உல்லாலா – கடிதங்கள்

 

உல்லாலா!

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

உல்லாலா பாடல் கேட்டவுடன் என் மனதில் தோன்றிய முதல் முகம் உங்களுடையது தான், ஒரே முகமும் கூட. “வட்டம் போட்டுக்கிட்டு சின்ன உலகத்தில் நீ வாழாத” வரிகளில் நீங்கள் ஒளி வட்டங்கள் அரசியல் வட்டங்கள் இன்னும் பல வட்டங்கள் அனைத்திலும் இருந்து விடுபட்டு வந்துள்ளதை திரை காட்சியாக மனதில் ஓட்டி கொண்டேன் . “உள்ளாற எப்போதும் உல்லாலா” காட்சி படுத்த முடியாமல் உங்கள் சிரித்த முகத்துடன் இருக்கும் புகைப்படங்கள் முன் வந்து நின்றன.

 

சற்றுமுன் உங்கள் உல்லாலா கட்டுரை படித்தேன், நீங்கள் மரியாதையாக  பகடி செய்யும் கிழட்டு கூட்டத்துடன் சேர்ந்து கொண்டேன், என் வயது 28 தான், so what என்னையும் சேர்த்து கொள்ளலாம், என்னை மட்டுமல்ல இன்று 25 வயது கடந்த பெரும்பாலான இளைஜர்களையும் தாராளமாக சேர்த்து கொள்ளலாம். அவ்வாறே நான் அந்த கட்டுரையை படித்தேன், அனைத்தையும் ஒரு negative மனநிலையில் காண்பது இன்று இயல்பாகி விட்டது. உலகில் அனைத்து துயரங்களும் எனக்கானது தான் என்று பலரும் சிந்திக்க தொடங்கி விட்டார்கள், மகிழ்ச்சி என்பது அறவே இல்லை. அல்லது மகிச்சியான தருணங்களை நீடிக்க விடாமல் பார்த்து கொள்கிறார்கள்(என்னையும் சேர்த்து).

 

2 வருடம் முன் வரை நான் நண்பர்களுடன் சேர்ந்து குடிப்பவன், உற்சாகத்திற்காக குடிக்க போய் பெரும் துயர்களையே வெளிப்படுத்துவதாகவே அந்த நிகழ்வுகள் முடிகின்றன என்பதை உணர்ந்து வெளி வந்தேன். நான்கு நண்பர்கள் சேர்ந்து ஒன்றாக அமர்ந்து பேசினால் இன்று அனைவரும் அவரவர் துயர்களை மட்டுமே பேசுகிறோம். யாரேனும் ஒருவன் அவன் துயரத்தை பேசாவிட்டால் அவனை குற்ற உணர்ச்சிக்கு உள்ளாக்கும் வார்த்தைகள் நாங்கள் உண்டாக்கி வைத்து கொள்வோம், “உனகென்னப்பா… ” என்று தொடங்கி அவன் தனிப்பட்ட வசதிகளை சொல்ல தொடங்கினாள் போதும் அவனும் “அதெல்லாம் ஒன்னு இல்ல, என்னைக்கும்…” என்று அவன் துயரத்தை சொல்லி நம்முடன் சேர்ந்து கொள்வான். “உனகென்னப்பா… ” என்னும் ஆயுதம் எடுபடாத எந்த நண்பர் கூட்டத்தையும், எந்த நண்பரையும் நான் கடந்த சில வருடங்களில் சந்தித்தது இல்லை.

 

அதற்க்கு முற்று புள்ளியாக அமைந்தது விஷ்ணுபுரம் விழா, 2 நாள் முழுக்க கொண்டாட்ட மனநிலை. தொழில், பொருளாதார சிக்கல், பெண் விஷயத்தில் என்னை ஒரு loser ஆக உணர்வது, அரசியல் கசப்புகள், அன்றாட செய்தி என ஒன்றுமே என்னை சொல்லை செய்யாமல் கொண்டாட்ட மனநிலையில் உலவினேன். முடிந்து வந்ததும் கிறிஸ்துமஸ், kochi binaale என்று கொஞ்ச நாள் அந்த உள நிலையை தக்க வைத்து கொண்டேன். மீண்டும் பொருளாதார அழுத்தம் காரணம் அன்றாட வாழ்க்கையில் சிக்கி மனம் வாசிப்பதில் குவியல் திணறிய நாட்கள் பெரும் மன போராட்டமாக அமைந்தது. உங்களுக்கு சில தினங்கள் முன் அந்த நிலையில் தான் கடிதம் எழுதிருந்தேன், உங்கள் பதில் என் மனதை அப்படியே படம் பிடித்து எனக்கு காட்டியது, தேர்ந்த மருத்துவர் ஒருவர் பிரச்சனையை புட்டு புட்டு வைப்பது போல.

