‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-33

ele1இடும்பர்களின் தொல்காட்டில் மூதாதையரின் சொல் நாவிலெழ பூசகராகிய குடாரர் சொன்னார் “குடியினரே அறிக! விந்தியனுக்குத் தெற்கே நம் குலக்கிளைகளிலொன்று வாழ்கிறது. அவர்களை நரகர்கள் என்கிறார்கள் பிறர். தொல்பழங்காலத்தில் அவர்கள் மண்ணுக்குள் இருண்ட ஆழத்தில் இருளுருவென வாழ்ந்தனர். அன்று கைகளும் கால்களும் இல்லாத புழுவுடல் கொண்டிருந்தனர். பின்னர் மானுடராகி எழுந்தபோதும் குழியெடுத்து அதற்குள் தங்கள் இல்லங்களை அமைத்துக்கொண்டனர். மண் அகழும் பன்றியை குலக்குறியெனக் கொண்டவர்கள். அவர்களின் இல்லங்களுக்கு மேல் யானைகள் நடந்து செல்லும். அவர்களுக்கு அடியில் நாகங்கள் ஊர்கின்றன. அவர்கள் தங்கள் உடலால் ஒலிகேட்கும் ஆற்றல்கொண்டவர்கள்.

முன்பு மண்மகளை பெரும்பன்றியொன்று புணர்ந்தமையால் பிறந்த குடி என நரகர்களை சொல்கிறார்கள். அவர்களில் எழுந்த மாமன்னர் தொல்நரகாசுரர். அவருடைய குடியிலெழுந்த நாற்பத்தெட்டாவது நரகாசுரர் இளைய யாதவராலும் அவர் துணைவியாலும் போர்க்களத்தில் கொல்லப்பட்டார். முதல் நரகாசுரரின் மகளாகிய சிம்ஹியை மணந்தவர் பாஷ்கலர். அவர் தொல்லசுரகுடியான ஹிரண்யகுலத்தைச் சேர்ந்தவர். முன்பு அசுரகுடியை வென்று முழுதாண்ட ஹிரண்யகசிபுவிலிருந்து உருவானது ஹிரண்யகுலம். விண்வாழும் முதற்தாதை காசியபரின் குருதியில் திதி என்னும் பேருருவ அன்னைக்குப் பிறந்தவர் ஹிரண்யகசிபு. ஹிரண்யகசிபுவுக்கு அனுஹ்ராதன், ஹ்ராதன், பிரஹ்லாதன், சம்ஹ்லாதன் என்னும் நான்கு மைந்தர்கள் பிறந்தனர். அவர்களில் சம்ஹ்லாதன் ஆயுஷ்மான், சிபி, பாஷ்கலர் என்னும் மூன்று மைந்தர்களை ஈன்றார். அவரே முதலாம் பாஷ்கலர்.

பாஷ்கலர் தென்னிலத்தை ஆண்ட அசுர மாமன்னராகிய மகிஷாசுரரின் அமைச்சரானார். மகிஷாசுரருக்கும் இந்திரனுக்கும் நிகழ்ந்த பெரும்போரில் படைநடத்திச் சென்று இந்திரனை வென்றவர் பாஷ்கலர். இந்திரனின் முறையீட்டை ஏற்று தேவி துர்க்கை போர்க்கோலம் கொண்டு களம் வந்தபோது பாஷ்கலரும் துர்முகரும் படைகொண்டு சென்றனர். அன்னையின் மாமங்கலத் தோற்றமே அவளை வெல்லற்கரியவளாக ஆக்குகிறது என்று உணர்ந்து பாஷ்கலர் அவள் இடமுலையை அரிந்தெடுக்க பிறை அம்பு ஒன்றை ஏவினார். அதற்கு உயிர்கொடுக்க தன் உயிரையே நுண்சொல் ஓதி அதில் ஏற்றினார். அந்த அம்பு அன்னையின் மடியில் சென்று அமைந்து சிறுகுழவிபோல் உருக்கொண்டு அன்னையின் இடமுலையில் பால் குடிக்கலாயிற்று. திகைத்து நின்ற பாஷ்கலரின் தலைமேல் தன் வலக்காலை வைத்து அழுத்தி மண்ணுக்கு அடியில் செலுத்தினாள் அன்னை.

பாஷ்கலகுடியில் பிறந்த பதினேழாம் பாஷ்கலர் பெண்கொடையாக பெருஞ்செல்வத்தை நரகாசுரரிடம் இருந்து பெற்று தன் முதற்குடியிலிருந்து பிரிந்து கிழக்காக நிலம்தேடிச் சென்று பிரம்மபுத்ரையின் கரையில் அமைந்த செஞ்சதுப்பு நாணற்படுகையில் சிற்றூர் ஒன்றை அமைத்தார். அதற்கு தன் மூதாதையான நரகாசுரர் ஆண்ட தொல்லசுர நகரான பிரக்ஜ்யோதிஷத்தின் பெயரை அளித்தார். அங்கே எருமைகள் எளிதில் பெருகின. எருமைகளால் செல்வம் வளர்ந்தது. ஊர்கள் வளர்ந்து அந்நிலம் ஒரு நாடென்றாயிற்று. அக்குருதியில் வந்தவர் சைலாலயர். அவர் அந்நாணல் நிலத்தில் அமைத்த நகரமே பிரக்ஜ்யோதிஷம். நெடுங்காலம் வங்கத்தின் நிழலில் அஞ்சி ஒடுங்கிக் கிடந்தது. அசுரநிலமான அங்கே அந்தணர் கால் வைக்கவில்லை.

