திலீப்குமார்

அனைவருக்கும் வணக்கம்,

மலையாள விமரிசகர் குட்டிகிருஷ்ண மாரார் அவரது புகழ்பெற்ற இலக்கியச் சித்தாந்தம் ஒன்றுக்காக வெகுவாக புகழப்பட்டார்– அதேயளவுக்கு விமரிசிக்கவும்பட்டார். பேரிலக்கியங்களில் நவரசங்கள் அல்லது ஒன்பது மெய்ப்பாடுகள் முயங்கிவரவேண்டும் என்று சொல்வது நம் இலக்கிய மரபு. அச்சுவைகளின் முயங்கலில் ஒட்டுமொத்த விளைவாக சாந்தம் என்ற ஒன்பதாவது சுவை உருவாகி அதுவே விஞ்சி நிற்கவேன்டும். எப்படி என்றால் ஏழு நிறங்கள் முயங்கி வெண்மை உருவாவது போல. ஆனால் குட்டிருகிருஷ்ண மாரார் சாந்தம் அல்ல உயரிய அங்கதச்சுவையே பேரிலக்கியங்களின் சாராம்சமாக இறுதியில் உருவாகி வருகிறது என்று சொன்னார். அதாவது பேரிலக்கியங்கள் உருவாக்கும் சாந்தம் என்பது உண்மையில் அஙதம் மூலம் உருவாகி வருவதே என்றார் அவர்.

சற்றே யோசிக்கச்செய்யும் கருத்துதான் இது. குட்டி கிருஷ்ண மாரார் மகாபாரதம் ராமாயணம் போன்ற பேரிலக்கியங்களை தன் நோக்கில் விரிவாக ஆராய்ச்சி செய்து இந்தக்கருத்தை நிறுவ முற்படுகிறார்.  பேரிலக்கியங்கள் வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக அள்ள முயல்கின்றன. பெரும்சித்திரங்களை உருவாக்குகின்றன. ஆகவே அவை மிக விரிவான வாழ்க்கைநாடகத்தை அளிக்கின்றன. மோதல்களையும் முரண்பாடுகளையும் நிகழ்த்திக்காட்டுகின்றன. அவை அனைத்துக்கும் ஒட்டுமொத்தமாகத் திரண்டு வருவது எதுவாக இருக்கும்? அங்கதம்தான் என்கிறார் குட்டிகிருஷ்ண மாரார்.

கங்கை கரையில் இறந்த குருவம்சத்தவர்களுக்கு நீர்க்கடன். திருதராஷ்டிரர் கடும் உண்ணாமை நோன்பை முடிக்கிறார். அவரது புதல்வர்கள் அனைவரையும் கொன்ற பீமன் தன் கையால் உருட்டி ஊட்டும் உணவை அவர் உண்கிறார். உயிர்களுக்கு என்றும் உணவு இனியது என்று சொல்லிச்செல்கிறார் மகா வியாஸன். அங்கே மேலெழுவது அங்கதமே என்று வாதிடுகிறார் குட்டிகிருஷ்ண மாரார்.

வாழ்க்கையின் தர்ம- அதர்ம போராட்டம், நன்மை – தீமை போராட்டம் அனைத்தையும் நாம் வேடிக்கையாகக் கன்டு ஒரு மெல்லிய புன்னகையை அளித்து கடந்துசெல்லும் ஒரு தருணம் நம் வாழ்க்கையில் உண்டு. அதுவே முதிர்ச்சியின் , கனிவின் , தருணம். நூறு வயது தாண்டிய கிழவர் தன் கொள்ளுப்பேரன்களின் சொத்துபோராட்டத்தை, பேத்திகளின் காதல் வலியை கண்டால் எப்படிச் சிரிப்பார்? அந்த சிரிப்பே பேரிலக்கியங்களின் இறுதியில் திரண்டு வர வேண்டும் என்கிறார் மாரார்

நான் யோசிப்பதுண்டு. உயரிய அங்கதம் எப்படி உருவாகிறது? வாழ்க்கையைப்பார்த்து எழுத்தாளன் பெருமூச்சுடன் புன்னகைசெய்யும்போதுதான் என்று. ‘அது அப்படித்தான்’ என்று அவன் எண்ணும்போது. மனிதர்களை கனிவுடனும் மெல்லிய ஏளனத்துடனும் அவன் பார்க்க ஆரம்பிக்கும்போது. ஆகவேதான் உயரிய கவித்துவம் அளவுக்கே உயரிய அங்கதமும் மேலான இலக்கிய குணமாக போற்றப்படுகிறது.

