இந்துமதத்தைக் காப்பது – கடிதங்கள்

bakti

இந்துமதத்தைக் காப்பது…

அன்புள்ள ஆசிரியருக்கு,

பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

தங்களின் “இந்து மதத்தைக் காப்பது” கடிதம் கண்டேன். சமீப காலமாக என்னைப் பாதித்திருந்த  ஒரு கேள்விக்கு விடை கிடைத்ததில் மகிழ்ச்சி.. எனக்கு நண்பர்கள் மூன்று மதங்களிலும் உண்டு என்றாலும் இந்து மத நண்பர்கள் சிலர் கடந்த சில ஆண்டுகளில் (குறிப்பாக மத்தியில் நடப்பு அரசு ஆட்சிக்கு வந்த பிறகு) அடைந்திருக்கும் மனமாற்றம் ஆச்சர்யம் அளிப்பது, ஆபத்தானதும் கூட என்று எனக்குப் படுகிறது. எனது இஸ்லாம் நண்பர்கள் சிலர் இந்து மதக் கடவுள்களை அவ்வப்போது கேலி செய்வதுண்டு. ஆனால் அவற்றை நான் பொருட்படுத்துவதில்லை, அது எவ்வாறு இயங்குகிறது என்பதை ஓரளவு அறிந்திருப்பதால். ஆனால் இந்து மத நண்பர்கள் வளர்த்துக் கொண்டிருக்கும் இந்த துவேஷம் அச்சமூட்டுவதாக உள்ளது. வாட்ஸாப், முகநூலில் வரும் அனைத்து மாற்று மதம் தொடர்பான வதந்திகளை விரும்பி நம்பத் தலைப்படுகிறார்கள்.. வெறுப்பை வளர்க்கிறார்கள்..ஒரு பெரும்பான்மை சமூகம் இவ்வாறு சிந்திக்க ஆரம்பித்தால் அதன் விளைவுகள் என்னவாக இருக்கும். அங்கு மனிதம் என்பதன் இடமென்ன?. இப்படி எல்லா மதத்தவரும் ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை இழந்தால் இந்தியா இனிமேல் ஒரே நாடாக, அனைவருக்குமான இடமாக இருக்கவே இயலாதா?? அல்லது நான் கொஞ்சம் ஓவராக பில்டப் செய்து கொள்கிறேனா தெரியவில்லை..உங்கள் கடிதம் மற்றும் ஞான மரபு தத்துவங்கள் புத்தகம் ஒரு தெளிவைத் தருகிறது, நான் எதைப் பற்றிக் கொள்ள வேண்டும் என்ற தெளிவை.. ஆனால் இந்த மதம் சார்ந்த தீவிரத்தை மதத்தைக் கொண்டே மாற்ற இயலுமா??

உண்மையான மத நிறுவனங்கள் ( எல்லா மதங்களிலும்) செய்ய வேண்டியது என்ன?? அவ்வாறு யாரும் அதிகாரத்தை அஞ்சாமல் இன்று இருக்கிறார்களா??

அன்புடன்,

ஞானசேகர் வே

அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு ,

இஸ்லாம் மற்றும் கிருஸ்தவ மதங்கள் இன்று உலகலாவி பரந்து இருப்பதற்கு இந்த மதங்களின் அதிகார கடடமைப்புகளும் முக்கிய காரணம் இல்லையா? இந்து மதத்தின் பேரில் அரசியல் அமைப்புகள் தங்களை அது போன்ற ஒரு அமைப்பாக காட்டி இளைஞர்களை தன்பக்கம் கவர்வதே நடப்பதாக தோன்றுகிறது..

தங்கள் கட்டுரையை நண்பர்களிடம் பகிர்ந்த போது அதுவே பதிலாக சுட்டி காட்டடபடுகிறது…. இந்து மதத்தை சரியாக புரிந்துகொள்ள நமது மதத்தில் அது போன்ற அமைப்புகள் இல்லாததும் ஒரு காரணி இல்லையா? இந்த வெற்றிடம் அரசியல் கட்சிகளால் நிரப்பபடுவதாக நான் நினைக்கிறேன் ….   எவ்வகையில் இது கையாளப்பட வேண்டும்? யார் இதை செய்வது நமக்கு நன்மை பயக்கும்? நாம் ஒவ்வொருவரும் நம் மதத்தை புரிந்து நடப்பதுடன் இது போன்ற பெரிய அதிகாரமய்யங்கள் மதத்தை வளர்ப்பதும் நிதர்சனம் இல்லையா? யார் இந்து மதத்திற்கு இதை செய்ய வேண்டியதாக நீங்கள் எண்ணுகிறீர்கள்?   தங்களுடைய எண்ணம் இதில் என்ன?

நம்பி.

அன்புள்ள ஜெயமோகன் சார்,

இன்றைய கட்டுரையில் இந்த வரியை படித்ததும் “ஓர் இந்து இந்துமதம் அளிக்கும் ஒரு கூறின்மேல் ஆழ்ந்த நம்பிக்கைகொண்டு மேலும் மேலும் மூழ்கிச்சென்றே தன் மெய்மையை அடையமுடியும்.” எனக்கு நினைவுக்கு வந்தது உங்களுடை மடம் குறு நாவலில் பசு வளர்ப்பு புத்தகத்தில் உள்ள காமதேனு பற்றிய குறிப்பை மட்டுமே படித்து அதையே ஒரு சாதனாவாக வளர்த்தெடுத்து மெய் ஞானமடையும் பெரியவரின் கதை தான்.

மடம் குறு நாவல் அந்த வடிவத்திற்க்குள்ளேயே மதத்திற்க்கும், வெற்று ஆசாரங்களுக்கும், சடங்குகளுக்கும் , மெய்த்தேடலுக்கும் உள்ள பண்புகளை ஒரு kaleidoscope போல மாற்றி மாற்றி காட்டும் ஒரு அற்புதமான படைப்பு. இலக்கியத்தின் லட்சியம் கருத்துக்களை சொல்வதல்ல எனினும், நிறுவன மதத்திற்கும் மெய்த்தேடலுக்கும் உள்ள வித்தியாசங்களை மடம் குறு நாவலின் வாழ்க்கையை அதனினுடாக வாழ்ந்து பார்த்து ஒரு வாசகன் அறியலாம் என்பது எனது கருத்து.

அன்புடன்
கிருஷ்ணன் ரவிக்குமார்.

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-36
அடுத்த கட்டுரைகொந்தளிப்பும் அமைதியும்