டெசுக்காவின் புத்தர்

aas

மங்காப் புகழ் புத்தர்

அன்புள்ள ஜெ,

நானும் தற்போது டெசூகாவின் புத்தா காமிக்ஸை தான் வாசித்துக் கொண்டிருக்கிறேன். ஐந்தாவது புத்தகமான “Deer Park”ஐ வாசித்து முடித்து அடுத்த பகுதியை வாசித்துவருகிறேன்.

புத்தனின் வாழ்க்கையைப் பற்றி, இந்து மரபைப் பற்றி,  நானறிந்து வைத்திருந்த பல பொதுவான செய்திகளோடு இக்கதை மாறுபடுவது போல இருக்கிறதே. மேலும் கதை கேளிக்கையான அனுபவத்தை தான் முதன்மையாக கொண்டது போல இருக்கிறது. பல பக்கங்களை வெறுமனே கடந்து சென்றேனேயன்றி, ஓவியங்களை மிகவும் ரசித்தேனேயன்றி அவற்றிலிருந்து கதை நகர்ந்தது போல அறியவில்லை.ஆசிரியர்  மேம்போக்கான, வாசிப்பவருக்கு எந்த சிக்கலும் இன்றி இருக்கவே இந்த நாவலை வரைந்தாரா என்றும் அடிக்கடி யோசித்துக் கொண்டிருந்தேன்.

சமணத் துறவிகள் ஒரு பக்கம் கடுமையான நிஷ்டைகள், சுயவதை மூலம் ஊன்வருத்தி பற்றுகளை துறக்க முயற்சித்துக் கொண்டிருக்கும் “மகிழ்ச்சியாக இருக்கிறது”, “திருப்தியுற்றேன்” என்றெல்லாம் பேசிக்கொள்கிறார்கள்.(ஹெர்மன் ஹெஸ்ஸேவின் “சித்தார்த்தா” வாசிக்கும் போதும் இதையே உணர்ந்தேன்.) கோசல நாட்டில் ஒரு பெரிய திருவிழா நடக்கிறது. அங்கே ஒரு பாம்பாட்டி பாம்பை வைத்து வித்தைகாட்டுகிறான். அப்போது அவன் பாடிக்காட்டுவது நம் தேசியகீதத்தை.

அவ்வப்போது வரும் ஒருதலைக்காதல்கள் கதைகள். அதுபோல பல இடங்களில் இடறுகிறது. இந்த நாவல் ஜப்பானில் மிகப்பெரியளவில் மிகவிரும்பிப் படிக்கப்பட்டது என்று அதற்கு இந்த சிக்கலற்ற எளிமையான கதைத்தன்மையும் ஒரு காரணமாக இருக்கக்கூடும் என்று நினைத்துக்கொண்டேன். இது ஒரு  நல்ல டைம்பாஸ் என்ற அளவில் எதிர்பார்ப்பை குறுக்கிக் கொண்டு வாசிப்பதால் நாவல் தற்போது நன்றாகவே நகர்ந்துகொண்டிருக்கிறது.

குமார்.

அன்புள்ள குமார்

அந்த புத்தகத்தை எனக்கு அளித்தவர் போகன். எஞ்சியபகுதிகளையும் கொண்டுவந்து தருவதாகச் சொல்லியிருக்கிறார்

ஜெ

http://www.sramakrishnan.com/?p=2964

அன்புள்ள ஜெ, எஸ்.ராமகிருஷ்ணனின் வலைதளம் மூலமாக இந்த நாவலை தெரிந்துகொண்டேன். மொத்த தொகுதிகளும் இணையத்தில் இலவசமாக தரவிறக்கிக் கொள்ள கிடைத்தது. அதில் தான் வாசித்துக்கொண்டிருக்கிறேன். இந்த நாவல் அனுபவத்தைப் பற்றிய அவதானிப்புகளை தெளிவாக வகுத்துக்கொள்ள முடியாது குழப்பத்திலிருந்தேன். என் புரிதல் தவறானதாக இருக்கக்கூடும் என்றிருந்தேன். அப்போது தான் உங்கள் பதிவைக் கண்டேன். இனி உங்கள் வாசிப்பனுபவத்திற்காக காத்திருப்பேன். :) மிக்க நன்றி.
குமார்

ab

அன்புள்ள ஜெ

ஓசாமு டெஸுக்காவின் புத்தா நூலை நானும் வாசித்திருக்கிறேன். மேலோட்டமான புத்தகம் என்பதில் சந்தேகம் இல்லை. ஜப்பானியராக இருந்தாலும் அவர் ஜப்பானியர்களுக்காக வரையவில்லை. ஐரோப்பியர்களுக்காகவே வரைந்தார். அமெரிக்காவில்தான் அவர் மிகப்பிரபலம். இப்படி ஒருவர் ‘உலகப்புகழ்’ பெறும்போதே அவருடைய தரம் குறைந்துவிடுகிறது. உலகளாவிய ஒரு சராசரி நோக்கிச் செல்ல ஆரம்பித்துவிடுகிறார். நாம் ஒரு புத்தகத்தில் எதிர்பார்ப்பது தனித்தன்மையான அனுபவத்தை. இந்தமாதிரி உலகப்புகழ்பெற்ற நூலில் நமக்குக் கிடப்பது சராசரியான அனுபவம். அந்த வேறுபாடு இருந்துகொண்டேதான் இருக்கிறது

சரி, குழந்தைகளுக்கான நூலாயிற்றே என்று நினைக்கலாம். ஆனால் இதை வாசிப்பவர்கள் சில மனப்பிம்பங்களை உருவாக்கிக் கொள்வார்கள். அதன்பின் அதை மாற்றிக்கொள்ளும் அளவுக்கு அவர்கள் மேலும் நூல்களை வாசித்து தெளிவடைவார்கள் என்று சொல்லமுடியாது. அதிலும் நான் ஜப்பானில் இருந்திருக்கிறேன். அங்குள்ளவர்களால் மாங்கா நூல்களை மட்டுமே வாசிக்கமுடியும். மிஞ்சி மிஞ்சிப்போனால் முரகாமியின் கள்ளக்காதல் வைபவங்கள் நிறைந்த நாவல்களை வாசிப்பார்கள்.

ஜப்பான் இன்று அமேரிக்காவின் கழிப்பிடம். அமெரிக்கா ஐம்பதாண்டுகளுக்கு முன் அங்கே முதலீடுகளைக் கொட்டியது.அமெரிக்காவுக்காக உற்பத்தி செய்ய ஆரம்பித்தார்கள். காலப்போக்கில் கலை இலக்கியம் எல்லாமே அமெரிக்காவை நோக்கியே செய்யப்படலாயிற்று. இன்றைக்கு ஜப்பான் சூம்பிப்போய் கிடக்கிறது. நல்ல கலை இலக்கியம் நாடும் ஒருவருக்கு சென்ற கால்நூற்றாண்டில் ஜப்பானிலிருந்து ஒன்றுமே கிடைக்காது. தரம்குறைந்த அமெரிக்க நகல்கள்தான். ஜப்பானிய வாட்ச் எப்படி சுவிஸ் வாட்சின் மலிவான நகலோ அப்படி. ஆல்பர்ட்டோ மொரோவியோவையும் ஹென்றி மில்லரையும் கலந்துகட்டி முரகாமி எழுதுவதைப்போல.

செல்வக்குமார்

முந்தைய கட்டுரைபத்மவியூகம் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைகல்பற்றா நாராயணன் – மூன்று கவிதைகள்