கல்பற்றாவைப்பற்றி ஒரு கட்டுரை
கல்பற்றா நாராயணன் கவிதைகள் 2
கல்பற்றா நாராயணன் கவிதைகள்
கல்பற்றா கவிதைக்கூடல் -படங்கள்
நெடுஞ்சாலையில் புத்தரை சந்தித்தால் என்ன செய்வது?
மலையாள கவிதைகளை புரிந்து கொள்வது குறித்து
சுமித்ரா
துவைதம்
[ 1 ]
தூங்கிக்கொள்
முலைகளை நான் பார்த்துக்கொள்கிறேன்.
இருந்திருந்து சலித்திருக்கும் அவை
மாற்றி அமரச்செய்கிறேன்
கைபிடித்து வெளியே கொண்டுசெல்கிறேன்
வாசலுக்கு அழைத்துச்சென்று
கம்பியில் தலைமுட்டி தூங்கும் பயணிகள் கொண்ட
கடைசிப்பேருந்தை காட்டுகிறேன்
பொறாமைக்குடுக்கைகளான
இந்த சகபாடிகளை எனக்குப்பிடிக்கும்
ஒன்று முழுதினிமை
இன்னொன்று எண்ணத்தனிமை
படிஏறுவதிலும்
பெருமூச்சுவிடுவதிலும்
மேற்படிப்பு முடித்திருக்கிறார்கள்
சிலசமயம்
வாசலில்காத்திருக்கும் இரு பதற்றங்கள்
சிலசமயம்
முற்றத்தில் இறங்கிநிற்கும்
இரு நிலைகொள்ளாமைகள்
உள்ளே புயலடிக்கும்
இரு தேனீர்க்கிண்ணங்கள்
வெளியே சொல்லமுடியாத
இரு திணறல்கள்
சின்னப்பிள்ளைகள்
வரையும் மனிதவடிவங்கள்
ஆணாவதா பெண்ணாவதா என
முலைகள் வரையப்படுவதுவரை குழம்பிநிற்கின்றன
கடவுளுக்கு பிள்ளைகளைவிட அவசரம்
பத்துப்பதினான்குவருடம்
தயங்கிநிற்கசெய்கிறார்
இதயபூர்வமான இரு துடிப்புகள்
கடவுள் முடிவை அறிவித்துவிட்டார்
முலைகள்தான் முதலில்
கண்ணாடியில் பெண்
[ 2 ]
அய்யோ பாவம்
நினைத்திருக்காமல் குனிந்தால்
என்ன ஒரு பதற்றம்.
ஒரு கல்கூட
குறிதவறிச் செல்வதில்லை.
பாவம்
பார்க்கும் கண்கள் அல்ல
வழிதவறுபவை
மானம் கெட்டவளின் மார்பில்
தொற்றியிருக்கும்
திகைத்து
பாவம்,
வெளியே பொருக்கோடினாலும்
உள்ளே காய்வதில்லை
குழந்தை இறந்த அம்மாவின் நெஞ்சில்
கட்டிகள்
நினைவு வீங்கி சீழ் ஒழுகும்
கண்ணீர் வற்றினாலும்
பால் காய்வதில்லை.
வற்றாக்கடலின் இரு திரட்சிகள்
கறந்து அகற்றமுடியுமா
எனக்கெஞ்சும் இரண்டு வதைகள்.
எஞ்சிய வாழ்நாள் எல்லாம்
ஆட்டம் முடிந்த முற்றத்தில்
மிதித்துப் பரப்பப் பட்ட
இரண்டு களிமண் அப்பங்கள் .
.
திரும்பிவருதல்
தேனிலவு முடிந்த நாள்
தெளிவாக நினைவிருக்கிறது.
முந்தையநாள் இரவு அவள் தலைவைத்து உறங்கிய கையை
காலையில் என்னால் தூக்க முடியவில்லை
அவள் அவளுடைய சரியான எடையை
மீண்டும் கொள்ள தொடங்கிவிட்டிருந்தாள்
அன்றுதான்
வீட்டுக்குப்பின்னாலிருந்த தொழுவின் நாற்றம்
அவளுக்குக் கிடைக்க ஆரம்பித்தது.
வாழ்க்கைக்கு இவ்வளவு பக்கத்தில்
தொழுவத்தை கட்டுவார்களா எவராவது?
தூக்கம் வரும்போது
நீ எதற்காக அப்படி வாய்பிளக்கிறாய்?
குச்சிமேல் சமநிலை கொள்கிறாயா என்ன?
நீ வளரும்போது
உன் அம்மா பராக்குபார்த்து நின்றிருந்தாளா என்ன?
குறை சொல்லும்போது
உற்சாகம் கொள்ளும் சைத்தான்
வேலையை தொடங்கிவிட்டிருந்தான்
உண்மையைச் சொன்னால்
உங்களுடைய சில வழக்கங்கள்
எனக்கு கட்டோடு பிடிக்கவில்லை.
வாய்கொப்பளித்த நீரை
நீங்கள் விழுங்குவதைக் கண்டால்
பூமி பிளந்து கீழே போய்விடுகிறேன் என்று தோன்றும்.
வெளிப்படையாகச் சொல்வதற்கான துணிவை
அவள் பெற்றுவிட்டாள்
தலையை துவட்டியபின் தூங்கினால் என்ன?
ஈரத்தலைமுடியின் நாற்றம்
எனக்குக் குமட்டுகிறது.
நானும் விட்டுக்கொடுக்கவில்லை.
மணம் நாற்றமாகி
அழிவின்மையை மீண்டும் அடைந்தது
தேனிலவு முடிந்தது
சென்று அடைந்த
தொலைவான அழகான திசைகளிலிருந்து
பத்திரமாகத் திரும்பி வந்தோம்
இத்தனை விரைவாக முடிந்தனவா
அனைத்தும்?
வெறும் இருபது வாரங்கள்.
கடவுள் சலிப்புடன் விரல் மடிக்கும் ஓசை
இனியுமுள்ளன
இரண்டாயிரத்துக்கும் மேல் வாரங்கள்
என்ன செய்வார்கள்
இந்த அப்பாவிகள்?
பிறகு
ஒவ்வொருவராக
அனைவரும் விடைபெற்றனர்
அவன் இருந்தபோது
பாதியாக நின்றுவிட்டிருந்த
கூடையை
அலமாராவிலிருந்து எடுத்து
பின்னத்தொடங்கினாள்
நிதானமாக