புத்தகக் கண்காட்சி 2018

book

இனிய ஜெயம்

தம்பியின் பயணம். வழியனுப்ப சென்னை வந்தேன் .அப்படியே புத்தக சந்தை ஒரு உற்று . வியாழன் .ஆகவே சந்தை சற்றே சுரத்து கம்மியாக காட்சி தந்தது .  உள்ளே நுழைந்ததும் முதலில் கண்ணில் பட்டவர்  எஸ்ரா தான் . வாழ்த்து சொன்னேன் . அவருக்கு அழகு சேர்க்கும் மேஜையோர  தொப்பைபுத்தர் சிரிப்புடன் அணைத்துக் கொண்டார் . பல்வேறு முனைகில் இருந்து வரும் பாராட்டுக்கள் இன்றும் அவருக்கு தொடர்ந்து கொண்டு இருந்தது . எனக்கு மகிழ்ச்சி தந்தது தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி அவர்களின் பாராட்டு . முன்பு ஒரு சமயம் உலக புத்தக தினம் என நினைவு ,முதல்வர் வசம் அவர் இறுதியாக வாசித்த நூல் என்ன என பேட்டிகண்டுஅதில்   அவர் தடுமாறும் கணத்தை , பல்லாயிரம் முறை பகிர்ந்து மீம்சர்கள் மகிழ்ந்தனர் .  இதோ இன்று மக்களின் பிரதிநிதியாக நின்று முதல்வர் ஒரு எழுத்தாளனை வாழ்த்து தெரிவித்து  இருக்கிறார் . இந்த மீம்சர்களுக்கு சற்றேனும் சொரணை ,கொஞ்சமேனும் மூளை எனும் வஸ்து இருந்தால் ,இது எத்தகையதொரு கலாச்சார மேன்மை தருணம்  என விளங்கும் . மீம்சர்கள் மட்டம் என்ன என்பதையும் ,இக்கணம் தமிழக அரசு என்ன என்பதையும் ஒரே கணம் சேர்ந்து காணும் வாய்ப்பு : )

நாஞ்சில் நாடன் சூறாவளியாக சுற்றிவந்து,காணுமிடமெங்கும் நீக்கமற நிறைந்து , ,அரங்குக்குள் புத்தகங்களை வெளியிட்டுக் கொண்டிருந்தார் . மூன்றாம் சுற்று வருகையில் கிழக்கு ஸ்டாலில் லட்சுமி சரவணகுமார் கதைகள் தொகுப்பை வெளியிட்டுக் கொண்டு இருந்தார் .

எழுத்தாளர்கள் அஜயன்பாலா ,தேவேந்திர பூபதி போன்றவர்கள் , வழியில் சந்தித்து கைகுலுக்கி என்னுடன் செல்பி எடுத்துக் கொண்டனர் . ஒளிப்பதிவாளர் பி ஸ்ரீ ஸ்ரீராம் அவர்களுக்கு என்னைத் தெரியவில்லை. மெல்ல வளர்ந்து வரட்டும் என பெருந்தன்மையாக விட்டு விட்டேன் .

ட்ராலி நிறைய அராத்துவின் பொண்டாட்டி நாவல் என்னை கடந்து சென்றது .பின்னாலேயே கோரக்பூர் பகவத் கீதை குவியல் அடங்கிய ட்ராலி சென்றது . கண்ணுக்குதெரியாத ஒரு விதமான சமநிலை எதோ நிலவுகிறது ,என்ன என்றுதான் புரியவில்லை .

அன்று [வியாழன் ] எதிர் அரங்கில் ,வாமு கோமு ,கீரனூர் ஜாகிர் ராஜா நூல்கள் ,மற்றும்  [யுவன் சந்திர சேகருக்கு பிடித்த ஹமிங்க்வே  நாவல்]  யாருக்காக  இந்த மணி ஒலிக்கிறது , முரகாமியின் விர்ஜினியா ஓல்ப், லைப் ஆப் பை  மணற்குன்றுப் பெண் போன்றவை   சிறப்பு தள்ளுபடியில் கிட்ட தட்ட பாதி விலையில் கிடைக்கிறது

அலெக்ஸ் அண்ணன் வெளியிட்ட,எழுத்து பதிப்பக , தலித் வரிசை ஆய்வு நூல்கள் , வெள்ளை யானை நாவல் 262 அரங்கில் ,அலெக்ஸ் அண்ணனின் நண்பர் ஜோதி விற்பனைக்கு வைத்திருந்தார் .

பன்னாலால் பட்டேலின் வாழ்க்கை ஒரு நாடகம் நாவல் ,மனோதிடம் எனும் பெயரில் சாகித்ய அகடாமியில் பாதி விலையில் கிடைக்கிறது . தாகூரின் பயணக்கட்டுரைகளும் அடங்கிய கட்டுரை நூல் இரண்டாம் பாகம் ,நூறு ரூபாய்க்கு கிடைக்கிறது .

