தெய்வங்கள் தேவர்கள் பேய்கள் – கடிதம்

deivangal-peigal-devargal_FrontImage_349 (1)

அமேசானில் ‘தெய்வங்கள் பேய்கள் தேவர்கள்’ மின்னூல் வாங்க

நற்றிணையில் தெய்வங்கள் பேய்கள் தேவர்கள் – அச்சுநூல் வாங்க

குலதெய்வங்கள் பேசும் மொழி – முன்னுரை

இது அக வெளி -லட்சுமி மணிவண்ணன்

பேரன்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு

தங்களின் தெய்வங்கள் பேய்கள் தேவர்கள் படித்தேன். பின்வருமாறு தொகுத்து கொண்டுள்ளேன். தங்களின் பார்வைக்கு

வேதங்களில் உள்ள ஒரு அரிய படிமம் மூன்று தலைகள் கொண்ட முனிவர் “திரிசிரஸ்”. ஒரு தலை கல்லும் ஊனும் உண்டு களித்திருக்கும்,இரண்டாம் தலை வேதமோதியபடி மகிழ்திருக்கும் , மூன்றாம் தலை இவை அனைத்தையும் பார்த்து ஞானத்தில் தன்னுள் மூழ்கியிருக்கும். இவை மூன்றும் முறையே நாட்டார்-மூத்தார்-நீத்தார் தெய்வ வழிபாடு, வைணவ-சைவ-பெருந்தெய்வ வழிபாடு மற்றும் அருவுருவ-தத்துவ-அத்வைத வழிபாடாக இந்து மதத்தை சரியாக வகைப்படுத்த்தும் படிமமாக உள்ளது. இவை மூன்றும் பார்ப்பதற்கு வேறு வேறாக தெரிந்தாலும் மூன்றும் ஒன்று தான், ஒருவரின் முகம் தான் ஆனால் மூன்று வெவ்வேறு கோணங்கள் என்ற   புரிதலே, இந்த மதத்தையும் அதன் கட்டமைப்பையும் தெரிந்து கொள்வதற்கு பேருதவியாக இருக்கும். இதை எழுத்தாளர் ஜெயமோகன் தனது எழுத்துகளில் தொடர்ந்து வலியுறுத்து வாசகர்கள் மத்தியில் புரிதலை உருவாக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.

தெய்வங்கள் பேய்கள் தேவர்கள் என்ற புத்தகம் 37 சிறு கதைகள் கொண்டது. அனைத்தும் நாட்டார்-நீத்தார் தெய்வ கதைகள். பெரும்பாலும் திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி யை சுற்றி இருக்கும் நாட்டார் தெய்வங்களை பற்றியது. இக்கதைகள் அனைத்தும் பெரும்பாலும் மக்கள் வாய்மொழி கதைகளாகவே வாழையடி வாழையாக வந்துகொண்டிருப்பதால் மீகற்பனைகளும் திகிலும் நிறைந்ததாக உள்ளது. ஒரு நாட்டார் தெய்வத்தை பற்றி மக்களிடம் புழங்கும் கதைகளே பலவாகவும் உள்ளது. ஒரு நாட்டார் தெய்வத்தை பற்றி, மக்களிடம் புழங்கும் கதைகள் அனைத்தையும் மக்களின் பார்வையிலேயே சொல்லி, அது எவ்வாறு இந்து மத தொகுப்பில் இடம்கொண்டது என்ற ஆசிரியரின் பார்வையையும் பதிந்திருப்பது சிறப்பாகவும் சிந்தனையை தூண்டுவதாகவும் உள்ளது.