சைலாலயர் குடிவிலக்குகளை உதறி வங்கநாட்டு இளவரசியை கவர்ந்துவந்து மணம் செய்தார். படைகொண்டுவந்த வங்கர்களை வென்றார். அவர்கள் அவரை ஏற்றுக்கொண்டனர். தீர்க்கதமஸின் குருதி அவர் குடியை மேம்படுத்தியது. சைலாலயர் வங்கத்தில் இருந்து தீர்க்கதமஸின் கொடிவழியினரான அந்தணரை அழைத்து வந்து ஏழு பெருவேள்விகளை செய்து இந்திரனை தன் வேள்விச்சாலையில் அழைத்து வந்தார். அவன் அடிபணிந்து தன்னை காத்தருள வேண்டுமென்று கோரினார். இந்திரனின் அருளால் இடிமின்னலின் ஆற்றல் கொண்ட அம்புகளை அவர் பெற்றார். அவ்வண்ணம் அவர் ஆற்றல்மிக்கவரானார். பிரக்ஜ்யோதிஷத்தின் அரசர்குடியினர் ராஜசூயம் நிகழ்த்தி ஷத்ரியர்களானார்கள்.

சைலாலயரின் கொடிவழியில் பிறந்தவர் முதல் பகதத்தர். அவர் இந்திரனுக்கு பெருங்கொடைவேள்விகள் ஏழை இயற்றி வேள்விச்சாலையில் எழுந்தருளச் செய்தார். பகதத்தரிடம் “உன் எதிரி யார்?” என்று இந்திரன் கேட்டான். “துவாரகையை ஆளும் இந்திரனின் எதிரியே எனக்கும் எதிரி” என்று பகதத்தர் சொன்னார். “என் முன்னோரின் குலத்தவராகிய நரகாசுரனைக் கொன்றவர் அவர். என் வஞ்சம் அவர் மீதே” என்று சூளுரைத்தார். இந்திரன் மகிழ்ந்து அவ்வேள்விச்சாலையில் அனல்பெருந்தூணென எழுந்து உன் “குடியுடன் நானிருப்பேன். உனக்கு அருள்வேன். வெல்க!” என்றான்.

முதிய பகதத்தர் நூறாண்டுகள் பிரக்ஜ்யோதிஷத்தை ஆண்டார். அவருடைய ஆட்சிக்காலத்தில் பிரக்ஜ்யோதிஷத்தைச் சுற்றி ஏழு பெருங்கோட்டைகள் கட்டப்பட்டன. நடுவே பன்னிரு அடுக்குகள் கொண்ட ஆயிரம் மாளிகைகளாலான நகரம் உருவாகி வந்தது. பிரக்ஜ்யோதிஷம் வெல்ல முடியாத படையொன்றை தனக்கென திரட்டிக்கொண்டது. பிரம்மமைந்தன் பேராறென ஓடும் அந்நிலத்தில் படகுகள் பெருஞ்சிறை விரிக்க இயலுமென்பதனால் வணிகர்கள் அந்நகரில் குவிந்தனர். அங்கிருந்து வடக்குக்கும் மேற்குக்கும் செல்ல வணிகவழிகள் உருவாகி வந்தன. ஒருநாள் படைமுகத்தில் இளைய யாதவரை சந்திக்கவேண்டும் என்றும் வென்று தன் வஞ்சினத்தை முடிக்கவேண்டும் என்றும் பகதத்தர் விழைவுகொண்டிருந்தார்.

பிரக்ஜ்யோதிஷத்தின் முதல் பகதத்தர் பன்னிரண்டு ஆண்டுகள் மைந்தரின்றி இருந்தார். அமைச்சர்கள் புத்திரகாமேஷ்டி வேள்வியை இயற்றும்படி அவரிடம் சொன்னார்கள். வங்கத்திலிருந்து தீர்க்கதமஸின் குருதிவழியைச் சேர்ந்த பிரஃபவர் என்னும் வைதிகர் நூற்றெட்டு மாணவர்களுடனும் அகம்படியினருடனும் பிரக்ஜ்யோதிஷத்துக்கு வந்து சேர்ந்தார். நூற்றெட்டு நாட்கள் நீண்ட அப்பெருவேள்வியில் புவியில் கண்ட இன்பொருட்கள் அனைத்தும் தேவர்களுக்கு அவியிடப்பட்டன. எரியில் எழுந்த தொல்பிரஜாபதியான தீர்க்கதமஸ் “என் குடி பெருகுக! ஆற்றல் கொண்டவர்கள் ஆகுக என் மைந்தர்!” என்று தன் இரு கைகளில் இரு கனிகளை நீட்டினார். அவருடைய நோக்கில்லா விழிகள் அவருள் அமைந்த பிறிதொன்றை நோக்கின.

