எழுத்தாளனுக்கான அஞ்சலி

pra

அஞ்சலி:பிரபஞ்சன்

பிரபஞ்சனும் ஷாஜியும்

எழுத்தாளனாகவே வாழ்வது என்பது…

பெருமரியாதைக்கு உரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

எழுத்தாளனாகவே வாழ்வது எனும் கடலூர் சீனு அவர்களிடன் கடிதத்தை வாசித்தேன். எனக்கும் எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் மேல் பெரும் மரியாதை உண்டு. அவர் துயர் மிகுந்த இறப்பிற்குப் பிறகு எழுதப்பட்ட முகநூல் பதிவுகள், கட்டுரைகள் பலவற்றையும் வாசித்து அவரது தனிப்பட்ட ஆகிருதி என்னவென புரிந்துகொண்டேன்.

ஆனால் எனக்கு சில சந்தேகங்கள் உள்ளன. உங்களின் யானை சிறுகதையை நண்பர்கள் அனுப்பிய சுட்டியின் மூலமாக வாசிக்கச் சென்றபோது ம.நவீன் அவர்கள் எழுதிய அஞ்சலி கட்டுரையை வல்லினம் அகப்பக்கத்தில் வாசித்தேன் (சாதாரணங்களின் அசாதாரண கலைஞன்). அந்தக் கட்டுரையில் பிரபஞ்சன் அவர்களது சிறுகதைகள் குறித்து மட்டுமே எழுதப்பட்டிருந்தது. ஆனால் அக்கட்டுரை அவரை விமர்சனம் செய்யும் வகையில் அமைந்தது.

பிரபஞ்சன் அவர்கள் முதற்கட்ட வாசகர்களுக்கான எழுத்தாளர், அவர் சிறுகதைகள் விரிவான வாழ்க்கையை பேசவில்லை, மரணத்திற்குப் பிறகு அவர் மிகையாகப் போற்றப்படுகிறார் என்பது அதன் உள்ளடக்கமாக இருந்தது. அதன் ஊடே சில பாராட்டுகள், சில அவருடனான சுய அனுபவங்கள்.

எனக்கு எழுந்திருக்கும் கேள்விகள்

  1. பிரபஞ்சன் அவர்கள் சிறுகதைகள் ஆரம்பக்கட்ட வாசகர்களுக்கு உரியதா?
  2. அப்படி இருந்தாலும் அதை அவர் அஞ்சலியில் சொல்லலாமா?
    3. ஒரு எழுத்தாளரை அவரது முழுமையான பங்களிப்பில் ஒரு பகுதியை மட்டும் வைத்து தரம்பிரித்தல் நியாயமா?

Death is not the opposite of life, but a part of it. – Haruki Murakami

விஷ்ணுவர்மா

jeya

சமீபத்தில் பிரபஞ்சனின் மறைவுக்கு பிறகு ஷாஜி எழுதியப் பதிவை வாசிக்க நேர்ந்தது. தங்களுடைய ஜெயமோகன் புள்ளி ஐஎன் இணையத்தளத்தில் அது குறித்த இணைப்பு இருந்ததால் பலரும் வாசித்திருப்பார்கள்.

எம் எஸ் சுப்புலெட்சுமி குறித்த அதே போன்ற பதிவு வெகு நாட்களுக்கு முன்பு வந்தது. ஆனால் பிராமணர்கள் அவதாரமாக நினைத்து பூஜிக்கும் ஒரு ஆளுமைக் குறித்த மேலதிக புரிதல் என்றாவது அதை என்னால் நியாயப்படுத்த இயன்றது. முதிர்ச்சியற்ற இளமைப்பருவத்தில் ஜி என் பிக்கு உருகி உருகி கடிதம் எழுதியப் பேதையாக இருந்த ஒருவர் பெரிய ஆளுமையாக உருவானதன் பின்னணியின் புரிதலை அந்தப் பதிவு உருவாக்கியது. ஆனால் பிரபஞ்சன் குறித்த ஷாஜியின் பதிவு எனக்கு மிகுந்த சங்கடத்தையேத் தருகிறது. இன்னும் அதிலிருந்து வெளியே வர இயலவில்லை.

