அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
புலிகாட்டில் கழுத்து நீண்ட பிளெமிங்கோ ’நீள’ கண்டப்பறவையைத் தேடிச்சென்ற கிருஷ்ணன் சங்கரன் அவர்களின் அனுபவம் வாசித்தது அவருடனே சென்று அவற்றையெல்லாம பார்த்தது போலவே இருந்தது. இம்முறை நானும் எனது கல்லூரியில் பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பை நடத்தினேன் (#PBC2019). தமிழகம் மற்றும் புதுவையில் பல பகுதிகளில் பொங்கல் சமயத்தில் நடத்தப்படும் இக்கணக்கெடுப்பின் தகவல்களை e Bird வலைத்தளத்தில் பதிகையில் தமிழகத்தின் மொத்தப்பறவைகளின் கணக்கிற்கான ஒரு சித்திரம் கிடைக்கின்றது.
என்னுடனிருந்த சலீம் அலி பறவை ஆராய்ச்சி நிலையத்தின் ஆய்வு மாணவர்களின் உதவியுடன் மூன்று நாட்களின் கணக்கெடுப்பில் கல்லூரி வளாகத்தில் 26 வகையான பறவை இனங்கள் வருவதை கணக்கிட்டோம்
90களின் இறுதியிலிருந்து இங்கு பணிபுரிகிறேன் என்றாலும் அதிகாலையில் குளிரில் கல்லூரி முற்றிலும் புதிய முகம் கொண்டிருந்தது. மரங்களெங்கும் பறவைகளின் கீச்சிடல் கேட்டது, வகுப்பறைகளுக்கு முன்பு அணில்களுடன் சேர்ந்து சிட்டுக்குருவிகள் விளையாடின, எலுமிச்சம்பழம் அளவில் மஞ்சள் மார்புடன் உருண்டையாக இருக்கும் sun bird எனப்படும் சிறு குருவிகள் ஏராளமாய் வேம்பின் கிளைகளில் கூட்டமாக விளையாடிக்கொண்டிருந்தன, அரங்குகளில் நிகழ்வுகள் நடைபெறுகையில் கூரையின் இடுக்குகளில் மறைந்திருந்து அனத்திக்கொண்டே இருக்கும் மாடப்புறாக்கள் கூட்டம் கூட்டமாக கையருகில் நடமாடின. கதிர்குருவி, கொண்டலாத்தி, புள்ளிச்சிறு ஆந்தை, செவ்வாலி, செண்பகம், ஈப்பிடிப்பான், சோலைப்பாடி, நாகணவாய், ஊதா தேன்சிட்டு, எப்போதும் 7 பறவைகளாகவே சேர்ந்திருக்கும் 7 சகோதரிகள் எனப்படும் தவிட்டுகுருவிகள், கலகலப்பான் சிலம்பன், காடை, கெளதாரி, மீன்கொத்தி, நிறைய பெண்மயில்களுடன் இருந்த கம்பீர அழகு ஆண் மயில் என கல்லூரியில் அத்தனை பறவைகளை பார்க்க முடிந்ததில் வளாகமே வேறு ஒரு புத்தம் புதிய பிரதேசமாக இருந்தது.
கண்களைச்சுற்றியுள்ள வரிகள், கழுத்திலிருக்கும் கோடுகள், உடல் நிறம், வால் நீளம் இப்படி மிகச்சிறிய வித்தியாசங்களில் பறவைகளில் ஆணையும் பெண்ணையும் பிரித்தறியவும் கற்றுக்கொண்டேன். பைனாகுலர் வழியே புகைப்படம் எடுக்கவும் இப்போதுதான் முதல்முறையாக கற்றுக்கொண்டிருக்கிறேன். புதிய அறிதல்கள் இன்னும் என்னை உற்சாகப்படுத்துகின்றன
தாவரவியல் படித்தற்கு பதிலாக பறவையியல் படித்திருக்கலாமென்று நான் நினைக்கும் அளவிற்கு ஆச்சர்யங்களைக் கொடுத்துக்கொண்டே இருந்தது ஒவ்வொரு பறவைகளைப்பற்றிய செய்திகளை கற்றுக்கொள்ளும் போதும். இனி தொடர்ந்து இக்கணக்கெடுப்பில் ஈடுபடுவதாக இருக்கிறேன். ஆர்வமுள்ளவர்கள் தோட்டத்திற்கும் வீட்டிற்கும் அவ்வப்போது வரும் பறவைகளைக்கூட (backyard counting) கணக்கெடுத்து Bird count India என்னும் வலைத்தளத்தில் பதிவுசெய்துகொள்ளலாம்
அன்புடன்
லோகமாதேவி
அன்புள்ள ஜெ
பிளெமிங்கோவை தேடி ஒருவர் சென்ற கதையை வாசித்தேன். ஒரு பழைய ஓஷோ ஜோக்
ஒரு அமெரிக்கன் ஓட்டலில் நுழைந்தான். பின்னாடியே ஒரு பிளெமிங்கோ வந்தது. அவன் என்ன சொன்னாலும் “யா! யா!” என்று கூச்சல் போட்டது
இதைத் துரத்திவிடு .உனக்கு என்ன பைத்தியமா என்றான் ஓட்டல்காரன்
இதை துரத்தவே முடியாது என அவன் கண்ணீர்விட்டான்
நடந்தது இதுதான். ஓராண்டுக்குமுன் அவன் முன்னால் கடவுள் வந்தார். என்னவேணும் கேள் என்றார்
அமெரிக்க ஆங்கிலத்தில் அவன் சொன்னான். எனக்கு ஒரு செம பட்சி வேணும். நீளமா கழுத்தும் நீளமா காலும் இருக்கணும். வெள்ளை ஐட்டம். நன்றாக நடனம் ஆடவேண்டும். நான் சொலறதுக்கெல்லாம் யா யான்னு சொல்லணும். நான் என்ன சொன்னாலும் என்னை விட்டு பிரியக்கூடாது
அதுதான் இது என்றான் அந்த அமெரிக்கன்
அதாவது மந்திரங்களை ஒழுங்காகச் சொல்லணும். வரம் கேட்கும்போது நாக்கு பழுதாகிவிடக்கூடாது என்று அர்த்தம். நவீன கும்பகர்ணன்!
ஜெயராமன்