“அறிக, இதிலொன்று இனியது! இதை உண்பாய் எனில் விழியொளி கொண்ட மதி தெளிந்த ஒருவனை மைந்தனாகப் பெறுவாய். அவன் இடைக்குக்கீழ் ஆற்றலற்றவனாக இருப்பான். இது கசக்கும் கனி. இதை உன் துணைவி உண்பாள் எனில் பெருந்தோள் கொண்டவனாகிய மைந்தனை பெறுவாய். ஆனால் அவன் விழித்திறன் குறைந்தவனாக இருப்பான். விழைவதை தெரிவு செய்க!” என்றார் தீர்க்கதமஸ். பகதத்தர் இரு கனிகளையும் நோக்கி திகைத்தார். அவர் அருகே நின்றிருந்த அமைச்சர் மெல்ல “அரசே, உங்கள் குலமூதாதையான தீர்க்கதமஸ் போன்ற மைந்தனை தெரிவு செய்க!” என்றார். “ஆம்” என்று சொல்லி அக்கசப்புக் கனியை நோக்கி கைநீட்டினார் முதிய பகதத்தர். அக்கனியை அவருக்கு அளித்து தீர்க்கதமஸ் எரியில் மறைந்தார்.

அந்தக் கனியை வேள்விச்சாலையில் வைத்து வழிபட்டு தங்கத்தாலத்தில் கொண்டு சென்று தன் துணைவியிடம் அளித்தார் பகதத்தர். “இனியவளே, என் மூதாதையரைப்போல தொல்லரக்கர்களைப்போல் தோள்பெருத்த ஆற்றல்கொண்ட மைந்தன் பிறக்கும் பொருட்டு இதை நீ அருந்துக!” என்றார். அவர் துணைவியான யவன இளவரசி சுதீரை அரக்கர்குடியை உள்ளூர வெறுத்தவள். தன்னை தீர்க்கதமஸின் வேதச்சொல் விளங்கும் நாணல் என எண்ணிக்கொண்டிருந்தவள். நீராடி அமர்ந்தபின் அவள் அதை எடுத்து உண்ணத் தொடங்கினாள். அந்தக் கனி ஊன்கட்டிபோல் கெடுமணம் கொண்டிருந்தது. பச்சைக்குருதியென அதில் சாறுவழிந்தது. அதன் சுவை கடும் கசப்பென்றிருந்தது. சுதீரை முகம்சுளித்தபடி ஒரு வாய் உண்டபின் குமட்டலெழ எவருமறியாமல் அதை தன் தோட்டத்திலேயே வீசிவிட்டாள்.

அங்கே மரத்தில் இருந்த பருந்து அந்தக் கனியை ஊன் கட்டி என எண்ணி கவர்ந்துகொண்டு சென்றது. அதை அருகிலிருந்த காட்டில் ஆலமரம் ஒன்றின் உச்சியில் வைத்து கொத்தி உண்ணமுயன்ற பருந்து அதிலிருந்த ஊன்மணம் பொய்யே என்று உணர்ந்தது. சலிப்புடன் அது அக்கனியை கீழே உதிர்த்தது. அங்கிருந்த நாணல்மேட்டில் மேய்ந்து கொண்டிருந்த பிடியானையின் மீது அக்கனி விழுந்தது. திரும்பி துதிக்கையால் அக்கனியை எடுத்து நோக்கிய யானை அதன் விந்தையான மணத்தால் ஈர்ப்படைந்து அதை சுவைத்து உண்டது.

பதினாறு மாதங்கள் அரசி சுதீரை கருவுற்றிருந்தாள். மதங்க கர்ப்பம் என்று பிரக்ஜ்யோதிஷம் மகிழ்ச்சி கொண்டாடியது. ஆனால் யானைகளுக்குரிய ஆடிமாதம் எட்டாம் வளர்நிலவு நன்னாளில் பிறந்த அக்குழவி ஓர் உள்ளங்கைக்குள் வைக்கும் அளவே உருவம் கொண்டிருந்தது. பேற்றறையிலிருந்து அக்குழவியை சிறிய மரத்தாலத்தில் வெளியே கொண்டுவந்து பகதத்தரிடம் காட்டிய வயற்றாட்டி நடுங்கிக்கொண்டிருந்தாள். திகைத்து பின்னடைந்த பகதத்தர் “இது என்ன?” என்றார். “சிற்றுரு கொண்டுள்ளது… ஆனால் உயிருடன் உள்ளது” என்று வயற்றாட்டி சொன்னாள். “புழு! வெறும் புழு!” என்று அருவருப்புடன் சொல்லி பின்னடைந்த பகதத்தர் கையசைத்து “கொண்டு செல்க! இனி இது என் முன் ஒருபோதும் வரலாகாது!” என்று திரும்பிக்கொண்டார். அரசி ஒரு முறையே திரும்பி அக்குழவியை பார்த்தாள். சலிப்புடன் “இது என்னுள்ளிருந்தா வந்தது?” என்றாள். வயற்றாட்டி மறுமொழி சொல்லவில்லை. “புழு!” என்று அவளும் சொன்னாள். கைவீசி “கொண்டு செல்க! அகல்க!” என்றாள்.

