பேருருப் பார்த்தல்

crowd in kizhakku stall

அன்புள்ள ஜெ

சென்னை புத்தகக் கண்காட்சி பற்றி  படித்துக்கொண்டிருந்தபோது ஹரன்பிரசன்னா எழுதிய இந்த குறிப்பு கண்ணில் பட்டது. ஏறத்தாழ இதையே நானும் நினைத்துக்கொண்டிருந்தேன். ஆகவே இதை அனுப்புகிறேன்

ஒருவர் ஏன் புத்தகக் கண்காட்சிக்கு வரவேண்டும் என்ற காரணங்களை எப்படித் தொகுத்தாலும் என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை. ஆனால் மக்கள் நிஜமாகவே குவிகிறார்கள். பொழுதுபோக்குக்காக வருகிறார்களா? நிச்சயம் இல்லை. இதைவிடத் தரமான பொழுது போக்குகள் ஆயிரம் இருக்கின்றன. 10% தள்ளுபடி கிடைப்பதாலா? ஒருவர் புத்தகக் கண்காட்சியில் 1000 ரூபாய் புத்தகம் வாங்கினால் 100 ரூ தள்ளுபடி. இந்த நூறு ரூபாய்க்கு யாராவது 500 ரூபாய் செலவழித்து வருவார்களா? 3000 ரூபாய்க்குப் புத்தகம் வாங்கினாலே 300 ரூபாய்தான் தள்ளுபடி. புத்தகக் கண்காட்சியில் 10% பேர்கூட 3000 ரூபாய்க்குப் புத்தகம் வாங்கமாட்டார்கள். ஒரே இடத்தில் புத்தகங்கள் குவிந்து கிடப்பதைப் பார்த்து அதிலிருந்து தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள வருகிறார்களா? தேவைக்கு அதிகமாகக் குவிந்திருக்கும் ஓரிடத்தில் இருந்து உங்களுக்குத் தேவையான ஒன்றைத் தேர்வு செய்யவே முடியாது என்பதே யதார்த்தம். கிடைக்காத புத்தகங்களை வாங்கவா? இது ஒரு மாயை. கிடைக்காத புத்தகங்கள் எங்கேயும் கிடைக்காது. :-) ஒருவேளை இங்கே கிடைக்கத் தொடங்கினால் பின்பு எங்கேயும் கிடைத்துவிடும்.

இன்றைய நிலையில் வீட்டில் இருந்தபடியே புத்தகங்களை வாங்க ஆயிரம் வழிகள் உள்ளன. எத்தனையோ இணையக் கடைகள் வந்துவிட்டன. அலைச்சல் இல்லாமல் பொறுமையாகப் பார்த்து வாங்கலாம். தள்ளுபடி கிடைக்காது. கொரியர் செலவு கூடுதல் ஆகும். ஆனால் ஒருவர் தன் குடும்பத்துடன் கண்காட்சிக்கு வந்து செல்ல ஆகும் செலவைவிடக் குறைவாகவே ஆகும். ஆனாலும் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள். எழுத்தாளர்களுடன் பேசலாம் என்பதற்காகவா? இதற்காக வருபவர்கள் குறைவே. விற்கும் புத்தகங்களில் 5% எழுத்தாளர்களை இவர்களுக்குத் தெரிந்திருந்தாலே அதிகம் என நினைக்கிறேன். எப்படியோ சென்னை புத்தகக் கண்காட்சி பெரிய ஒரு பழக்கமாக மாறிவிட்டிருக்கிறது. ஒரு இயக்கமாகவே ஆகிவிட்டது. ஒரு வகையில் இது மகிழ்ச்சிதான். பெரிய சாதனைதான். ஆனாலும் எனக்கு இதற்கான விடைதான் கிடைக்கவில்லை.

ஒன்றே ஒன்று சொல்லலாம். இத்தனை பெரிய புத்தகக் கண்காட்சியில் அலைந்து, எளிதாக எங்கேயும் கிடைத்துவிடும் இரண்டு புத்தகங்களை வாங்கிக் கொண்டு மனநிறைவுடன் சென்றாலும்கூட அது ஒருவகையில் தோல்வியே. அரிய புத்தகங்களைத் தேடி வாங்கிக்கொண்டால் புத்தகக் கண்காட்சியின் பயன் முழுமையாகக் கிடைக்கலாம். எளிதாகக் கிடைக்கும் புத்தகங்களை எங்கேயும் பிறகு வாங்கிவிடலாம். இன்னொரு தேவை, குழந்தைகளுக்கு இந்த உலகத்தை அறிமுகப்படுத்துவது. அப்போதும் புத்தகம் வாங்கும் பழக்கமும், அதற்குப் பின் ஒருவேளை அதைப் படிக்கும் வழக்கமும் வரலாம். இதுவே புத்தகக் கண்காட்சியின் மிக முக்கியத் தேவை என்று நினைக்கிறேன்.