ஒரு எழுத்தாளனின் ஊசலாட்டம் சாதாரண மனிதர்களை விட அதிகமாகவே இருக்க வாய்ப்பு அதிகம். ஐயா நானும் நிறைய எழுதுகிறேன். பதிப்பிக்க முயன்றது இல்லை. சொந்த விஷயத்தையே அதிகம் எழுதுவதால் என் குறுகிய வட்டத்துக்கு மாத்திரம் எழுதி அனுப்புவேன். என் வட்டத்துக்கு வெளியே, நான் மதிக்கும் எம் ஏ சுசீலா பேராசிரியைக்கு மாத்திரம் என் எழுத்தை அனுப்பியிருக்கிறேன். அவரைத் தொந்தரவு செய்ய விருப்பம் இல்லாததால் அவருக்கு அனுப்புவதை தவிர்க்கிறேன்.

எந்தப் புத்தகமும் வெளியிடாத எனக்கே குழப்பங்களும் ஊசலாட்டங்களும் உண்டு. என் குழப்பத்தை நான் கவனிப்பதால் என்னால் பதிந்து வைக்க இயல்கிறது. ஷாஜி போன்ற ஆளுமைகள், பிரபஞ்சன் அனுபவித்த குழப்பத்தையும் ஊசலாட்டத்தையும் ஏன் சாதாரணங்களுக்கு பறையடித்து தெரிவிக்க வேண்டும்? எத்தனை சாதாரண மனிதர்கள் எம் எஸ் சுப்புலட்சுமி போல் பிரபஞ்சனை அவதாரமாக கருதி கொண்டிருக்கிறார்கள்? எதற்காக இப்படி ஒருக் குறிப்பு எழுதி சீண்டவேண்டும். ஒரு சிறிய வட்டத்துக்குள் அந்த ரகசியங்களை வைத்தால் போதாதா? ஷாஜியின் பதிவு வாயிலாக பிரபஞ்சனை வாசிக்க தொடங்கும் ஒரு வாசகனால் பிரபஞ்சன் குறித்த முன்முடிவு இல்லாமல் வாசிக்க இயலுமா? அப்படி முன்முடிவுகளோடு வாசிப்பவர் வாசகரே இல்லை என்று கோட்பாடு வேண்டுமானால் வகுக்கலாம். ஆனால் அந்தப் புதிய வாசகருக்கு அப்படி கோட்பாடு எல்லாம் உண்டு என்று தெரியுமா? பிரபஞ்சன் ஒருக் குடிகாரர் என்று தோன்றாமல் இருக்குமா? மிஷ்கினிடம் பணம் வாங்கித் தரும்படி கேட்டவர்தானே என்று எண்ணாமல் வாசிக்க இயலுமா. குறைந்த பட்சம் மிஷ்கினிடம் பணம் வாங்கிக் கொடுத்த விஷயத்தை குறிப்பிடுவதையாவது ஷாஜி தவிர்த்திருக்கலாமே என்று இருக்கிறது. ஓஸியில் சிங்கப்பூர் அழைத்து செல்லும் வாசகர் இருந்தாலும் வெறும் டைகர் ஏர்லைன்ஸ் விமானத்தில்தானே அழைத்து செல்லப்பட்டார் என்று எனக்கே தோன்றாமல் இல்லை.

ஊதி பெருக்கி பெரிதாக்கி வைத்திருக்கும் ஆளுமைகள் குறித்து நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் ஆய்ந்தாராய்ந்து யாரும் பதிவு செய்து விட்டு  போகட்டும். எழுத்தாளனின் குடிப்பழக்கத்தை பதிந்து வைத்துவிட்டு போகட்டும். குறைந்த பட்சம் அந்த எழுத்தாளனின் பொருளாதார விவகாரங்களைப் பதிவதை தவிர்த்து இறந்தவர்களை நினைவுக் கூற இயலாதா?

(இக்கடிதம் ஒரு ஆற்றாமையால் எழுதியது. பிரசுரத்துக்கு அல்ல).

நன்றி

ஜி

பி.கெ பாலகிருஷ்ணன்
பி.கெ பாலகிருஷ்ணன்

அன்புள்ள விஷ்ணு

எழுத்தாளனின் சாவு இன்னொரு சாமானியனின் சாவு அல்ல. அதை பலமுறை சொல்லியிருக்கிறேன். ஓர் எழுத்தாளனின் சாவு என்பது அவனுடைய எழுத்துக்கள் முற்றுப்பெறும் புள்ளி. அங்கிருந்து அவனுடைய பங்களிப்பென்ன, ஓட்டுமொத்தமாக அவனுடைய நிறைகுறைகள் என்ன என்பது மதிப்பிடப்படும் ஒரு காலகட்டம் தொடங்குகிறது. அந்தத் தொடக்கமே பெரும்பாலும் அஞ்சலிக்கட்டுரைகள் வழியாக வெளிப்படுகிறது.

