றி…

அன்புள்ள ஜெ,

அறிவியல் புனைகதைகள் பேட்டியை வாசித்தேன். நிறைய கதைக்கருக்களை சொன்னீர்கள். எனக்கும் ஓரிரு கருக்கள் தோன்றுகின்றன.

ஒன்று ஒழுங்குக்கும் Chaos க்கும் உள்ள உறவை ஆராயும் வகையில் ஒரு கதை. தனமனித சமுக ஆன்மீக தளங்கள் வரைக்கும் விரியும் கரு என்று தோன்றுகிறது. உதாரணமாக நம் மேல்மனம் என்பதே கட்டற்ற ஆழ்மனத்தின் மீது ஒழுங்க்கை உருவாக்கும் முயற்சிதானே

இன்னொன்று சமீபத்தில் ராஜஸ்தானின் சாம்பார் உப்பு ஏரியைக் கண்டேன். பொருளற்ற விரிவைக் கொண்ட வெள்ளை நிலம் என்பது ஒரு கோணம். அதனுடன் ஆயிரம் வழிகளைக் கொண்ட லக்னொவில் உள்ள பூல் புலையா போன்ற maze கட்டிடம். இவைகளை வைத்து தர்க்கத்தைப் பற்றி ஒரு கதை.

இக்கருக்களை அறிவியல் மொழிக்கொண்டு புனைவில் என்னால் எழுதமுடியும்.

ஆனால் என் சிக்கல் என்னவென்றால்…

இதற்கு அடுத்து நான் என்ன செய்யவேண்டும்? இவைகளை கதைகளாக ஆக்கவது எப்படி?

அன்புடன்,
ராஜா.

அன்புள்ள ராஜா

உங்களிடம் உள்ளவை கருக்கள். அவற்றை கதையாக்குவது மூன்று படிகள் கொண்டது.

அ. அந்தk கருவிலிருந்து ஒரு வினாவை எழுப்பிக்கொள்ளுதல். வெண்ணிற வெற்றுப்பரப்பையும் வழிகள் மிகுந்த கட்டிடத்தையும் இணைத்துக்கொண்டு எழும் தத்துவச் சிக்கல் என அதை சொல்லலாம்

ஆ. அதற்கான ஒரு முடிவு. ஒரு திறப்பு. முடிவு உள்ளத்தில் தோன்றாமல் சிறுகதையை எழுதத் தொடங்கக்கூடாது – ஆனால் நான் தொடங்குவதுண்டு. வந்தால் முடிவு எழுதும்போதே உருவாகும். வராவிட்டால் கதையை கடாசிவிடவேண்டியதுதான்.

இ. அந்தத் தொடக்கம் முடிவு ஆகியவற்றை இணைக்கும் ஒரு ‘கதைக்கட்டமைப்பு’ எங்கே நிகழ்கிறது, எவருக்கு நிகழ்கிறது, எப்படி நிகழ்கிறது, என்னென்ன நிகழ்கிறது என்னும் ஓர் ஒழுங்கு.

ஜெ

அன்புள்ள ஜெ

அறிவியல்புனைகதை பேட்டி பல தெளிவுகளை அளித்தது. அறிவியல்புனைகதை என்பதை ஒரு வகையான வேடிக்கையாகவே நம்மில் பலர் நினைக்கிறார்கள். அறிவியல் வாழ்க்கை, மனம் பற்றியெல்லாம் நிறைய அடிப்படைக் கேள்விகளை எழுப்பிக்கொள்வது. ஒரு அறிவியல்கருவை தொட்டு அதை கற்பனையால் வளர்த்து அந்தக்கருவிலிருந்து ஒரு ஆதாரமான வாழ்க்கைக்கேள்வியை எழுப்பிக்கொள்ளுதல்தான் அறிவியல்கதைக்கு அடிப்படை. அது இல்லாதபோதுதான் அறிவியல்கதை மேலோட்டமான விளையாட்டாக ஆகிவிடுகிறது.