இன்று உலகம் முழுக்கவே புத்தக விற்பனை ஆன்லைனில் மாறிவிட்டது. புத்தகக் கடைகளே குறைந்துவருகின்றன. ஆனாலும் புத்தகக் கண்காட்சிகள் ஏன் தேவையாகின்றன? இதை விளக்கமுடியுமா?

ராகவன் பத்மநாபன்

book

அன்புள்ள ராகவன்

ஏற்கனவே இதை நான் எழுதியிருப்பேன். மீண்டும். ஏனென்றால் கேள்விகள் மீண்டும் மீண்டும் எழுகின்றன.

உங்கள் கேள்வியை அப்படியே திரைவிழாக்களுக்கும் போடலாம். இன்று சினிமா என்பதே ஆன்லைன் உலகம்தான். எதையும் எப்போதும் இறக்கி பார்க்கலாம். அப்படியென்றால் திரைவிழாக்கள் எதற்கு? இசைவிழாக்களுக்கும் இதே கேள்வியை கேட்கலாம். எந்தப்பாடலையும் எப்போதும் காதுக்குள் கேட்கலாம். இசை விழாக்கள் ஏன் தேவைப்படுகின்றன?

விழா என்னும் மனநிலையே முதன்மையானது. திரைவிழாவில் நாம் நாளுக்கு 5 படம் பார்க்கலாம். வேறெங்கும் அப்படி நாம் படம் பார்க்கமாட்டோம். இசைவிழாவில் நாளுக்கு 12 மணிநேரம் இசைகேட்போம். வேறெங்கும் அது இயல்வதல்ல. அந்த விழாமனநிலை மிகமிக ஊக்கம் கொண்ட ஒன்று. உள்ளம் அதற்கென்றே திறந்திருக்கிறது. அந்தக் களியாட்டநிலையில் நம்முள் எப்போதுமிருக்கும் அலுப்பும் விலக்கமும் இல்லாமலாகிறது. நம் உள்ளம் நூறுமடங்கு கூர்கொண்டிருக்கிறது. எந்த விழாவிலும் நாம் மும்மடங்கு வாழ்கிறோம்.

ஆகவே எந்தவிழாவையும் உண்மையில் அவ்வனுபவத்தை அடைந்தவர்கள் நிராகரிக்க மாட்டார்கள். அதிலுள்ள கொண்டாட்டம் அறிதலின் பரவசத்தால் ஆனது. விழாக்களை நிராகரிக்கும் மனநிலை என்பது இரண்டு தளங்களில் எழுகிறது. ஒன்று உளச்சோர்வு நிலை. ‘மற்றவர்கள்’ என்றாலே ஒவ்வாமை உருவாகும் தன்மை அதன் இயல்பு. இன்னொன்று முதுமை. போதும் என்ற சலிப்பு உருவானபின் வரும் இயல்பு அது. நாற்பதிலேயே நம்மவர் கிழவர்களாக ஆகிவிடுகிறார்கள். எந்நிலையிலும் எந்தக் கொண்டாட்டத்தையும் தவறவிடாதீர்கள் என்றே நான் சொல்வேன்.

எந்தக் கலையையும் அதற்கான விழாக்கள் வழியாக அறிவதைப்போல மிகச்சிறந்த வழி வேறில்லை. ஒரே ஒரு இசைவிழாவுக்குச் செல்லுங்கள் – இசை அறிமுகமாகிவிடும். என் நண்பர் கிருஷ்ணன் பரதநாட்டியமெல்லாம் ஒரு ஹம்பக் என ஆவேசமாக வாதிட்டார். அவரை நான் 2008-இல் சிதம்பரம் நாட்டியாஞ்சலிக்கு கூட்டிச்சென்றேன். விழுந்துவிட்டார். புத்தகவிழா அறிவின் திருவிழா.

புத்தகவிழாவில் நாம் எதை அறிகிறோம் என நம்மால் தெளிவாக உணரவே முடியாது. ஆனால் நாமறியாமல் என்னென்னவோ உள்ளே சென்றுகொண்டே இருக்கும். அந்த ஆண்டு முழுக்க நீங்கள் பேசும்போது புத்தகவிழா கடந்துவருவதை பார்ப்பீர்கள். ‘புக்ஃபேரிலே ஒரு புக்கு பாத்தேன் சார், செங்கல் மருத்துவம்னு போட்டிருந்தது’ என நாம் பேசிக்கொண்டே இருக்கிறோம். நமது அகம் திறந்திருக்கும்பொழுது அது. புத்தகங்களுக்காக மட்டுமே நாம் அளித்த நம் வாழ்க்கையின் ஒரு துண்டு.