உரிந்த தோலுடன் விதையிலிருந்து கிள்ளி வெளியே எடுக்கப்பட்ட சிறிய பருப்பு போன்ற அக்குழவி வயற்றாட்டியால் சேடியருக்கு அளிக்கப்பட்டது. முலைகொடுத்துக்கொண்டிருந்த இரு சேடியர் அக்குழவியை வாங்கினர். இரவும் பகலும் தங்கள் அடிவயிற்று வெம்மையில் வைத்து அதை வளர்த்தனர். குழவி வளர்ந்து எழுந்து நடக்கத் தொடங்கியது. அப்போதும் அது தேம்பிய தோள்களும் மெலிந்த கைகால்களும் ஒடுங்கிய சிறுமுகமும் கொண்டதாகவே இருந்தது. எலிபோல் அரண்மனையின் சுவர்களை ஒட்டி ஊர்ந்தது. அதன் விழிகள் வெண்ணிறமாக நரைத்திருந்தன. ஏழு முறை உறிஞ்சுவதற்கு அப்பால் அது பாலருந்தவில்லை. அதன் அழுகை சிறு சீவிடின் ஓசைபோல பட்டுநாடா அதிரும் ஒலிகொண்டிருந்தது. இரவுகளில் சிறு ஓசைக்கும் அஞ்சி நடுங்கி விழித்து அழுதுகொண்டிருந்தது.

அதன் அச்சமும் நடுக்கும் சேடிப்பெண்களையே கேலி செய்ய வைத்தது. அதை அவர்கள் “சீவிடுப்பூச்சி” என்றனர். அதை கண்டதும் நாவைச் சுழற்றி ர்ர்ர் என ஒலியெழுப்பி விளையாடினர். அதன் செவிலியன்னையர் மட்டும் அதை வேறெங்கும் காட்டாமல் அகத்தளத்திலேயே வளர்த்தனர். காலையில் இளவெயிலில் அதை மடியிலிட்டு கதிரோன் ஒளிபடச் செய்தனர். அப்போது அரண்மனையின் மடிப்பில் பெருந்தூண் மறைவில் நின்று அதை பார்த்து பகதத்தர் உதடு சுழித்து “புழு! வெறும் புழு” என்றார். அவர் தன்னுள் எழுந்த ஒன்றுக்கு மறுப்பாகவே அதை சொல்லிக்கொண்டிருந்தார். சொல்லிச்சொல்லி அதை நிறுவ முயன்றார். ஆகவே எப்போதும் ஒற்றைச் சொல்லையே உரைத்தார்.

“அதை காட்டிற்கு கொண்டுசென்று வீசிவிட ஆணையிடவேண்டுமென்று ஒவ்வொரு நாளும் எண்ணுகிறேன். ஆனால் என்னால் அதை செய்ய இயலவில்லை” என்றார். அமைச்சர் காவகர் “அம்மைந்தனை பிறக்க வைத்த ஊழுடன் ஆடவேண்டியதில்லை. அழிக்கும் ஆற்றல்கொண்ட சிவன் அல்ல நீங்கள். அரசனே ஆயினும் எளிய மானுடனே” என்றார். பகதத்தர் “இவ்வண்ணம் ஒரு மைந்தன் எனக்கு ஏன் பிறந்தான்?” என்றார். “உங்களுடன் ஊழ் விளையாடுகிறது. அனைவருடன் ஊழே விளையாடிக்கொண்டிருக்கிறது. அதற்கு உங்கள் நல்லியல்பை எதிர்வைத்து ஆடுக! நல்ல ஆட்டத்தை ஆடுபவர்களை ஊழ் வாழ்த்திச் செல்லும்” என்றார். “ஆம்” என பகதத்தர் அப்பேச்சை ஒழிந்தார். ஆனால் அதை தன் பகற்கனவாக ஆக்கிக்கொண்டார்.

அரசி மீண்டும் கருவுறவில்லை. அக்குழவியை அவள் பார்க்கவுமில்லை. ஒவ்வொரு நாளும் மெலிந்துகொண்டிருந்தாள். தன் அகத்தளத்திலிருந்து தனக்குத்தானே பேசியபடி தனிமையில் சோழிவிளையாடி பொழுதை கழித்தாள். உடலுக்குள்ளிருந்து நீர்மை முழுமையாக வடிந்து அகல்வதுபோல் அவள் தோலுருவானாள். கண்கள் குழிந்து, கன்னங்கள் ஒட்டி, அசையும் சடலமென்று மாறி ஒருநாள் அச்சோழிக்களத்தின் அருகிலேயே விழுந்து இறந்திருந்தாள். பகதத்தர் குடியிலும் பெண்டிரிலும் தன்னை மறக்க முயன்றார். தனக்கு ஒரு மைந்தனில்லை என்பதையே அவர் தன்னுள்ளத்திற்கு மீளமீள சொல்லிக்கொண்டார். மெல்ல பகல்களில் அவர் மைந்தரில்லாதவரானார். இரவுகளில் கள் மயக்கில் துயின்றார். ஆனால் எப்போதேனும் பின்புலரியில் அரை விழிப்பு கொள்கையில் ஆயிரம் மைந்தரை உடல் நிறைத்து கைவிரித்து நின்றிருக்கும் தீர்க்கதமஸாக தன்னை உணர்ந்தார்.