நேஷனல் புக் ட்ரஸ்டில் மாஸ்தியின்  சிக்க வீர ராஜேந்திரன் முப்பது ரூபாய்க்கும் , தகழியின் ஏணிப்படிகள் நூறு ரூபாய்க்கும் கிடைக்கிறது . காலச்சுவடில் ஆனந்த் எழுதிய கவிதை எனும் வாள்வீச்சு கவிதை குறித்த கட்டுரைகள் ,போன்ற நூல்களும் பல கவிதை தொகுப்புகளும் [இளங்கோ கிருஷ்ணனின் காயசண்டிகை ஒன்றே ஒன்று அதில் பார்த்தேன்  ] கிட்டத்தட்ட பாதி விலையில் கிடைக்கிறது .

வெளியேறும் போது நண்பர் கேட்டு வாங்கி என்  பையை கவிழ்த்துப் பார்த்தார் .

சோழர்கால செப்புப் படிமைகள் [தமிழில் தியடோர் பாஸ்கரன்] காலச்சுவடு .

சிலைத்திருடன் . [விஜயகுமார் ] இந்திய ஓவியங்கள் ஓர் அறிமுகம் [அரவக்கோன்] 1975 [இரா முருகன் ] கிழக்கு பதிப்பகம் .

சிற்பக் கலை ரசனைக் கட்டுரைகள் . தமிழகக் கோபுரக்கலை மரபு [குடவாயில் பாலசுப்ரமணியம் ]அன்னம் பதிப்பகம் .

கல்வெட்டு சொல்லும் கதைகள் .[குடவாயில் பாலசுப்ரமணியம் ]சூரியன் பதிப்பகம் .

ஜிம் பவலின் பின்நவீனத்துவம் தொடக்க நிலையினருக்கு [தமிழில் பூர்ண சந்திரன் ]அடையாளம் பதிப்பகம் .

முத்து 250  டெக்ஸ் வில்லர்  தூள் கிளப்பும் வண்ண காமிக்ஸ் . முத்து காமிக்ஸ் .

மனுமுறை கண்ட வாசகம் .வள்ளலார் .பதிப்பாசிரியர் பா சரவணன் .சந்தியா பதிப்பகம் .

மஹத். ஆனந்த் தெல்டும்டே [தமிழில் கமலாலயன் ] என்சிபி ஹச்.

தமிழ் சிறுகதையின் பெருவெளி . சு வேணுகோபால் .தியாகு நிலையம் .

ஆகியற்றை வாங்கி இருந்தேன் .

வாங்க எண்ணி ,விற்றுத் தீர்ந்து போன புத்தகம்

ஜெயமோகன் இந்துத்தவ பாசிசத்தின் இலக்கிய முகம் .[தொகுப்பாசிரியர் யமுனா ராஜேந்திரன் ] அடுத்த பதிப்பு மார்ச் மாதம் .  என சொல்லி இந்த மடலை முடிக்கத்தான் உத்தேசம் ஆனால் நூல் இன்னும் வரவில்லை .புத்தகம் அச்சுக்கு சென்றுவிட்டது மார்ச் மாதம் விற்பனைக்கு கிடைக்கும் என்றார்கள் .  மாதத்துக்கு மூன்று நூல்களை எழுதிக்கொண்டிருக்கும் பாசிஸ்டின் கருத்தியல் சதிகளை முறியடிக்க இத்தனை பேர் கூடி செய்து  வரும் நூல் ,இந்த  p o d யுகத்தில் , மூன்று மாதமாக அச்சிலேயே இருக்கும் என்றால், தம்பிகளா  இப்படி வேலை பாத்தா பாசிசம் ஜெயிக்காம என்ன பண்ணும் என [தூரத்தில் தென்பட்ட அந்த நூலின் கட்டுரையாசிரியர்களில் ஒருவரான ஜமாலன் வசம் ]  கேட்க தோன்றியது ,இருந்தாலும் அதை அங்கேயே விட்டுவிட்டு , வெளியே மேடையில் தமிழச்சி தங்கபாண்டியன் பேசிக்கொண்டிருப்பதை கேட்கப்போனேன் . பேச்சு முடிய காவ்யா சண்முகசுந்தரம் ஒரு பத்து பதினைந்து நூல்களை ரயில்வண்டி போல மேடையில் வைத்து வெளியிட்டு இருக்கிறார் எனும் தகவல் கிடைத்து . நல்லா இருக்கட்டும் என மனதுக்குள்  வாழ்த்தி விட்டு சந்தையில் இருந்து  விடைபெற்றேன் .

கடலூர் சீனு

முந்தைய கட்டுரைநடேசனின் “எக்ஸைல்”- முருகபூபதி
அடுத்த கட்டுரைதீ