புத்தகக் கண்காட்சியில் வாங்குவதைவிட முக்கியமானது நோக்கி அலைவது. தமிழ் அறிவுலகச் செயல்பாட்டின் ஒரு குறுக்குவெட்டுத் தோற்றமே அங்கே இருக்கிறது. எல்லா தரப்புகளும் அங்கே கடைவிரித்திருக்கின்றன. நாற்பதுநாட்களில் மலையாள மாந்திரிகம், அண்டார்ட்டிகாவில் அதிசயப்புறா என விதவிதமான நூல்களை நாம் வேறெங்கும் பார்க்கப்போவதில்லை. இஸ்லாமிய அடிப்படைவாதிகள், இந்து மேட்டிமைவாதிகள், மார்க்சியர்கள், தமிழ்தேசியர்கள் என அனைத்துக்குரல்களும் ஒலிக்கும் ஒரு வெளி.

பொதுவாகவே அறிவியக்க எதிர்ப்பு உளநிலை கொண்டவர்கள், எதிலும் சலிப்பு கொண்டவர்கள் இதை புரிந்துகொள்வது கடினம். ஆனால் ஓர் இளம்வாசகனைப் பொறுத்தவரை அவன் முன் ஒரு புத்துலகம் வாசல் திறப்பதற்குச் சமம். அவன் ‘தனக்கான நூல்களை’ மட்டும் தேடி வாங்கவேண்டும் என்பார்கள். நான் அனைத்து நூல்களையும் பாருங்கள் என்றுதான் அவனிடம் சொல்வேன். பலமுறை சென்று அத்தனை நூல்களையும் பார்ப்பதே ஒரு பெரும் வாசிப்புதான்.

ஒருமுறை புத்தகக் கண்காட்சியை சுற்றிவந்தால் நீங்கள் தமிழ்மூளையின் உள்ளே ஒரு வட்டம்போட்டு வருவதற்குச் சமம். இங்கே என்னென்ன எழுதப்படுகின்றன, பேசப்படுகின்றன என்பதை அதைவிட சுருக்கமாக அறியமுடியாது. இணையவெளியை மேய்ந்தால் இங்கே இடதுசாரிக் கருத்துக்களன்றி வேறேதும் இல்லை எனத் தோன்றும். பதினெட்டு புராணங்களுக்கு எத்தனை பதிப்புகள் வருகின்றன என்பதை புத்தகக் கண்காட்சியிலேயே காணமுடியும்.

நூல்விழாவுக்கு கூட்டமில்லாதபோது சென்று அனைத்துக் கடைகளையும் பொறுமையாகப் பார்ப்பது ஒருவகை அறிதல். நண்பர்களை சந்திக்கவும் அதுவே உகந்தது. ஆனால் கூட்டம் நெரிபடும்போது சென்று அந்தத் திரளில் கலந்துகொள்ளும்போதே உண்மையான விழாவுக்குரிய உளநிலை அமைகிறது. அந்தக் கொண்டாட்டநிலை கூடுகிறது. அது பிறிதொருவகை அறிதல். இரண்டுமே தேவைதான். நூல்கண்காட்சி என்பது நம் அறிவுலகை பருவடிவென, பேருருவெனப் பார்த்தல்.

இந்தக் காரணத்தால்தான் உலகமெங்கும் நூல்விழாக்கள் நிகழ்கின்றன. அங்கே நூல்கள் விற்கவேண்டும் என்பதில்லை. நூல்களுக்கான மிகச்சிறந்த அறிமுகக் களம் அது.   தமிழில் இத்தகைய மகத்தான நூல்விழாக்கள் நிகழ்வதைப்போல பெருமிதம் கொள்ளவேண்டிய பிறிதொன்று இன்றில்லை. அதிலும் சென்னை நூல்கண்காட்சிதான் சென்ற ஐம்பதாண்டுகளில் தமிழகம் உருவாக்கிக் கொண்ட முதன்மையான பண்பாட்டு நிகழ்வு.

ஜெ

புத்தகக் கண்காட்சி, வாசகர்கள், எழுத்து…

புத்தகக் கண்காட்சி

இந்த புத்தகக் கண்காட்சியில்…

புத்தகக் கண்காட்சியில் ஒரு புதியபெண்

புத்தகக் கண்காட்சியின் பெண் -கடிதங்கள்

புத்தகக் கண்காட்சிப் பரிந்துரை

நாகர்கோயிலில் புத்தகக் கண்காட்சி

புத்தகக் கண்காட்சிப் பரிந்துரைகள் – கடலூர் சீனு

கோவை புத்தகக் கண்காட்சி -கடிதங்கள்

கோவை புத்தகக் கண்காட்சி -கடிதங்கள்

கோவை புத்தகக் கண்காட்சி,விருதுவழங்கும் விழா

கோவை புத்தகக் கண்காட்சி- இலக்கிய உரையாடல்கள்

காரைக்குடி புத்தகக் கண்காட்சி, தத்துவமும் நடைமுறையும் -கடிதங்கள்

புத்தகக் கண்காட்சி

புத்தகக் கண்காட்சியில் இந்திய நாவல்கள்

திருப்பூர் புத்தகக் கண்காட்சி

புத்தகக் கண்காட்சி-கடிதங்கள்

புத்தகக் கண்காட்சி 2011

இந்தப்புத்தகக் கண்காட்சியில் எனது நூல்கள்

 

 

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விழா – இரு பதிவுகள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-29