ஒருநாள் தன் கனவில் வந்த தீர்க்கதமஸிடம் கேட்டார் “தந்தையே, தங்களைப்போலவே ஒரு பெருந்தந்தைதான் நானும். என் உள்ளத்தில் தந்தையென்று அன்றி பிறிதெவ்வாறும் நான் உணர்ந்ததே இல்லை. கணுதோறும் முளைக்க கருகொண்டிருக்கும் முருங்கைமரம் என் உடல். என்னிலிருந்து ஏன் மைந்தர்கள் எழவில்லை?” புன்னகைத்து தீர்க்கதமஸ் சொன்னார் “ஆயிரம் மைந்தர் ஒரு மைந்தனென உன்னில் பிறந்திருக்கிறார்கள் என்று உணர்க!” விழித்துக்கொண்ட பகதத்தர் அக்கனவை எண்ணி எண்ணி வியந்து இருளில் நடந்தார். அதை தன்னுள் ஓட்டி பொருள்கொள்ள இயலாதபோது அமைச்சரிடம் கேட்டார். அந்தணரான காவகர் “அதற்கு பொருள் ஒன்றே. ஆயிரம் மைந்தருக்கு நிகரானவன் தங்கள் மைந்தன். மூதாதைசொல்லுக்கு மாற்றில்லை” என்றார்.

பகதத்தர் சற்று சீற்றத்துடன் “அவனை தாங்கள் இறுதியாக எப்போது பார்த்தீர்கள்?” என்றார். “நேற்றும் பார்த்தேன். அவர் என் இளவரசர். அவரை பேணிக் காக்கவேண்டியதும் முடிந்தவரை நற்சொல் உரைத்து வளர்க்கவேண்டியதும் என் கடன்” என்று அமைச்சர் சொன்னார். “ஆயிரம் மைந்தருக்கு அவன் எவ்வாறு இணையாவான்? விழியற்றவன். அதை நிகர் செய்யும் உடலும் அற்றவன்” என்று அவர் சொன்னார். “அதை நான் அறியேன். ஆனால் இப்புவியில் பருப்பொருளென்பது தெய்வ ஆணைக்கு இணங்க செயல்படுவது என்று மட்டும் கூறுவேன். ஒருவேளை உடல் இங்கு பிறந்திருக்கலாம். ஆற்றல் வேறெங்கோ எழுந்திருக்கலாம்” என்று அமைச்சர் சொன்னார். “வீண்பேச்சு” என்றார் பகதத்தர். “அவரை துறக்க நீங்கள் விழைகிறீர்கள் என்றால் உங்கள் ஆற்றலின்மையின் சான்றுமட்டும்தான் அது” என்றார் காவகர். திகைப்புடன் காவகரை நோக்கிக்கொண்டு சொல்லிழந்து நின்றார் பகதத்தர்.

பகதத்தர் தன் மைந்தனை அதுவரை அரசவைக்கோ விழவுக்கொலுவுக்கோ கொண்டு சென்றதில்லை. அவனது ஐந்தாவது அகவை நிறைவன்று அரசஉடையணிந்த அவனை குடிப்பேரவைக்கு கொண்டுவரச் செய்தார். தன்னருகே சிறு அரியணை ஒன்றை அமைத்து அதில் அவனை அமரவைத்தார். அரசமைந்தனை அதுவரை பார்த்திராத பிரக்ஜ்யோதிஷத்தின் குடிப்பேரவை அவனை காணும்பொருட்டு கொந்தளித்துக்கொண்டிருந்தது. அவர்கள் மெல்லிய அலராக அவன் உடல் பற்றியும் விழி பற்றியும் அறிந்திருந்தனர். அதை சொல்லிச் சொல்லி பெருக்கிக்கொண்டனர். ஆனால் முழுக்க நம்பவுமில்லை. அம்மைந்தனை அருவருத்தும் கேலி செய்தும் சூதர் பாடும் பாடல்கள் ஒன்றிரண்டையாவது செவிகொண்டிருந்தனர் அனைவரும். ஆகவே அரசர் அரியணையில் அமர்ந்து அவைமுறைமை முடிந்து அறிவிப்புகள் தொடங்கும்போது நிமித்திகன் மேடையேறி இளவரசன் அவை புகுவதை அறிவித்ததும் வாழ்த்தொலிகள் எழுந்தன. ஆனால் அவை அனைத்திலும் ஒரு தயக்கமிருந்தது. விழிகள் இளவரசர் அவை புகும் வாயிலையே நாடி நின்றன.

வெளியே கொம்பொலியும் முழவொலியும் எழுந்தபோது அவை முற்றடங்கியது. ஆடைகள் காற்றில் அசையும் ஒலிகூட கேட்கும் அமைதி நிலவியது. இளவரசன் ஒரு சிறு தாலத்தில் வைக்கப்பட்டு ஏவலன் ஒருவனால் தூக்கிக்கொண்டு வரப்பட்டான். அவன் அவை நுழைந்தபோது திகைப்பொலியுடன் முழு குடியவையும் சற்று பின்னடைவதை பகதத்தர் கண்டார். பின்னர் எங்கிருந்தோ ஒரு கேலிச்சிரிப்பு எழுந்தது. எவரோ ஒரு குடித்தலைவர் “இளவரசரின் சிறுபகுதி மட்டுமே இங்கு வந்துள்ளது!” என்றார். அவை வெடித்துச் சிரித்து தொடர்சிரிப்பில் கொந்தளிக்கத் தொடங்கியது. பின்னர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கேலிச்சொல்லை உரைத்தனர். அவை மேலும் மேலும் சிரித்தது. அரசர் அங்கிருப்பதை மறந்தது.

