கல்பற்றா நாராயணன் – இன்னும் மூன்று கவிதைகள்

kal

கல்பற்றாவைப்பற்றி ஒரு கட்டுரை

கல்பற்றா நாராயணன் கவிதைகள் 2

கல்பற்றா நாராயணன் கவிதைகள்

கல்பற்றா கவிதைக்கூடல் -படங்கள்

நெடுஞ்சாலையில் புத்தரை சந்தித்தால் என்ன செய்வது?

மலையாள கவிதைகளை புரிந்து கொள்வது குறித்து

சுமித்ரா

preyar

தவறாக

 

பிரார்த்தனைக்கு எண்ணியபோது

பிரார்த்தனைப்பாடல்கள் எவையும் நினைவிலெழவில்லை

எத்தனை துழாவியும் நினைவிலிருந்து

அது எழவேயில்லை

ஆகவே அவன்

அகரவரிசையை கைகூப்பியபடி

உருக்கமாகப் பாடினான்

 

அந்தப் பிரார்த்தனையை கட்டமைத்த எழுத்துக்கள்

வரிசை தவறியிருந்தாலும்

இவையெல்லாம்தானே

என்ற பொருளில்

 

கொஞ்சம் தவறாக அடுக்கப்பட்ட

அகரவரிசைகள்தானே எல்லா பிரார்த்தனைகளும்

என்ற அர்த்ததில்

 

அகரவரிசை

தவறாக எழுதப்பட்ட

ஒரு பிரார்த்தனைதானே

என்ற அர்த்தத்தில்

 

jesusa

சிலசமயங்களில்

 

சிலசமயங்களில்

நீர் மேல் நடக்க முடியாதவர் யார்?

 

சிலசமயங்களில்

ஐந்து அப்பத்தால்

ஐந்தாயிரம்பேருக்கு விருந்திட முடியாதவர் யார்?

 

சிலசமயங்களில்

செத்தவனை வாழ்க்கைக்குக் கொண்டுவரமுடியாதவர்கள்

உண்டா என்ன?

 

சிலசமயங்களில்

வெறும் நீர் மதுவாகும்

தருணம் அமையாதவர் எவர்?

 

எந்த புனிதர்

சிலசமயங்களிலேனும்

வலிதாளாமல் கடவுளை அழைத்து கதறாமலிருந்திருக்கிறார்?

beedi

 

இன்னும் ஓர் இழுப்பு

 

போலீஸ் வருகிறதா

என வலம் இடம் நோக்கி

இழுப்பதா வீசுவதா என தயங்கிய என்னிடம்

குரல்தாழ்த்தி பீடி சொன்னது

 

இப்படி வெட்கம்கெட்டு வாழ இனி என்னால் முடியாது

தெரியுமா உனக்கு,

ஒரு காலத்தில் துணிச்சலின் அடையாளமாக இருந்தேன் நான்.

தயக்கமே இல்லாமல் வாழ்ந்தவர்களின் உதடுகளில்

கனன்றேன்;

நடுராத்திரிகளும் காட்டுவழிகளும்

எனக்கு தெரியும்

என் வெளிச்சத்தில்

ஒற்றைத்தடிப் பாலங்கள் துலங்கின

அன்றெல்லாம் இலக்குகளுக்கு

ஐந்தோ எட்டோ பீடியின் தொலைவுதான்

சுவரெழுத்துக்கும் சுவரொட்டி ஒட்டவும்

பாட்டெழுதவும் நான் உடனிருந்தேன்

மாற்றத்துக்கு துணையானேன்

கய்யூரிலும் புல்பள்ளியிலும்

கை சுடுவது வரை எரிந்தேன்

நாடக அரங்குகளுக்காகவும்

திரைச்சங்கங்களுக்காகவும்

நான் துயில்நீத்தேன்

 

நான் செயல்படாத அமைப்புகளுண்டா என்ன?

குளிரில் வெயிலில்

ஆற்றும் பணிகளின் தன்னந்தனிமையில்

துணை வேறு யார்?