 

சற்றுமுன் உங்கள் உல்லாலா பதிவு படித்தேன், எனக்கு இப்போது மிக முக்கியமான கட்டுரை. என்னை நானே சுய பகடி(என்னை பொருத்தி) செய்து கொண்டேன். விரைவில் உல்லாலா மன நிலைக்கு திரும்பி விடுவேன் என்று நம்புகிறேன். வெண்முரசிற்குள் நுழைய முன்னோட்டமாக எரிமலர் வாசித்தேன். அடுத்த முறை உங்களுக்கு எழுதும் கடிதம் உல்லாலா மனநிலையில் தான். நன்றி.

அன்புடன்,

 

அன்புள்ள ஜெ

 

உல்லால கட்டுரை எனக்கு ஒரு அருமையான மனநிலையை உருவாக்கியது,. உண்மையைச் சொல்லப்போனால் நானும் அந்தக்கட்டுரையில் சொல்லப்பட்டிருந்ததுபோல ஒருவகையான வயோதிகமனநிலைக்குச் சென்றுகொண்டிருந்தேன். எதிலும் பிடிப்பில்லை. எப்போதும் மனதில் உடல்நலம் பற்றிய கவலை. எல்லாமே நாசமாகப் போயிற்று என்ற எண்ணம். எதைப்பற்றியும் நெகெட்டிவ் எண்ணங்கள். சலிப்பு

 

இதெல்லாம் எப்படி வருகிறது என்று எண்ணிப்பார்த்தேன். சமூகவலைத்தளங்கள்தான் முக்கியமான காரணம். அதோடு சமகால அரசியல். அஅனால் அவை இரண்டையும் தவிர்த்துவிட்டு வாழ்க்கை இப்போது சாத்தியமும் கிடையாது. அரசியல்தான் சமூக வலைத்தளங்களைக் கெடுக்கிறது. அரசியல் எப்போதுமே நெகெட்டிவானது. ஒவ்வொருவரைப்பற்றியும் அத்தனை விஷயங்களைப்பற்றியும் அது ஒருவகையான கசப்பைத்தான் உண்டுபண்ணுகிறது. அதிருப்தியாக இருப்பதற்கு அது மக்களுக்குப் பயிற்சி அளிக்கிறது.

 

 

அதிருப்தியாக இருக்கையில்தான் அறிவுஜீவி என்ற நினைப்பு அதன்வழியாக உருவாகிறது. தினசரி காலையில் எதைப்பற்றியாவது தூ என்று காறித்துப்பிக்கொள்பவர்கள் இவர்கள். இவர்களிடமிருந்துதான் அந்த மனநிலை பரவி எல்லாரையும் வந்தடைகிறது. அதிலிருந்து தப்புவது சின்ன விஷயம் அல்ல. ஏனென்றால் நீங்கள் சொன்னதுபோல அத்தனைபேருமே அந்த மனநிலையிலேதான் இருக்கிறார்கள். அவர்களிடமிருந்து அது நம்மிடம் தொற்றிக்கொள்கிறது.

 

நம்பிக்கையுடன் பாஸிட்டிவாக வாழ இன்றைக்கு நிறைய காரணங்கள். என் அப்பாவுக்கு இருந்த வறுமையோ பிரச்சினையோ எனக்கில்லை. என் அப்பா ஆண்டுக்கொரு சாவை குடும்பத்தில் சந்தித்தவர். ஆனால் அவர் மகிழ்ச்சியாக இருந்தார். நான் சந்தோஷமாகவே இல்லை. இன்னும் எதையோ எதிர்பார்த்து கசப்படைந்துகொண்டே இருக்கிறேன். மகிழ்ச்சியாக இருப்பதற்கான பயிற்சியை அடையவேண்டும் என நினைக்கிறேன். அதை பயிற்சி எடுத்துக்கொண்டால்தான் நம்மால் மகிழ்ச்சியாக இருக்கமுடியும் என்ற நிலை இன்றைக்கு உருவாகிவந்துவிட்டது

 

எம்.சுந்தரராஜன்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-34
அடுத்த கட்டுரைஅறிவியல்புனைகதைகள் – கடிதங்கள்