முகம் சிவந்து பற்களைக் கடித்தபடி இரு கைகளையும் சுருட்டி நெஞ்சோடு சேர்த்து முதிய பகதத்தர் அமர்ந்திருந்தார். இளவரசனை அரியணையில் அமரச்செய்தபோது “யானை மேல் உண்ணி ஒட்டியிருப்பது போலிருக்கிறது” என்று எவரோ கூறினர். அவை ஓஓ என ஏளனக்குரல் ஒலித்து கூச்சலிட்டது. அவர்கள் ஆழத்தில் அவ்வாறு அரசனை மீறி கொண்டாடுவதில் களிப்படைந்தனர். எனவே மெல்ல அச்சிரிப்பு அரசருக்கு எதிராகவும் எழுந்தது. “அவர் நரகாசுரரின் வடிவம். அசுரர்கள் மகிமாவும் அணிமாவும் அறிந்தவர்கள்” என்றார் ஒரு குடித்தலைவர். “அணுவென்றாகி ஒருவர் மலையென்றாகி இன்னொருவர். அண்டத்தில் உள்ளதே அணுவிலும் என்க!” பகதத்தர் தலைக்குமேல் தன் கையை கூப்பி “அமைதி கொள்க! அவை அமைதி கொள்க!” என்றார். அவை அதையும் களியாட்டாக ஆக்கிக்கொண்டது. “அமைதியாக நோக்குக… ஓசையால் இளவரசரின் உடல் அதிர்வுகொள்கிறது…” என ஒருவர் கூவ “ஓசையுடன் போரிடும் அசுரர்!” என இன்னொருவர் சொன்னார்.

இளவரசன் அத்தனை கேலிச்சொற்களை அதற்குமுன் கேட்டிருந்ததில்லை. அகத்தளத்தில் சேடியர் அவன் முகம் நோக்கி கேலி செய்வதில்லை. அவர்கள் கேலி செய்கிறார்கள் என்று அவனுக்கு தெரிந்தாலும்கூட அது எப்பொழுதும் பின்நகைப்பாகவே இருந்தது. விரிந்து பெருகியிருந்த அப்பெருஞ்சபை பல்லாயிரம் முகங்களுடன் தன்னைச் சூழ்ந்து எள்ளி நகையாடுவதைக்கண்டு உடல் நடுங்க விழிகளிலிருந்து நீர் வழிய இரு கைகளையும் கோத்து மடியில் வைத்தபடி அவன் அமர்ந்திருந்தான். அவன் பற்கள் ஒன்றுடன் ஒன்று உரசி காதில் ஒலித்துக்கொண்டிருந்தன. உடலுக்குள் நரம்புகள் இழுபட்டு இழுபட்டு நெரியும் அதிர்வை உணர்ந்தான். மயங்கி விழுந்துவிடலாகாது என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டான்.

முதிய பகதத்தர் தன் கைகளை மீள மீள அவைநோக்கி கூப்பி “கேளுங்கள்! நான் சொல்வதை கேளுங்கள்! இத்தருணத்தில் நான் கூறுவதொன்றே. எனக்கு செவி கொடுங்கள்!” என்றார். ஆனால் அவை கலைந்து கலைந்து ஒலியெழுப்பிக்கொண்டே இருந்தது. இறுதியில் குடித்தலைவர் ஒருவர் எழுந்து “இந்தச் சிற்றுயிரை எங்கள் அரசுக்கு அடுத்த தலைவர் என்று கூறப்போகிறீர்களா என்ன? பிரக்ஜ்யோதிஷத்தின் பதினெட்டு குடிகளுக்கு இனி இவர்தான் ஆட்சியாளரா?” என்றார். முதிய பகதத்தர் “என் கனவு என்ன உரைத்ததென்று கூறவே இந்த அவையை கூட்டினேன். கேளுங்கள், என் கனவில் தீர்க்கதமஸ் எழுந்தார். இவன் பேருருவன் ஆவான். இந்நகரை வெற்றியின் உச்சியில் நிறுத்துவான். நம்புக!” என்றார்.

