பனைமரச்சாலையில் ஒரு போதகர்

panaimara-saalai_FrontImage_871

பனைமரச்சாலை – காட்சன் சாமுவேல்-  வாங்க

காட்சன் கடிதம்  ஜனவரி 9, 2019

அண்ணன்,

சுமார் ஒன்றரையாண்டுகளுக்குப் பின் பனைமரச்சாலை நூலாக நற்றிணை பதிப்பகம் வெளியிட்டுள்ளது. உங்களின் அணிந்துரை வாசகர்களை தன்பால் ஈர்த்துகொள்ளும் வண்ணம் அமைந்திருக்கிறது சிறப்பு. நான் எழுதவேண்டும் என தொடர்ந்து சலிப்பில்லாமல் ஊக்கப்படுத்திய நபர் நீங்கள் ஒருவரே. சில வேளைகளில் ஏன் இப்படி கூறுகிறார்கள் என்று கூட எண்ணியிருக்கிறேன். ஆனால் இப்போது ஒரு நிறைவு இருக்கிறது. நான் என்னையே தொகுத்துக்கொள்ளுகிறேன்.

எனது பாதையினை நானே செவ்வை செய்கிறேன்  அவ்வகையில் புதிய திறப்பொன்றை கண்டடைகிறேன். இப்போது வெளிவந்திருக்கும் நூல்  பனையார்வலர்களுக்கு மட்டுமல்ல பயணம் செய்பவர்களுக்கும் பெரும் ஊக்கமளிப்பதாக இருக்கும் என நம்புகிறேன். பனை சார்ந்து முன்னெடுப்புகள் செய்யவிருக்கும் எதிர்கால இளைஞர்களுக்கு இது ஒரு சிறந்த வழிகாட்டி நூலாகவும் இருக்கும்.

உங்கள் வாசகர்களின் கூரிய பார்வையும் உங்கள் அறிவுரைகளையும் இப்போதும் வேண்டி நிற்கின்றேன். முழு வீச்சுடன் பனை சார்ந்து வேறு பல ஆக்கங்கள் நிகழ்த்த அவை பேருதவியாக இருக்கும்.

இந்நூல் வெளிவருகின்ற நேரத்தில் நாட்டுபுறவியலாளர் . கா. பெருமாள் அவர்களையும் எனக்கு உறுதுணையாக நின்று எனக்கு வழிகாட்டிய பேராசிரியர். வேதசகாயகுமார் அவர்களையும் நன்றியுடன் நினைத்துக்கொள்ளுகின்றேன்.

என்றும் அன்புடன்

காட்சன் சாமுவேல்

https://pastorgodson.wordpress.com/2016/05/

காட்சன் கடிதம் மார்ச் 28 – 2017 

அன்புள்ள அண்ணன், இலங்கை போகும் முன்னால் உங்களை சந்தித்த போது, உங்கள் வாசகர்களை சந்திக்க முடியுமா என்று கேட்டிருந்தேன். இலங்கையில் சென்ற பின்பு, எனக்காக ஒழுங்கு செய்யபட்டிருந்த நிகழ்சிகளில் மாறுதல் ஏற்பட்டது. ஒவ்வொருஇடத்திலிருந்தும் நான் அடுத்து எங்கு செல்லவேண்டும் என்பன போன்றவைகள் நான் தங்கியிருந்தஇடத்திலுள்ளவர்களுக்கு சொல்லப்பட்டது. ஆகவே என்னால் எதையும் இறுதிவரை கணிக்கமுடியவில்லை. ஓடிக்கொண்டே இருந்தேன் என்று சொல்லலாம். மீண்டும் இலங்கைக்கு என்னை அழைத்திருக்கிறார்கள். அப்போதுகண்டிப்பாக அனைத்தையும் முன்பே திட்டமிட வாய்ப்பு அமையும் என்று நினைக்கிறேன்.