தமிழில் அத்தகைய உயரிய அங்கதம் புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன்,ப.சிங்காரம், சுந்தர ராம்சாமி, அசோகமித்திரன், நாஞ்சில்நாடன் போன்ற பல படைப்பாளிகளிடம் வெளிப்பட்டிருக்கிறது. அவ்வரிசையில் வைக்கப்பட வேண்டிய முக்கியமான படைப்பாளி திலீப் குமார். மிகக் குறைவாகவே எழுதியவர் என்றாலும் அவரது அபூர்வமான பல வரிகளை நாம் நினைவுகூர முடியும்.

ஒரு குஜராத்தி கிழவர். புஷ்டி மார்க்கி. இன்னொரு பணக்காரருக்கு பணம் கேட்டு எழுதும்போது தன் ஒரே உடைமையான கிருஷ்ண விக்ரகத்தைப்பற்றிச் சொல்கிறார். மிக அழகான கிருஷ்ணன். சின்னக்குழந்தை. தலையில் ஒரு குல்லா போட்டு நெற்றியில் குங்குமப்பொட்டும் போட்டு பார்த்தால் தத்ரூபமாக இருக்கும் என்கிறார். அதாவது குஜராத்திக் குல்லா வைத்த சேட்டு கிருஷ்ணன். கிருஷ்ணலால் கோகுல்பாய் என்று பெயரைக்கூட மாற்றிவிடலாம்! அந்தவரிகளில் நான் புன்னகைசெய்தேன். அந்தக்கதையைப் படித்து பதினைந்துவருடங்களாக அந்த வரிகளை நான் நினைவில் வைத்திருக்கிறேன். அதுவே கலையின் வெற்றி.

அப்புன்னகை எதைப்பற்றி? மிகப்பரிதாபகரமான ஒரு கதை அது. அந்த நிர்க்கதியான கிழவரின் வாழ்க்கையை நோக்கி நம்மைப் புன்னகைசெய்ய வைப்பது எது? அந்த வாழ்க்கைச்சித்தரிப்பில் திலீப்குமார் காட்டும் தவிர்க்கமுடியாத மானுட இயல்புதான். தன் சின்னஞ்சிறு உலகுக்குள்ளேயே தன் பிரபஞ்சத்தை சிருஷ்டிசெய்துகொள்ளும் எளிய மானுடனின் சித்திரம் அது. நாமும் அத்தகையவர்கள் தாம். ஆனால் கதையின் அந்த இடம், கலையின் அந்தத்தருணம், நம்மை மேலே தூக்கி அவர்களைக் குனிந்து பார்க்கச்செய்கிறது. அவர்களைப்பார்த்து நாம் புன்னகைசெய்கிறோம். நாமே நம்மைநோக்கிச்செய்யும் புன்னகை அது.

நான் சைதன்யா விளையாடுவதை எட்டிப்பார்ப்பேன். சமையலறைக் காட்சி. எரிவாயு தீர்ந்துவிட்டது. இரண்டு குழந்தைகள் வீரிட்டுக் கதறுகின்றன. ஆபீஸுக்கு நேரமாகியும் இன்னும்சமையல் ஆகவில்லை. ஒட்டுமொத்த பரபரப்பு. சைதன்யா கத்துகிறாள், சலித்துக்கொள்கிறாள். தலையில் அடித்துக் கொள்கிறால்.”அய்யோ ஒண்ணூமே புரியல்லியே…நான் எங்கியாம் போய் சாவுறேன்” என்று சொல்லிக்கொள்கிறாள் ”சும்மா கெட சனியனே…போட்டு உசிர வாங்காம” என்று குழந்தை பாத்திரத்தை  நடிக்கும் கரடிப்பொம்மையை குண்டியிலேயே ஒன்று போடுகிறாள்.

