அன்புள்ள ஜெ
வணக்கம்
கோவையில் கடந்த 10 ஆண்டுகளாக நடந்து வரும் எப்போ வருவாரோ நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன் திரு கிருஷ்னா என்பவர் ரமணரைப் பற்றி உரையாற்றிக் கொண்டிருந்தார் .
ரமணரை சந்தித்து பின் ஞானம் பெற்றவர்கள் பற்றி ஒவ்வொருவராக விவரித்து வந்தார்.
அந்த வரிசையில் குரு நித்யாவை சொல்லும் முன் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுடைய குரு நித்ய சைதன்ய யதி என்று சொன்னார்.
ஒருகணம் திகைத்துப் போனேன் ஆயிரம் பேருக்கு அருகில் கலந்து கொண்ட ஒரு பொது நிகழ்வில் உங்கள் பெயரை பேச்சாளர் உச்சரித்ததும், மேலும்
யதியின் மாணவன் என்ற நிலையிலிருந்து ஜெயமோகனின் குரு என்ற உங்களுடைய வளர்ச்சி 30 ஆண்டுகால கடும் உழைப்பு எனக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது கூடவே உங்களைப் போன்ற ஒரு மாபெரும் ஆசிரியருடன் அருகிலிருந்து கற்கும் வாய்ப்பு பெற்றுள்ள நான் இருபது முப்பது ஆண்டுகள் கழித்து என்னவாக இருப்பேன் என்று எண்ணிப் பார்த்துக் கொண்டேன்.
மு.கதிர் முருகன்
கோவை
அன்புள்ள கதிர்
ஒருவகையில் அது கொஞ்சம் சங்கடமளித்தது. ஆனால் பின்னர் அது இயல்பே என்றும் பட்டது. அவ்வாறுதான் சில தொடர்ச்சிகள் உருவாகின்றன. சென்ற முப்பதாண்டுகளாக அவர் பெயரை நான் தமிழகத்தில் சொல்லிவருகிறேன். மலையாளத்தில் பலர் இருந்தாலும் உஸ்தாத் ஷௌகத் அலியின் எழுத்துக்கள் வழியாகவே நித்யா மீண்டும் மீண்டும் கண்டடையப்படுகிறார். எப்போதும் எல்லா ஆசிரியர்களுக்கும் இவ்வாறே நிகழ்கிறது.
ஜெ