பார்வதிபுரம் பாலம்

palam1

பார்வதிபுரத்திலும் மார்த்தாண்டத்திலும் அமைந்துள்ள மேம்பாலங்களைப்பற்றி பெருமைகொள்ளவேண்டும். இப்போதெல்லாம் என்னிடம் எவராவது “சார் எங்கயாக்கும் தாமசம்?” என்று கேட்டால் “இப்ப, நாகர்கோயில் இருக்குல்லா?” என்பேன். “ஆமா” தொடர்ந்து படம்வரைந்து பாகங்களைக் குறித்து “அந்த நாகர்கோயிலிலே இந்தா இப்டி வந்தா பார்வதிபுரம்னு ஒரு எடம்…” அவர் “சேரீ” என இழுப்பார். அப்படியே பேனாவால் சுழித்து “அதுக்கு நேரே அடியிலே ஒரு இருவத்தஞ்சடி ஆழத்திலேயாக்கும் சாரதாநகர்னு ஒரு ஏரியா… பாத்தியள்னாக்க…” என ஆரம்பிப்பேன்.

மண்ணுக்கு அடியில் வாழ்வதும் நன்றாகத்தான் இருக்கிறது. அந்தக்கால பாதாளநாகங்களைப் போல. இங்கே கார்க்கோடகன், வாசுகி உட்பட அஷ்டமாநாகங்களும் உண்டு. கார்க்கோடகன் சிஎஸ்ஐக்காரர் என அறிந்துகொண்டேன். “ய்ய்ய்யேஏஏஏஸ்ஸ்ஸ்ஸ்ஸுவே” என்றார். காட்சன் சாமுவேலுக்கு சொந்தக்காரர் வேறு. சேஷன் அக்ரஹாரம். பாரதி மணிக்கு சொந்தம்.  சுருளாயிரம். நாக்கு பல்லாயிரம். வாசுகிதான் நாயர். நஞ்சை எல்லாம் ஏதோ யுகத்தில் கக்கி முடித்து சிக்கன் ஃப்ரை சாப்பிட்டு ஏப்பம் விட்டுக்கொண்டு அவர் பாட்டுக்கு இருப்பவர்.

போகன் என்ற விஷம் கூடிய சின்ன சைஸ் வேளாள நாகம் நேற்று என் வீட்டுக்கு வந்திருந்தது. “இப்பம் திருவனந்தபுரம் போகிறது டைம் குறைஞ்சிருக்குல்லா?” என மனநிறைவுடன் சொன்னது. “இப்ப நான்லாம் ரெண்டு மணிக்கூர் நேரத்திலே சல்லுன்னு போயிடறது.” நான் “முன்னாடி எவ்ளவு நேரமாச்சு?” என்றேன். “மூணுமணிநேரம்… எல்லா எடத்தையும் தோண்டில்லா போட்டிருந்தான்?”

பொறுமையாக “சரி, தோண்டுறதுக்கு முன்னாடி எவ்ளவு நேரமாச்சு?” யோசித்து  “அப்பல்லாம் ஒரு ஒண்ணர மணிக்கூர்ல போலாமே” கவிஞர்களுக்கு கணக்குத்திறன் கம்மி. ‘மொள்ளமா’த்தான் புரியவைக்கவேண்டும். “சரி, இப்ப டைம் கூடியிருக்கா குறைஞ்சிருக்கா?” என்றேன். “மூணுமணிநேரத்திலே இருந்து ஒருமணிநேரம் குறைஞ்சிருக்குல்லா?” பொறுமையுடன் “ஆனா ஒண்ணர மணிநேரம் கூடினபிறகுல்லா ஒருமணிநேரம் குறைஞ்சிருக்கு.” “ஆமா, ஆனா இப்ப குறைவுதானே?” இதற்கு அவர் கவிதைகளையே புரிந்துகொள்ள முயலலாம்.

