மழை என்று தெரிந்தபோது
மனம் தெளிந்தது
சாறாம்மாவுக்கும் கேசவன்நாயர்க்கும் இருந்த துயரம்
சற்று பிந்தியானாலும் தீர்ந்ததே
வம்ச முத்திரை இல்லாத
ஜாதி அடையாளம் இல்லாத
உயிர்கள் அனைத்திற்கும் மேல்
சமமான ஊக்கத்துடன்
பெய்திறங்கும் மழை
முதல்முறையாக ஒரு பெண்ணின்
பெயராக மாறியிருக்கிறது
மழை போல ஒரு நல்ல பெயர்
எவ்வளவு காலங்களுக்கு ஒருமுறை
ஒரு பெண்ணுக்கு கிடைக்கிறது!
குழந்தையாக இருக்கையிலேயே
அவளுக்குரிய பெயர் அமைந்துவிட்டது
மழைக்கும் இருக்குமே ஆசை
வீடாகி குடும்பமாகி வாழ்வதற்கு
ஊருக்குப் போகவும் வீட்டுக்குச் செல்லவும்
நினைவூட்டவேண்டிய பொறுப்பை
காலங்களாக சுமப்பவள் அல்லவா?
மூடிய கதவுக்கு அப்பால்
பிறப்புக்கு அப்பால் என்பதுபோல்
நெடுங்காலம் காத்து நின்றிருந்தவள் அல்லவா?
வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம்
உள்ளே நுழைந்து பார்த்தவள் அல்லவா?
இனி மழை
குடையுடன்
கையில் புத்தகங்களுடன்
முற்றத்தில் இருந்தே அம்மா என்று அழைத்தபடி
வீட்டுக்குள் நுழையும்
பூனையும் அம்மாவும்
கதவைத் திறந்து
அவளை உள்ளே கொண்டுசெல்வார்கள்
மழை
மழையானபோது
எங்கெல்லாம் போனாள்?
ஓடையை தாவிக்கடந்து வருகிறாள்
சப்பணம் இட்டு அமர்ந்து
சாப்பிடுகிறாள்
கை கழுவுகிறாள்
மழை மழையில் துள்ளிக்குத்திகிறாள்
ஆட்டோவில் ஏறிக்கொள்கிற
ஓடத் தொடங்கிய பேருந்தில் ஏறமுடியாமல்
முகம் கனத்து திரும்பிவருகிற
ஊசிபோட்டதன் வலி அகலும்வரை
தலைகுனிந்திருக்கிற
வகுப்பில் அடங்கியிருக்காத
சிரித்துக் குழைகிற
காதலிக்கிற
கோட்டாவியிடுகிற
மதியம் ஆனபின்னரும் போர்த்திச் சுருண்டு துயில்கிற
மழை
மழைக்கு
மாறாத ஜலதோஷம் என்றால்
அதற்குக் கெட்டபெயர் என்பாரா வைத்தியர்?
ஒழுகுவதை அடைத்து என்ன செய்ய
மழை இதோ வீட்டுக்குள் அல்லவா
என்று கேலிசெய்வாரா பிளம்பர்?
எண்பது தொண்ணூறாண்டு நீளும் மழை
என்று யாராவது ஆச்சரியப்பட மாட்டார்களா
ஆ, மழை வந்துவிட்டதே
என்று சிரிக்கமாட்டார்களா தோழிகள்
[மண்புழுவும் தவளையும் காற்றும் இலையும்தானே
முன்னர் அவளுக்கு தோழியாக இருந்தார்கள்]
ஒரு வீட்டில் மட்டும் மழை
என்று முணுமுணுப்பார்களா அண்டைவீட்டார்?
சனியன்பிடித்த மழை என்று சலித்துக்கொள்ளுமா
வம்பும் புறம்பேச்சும்?
மழை என்று கேட்டதுமே
பாய்ந்து குடையை விரிப்பார்களா சிலர்?
அவள் அந்தக்குடையை
சிரித்தபடி கடந்து செல்வாளா?
மழையே
நீ வெயிலுடனா
காற்றுடனா
மின்னலுடனா
அலைபாயும் மரங்களுடனா
வயதடைந்தபின் செல்வாய்?
வயதாகும்தோறும்
மழையை மழைக்கு பிடிக்காமலாகுமா?
பெண்ணுக்கு மட்டும் பொருந்தும் பெயர்
வெளியே செல்ல விடாத பெயர்
தாழ்ந்த இடங்களில் தேங்கும் பெயர்
கொஞ்சம் போனால் சலிக்கும் பெயர்!
எத்தனை நல்ல பெயர்கள் பின்னர்
அந்தப் பெயருக்குரியவர் மட்டுமாக
அவர்கள் உண்டுபண்ணும் எரிச்சல் மட்டுமாக
ஆகிவிடுகின்றன.
மழையே
நீயும் அப்படி ஆகிவிடாதே!