சாமானியர்களை எவரும் கவனிப்பதில்லை. சாவின்போது மட்டும் கவனித்து அய்யோபாவம் அடாடா என்கிறார்கள். ஏனென்றால் அந்தச் சாமானியன் வாழ்நாள் முழுக்க எந்த மெய்யான பாராட்டையும் தன் சிறு வட்டத்திற்குவெளியே பெற்றிருக்கமாட்டான். புகழ்மொழிகள் வருவது அந்த அனுதாப உணர்விலிருந்தே. அந்தச் சொற்களுக்கு எந்தப்பொருளும் இல்லை. அவை வாய்க்கரிசி போல, செத்தவரால் அவற்றை உண்ணமுடியாது. சொல்லி முடிந்ததுமே அனைவரும் அப்படியே மறந்தும்விடுகிறார்கள்.

எழுத்தாளனை அவன் வாசகர்கள் தொடர்ந்து கவனித்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த கவனிப்பை அவன் இறப்பின்போது தொகுத்துக்கொள்கிறார்கள். தொடர்ந்து பலதலைமுறைகளுக்கு அவனைப்பற்றி பேசுகிறார்கள். அதுவே அவனுக்கு அளிக்கப்படும் கௌரவமே ஒழிய சம்பிரதாயமான துட்டி வார்த்தைகள் அல்ல. ஒரு சாமானியனை நீங்கள் அப்படி தலைமுறைகளாக நினைவில் வைத்திருப்பீர்கள் என்றால் அவனுடைய அஞ்சலிக்கட்டுரையில் எந்த கனிவும் காட்டவேண்டியதில்லை, கறாராகவே மதிப்பிடலாம்.

எழுத்தாளனுக்கான மிகச்சிறந்த அஞ்சலி அவனுடைய சரியான ஆளுமையை, அவனுடைய குறைபாடுகள் மற்றும் கொந்தளிப்புகளுடன், உண்மையான பின்னணியுடன் பலரும் பல கோணங்களில் பதிவுசெய்வதே.  இன்னொரு எழுத்தாளனால் கூரிய அவதானிப்புடன் பதிவுசெய்யப்படுகையிலேயே எழுத்தாளன் ஆளுமையாக காலத்தில் நிலைகொள்கிறான். பாரதி பற்றி ரா.கனகலிங்கம், யதுகிரி அம்மாள், வ.ரா ஆகியோரின் பதிவுகள் அப்படிப்பட்டவை. புதுமைப்பித்தனைப் பற்றிய ரகுநாதனின் நூல் இன்னொரு உதாரணம்,

நம் சூழலில் அப்படி பதிவுசெய்வதற்கு பல தடைகள் உள்ளன. சுற்றம் நட்பு மட்டுமல்ல வாசகர்களேகூட சம்பிரதாயமான மனநிலைகளில் இருக்கிறார்கள். உண்மையை அஞ்சுகிறார்கள், சம்பிரதாயமான பொய்களை விரும்புகிறார்கள். அவை அவனை புகழ்பவை என அவர்களும் எண்ணுவதில்லை. ஆனால் அந்த சம்பிரதாயமான மனநிலை அவர்களுக்கு பழக்கமானதாக உள்ளது. ஆகவே எளிதில் கடந்துசெல்லமுடிகிறது. எழுத்தாளர்களும் பெரும்பாலும் துட்டிப்பேச்சையே அஞ்சலிக்குறிப்பாக எழுதுகிறார்கள்.

எழுத்தாளனின் ஆளுமையை பதிவுசெய்வது ஏன் முக்கியம் என்றால் அவனுடைய எழுத்துக்களின் ஊற்றுமுகம் அதுவே என்பதனால். தன் வாழ்நாளெல்லாம் அவன் சமூகத்தின் முன் வைத்தது அந்த ஆளுமையைத்தான் என்பதனால். அதை கூர்ந்து கவனிப்பதும் புரிந்துகொள்ள முயல்வதும் விரிவாக்கிக்கொள்லவேண்டியதும் வாசகனின் சவால் என்பதனால். அவனுடைய எழுத்துக்களின் நுட்பங்களை அறிய அது ஒரு பெரிய சுட்டி என்பதனால்.