அன்றெல்லாம் என்னை ஆழ இழுத்து பையன்கள்

ஆண்மகன்களானார்கள்

திருடி இழுத்த கன்னியர்

விடியும் வரை முலைகள் உயர இருமி

சாகசம் எளிதல்ல என்று புரிந்துகொண்டார்கள்.

எல்லா தவறான பாதைகளிலும்

நாங்கள் நடந்தோம்

அக்காலத்தைய ரயில்களைப்போல

அகத்தே அனலுள்ளவர்களின் புகையாக

முன்னால் சென்று நான் வழிகாட்டினேன்.

 

புகைந்த கொள்ளியே நான்

சொத்தில் பங்கு கேட்டு

வேட்டி மடக்கி கட்டி முற்றத்தில் நின்றிருந்த

இளைஞனின் கையில் இருந்து புகைந்தேன்

கூலி கூட்டித்தரக்கோரி சென்றவனின்

மடியில் இருந்து ஊக்கமளித்தேன்

தீண்டாமையையும் ஆசாரங்களையும்

புகையிட்டு ஓட்டினேன்

 

இறுதியாக ஒரு இழுப்பு இழுத்தபின்

நடிகர்கள் மேடைக்குச் சென்றார்கள்

பார்வையாளர்கள் அரங்கை நிறைத்தனர்

தொழிலாளர் வேலைக்குச் சென்றனர்

தலைபுகைந்து எடுக்கப்பட்ட முடிவுகளிலெல்லாம்

என் பங்கும் இருந்தது

தீ கொடு என்று வருங்காலம் கடந்தகாலத்திடம் கேட்டது

கழுகுகள் நெஞ்சைக் கொத்தி இழுக்கும்போது

ஒரு புகைக்காக கெஞ்சியவர்கள் உண்டு

நீங்கள் இன்று அனுபவிக்கும் அத்தனை வெற்றிகளுக்குள்ளும்

எரிந்தணைந்த நான் இருந்தேன்.

 

உண்மைதான்

நான் ஒரு கெட்டபழக்கம்

ஆனால் ஆறுதல் இல்லாத மானுடனுக்கு

கெட்டபழக்கங்களைப்போல தோள்சேரும்

வேறு தோழர்கள் உண்டா?

நரகத்தில்தானே தோழர்கள் தேவை,

சொர்க்கத்தில் எதற்கு?

பிணத்திற்கு காவல் நிற்கும் பாவம் போலீஸ்காரன்

தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட தனியன்

பங்கிட எவருமில்லா பாவம் சுமந்தவன்

எவரை துணைகொள்வான்?

உறுதிக்கு

சஞ்சலத்திற்கு

நானே துணை

ஆடும் பாலத்தில் உடன்சென்றேன்

 

நான் நல்லது அல்ல

உடல்நலத்துக்கு

குடும்ப வாழ்க்கைக்கு

எதிர்கால நலனுக்கு.

பீடிக்கு தீ பொருத்துபவன்

தன் சிதைக்கே தீ வைத்துக்கொள்கிறான்.

ஆனால்

நீண்ட வாழ்நாளோ பாதுகாப்போ

நினைவுக்கே வராத சிலர் முன்பிருந்தார்கள்

அவர்கள் என்னை அவர்கள் சென்ற இடமெல்லாம் கொண்டு சென்றார்கள்

எரிந்தணையும் என்னை பார்த்தபடி

அவர்களும் தீவிரத்துடன் எரிந்தனர்

 

பார்,

நான் மட்டுமே துணையாக இருந்த தன்னந்தனியர்களை

வேட்டையாடிய அதே சட்டம்

இன்று என்னையும் வேட்டையாடுகிறது

பார்த்தாயா,

பீடி நிறுவனங்கள் இன்று

வண்ணக்குடைகள் தயாரிக்கத் தொடங்கிவிட்டன

கேட்கிறாயா அந்த குரலை?

’இப்படி புகைத்து வீணாக்குவதற்குப் பதில்

நீங்கள் ஏன் ஒரு அதிர்ஷ்டச்சீட்டு வாங்கக்கூடாது?”

முந்தைய கட்டுரைகொந்தளிப்பும் அமைதியும்
அடுத்த கட்டுரைஉரையாடும் காந்தி – உரையாடல், சென்னை