பல ஹோமியோடாக்டர்களின் வழிமுறை இது. சென்றதுமே நோயை கூட்டிவிடுவார்கள். “சிம்ப்டம்ஸ் கூடுறது ஓமியோவோட மருந்து வேலபாக்குறதுக்கான அறிகுறி… எலிய பூன புடிச்சாச்சு பாத்துக்கிடுங்க.” அதன்பின் அவரால் கூட்டப்பட்டது குறைகிறது. நாம் ஆறுதலாக “இப்பம் கொஞ்சம் குறவுண்டு டாக்டர்.” டாக்டர் தன்னம்பிக்கையுடன் புன்னகைத்து “அப்டியே குறைஞ்சிரும்… ஓமியோ மெல்ல மெல்லத்தான் வேலைசெய்யும்.” ஆறுமாதகாலத்தில் ஏராளமான குளிகைகளை சின்னஞ்சிறு டப்பிகளில் இருந்து விழுங்கியபின் நாம் முன்பிருந்த நிலையிலோ அதைவிட கொஞ்சம் மட்டும் கூடுதலாகவோ வந்துசேர்கிறோம். என்ன ஒரு சந்தோஷம்!

காலை டீ குடிக்க நாடார் கடைக்குச் சென்றால் தலைக்குமேல் பேருந்துகள் மெல்ல செல்வதை காணமுடிகிறது. ஒரு பெரிய மரக்கிளைமேல் மிசிறு எறும்புகள் வரிசையாகச் செல்வதுபோல. அதை பார்க்கும்போதெல்லாம் ஒரு கவலை, வழக்கமான கோட்பாட்டு உரையாடல் வெறியால் காலைநடை வரும் வேதசகாயகுமார் மேம்பாலத்தில் ஏறி உப்பக்கம் கண்டு அப்பக்கம் சென்று நின்று விடுவாரோ என. தமிழில் முதல்முறையாக பின்நவீனத்துவத்தைக் கடந்தவராகவும் ஆகிவிடுவார். ஆனால் வாய்ப்பில்லை உடன்நடக்கும் பாலசுப்ரமணியம் வக்கீல் கனிந்த லௌகீகவாதி. இடதுசாரிகள் எந்தப் பழக்கமில்லா பாதையிலும் கால்வைப்பதில்லை.

palam2

கீழே டீக்கடையில் வழக்கமான காலைக்கூட்டம். “கீளநிண்ணு பாக்கிறப்ப ஓரோ வண்டியும் நம்மளப்பாத்து போலே மயிராண்டீன்னு சொல்லிட்டுப் போறது மாதிரி ஒரு நெனைப்பு” என்றார் ஆட்டோ ஓட்டுநரான நேசராஜ். “பஸ்ஸு மேலே போறதப்பாத்தா பெடக்கோளி பறக்கிறதப் பாக்கிற மாதிரி இருக்கு” என ஒரு குரல். பெட்டைக்கோழி பறக்கும்போது உலகம் அழியும் என்றல்லவா சொல்? “தலைக்குமேலே இம்புடு ஜனங்க காலில்லாம பறந்து போறது நல்லதுக்கில்ல கேட்டுக்கிடுங்க. இது ப்ஸாஸுக்க நாள் வந்திட்டே இருக்கதுக்குண்டான திருட்டாந்தமாக்கும்” என்று பெந்தேகொஸ்துக்காரரான ஓய்வுபெற்ற தமிழாசிரியர்.

எனக்கும் அந்த ஐயம் உண்டு. வாஸ்துபடி தெரு, சாலை முதலியன நம் வீட்டுக்கு முன்னாலோ பின்னாலோ இருக்கலாம். வீட்டுக்கு மேலேயே இருக்கலாமா? நள்ளிரவில் பொற்காசுக் குண்டானை இழுத்தபடிச் செல்லும் புலமாடன் சாமி, முழவொலியுடன் செல்லும் இரும்படி மாடன்சாமி ஆகியோர் இப்படி பாதை மேலேறினால் எங்கேயாவது சென்று முட்டிக்கொள்ளமாட்டார்களா? நாலுமுக்கு முத்தாலம்மனின் தலைக்குமேல் நாம் நடந்துசென்றால் அதற்கான பரிகாரங்கள் என்னென்ன? மேம்பாலவாஸ்து என ஒன்று இல்லாமலா இருக்கும்? மணிமேகலையில் விசாரித்துப்பார்க்கவேண்டும்.