“அத்தகைய கனவுகள் தந்தையருக்கு வராமலிருந்தால்தான் வியப்பு. புழு நெளிந்து நெளிந்து யானையாகும் என்கிறீர்கள் இல்லையா?” என்றார் ஒரு குடித்தலைவர். இன்னொருவர் “அரசே, அரசரென அமர்ந்திருக்கும் நீங்களும் உங்கள் குடியும் எங்கள் நூற்றெட்டு குடியில் ஒன்றுமட்டுமே. உங்கள் ஆற்றலால் உங்களை அரசராக கொண்டோம். ஆற்றலற்ற உங்கள் மைந்தனை நாங்கள் அரசனென ஏன் கொள்ளவேண்டும்?” என்றார். பிறிதொருவர் “எங்கள் குடிகளில் ஆற்றல் மிகுந்த மைந்தர்கள் பலருள்ளனர். வெறும் மூச்சுக்காற்றிலேயே இந்தச் சிற்றுயிரை ஊதிப்பறக்கவிடும் மைந்தன் எனக்குள்ளான். அவன் அரியணை அமரட்டும்” என்றார். பிறிதொருவர் “ஆம், அசுரர்குடியில் இதற்கு ஒரு முறைமை உள்ளது. எவர் மற்களத்தில் வென்று நிலைகொள்கிறாரோ அவர் ஆளட்டும் நாட்டை” என்றார்.

“அரசன் வெல்லபடாதவனாக இருக்கவேண்டும் என்கின்றன நூல்கள். அரசன் செங்கோல்போல, கொடிபோல ஓர் அடையாளம். இந்தப் புழுவை அடையாளமாகக் கொண்டு பிரக்ஜ்யோதிஷம் ஒருங்கு திரள இயலாது. இப்படி ஒரு அடையாளம் எங்கள் அரியணையில் அமர்ந்திருந்ததென்றால் அப்பால் மலைக்குடிகளாக வாழும் நிஷாதர்களும் கிராதர்களும்கூட இங்கே படைகொண்டு வருவார்கள்” என்றார் ஒரு முதிய குடித்தலைவர். “ஏற்க இயலாது! ஏற்க இயலாது!” அவர்களுக்குள் அரசன் மேல் என்றும் இருந்த கசப்புகளும் ஆழத்தில் அவர்கள் கொண்டிருந்த விழைவுகளும் எழுந்து வந்தன. அவை கூச்சலும் கொந்தளிப்புமாக அலைமோதியது. “நான் சொல்வதை சற்றே கேளுங்கள். நான் சொல்வதற்கு சற்று செவிகொடுங்கள்” என்று மீள மீள பகதத்தர் கூவினார். ஆனால் அவர்கள் எவரும் பகதத்தர் சொற்களை செவிகொள்ள சித்தமாக இருக்கவில்லை.

அன்றிரவு இளம் பகதத்தன் தன் அரண்மனையிலிருந்து காணாமலானான். அவன் தன் அரண்மனையிலிருந்து வெளியே செல்லும் வழக்கமே இல்லை என்பதனால் அவனிடம் சேடியரும் செவிலியரும் எவ்வகையிலும் விழிதொடுத்திருப்பதில்லை. அவனுடன் விளையாட எந்தக் குழந்தையையும் விடுவதில்லை. பிற குழந்தைகளால் அவன் உடலில் ஏதேனும் சிறு புண்வந்தால்கூட அதன் விளைவுகள் கடுமையானவை என அவர்கள் எண்ணினர். அவன் மெலிதாக உந்தினாலே விழுபவன். சற்று விரைந்தோடினால் கால் பின்னுபவன். விழிக்கூர் குறைந்தவன் என்பதனால் எப்போதும் எங்கேனும் முட்டிக்கொள்பவன். அவன் உடலில் எலும்புகள் சற்று அழுந்தப் பற்றினாலே உடைந்துவிடுபவை. அவன் பற்களும் எளிதில் நொறுங்குபவை.  ”அணையவிருக்கும் சுடர், காற்று அதன் எதிரி” என்றாள் செவிலியன்னை.

பகதத்தன் நாளெல்லாம் தன் பாவைகளுடன் அரண்மனையின் ஏதேனும் மூலையில் தனக்குத்தானே பேசிக்கொண்டு அமர்ந்திருப்பான். அவன் பாவைகள் அனைத்துமே யானைகள். மரத்திலும் பளிங்கிலும் தந்தங்களிலும் துணியிலும் களிமண்ணிலும் செய்யப்பட்டவை. அவற்றை நிரைவகுக்கச் செய்தும் ஒன்றுடன் ஒன்று போரிடச் செய்தும் அவன் விளையாடினான். அவனாகவே வந்து உணவோ நீரோ கேட்பதில்லை. எதன்பொருட்டும் எவரையும் அழைப்பதில்லை. ஓர் இடத்தில் அமர்ந்தால் அந்திவரை அங்குதான் இருப்பான். ஆகவே அவர்கள் எவருமே அவனை நோக்காமலானார்கள். அவன் அங்கே ஒரு பொருள் போலவே கருதப்பட்டான். ஆகவே அவனை அவர்கள் உணவூட்டும் பொழுதுகளில் ஒழிய நினைவு கொள்ளவே இல்லை. அவன் ஒருநாளில் இருமுறையே உணவருந்தினான். காலையில் உண்டபின் பொழுதணைந்த பின்னர்.

