கல்பற்றா நாராயணன் – மேலும் நான்கு கவிதைகள்

kal

 

கல்பற்றாவைப்பற்றி ஒரு கட்டுரை

கல்பற்றா நாராயணன் கவிதைகள் 2

கல்பற்றா நாராயணன் கவிதைகள்

கல்பற்றா கவிதைக்கூடல் -படங்கள்

han

 

ஒரு மகஜர்

 

அறைக்குள் அசாதாரணமாக

ஒன்றும் இல்லை

மகஜர் தொடர்ந்தது

 

புத்தகங்கள் பரப்பிய மேஜை

சோம்பலாக மடித்துவைத்த படுக்கைமேல்

விழப்போகும் ஒரு பிளாஸ்டிக் நாற்காலி

அலமாராவில் நிறைய

அடுக்காமல் செருகப்பட்ட புத்தகங்கள்

சுவரில் குருதி பெருக்கும்

ஒரு கிறிஸ்து

மேஜைமேல்

புன்னகைக்கும் ஒரு புத்தர்

 

துயரமான ஏசுவா

துயரமற்ற புத்தரா

அவனை வழிநடத்தியவர் யார்?

இன்னும் கொஞ்சம்

ஒரு நகமளவுக்கு

அவிழ்ந்திருந்தது என்றால்

மின்விசிறியில் கட்டப்பட்ட படுக்கைவிரிப்பு

கழன்றுபோயிருக்கும்

அவனுடைய கோணத்திலிருந்து சொன்னால்

மயிரிழையில் தப்பிவிட்டான்

இறந்த அறைக்குள் இருப்பவை எல்லாம்

அசாதாரணமானவை அல்லவா?

வெறும் நாற்காலி கூட?

ரயில் பெட்டிக்குள் போல

எல்லாம் துடிப்பாக விரைந்துகொண்டிருக்கின்றன

செத்தவனின் அறைக்குள்

அதில் அமர்ந்தபடியா

அல்லது அதை தள்ளிவிட்டபடியா

அவன் அந்த முடிவை எடுத்தான்?

அவனை அது வெறுத்திருக்குமா?

அவன் முடிவை உறுதிசெய்திருக்குமா?

இவற்றில் அவன்

இறுதியாக வாசித்த நூல் எது?

அதற்குத்தெரியுமா அவன் இறப்பு?

வாசிக்கப்பட்ட நூல் அளவுக்கு

அவன் அகமறிந்தது வேறென்ன?

அவன் வாசித்தபோது

அதில் இருந்தவை அனைத்தும்

இப்போது அந்தத் தாள்களில் இல்லை

 

மேஜைமேலிருக்கும் காலியான காபிகோப்பையின்

அடியிலிருக்கும்

தாளில்

அவன் எதையும் எழுதவுமில்லை

 

இறந்தவனின் அறையில்

சாதாரணமாக ஏதாவது இருக்கக்கூடுமா என்ன?

 

cam

 

என்ன ஒரு பொருத்தம்!

 

குதிரையை காதலித்த யானை

தோழியுடன் பொருந்திப்போவதற்காக

பலவகையான சமரசங்கள் வழியாக

மெல்லமெல்ல

ஒட்டகமாக ஆகியது

 

ஓய்வூதிய அட்டையில் ஒட்டுவதற்காக எடுத்த

புகைப்படத்தைப் பார்த்து

குதிரை மனநிறைவுடன் சொன்னது

‘என்ன ஒரு பொருத்தம்

அண்ணனும் தங்கச்சியும்னு தோணும் இல்ல?”

kalpetta-narayanan

சாயல்

 

சுவரிலிருக்கும் பழையகால புகைப்படத்தைப் பார்த்து

முதல்முறையாக வந்த நண்பர் கேட்டார்

தம்பியா?

ஆமாம்.

 

கிட்டத்தட்ட அதே முகச்சாயல்

ஏறத்தாழ அதே அடங்காத முடி

ஆனால் கண்கள் இத்தனை குழிக்குள் இல்லை

நல்ல நினைவுகள்

இத்தனை தொலைவில் அல்ல

பார்வைக்கு உங்களைவிட அழகன்

நண்பர் சொன்னார்.

 

தன்னம்பிக்கை அவன் செயல்களுக்கு

விசைகூட்டியது

அவனுடைய இணைவுகளுக்கு

உறுதி சேர்த்தது

எந்தத்தனிமையிலும்

அவன் தனிமைப்படவில்லை

 

நண்பர் மீண்டும் புகைப்படத்தைப் பார்த்துவிட்டு

குரல் சற்று தாழ்த்தி கேட்டார்

இப்போது இல்லையா அவன்?

இல்லை

பெரும்பாலும் இல்லை

old

அதன்பின்

 

ஆரம்பநாட்களின் பரபரப்புக்குப்பின்

நாம் தனிமைப்பட்டோம்

வியர்வையெழ நெற்றி இல்லை

துடிக்க நெஞ்சில்லை

தூக்க கையில்லை

நடக்க கால்களுமில்லை

 

ஆரம்பநாட்களில்

நினைவுகளை ஒழுங்காக அடுக்கிவைத்தோம்

புதியவீட்டின் அலமாராக்களைப்போல

அடுத்தநாள் அவற்றில் சில காணாமலாயின

நினைத்து நினைத்துப்பார்த்தாலும்

கண்டுபிடிக்க முடியவில்லை

சிலவற்றை மண்ணில்  நிலைநிறுத்தும்

அடித்தளங்களையே காணோம்

சிலவற்றை கண்டெடுக்கும்போது மட்டும்

ஒருகாலத்தில் வாழ்க்கைகொண்டவர்களாக இருந்த நாம்

அவை சொல்வதையெல்லாம்

பேராசையுடன் செவிகூர்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறோம்

கூச்சமே படாமல்

முந்தைய கட்டுரைஆன்மீகம், போலி ஆன்மீகம்,மதம்
அடுத்த கட்டுரைதேசத்தின் இரு தலைவணங்குதல்கள்