 

குடும்பத்தலைவராக அமர்ந்திருக்கும் கருப்பு லாப்ரடார் நாய் கீரோ பொறுமையாக காதுகளை தொங்கபோட்டு அமர்ந்திருக்கிறது. ”மசமசன்னு ஒக்காந்த்திட்டிருக்காம போயி பஸ் வருதான்னு பாருங்க ”என்று அதற்கும் ஓர் அதட்டல. புன்னகை சிரிப்பாக மாறும்போது நான் விலகிவிடுவேன். அந்த நிலையை இக்கதையை வாசிக்கும் ஒரு வாசகர் அடைகிறார். அதுவே அங்கே மென்மையான உயரிய அங்கதமாக உருமாற்றம் கொள்கிறது.

ஒரு படைப்பாளியாக திலீப்குமார் அந்த அங்கதத்தையே தன் பங்களிப்பு என தமிழுக்கு அளித்திருக்கிறார். குஜராத்திகளின் காலனியில் பூனை கிணற்றில் விழுந்துவிடுகிறது. நீர் அசுத்தமாகிவிட்டிருக்கிறது. என்ன செய்யலாம்? காலனியே கொந்தளிக்கிறது. பாட்டி மெல்ல வருகிறாள். நிதானமாக வந்து கிணற்றில் ஒரு செம்பு கங்கை நீரை கொட்டுகிறாள். ‘இனிமேல் பிரச்சினை இல்லை தாராளமாகக் குடிக்கலாம்’ என்கிறாள். தீர்வு என்ற சிறுகதை இது.

இதைப்பற்றி பேசும்போது இளம் நண்பர் சொன்னார்– ”மூடநம்பிக்கைக்குச் சரியான சவுக்கடி இந்தக்கதை”. நான் கேட்டேன், அந்தப்பாட்டி வந்து ஒரு பாக்கெட் பிலீச்சிங் பௌடரை கிணற்றில் கொட்டிவிட்டு அப்படிச் சொல்லியிருந்தால் கதை அறிவியல் பூர்வமான கதையாக ஆகியிருக்குமா? அப்பொதுகூட அந்தக்கதையின் அங்கதம் பெரிதும் குறைவுபடாமல்தான் இருக்கும் என்றே நான் நினைக்கிறேன். மனிதர்கள் பலவகையான நம்பிக்கைகளைப் பற்றிக்கொன்டு வாழ்க்கையை வாழ்ந்து தீர்க்கும் பரிதாபத்தின் மீதான சிரிப்புதானே அந்தக்கதை? அது பிளீச்சிங் பௌடராக இருந்தால் என்ன கங்கா ஜலமாக இருந்தால் என்ன? நம் வீட்டைச்சுற்றி முனிசிப்பல் சிப்பந்தி கொசுமருந்து அடிக்கிறார். வருடம்தோறும். கொசுவுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. நாம் என்ன விழுந்து விழுந்து சிரிக்கிறோமா அதைக்கண்டு? அந்த நம்பிக்கையில் ஒரு இரண்டுநாளை நீட்ட முடியுமா என்றுமட்டும்தானே பார்க்கிறோம்?

உயரிய அங்கதம் கையறுநிலைகளில் எழும் சிரிப்பு. இயலாமையின் புன்னகை. கைவிடப்பட்டவனின் கடைசிச் சிரிப்பு. சமீபத்தில் ஒரு தொலைக்காட்சியில் நாகேஷ் நடித்த ஒரு காட்சியைப்பார்த்தேன். நாகேஷ் ஒரு வீட்டுக்குள் செல்கிறார். உள்ளே யாருமே இல்லை. ‘சார்’ என்கிறார் ‘சார் சார்’ என்கிறார். எந்த பதிலும் இல்லை. ஆவல் தாங்காமல் உள்ளே சென்று பார்க்கிறார். உள்ளே எல்லா அறிஅயும் காலி. திரும்பி வருகிறார். கொஞ்சம் கொஞ்சமாக பீதி. ‘சார் சார்’ என்ற குரலில் மெல்லிய மாற்றம். கூடத்துக்கே வருகிறார். திரும்பிவிடலாம் என்று பார்த்தால் வந்தவழி வெளியே மூடப்பட்டிருக்கிறது. அலறிப்புடைத்து பின்பக்கமாக ஓடிப்போய் பார்க்கிறார். அங்கும் எல்லா வாசல்களும் மூடியிருக்கிறது.