பார்வதிபுரம் பாலம் y வடிவிலானது. அங்கே பேச்சிப்பாறை சானலின் மேல் கணியாகுளம் சாலை, பெருவிளைசாலை, மெர்லின் ஆஸ்பத்திரி சாலை ஆகிய துணைச்சாலைகளும் இந்தப்பக்கம் ஜெயசேகரன் ஆஸ்பத்திரி சாலை, பென்சாம் ஆஸ்பத்திரி சாலை சிசுரூஷா ஆஸ்பத்திரி சாலை என்னும் மூன்று தேசியநெடுஞ்சாலைகளும் சந்திக்கின்றன. [ஆஸ்பத்ரிகள் இல்லாத சாலைகளுக்கு இங்கே பெயர்கள் இல்லை] ஆகவே அங்கே அந்தியில் பெரிய சுழிப்பு உருவாகியிருக்கும். அப்படி ஒன்றை அறியாதவர்களாக நாங்கள் ஊடே புகுந்து மளிகைக்கடையில் பால்பாக்கெட் வாங்கி நுனிபற்றி தூக்கிக்கொண்டு “அஜித் கலெக்சன் எப்பமுமே டபுள் சீட்டு கணக்காக்கும்…” என்று சொல்லிக்கொண்டே கடந்துசெல்வோம்.

அங்கே இரு தேசியநெடுஞ்சாலைகளிலும் இரு கிளைகளாக பாலங்கள் மேலேறி வந்து வானிலேயே இணைந்துகொள்கின்றன. இணையாக கீழே இரு  ‘சர்வீஸ் சாலைகள்’. என்ன சிக்கலென்றால் மொத்த சாலைகளும் இப்போது பார்வதிபுரத்தைக் கடந்துசென்று சுங்கான்கடைக்கு முன்னால் மீண்டும் முன்பிருந்த சிறிய சாலையில் இணைகின்றன. அங்கே வருபேருந்து ஓம்பி செல்பேருந்து காத்து ஏகப்பட்ட கூட்டம்வேறு. முன்பு பார்வதிபுரம் சந்திப்பில் இருந்த நெரிசல் இருமடங்காக்கப்பட்டு வானில் நிகழும்படி அமைக்கப்பட்டிருக்கிறது. அவ்வப்போது சில ஆத்மாக்கள் யூ டர்ன் அடிக்கவும் முனைகின்றன. ஆகவே  ‘குப்பிக்கழுத்து போக்குவரத்து’ என்று அறிஞர் சொல்லும் நிலை உருவாகிறது.

அந்தக்காலத்தில் குன்னத்துகல் என்னும் ஊரினரைப்பற்றிய கதை ஒன்று சொல்வார்கள். அவர்கள் பாறசாலை கோயிலுக்குச் சென்று அங்குள்ள தேரை பார்த்தனர். அடுத்த திருவிழாவில் அதைவிட பெரிய தேர் குன்னத்துகல் கோயிலில் ஓடவேண்டும் என ஊரே முடிவெடுத்தது. ஆனால் அதை பாறசாலைக்காரர்கள் அறியக்கூடாது. அதிர்ச்சியூட்டும்படி தேர் விழாவில் தோன்றவேண்டும். பரமரகசியமாக தேர் செய்யப்பட்டது. பாறசாலைத் தேரைவிட இருமடங்கு. ஆனால் குறிப்பிட்டநாளில் தேர் ஓடவில்லை. ரகசியமாக இருக்கும்பொருட்டு  தேரை கோயில் மண்டபத்திற்கு உள்ளே வைத்து கட்டியிருந்தார்கள்.