அவ்வாறு எழுத்தாளனின் ஆளுமையை சரியாக பதிவுசெய்வதற்கு எதிரான முதல் விஷயம் சம்பிரதாயமான சொற்களை அவர்மேல் பெய்வது. அவரை அப்படியே மறைத்து, பிறந்து இறந்து மறையும் கோடிகளில் ஒருவராக அவரை ஆக்கிவிடுவது அது. உண்மையில் பலர் அதைத்தான் விரும்பிச்செய்கிறார்கள். அவர் எழுத்தாளரோ சிந்தனையாளரோ ஒன்றும் அல்ல, எங்களைப் பொறுத்தவரை அவரும் எங்களைப்போல ஒரு மனிதர், அவ்வளவுதான். ‘அவரு ஒரு நல்ல எழுத்தாளரா இல்லியான்னு சொல்லமாட்டேன். ஆனா அற்புதமான மனுஷன்!” இது ஒரு அபத்தமான டெம்ப்ளேட் வார்த்தை. அதன் உண்மையான பொருள் இதுதான்.

முன்னர் சி.ஜே.தாமஸ் பற்றிய அஞ்சலிக்குறிப்புகளைப்பற்றி எழுதுகையில் பி.கே.பாலகிருஷ்ணன் எழுதினார். சி.ஜே.தாமஸ் சொல்வதாக.”யோகன்னான் மார் எஸ்தோப்பியாவை உங்களுக்குத் தெரியுமா? என்னைவிட  நூறுமடங்கு அற்புதமான மனிதர். சிரியன் கத்தோலிக்க மதகுரு. அவர் செத்தபோது நீங்கள் ஏன் ஒரு அஞ்சலிக் கட்டுரைகூட எழுதவில்லை?” பின்னர் சீற்றத்துடன் சிஜே சொல்கிறார் “நீ என்னைப்பற்றி பேசுவது நான் எழுதிய சில புத்தகங்களுக்காக. ஆகவே என் புத்தகங்களையும் என் சிந்தனைகளையும் பற்றி பேசுடா புல்லே”

எழுத்தாளனின் நூல்களைப் பற்றி பேசும்போதும் மிகச்சரியான விமர்சனத்தை முன்வைப்பதே முக்கியமானது. ஊரிலுள்ள அத்தனை கவிஞர்கள் எழுத்தாளர்களுக்கும் ஒரே போல ‘மாபெரும் படைப்பாளி, தமிழுக்கு பேரிழப்பு’ என்றுதான் சொல்கிறீர்கள் என்றால் எழுத்தாளனை கொண்டுசென்று கடலில் கரைக்கிறீர்கள் என்றுதான் பொருள். அந்த எழுத்தாளனின் தனித்தன்மையும், பங்களிப்பும்தான் சுட்டப்படவேண்டும். அதற்கு அவனுடைய குறையும் நிறையும் ஆராயப்படவேண்டும்.

எழுத்தாளன் இறந்தால் துக்கம் இருக்கத்தான் செய்யும். ஆனால் அந்த துக்கத்தை மீறி மேலெழவேண்டியது மதிப்பு. அந்த மதிப்பால்தான் நாம் அஞ்சலியை பதிவுசெய்கிறோம். அது தீர்ப்பு அல்ல, ஒரு கோணம். அந்தக்கோணம் மறுக்கப்படலாம். விவாதம் உருவாகலாம். எழுத்தாளனை மலர்களால் மூடிப்புதைப்பதே அவனுக்கு இழைக்கும் அநீதி. அவனைப்பற்றி விவாதிப்பது அவனை கௌரவிப்பதே. ஆகவேதான் உலகம் முழுக்க எழுத்தாளர்களைப் பற்றி வெளிப்படையான வாழ்க்கைப்பதிவுகளும் திட்டவட்டமான மதிப்பீடுகளும் எழுதப்படுகின்றன. தமிழில் மட்டுமே இந்தக்குரல் எழுந்துகொண்டே இருக்கிறது. இன்னமும் இலக்கிய உலகுக்குள் வராத பொதுவான வாசகர்களின் குரல் என இதை கொள்கிறேன். ஆகவேதான் இவ்விளக்கம்.

ஜெ

பிரபஞ்சன் : கடிதங்கள்

யதுகிரி அம்மாள் பாரதி சில நினைவுகள்

யதுகிரி அம்மாளின் பாரதி நினைவுகள் பற்றி வெங்கட் சாமிநாதன்

யதுகிரி அம்மாள் பாரதிநினைவுகள் பற்றி,…

புதுமைப்பித்தன் வரலாறு பற்றி சுப்ரபாரதி மணியன்

புதுமைப்பித்தன் வரலாறு ஆவணக்காப்பகத்தில்

மகாகவி பாரதியார் வரலாறு வ.ரா

மகாகவி பாரதியார் வரலாறு வ ரா மூலம்

ரா கனகலிங்கம் எனதுகுருநாதர்

முந்தைய கட்டுரைபுத்தகக் கண்காட்சி – கடிதங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-41