பீதியும் பதற்றமுமாக கதவுகளை தட்டுகிறார். ஓடுகிறார். தாவுகிறார். பல கோணங்களில் தப்ப முயல்கிறார். கைவிடும் இடைவெளிவழியாக தலையை நுழைக்க முயல்கிறார். ‘நான் என்ன தப்புசெய்தேன்’ என்று யாரிடமோ கேட்கிறார். கடைசியில் ஒன்றும் நடக்காது என்று தெரிந்து கூடத்துக்கு வந்து சோபாவில் அமர்ந்துகொண்டு தொடையில் தட்டி ‘மானச சஞ்சரரே ‘ என்று பாடியபடி ஒரு சிரிப்பு சிரிக்கிறார். வாழ்க்கையில் அப்படி சிகிக் கொள்பவன் சிரிக்கும் அப்படிப்பட்ட சிரிப்புதான் உயரிய அங்கதத்தை உருவாக்குகிறது. அது கடவுளைப்பார்த்து எளிய மனிதன் சிரிக்கும் சிரிப்பு!

திலீப் குமாரின் பல கதைகளில் அந்த புன்னகையை நாம் காண்கிறோம். அதுவே அவரை தமிழில் ஒரு முக்கியமான படைப்பாளியாக நிலைநாட்டுகிறது. அத்தகைய அங்கதத்தின் உலகில் உலவும் படைப்பாளிகள் அதிகமாக எழுதுவதில்லை. ஏனென்றால் எழுதுவதே அவர்களுக்கு அம்பிக்கையூட்டும் ஒன்றாக இருப்பதில்லை. அதையே உதாசீனமான புன்னகையுடன் தான் அவர்கள் பார்க்கிறார்கள். உணர்ச்சிகள் மோதல்கள் என ஏதும் இல்லாத அவர்களின் புனைவுலகமும் குறைவாக இருக்கும்போதுதான் அழகாக இருக்கிறது. திலீப் அத்தகையவர். இத்தனை வருடங்களில் அவர் எழுதியது ஒரு தொகுப்பளவுக்கு கதைகள் மட்டுமே

பல சமயம் உயரிய அங்கதமாக இருந்தால்கூட அது அடிப்படையான மானுட இலட்சியக்கனவுகளுக்கு எதிரானதாக அமைந்துவிடக்கூடும். மானுட இனம் உணவால் உயிர்வாழவில்லை, கனவால் உயிர்வாழ்கிறது. கனவுகளை சிறிதாக ஆக்கி யதார்த்தத்தை விசுவரூபம் கொள்ளச்செய்யும் பண்பு அங்கதத்துக்கு உண்டு. மகாபாரதத்திலேயே இதை நாம் காணலாம். அதன் தனித்தனிக் கதைகளில் உள்ள மேலான இலடியக்கனவுகள் எல்லாம் அதன் உச்சகட்ட அங்கதத்தில் ஒளிமங்கிவிடுகின்றன. ஷேக்ஸ்பியரைக்குறித்தும் இதைச் சொல்வார்கள். மேலான அங்கதம் என்பது எல்லாருக்கும் உரியதல்ல. இலடிசியக்கனவுகளையும் தாண்டி ஒரு முழுமைநோக்கை அடைந்து அங்கே அமைதிகொள்ள முட்டிபவர்களுக்காக உள்ளது அது

சீனக்கதை ஒன்று நினைவில் எழுகிறது. இப்போதல்லாம் சின்னக்கதை இல்லாமல் நான் சிந்திப்பதே இல்லை என்று நண்பர்கள் சொல்கிறார்கள். ஒரு தவளை பாலைவனத்தில் மாட்டிக்கொன்டது. தளர்ந்து தொய்ந்து தள்ளாடிச்செல்லும்போது சட்டென்று அது நிழலைக் கண்டது. அது படமெடுத்து நின்ற ஒரு பாம்பின் நிழல். அந்தத்தவளையைக் கொல்ல சீறி எழுந்த ஒரு பசித்துத்தளர்ந்த பாம்பு அது. பாம்புநிழலில் தவளை இளைப்பாறியபோது பாம்பு குனிந்து நோக்கியது. தன்னிடம் அடைக்கலம் கேட்டுவந்தவனைக் கொல்லலாகாது என்று அந்தப்பாம்பு பத்தியைப் பிரித்து அப்படியே நின்று வெயிலில் பொசுங்கியது.