அறிவியல் மனிதனையும் பிரபஞ்சத்தையும் பற்றிய ஆழமாக விசாரிப்பு கொண்டது. அதை வேடிக்கையாக பயன்படுத்துவது அதை குறைத்துக்காட்டுவது. அறிவியலை தொழில்நுட்பமாகப் பாப்பதும் அப்படித்தான். ஆகவேதான் வேடிக்கை  காட்டுபவர்கள் எப்போதுமே ராக்கெட் வேற்றுக்கிரகவாசிகள் எதிர்காலம் என்றெல்லாம் செல்கிறார்கள்.

தமிழில் சுஜாதாவிலிருந்து ஆரம்பிப்பது ஒரு பெரிய சிக்கல்தான். நான் பேசிய பெரும்பாலான இளைஞர்கள் அறிவியல்கதை என்றால் சுஜாதா என்பார்கள். நானும் அப்படியே நினைத்தேன். ஆனால் மேலைநாட்டுக்கதைகளை வாசிக்க வாசிக்க அந்த மோகம் கலைந்தது. சுஜாதாவின் அறிவியல்சிறுகதைகள் என்ற தொகுதியை சமீபத்தில் வாசித்தபோது அடே இதையா கொண்டாடினோம் என்று  தோன்றியது. அறிவியலே அதில் இல்லை.

ஆனால் இந்தச்சிக்கல் மேலைநாடுகளிலும் உண்டு. பாப்புலர்மீடியாவிலுள்ள அறிவியல்ஃபேண்டசியைத்தான் அங்கே அத்தனைபேரும் அறிமுகம் செய்துகொள்கிறார்கள். அங்கிருந்து அவர்கள் அறிவியல்புனைகதைகளை வாசிக்கவரும்போது பெரிய ஏமாற்றத்தை அடைகிறார்கள். உள்ளே நுழையவே முடிவதில்லை.

நீங்கள் Henrietta Lacks பற்றி சொல்லியிருந்திர்கள். அது ஓர் அற்புதமான கதைக் கரு. அந்தப்பெண்ணின் ரத்ததிலுள்ள புற்றுநோய் செல்கள் மிகமிக வேகமாகப் பரவுபவை. அவளை ஒரு demon ஆகவும் பார்க்கலாம். ஆனால் நான் அவளை பேரன்புகொண்டவளாக பார்க்கிறேன். உலகம் முழுக்க பரவும் ஆசைகொண்டவளாக மனிதர்களை அப்படியே தழுவிக்கொள்ள ஆசைப்படுபவளாகவும் நினைக்கிறேன். அவளிடமிருந்த அன்பே அந்த ரத்தத்தை அப்படி ஒரு பெரிய விதைக்களஞ்சியம்போல ஆக்கியது. அவள் செத்தபின்னரும் அழிவின்மையை அடைந்துவிட்டாள் இல்லையா?

இதுதான் அறிவியல்கதை செல்லும் தூரம். அறிவியல் செல்லாத இடம் அறம், அன்பு போன்றவை. அங்கெல்லாம் அறிவியல்கதை செல்லமுடியும்

ஜி. சங்கர நாராயணன்

அன்புள்ள சங்கரநாராயணன்

Henrietta Lacks கதைக்கு நீங்கள் அளித்த மறுவிளக்கம் அழகானது. அந்தப்பெண்ணின் உண்மையான துயரக்கதையை கனிவுடன் பார்க்கிறது. அவளுடைய குருதி எளிதில் தொற்றுவது என்பதனாலேயே நம் அச்சத்தால் அவளையும் பிசாசாகவே ஆக்கிக்கொள்கிறோம். அந்த எல்லையைக் கடக்கும் விரிவுள்ளது உங்கள் கதை. எழுதுங்கள்.

ஜெ

சுஜாதாவின் அறிவியல் சிறுகதைகள்

விசும்பு – அறிவியல்புனைகதைகள் அறிமுகம் – பி.கெ.சிவகுமார்

முந்தைய கட்டுரைஉல்லாலா – கடிதங்கள்
அடுத்த கட்டுரைஒரு பயணத்திற்கு என்னதான் தேவை?