பொதுவாக நாட்டார் தெய்வங்கள் என்றாலே நான் காவல் தெய்வமாகவே நினைத்திருந்தேன். என்றோ வாழ்ந்த ஒரு முன்னோரால் அவரின் உயிர் தியாகத்தால் ஒரு இனமோ, ஊரோ, குடும்பமோ காப்பாற்ற பற்றிக்கலாம், அவருக்கு நன்றி செலுத்தவும் தொடர்ந்து அருள் புரிந்து காப்பாற்ற கோரியும் நம் முன்னோர்கள் பல்லாயிர நாட்டார் தெய்வங்களை உருவாக்கி இருக்கிறார்கள் என்பதே என் புரிதலாக இருந்தது. என் தந்தை, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மறைந்தார், அதன் பிறகு என் தாய், எந்த கோவிலுக்கும் செல்வது இல்லை. என் தாயின் விருப்ப தெய்வமான விஷ்ணு வை கூட துறந்தார் . என் தந்தையின் படத்தை மட்டுமே என் தாய் பூஜிக்கிறார் . எங்கள் குல தெய்வம் சின்ன நம்பி சாஸ்தா (திருநெல்வேலி யிலிருந்து திருச்செந்தூர் போற வழியில் உள்ள கருங்குளம் அருகில் வல்லகுளம் என்ற கிராமத்தில் உள்ளது) கோவிலுக்கு மட்டும் என் தாய் உள்ளே வருவார். மற்ற எந்த கோவிலுக்கும் செல்வதில்லை. என் தந்தை குல தெய்வமான சின்ன நம்பி சாஸ்தாவுடன் இரண்டறக்கலந்து எங்கள் குடும்பத்ததுக்கு காவல் தெய்வமாக உள்ளார் என்பது அவரின் நம்பிக்கை. என் தாயின் வாய்வழி மூலமாக என் தந்தை, குல தெய்வம் பற்றிய கதைகள் அடுத்த தலைமுறை பேரக்குழந்தைகளுக்கு பரவி கொண்டிருக்கிறது. என் கண்முன்னே ஒரு நாட்டார் தெய்வம் உருவாகி கொண்டுள்ளது.

இப்படித்தான் இந்த நாட்டார் தெய்வங்கள் உருவாகி இருப்பார்கள் என்று கணிக்கயிலேய, சில கதைகள் வேறொரு நாட்டார் தெய்வங்களையும் காட்சி படுத்துகின்றன. வாழ்க்கை பயணத்திலேயே விதியில் உழன்று இறந்தவர்கள் , அப்பாவிகள், துரோகம் இழைக்கப்பட்டு கொல்லப்பட்டவர்கள், அநீதி இழைக்கப்பட்டவர்கள், என்று சாதாரண மனிதர்களும் மக்களின் மன்சாட்சியினாலும் குற்றஉணர்வாலும் கடவுளாக ஆக்கப்பட்டுள்ளார்கள். மிக தொன்மையான, கோபம் கொண்ட நாட்டார் தெய்வங்கள், எவ்வாறு சமண மதத்தால் உள்ளிழுக்கப்பட்டு சாந்த தெய்வங்களாக மாறின, பின்னர் இந்து மதத்தால் உள்ளிழுக்கப்பட்டு எவ்வாறு தேவதைகளாக மாறின  என்ற வரலாறு வடிவம் சில கதைகளினூடாக வெளிப்படுகிறது. தத்துவங்களும் பெருந்தெய்வ வழிபாடும் கோபுரங்களாக நிற்கையில், அடியில் உள்ள வலுவான அடிப்படை,மண்ணில் உழலும் இந்த நாட்டார் தெய்வங்களால் ஆனது என்பதும், இந்து மதத்தின் அடித்தளமே அவைதான் என காட்சி படுத்துகின்றன. இந்து மதம் எந்த நாட்டார் தெய்வ வழிபாட்டையும் அழிக்காமல், தத்துவ கோட்பாடு மூலம் தன்னுள் உள்ளிழுத்து கொண்டுள்ளது. விலகிநின்று மரியாதையுடன் வணங்கும் பெருதெய்வ வழிப்பாட்டுடன், தோலில்  கைபோட்டு உரிமையாக கேட்க முடிகிற நாட்டார் தெய்வ வழிபாடும்  பக்தியின் வெளிப்பாடாகவே கருதுகிறது இந்நூல். அதை பல்வேறு மக்களின் வாய்மொழி கதைகள் வழியாக முன்வைக்கிறார் ஜெயமோகன். அவரே சொன்னது போல மூன்றாம் தர பகுத்தறிவு கொண்டு அணுகினால் இந்த புத்தகம் உங்களிடம் பேசுவதற்க்கு எதுவும் இல்லை. கனிந்த மனம் கொண்டு அணுகினால் சிலவற்றை புரிந்து கொள்ளலாம்.

பாண்டியன் சதீஷ்குமார்

கொரியா

நற்றிணையில் ‘தெய்வங்கள் பேய்கள் தேவர்கள்’

முந்தைய கட்டுரைஎஸ்.ராமகிருஷ்ணன், சஞ்சாரம் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைஏன் வரலாற்றை சொல்லவேண்டும்? – கடிதம்