கன்ஃபூஷியஸின் அரசாட்சியில் தர்மம் எப்படி ஓங்கியிருந்தது என்பதைக் காட்டும் இக்கதை மிக மிக பிரபலமானது. அதற்கு ஓர் அடிக்குறிப்பை நித்ய சைதன்ய யதி அளித்தார். அக்காட்சியைக் கண்டு தூரத்தில் அமர்ந்திருந்த கழுகு எண்ணிக் கொண்டது. ‘நல்லதாகப்போயிற்று. உலர்ந்த பாம்பைத்தின்றபின் தாகத்துக்கு ஈரமான தவளை பொருத்தமாக இருக்கும்!’ 

கதை முடியவில்லை. அந்தக்கழுகின் இறகுகள்தான் அறம் வழுவாத மாமன்னன் என்று சீனவரலாற்றில் புகழ்பெற்ற டாங் வம்சத்து சக்ரவர்த்தி ஷூயியின் மணிமுடியை நெடுங்காலம் அலங்கரிக்கப்போன்றன என்று அறிந்த ஒரு மெய்ஞானி அந்த மலையின் உச்சியில் இருந்தார். அவர் அக்கழுகைக்கண்டு புன்னகைசெய்தார். அப்புன்னகையே அங்கதத்தின் உச்சம், அது உயர்ந்த ஆன்மீகமும் கூட என்றார் நித்யா.

ஆம், அதுவே இயற்கையின் நியதி. அதுவே உயரிய அங்கதம் பிறக்கும் கருவறை . அது குருதி தோய்த்த வாள் போல கூர்மையானது.போர்க்களத்து வாள் மட்டுமல்ல், தொப்புள்கொடி அறுக்கும் கத்தி அல்லது அறுவைசிகிழ்ச்சைக்கத்தியும்கூடத்தான்.
மிக மென்மையான திலீப்குமாரின் படைப்புலகில் அந்த இன்றியமையாத குரூரத்தின் சித்திரங்களை நாம் பல கதைகளில் காணலாம். அவரது மூங்கில் குருத்து என்ற கதை அதற்கான சிறந்த உதாரணமாகச் சுட்டப்படுகிறது. அதில் வறுமையின் இயலாமையின் உச்சத்தில் அந்த அன்னையிடம் வெளிப்படும் மூர்க்கம் ஒருவகை செவ்வியல்தன்மை கொண்டது

திலீப்குமாரின் கடிதம் என்ற அந்தக்கதை தொலைக்காட்சி நாடகமாக உருமாற்றம் பெற்று பலரது கவனததைக் கவர்ந்தது. கடிதவடிவிலான அந்தக் கதையை ஒரு நாடகமாக ஆக்குவது திரைக்கதைச் சவால். அந்தச் சவாலை வெற்றிகரமாக எதிர்கொண்டு அதை எடுத்து அதனூடாக காட்சி ஊடக உலகுக்கு நுழைந்தவர்கள் ஜேடி ஜெர்ரி என்னும் இரட்டையர். இலக்கிய ரசனை கொன்டவர்கள். பாலு மகேந்திராவின் மாணவர்கள் அனைவருமே அவரைப்போலவே இலக்கிய வாசகர்கள் என்பதை நாம் அறிவோம். அவர்கள் தங்கள் பெற்றோரின் பெயரால் உருவாக்கியிருக்கும் சாரல் விருது திலீப்குமாருக்கு அளிக்கப்பட்டிருப்பது மிக மிக பொருத்தமானது. மன நிறைவளிப்பது. என் நண்பரும் நான் விரும்பும் படைப்பாளியுமான திலீப்குமாரை இத்தருணத்தில் மனமார வாழ்த்துகிறேன்.

 

[6- ஜனவரி௨009 அன்று மாலை சென்னையில் திலீப்குமார் அவர்களுக்கு சாரல் விருது வழங்கும் விழாவில் ஆற்றிய உரை]

முந்தைய கட்டுரைஎழுத்து:கடிதங்கள்
அடுத்த கட்டுரைசெவ்வியலின் வாசலில்