ஆனால் மேம்பாலம் வந்தபின்னர் பார்வதிபுரத்திற்கு ஒரு மறைவு வந்துவிட்டது. மொத்த பார்வதிபுரத்தையே எவரோ கமுக்கமாக மூடிப்போர்த்தி வைத்துவிட்டதுபோல. முன்பெல்லாம் ஜங்ஷனை அடைந்தாலே “டேய் மயிராண்டீ என்னலே இங்கே?” என்று கூவி “ஒண்ணுமில்லேலே தாயோளீ, ஒரு சாயகுடிச்சலாம்ணு வந்தேன்” என்று பதில்பெறுவோம். நடுவே வண்டிப்பீப்பிகளின் வீரிடல்கள், எஞ்சின் உறுமல்கள். “பணந்தரோம் சார் பணந்தரோம். பழைய பட்டு சரிகைக்கு பணம்தரோம் சார் பணம் தரோம்” “மலைமரச்சீனி கெளங்கேய்!” என பலவகை அறிவிப்புகளுக்கு நடுவே அனுராதா ஸ்ரீராம் “ஆயிரம் கண்ணுடையாளே ஆத்தாளே!” என்று கூவிப் பதைபதைக்க ஒரே சந்தடியாக இருக்கும். வெயில்வேறு நின்று பொழியும்.

இப்போது நடு உச்சியிலும் நல்ல இருட்டு. நடமாட்டங்களும் குறைவு. தெரியாத நபர்களை புருவம்சுருக்கி சூழ்ந்து பார்க்கிறோம். எங்கும் மயான அமைதி நாங்கள் பேசிக்கொள்வதே கிசுகிசுப்பாகத்தான் “மத்தவன் வாறதுண்டா?” “நாலு நாளாட்டு காணல்ல… வந்தாத்தான் கணக்கு செரியாவும்.” கள்ளக்காதல் விவகாரம் அல்ல. சும்மா சீட்டுக்கம்பெனிக்காரனைப் பற்றிய பேச்சுதான். நான்கு வீச்சு பரோட்டாவும் ஒரு சிக்கனும் வாங்கிக்கொண்டு வரும் வழியில் வாழைப்பழம் வாங்க நிற்கையில் மாபெரும் சதிவேலை ஒன்றைச்செய்வதான பதற்றம் ஏற்படுகிறது. கண்களில் சூழ்ச்சியுடன் ஒருவர் “ஒரு கோல்டு” என்று சிகரெட் வாங்கிச் செல்கிறார். நான்குபக்கமும் எச்சரிக்கையாகப் பார்த்தபடி “எடுத்து வச்சிருங்கண்ணாச்சி” என்று சொல்லிவிட்டு ஒருவர் டிவிஎஸ்50-இல் ஏறிக்கொண்டு ஜாக்ரதையாக உதைத்து பதனமாக கிளப்பி சுழன்று செல்கிறார்.

ஒட்டுமொத்த பார்வதிபுரமே நாகர்கோயிலுக்கு எதிராக, ஏன் இந்திய அரசின் ஒடுக்குமுறைக்கு எதிராக, சொல்லப்போனால் அமெரிக்க ஏகாத்திபத்தியத்திற்கே எதிராக சதிசெய்துகொண்டிருப்பதுபோல ஒரு தோற்றம். ஆவேசமாக மேம்பாலத்தை கடந்துசெல்லும் கூட்டத்திடம் “நாங்கள் புதைக்கப்படவில்லை, விதைக்கப்பட்டிருக்கிறோம்” என்று கூவிக்கொண்டேன். ஆனால் இங்கே இப்போது கூச்சல் என்றால் நினைத்துக்கொள்வதுதான்.

முந்தைய கட்டுரைபுத்தகக் கண்காட்சி – ஒரு குமுறல்
அடுத்த கட்டுரைவெண்முரசு கலந்துரையாடல், சென்னை