இலக்கியமுன்னோடிகள்

Ilakkiya-Munnodial-wrapper

இலக்கிய முன்னோடிகள் வரிசை -கடிதங்கள்

இலக்கிய முன்னோடிகளின் தடங்கள்…

அன்புள்ள ஜெயமோகன், வணக்கம்.

தமிழ் எழுத்தாளர்கள்ப் பற்றிய தங்களின் அறிமுகமும் விமர்சனமும் அடங்கிய ” இலக்கிய முன்னோடிகள் வரிசை” என்ற கட்டுரைத்தொகுப்பு  எம்.எஸ் கல்யாணசுந்தரம், கு.பா.ராஜகோபாலன்,ந.பிச்சமூர்த்தி,மெளனி என்று தொடங்கி, .ப.சிங்காரம்,ஆ.மாதவன்,நீலபத்மநாபன் வரையில் ஏழுதொகுதிகளாக 2003 ல் தமிழினி பதிப்பில் வெளிவந்தது. இந்த ஏழு கட்டுரைத்தொகுப்பிலும் தமிழின் மிகச்சிறந்த படைப்பாளிகள் என 22 எழுத்தாளர்களை அறிமுகம்செய்து அவர்களின் படைப்புகளை மிகநேர்மையாக வெளிப்படையாக ஆய்வுசெய்தீர்கள். என்போன்ற வாசகர்களுக்கு அக்கட்டுரைகள் நல்ல எழுத்துக்களை அடையாளம் செய்தவைத்தது.

அக்கட்டுரைத் தொகுப்பின் ஏழாவது தொகுதியின் முன்னுரையில் தாங்கள் இப்படி சொல்லியிருப்பீர்கள்” இந்நூல் வரிசையை மேலும் தொடர்ந்துசென்று அடுத்த தலைமுறைப் படைப்பாளிகள் பற்றியும் எழுதும் எண்ணம் உண்டு” அதன் அடிப்படையில்  நீலபத்மநாபனோடு நின்றுவிட்ட எழுத்தாளர்களின் அறிமுகமும்,ஆய்வும் அதன்பிறகான எழுத்தாளர்களின்  தொடர்ச்சியாக தாங்கள் எழுதவில்லை என்றே நினைக்கிறேன்.

தங்களின் இணையதளத்திலும்கூட அங்கொன்றும்,இங்கொன்றுமாக சில படைப்புகளையும், படைப்பாளிகளைப்பற்றியும் எழுதிவருகிறீர்கள் நாங்களும் வாசித்துவருகிறோம். ஆனால் அது எங்களுக்கு போதவில்லை.ஏற்கனவே எழுதப்பட்ட இலக்கிய முன்னோடிகள் வரிசைபோன்று இத்தலைமுறை எழுத்தாளர்களையும் அவர்களது படைப்புகள் பற்றிய தங்கள் பார்வையையும், வரிசைப்படுத்தி  எழுதினால் அது எங்களுக்கு இத்தலைமுறை இலக்கிய போக்குகளை அறிந்துகொள்ள மிகுந்த வாய்ப்பாக அமையும். அப்பணியை தாங்கள் செய்துவிடுவீர்கள் என்று நம்புகிறோம். நன்றி.

ஜி.பி.இளங்கோவன்

அம்மாசத்திரம்,

கும்பகோணம்

அன்புள்ள இளங்கோவன்,

நவீனத் தமிழிலக்கிய முன்னோடிகள் வரிசை நூல்களை எழுதும்போது அப்படி ஓர் எண்ணம் இருந்தது. அதில் இல்லாத அடுத்த தலைமுறைப் படைப்பாளிகளைப்பற்றி பல கட்டுரைகளையும் நூல்களையும் எழுதிவிட்டேன். நாஞ்சில்நாடன் [கமண்டலநதி] வண்ணதாசன் [தாமிராபரணம்], பூமணி [பூக்கும்கருவேலம்], தேவதேவன் [ஒளியாலானது] , தேவதச்சன் [அத்துவானவெளியின் கவிதை] ராஜ்கௌதமன் [பண்பாட்டு ஆய்வாளரை மதிப்பிடுதல்] ஆகியோரைப்பற்றி தனியாக விமர்சன நூல்கள் வெளிவந்துள்ளன. கலாப்ரியா, அபி, பிரமிள், சேரன், சிவத்தம்பி, சு.வில்வரத்தினம், எஸ்.பொன்னுத்துரை ஆகியோரைப்பற்றி நீண்ட கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். இவை ஈழ இலக்கியம், உள்ளுணர்வின் தடத்தில் என்னும் நூல்களாக வெளிவந்துள்ளன. புதியகாலம் என்ற தொகுதியில் எஸ்.ராமகிருஷ்ணன், ஜோ.டி.குரூஸ், யுவன்சந்திரசேகர், சு.வேணுகோபால், சு.வெங்கடேசன் போன்ற இன்றைய படைப்பாளிகளைப் பற்றிய விரிவான ஆய்வுக்கட்டுரைகள் உள்ளன.

முந்தைய ஏழுநூல்களும் இலக்கியமுன்னோடிகள் என்றபேரில் ஒற்றைநூலாக வெளிவந்துள்ளன.. அடுத்த தலைமுறையில் எஞ்சிய சிலரே உள்ளனர். அவர்களைப்பற்றி எழுதி அனைத்தையும் இன்னொரு ஒற்றைநூலாகத் தொகுக்கலாம். பார்ப்போம். இளையதலைமுறை எழுத்தாளர்களைப் பற்றி விரிவான விமர்சனக்கருத்துக்களை எழுதும் எண்ணம் இல்லை. விமர்சனம் எழுதுவதில் உருவாகிவிட்டிருக்கும் சலிப்பே காரணம்.

ஜெ

தாமிராபரணம்

ராஜ்கௌதமன் -பண்பாட்டு ஆய்வாளரை மதிப்பிடுதல்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-26
அடுத்த கட்டுரைநற்றிணையில் ‘தெய்வங்கள் பேய்கள் தேவர்கள்’