இந்த நிகழ்ச்சி நடந்ததே ஒரு ஆச்சரியம். இலங்கை மக்களுக்கு பனையுடன் உள்ள பிணைப்பே எனக்கு இந்த பயணத்தைசாத்தியப்படுத்தியிருக்கிறது என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்தேன். இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றின் போதகர்ஜோசப் அவர்களை நான் சில வருடங்களுக்கு முன் சந்தித்திருந்தது இப்பயண வாய்ப்பினை அதிகரித்தது. 3 வார காலநிகழ்ச்சி முடிகையில் எனக்கும் அவர்களுக்கும், “இது மிக குறுகிய காலம்” என்ற உணர்வை தவிர்க்கஇயலவில்லை. திருச்சபை, பனைமர வேட்கையில் ஈடுபடுவது இதுவே முதன் முறை. அவ்வைகையில் நான் ஒரு மிகப்பெரும் பணியினை முன்னெடுத்திருக்கிறேன்.

உங்களிடம் தொலைபேசியில் பேசும்போது இலங்கைப் பயணத்தை எழுதவியலா கொந்தளிப்பில் இருந்தேன். மும்பைவரும்முன்னால் உங்களை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்றும் விரும்பினேன். ஆனால் மறுநாள் அதிகாலையில்புறப்படவேண்டி இருந்ததால் தவிர்த்துவிட்டேன். முந்தையா நாள் அழைப்பும் நாம் சரியாக பேசிக்கொள்ளும் தருணமாகஅமையவில்லை

சாம்பல் புதன் அன்று எனக்கு என்ன தோன்றியது எனத் தெரியாது, நான் அமர்ந்து ஒரு வேகத்தோடு தட்டச்சு செய்யஆரம்பித்தேன். தவக்கால தியானமாக இதைச் செய்யலாமே என்ற தூண்டுதல் தான். கடவுள் அருளால்(ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து மற்ற நாட்களில்) இன்றுவரை தடையின்றி எழுதுகிறேன். மீண்டும் உங்களின் வழிகாட்டுதல்/ ஆசி வேண்டி நிற்கிறேன்.

அருட்பணி

காட்சன் சாமுவேல்

காட்சன் கடிதம் அக்டோபர் 2-  2016

அன்புள்ள அண்ணன்,
பனைமரச்சாலை நிறைவுற்றது. அதை எழுதுகையில் சந்தித்த, உங்கள்  வாசகர்களையும்  பட்டியலிட்டிருக்கிறேன். மொத்தத்தில் எப்படி வந்திருக்கிறது  என உங்கள் கருத்தை அறிய ஆவலாக உள்ளேன். பொறுமையாக சொன்னால் போதும். மேலும் இது புத்தகமாக்கப்படுமானால் உங்களின் முன்னுரை ஒன்றும் வேண்டும் என இப்போதே முன்பதிவு செய்துகொள்ளுகிறேன்.
காட்சன் சாமுவேல்

காட்சன் கடிதம் ஜூலை 2 , 2016

அண்ணன்! கடந்த மே 16 முதல் ஜூன் 2 வரை எனது இரு சக்கர வாகனத்தில் மும்பையிலிருந்து நாகர்கோவில் வரை பனை மர வேட்கை பயணம் ஒன்றை நிகழ்த்தினேன். உங்களில் பெற்றுக்கொண்ட ஒளியால் அப்பயண அனுபவங்களை தொடராக்க முயற்சிக்கிறேன். சில பிழைகள் இருந்தாலும் எழுதவேண்டும் என்ற உந்துதலால் விடாமல் எழுதுகிறேன். இன்று 25 அத்தியாயத்தை முடித்த பின்பே உங்களிடம் சொல்லும் துணிவு வந்தது. உங்கள் மேலான கருத்துக்களையும்  வழிகாட்டுதலையும் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.

அருட்பணி

காட்சன் சாமுவேல்
முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-27
அடுத்த கட்டுரைமொழியாக்கம், அ.முத்துலிங்கம், ரிஷான் ஷெரீஃப்