அந்தியில் அவனுக்கு பாலன்னம் ஊட்டும்பொருட்டு தேடிவந்த செவிலிதான் அவன் பாவைகள் மட்டுமே கிடப்பதைக் கண்டு அவனை தேடத்தொடங்கினாள். அரண்மனையின் சுவர்மடிப்புகளிலும் படிகளின் அடியிலும் பின்னர் சிற்றறைகளிலும் தேடித்தேடி கண்டடையமுடியாமல் அவள் திகைத்து கூச்சலிட்டாள். அவர்கள் அவனை அரண்மனை முழுக்க தேடினர். பின்னர் வெளியே சென்று எழில்காட்டிலும் களமுற்றங்களிலும் தேடினர். செவிலியர் ஆணையிட்டதும் காவலர்தலைவர்கள் ஏவலர் கூடங்களிலும் கொட்டில்களிலும் அப்பாலிருந்த அடுமனைகளிலும் தொழும்பர்மனைகளிலும் தேடினர். அவன் மறைந்துவிட்டான் என்பதை அவர்களால் நம்பமுடியவில்லை. ஆகவே அவர்கள் கிணறுகளிலும் குளங்களிலும் தேடுவதற்கே அஞ்சினர். அலறி அழுதபடி செவிலியர் மயங்கிவிழுந்தனர்.

அதன் பின்னரே படைத்தலைவனுக்கு செய்தி சென்றது. அவன் சீற்றமும் துயருமாக ஓடிவந்து செவிலியரை ஓங்கி அறைந்தான். அனைத்துச் செவிலியரையும் சேடியரையும் மாளிகைக்காவலர்களையும் சிறைப்பிடித்து கட்டிவைத்துவிட்டு நூறு ஏவலரை அனுப்பி அரண்மனை வளாகம் எங்கும் தேடும்படி ஆணையிட்டான். முந்நூறு ஒற்றர்கள் நகரில் பரவி இளவரசனை தேடத் தொடங்கினர். அத்தனை குடித்தலைவர்களின் இல்லங்களிலும் ஒற்றர்களும் காவலர்களும் சென்று இளவரசனை தேடினர். காவகருக்கு செய்தி அறிவிக்கப்பட்டதும் அவர் குடித்தலைவர்கள் அனைவரையும் சிறைப்பிடிக்க ஆணையிட்டார். கோட்டைக்காவலர்களும் காவல்மாடத்தில் இருந்தவர்களும் சிறைப்பற்றப்பட்டனர். குடித்தலைவர்களின் சிறுமைந்தர்களை சிறைப்பிடித்து கட்டிவைத்து அவர்களிடம் இளவரசன் கிடைக்கவில்லை என்றால் அவர்கள் அனைவரும் கொல்லப்படுவார்கள் என்றார் காவகர். அவர்கள் ஏதுமறியோம் என்று கதறினர்.

இறுதியாகவே பகதத்தருக்கு செய்தி கொண்டுசெல்லப்பட்டது. அவர் திகைத்து நடுக்குகொண்ட உடலுடன் நின்று பின்னர் வாளை உருவிக்கொண்டு பாய்ந்து சிறைப்பிடிக்கப்பட்டவர்களை கொல்லும்பொருட்டு ஓடினார். அவரை படைத்தலைவர்கள் பிடித்துக்கொண்டார்கள். நெஞ்சிலறைந்து அழுதபடி பகதத்தர் நிலத்தில் ஓசையெழ விழுந்தார். அங்கே ஓங்கி அறைந்தபடி கதறி அழுதார். நினைவழிந்து கிடந்த அவரை மஞ்சத்திற்கு கொண்டுசென்றனர். பன்னிருநாட்கள் இளவரசனை தேடினர். அவன் தொலைந்துவிட்டான் என்று உறுதியானதும் காவகர் ஆவதென்ன என்று உசாவுவதற்காக அரசரின் படுக்கையறைக்கு வந்தார். மெலிந்து ஒடுங்கி மஞ்சத்தில் கிடந்த பகதத்தர் “என் ஊழ். மற்றொன்றும் சொல்வதற்கில்லை. சிறையுண்டவர்களை விடுதலை செய்க!” என ஆணையிட்டார்.

“அல்ல அரசே, இது அரசப்பிழை. இதற்கு பொறுப்பேற்றவர்கள் தண்டனை அடைந்தே ஆகவேண்டும். தண்டிக்கப்படாத குற்றம் புல்விதை எனப் பெருகும் என்கின்றன நூல்கள்” என்றார் காவகர். குடித்தலைவர்களும் மைந்தர்களும் விடுதலைசெய்யப்பட்டார்கள். கோட்டைக்காவலரும் காவல்கோட்டத்தினரும் அவர்களின் பொறுப்புகளிலிருந்து நீக்கம் செய்யப்பட்டு நெற்றியில் சூட்டுமுத்திரை பதிக்கப்பட்டு குடிக்கீழ்மை விதிக்கப்பட்டனர். அரண்மனைக் காவலர் அனைவரும் தலைவெட்டி கொல்லப்பட்டார்கள். சேடியருக்கும் செவிலியருக்கும் நஞ்சு அளிக்கப்பட்டு அவர்களே அதை அருந்தி உயிர்விடவேண்டுமென ஆணையிடப்பட்டது. இளவரசன் பிரக்ஜ்யோதிஷத்திலிருந்து மறைந்துபோனான்.

முந்தைய கட்டுரைவல்லினம் – ஒரு போட்டி
அடுத்த கட்டுரைவீரப்பன், அன்புராஜ் – கடிதங்கள்