‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-29

ele1குடில் கதவின் படலில் கை வைத்த குந்தி அரவுமணம் பெற்ற புரவிபோல் உடல் சிலிர்த்து நின்றாள். “இங்கே எவரோ இருக்கிறார்கள்” என்றாள். கர்ணன் ஒன்றும் சொல்லாமல் நின்றான். “இந்த அறைக்கு அடியில் நிலவறை ஏதேனும் உள்ளதா?” என்றாள் குந்தி. “அன்னையே, இது குருக்ஷேத்ரக் களம்… இது பாடிவீடு” என்றான் கர்ணன். “ஆம், ஆனால் இங்கே எவரோ இருக்கிறார்கள். காலடியில். ஆழத்தில்” என்றாள் குந்தி. கர்ணன் வெறும் நோக்குடன் நின்றான். “இங்கே மறைந்திருப்பவர் எவராக இருந்தாலும் அவர்களுக்கு உன்மேல் ஆதிக்கம் இருக்கிறது. அவர்கள் எனக்கெதிராக உன்னை சிறைகட்டி வைத்திருக்கிறார்கள்” என்று அவள் சொன்னாள்.

அவன் அதற்கும் மறுமொழி சொல்லாமல் நின்றது அவளில் சீற்றத்தை உருவாக்கியது. “நீ என்னிடமிருந்து மறைப்பது என்ன?” என்றாள். அவன் முகம் மாறவில்லை. “என்மேல் கொண்ட வஞ்சத்தை நீ மறைக்கவில்லை. அதற்கப்பால் என்ன?” என்று அவள் மீண்டும் கேட்டாள். கர்ணன் “இதற்கெல்லாம் நான் என்ன மறுமொழி சொல்ல முடியும்? நான் எதையும் மறைக்கவில்லை. ஆனால் ஆழங்களில் திகழ்பவை என்ன என்று அவை வெளிவரும்போது மட்டுமே நாமனைவரும் அறிகிறோம்” என்றான். குந்தி சீற்றம் கொண்டபோது அவள் புன்னகைப்பதுபோல தோன்றியது. “வஞ்சப்பேச்சை சகுனியிடமிருந்து கற்றுக்கொண்டிருப்பாய்” என்றாள்.

அவள் மெல்ல உருமாறுவதைப்போல அவனுக்குத் தோன்றியது. அவள் விழிகளில் அவன் அதுவரை அறிந்திராத கூர்மை எழுந்தது. களிப்பாவை கோரி அழுதுசீறும் சிறுமி போலவும் மானுடம் மேல் காழ்ப்புகொண்ட முதுமகள் போலவும் ஒரேதருணத்தில் தோன்றினாள். “நான் எதையும் பெறாமல் கிளம்பிச்செல்கிறேன் என எண்ணி நீ ஆறுதல் கொண்டாய் அல்லவா?” என்றாள். கர்ணன் “நீங்கள் துன்புற்று என்னையும் துன்புறுத்த விழைகிறீர்கள்” என்றான். “நான் உன்மேல் தீச்சொல்லிடுவேன் என்றபோது நீ அகத்தே ஏளனம் கொண்டாய் அல்லவா?” என அவள் கேட்டாள்.

கர்ணன் துயரம் நிறைந்த விழிகளால் நோக்க “நீ அவ்வாறுதான் எண்ணுவாய். ஏனென்றால் நீ பெண்களின் உள்ளத்தை அறிந்ததே இல்லை. உன் இரு துணைவியரும் உன்னை இருவகையில் துறந்தனர். உன் வளர்ப்பன்னையுடன் உனக்கு உளஒருமை இல்லை. நீ விழையும் பெண் உன்னை கடும்வெறுப்புடனன்றி எண்ணமுடியாதவள்” என்றாள். கர்ணனின் உடல் நடுங்கத் தொடங்கியது. அவன் உதடுகள் சொல்லின்றி மெல்ல அசைந்தன. “ஏனென்றால் நீ உன்னைப் பற்றி அன்றி எதையும் எண்ணியதில்லை. நீ உன் தோழனுக்காக இவ்வாறு நிலைகொள்வதாக சொல்லிக்கொள்கிறாய். அது பொய். நீ எண்ணுவதெல்லாம் உன்னைப்பற்றி மட்டுமே.”

கர்ணன் கால் தளர்ந்தவன்போல் சற்றே பின்னடைய குந்தி திரும்பி அவனை நோக்கி ஓர் அடி எடுத்து வைத்தாள். “நீ பிறனைப் பற்றியும் எண்ணுபவன் என்றால் சொல், எத்தனை முறை உன் மைந்தரைப் பற்றி எண்ணினாய்? என் குருதியிலெழுந்த உன் மைந்தரை சூதர்களென அடிமைப்பணிக்கு அனுப்பியபோது ஒருநாளேனும் அவர்களின் உள்ளத்தைப் பற்றி எண்ணினாயா? எண்ணியிருக்கமாட்டாய்” என்று குந்தி சொன்னாள். “முலையூட்டாத அன்னையை குழந்தை வெறுப்பதுபோல் தன்னில் ஒரு பகுதியை உருக்கி தனக்கு அளிக்காத ஆண்மகனை பெண் வெறுக்கிறாள். நீ உன்னில் ஒரு துளியையும் விட்டதில்லை. இரும்பில் வார்த்த சிலை என இத்தனை காலமும் இருந்திருக்கிறாய். நீ என்னை புரிந்துகொள்ளமாட்டாய் என நானும் அறிந்திருந்தேன். ஏனென்றால் நீ எவரையுமே புரிந்துகொள்ளவில்லை.”

கர்ணன் மெல்ல முனகினான். குந்தி “அறிந்துகொள், நீ இந்த குருக்ஷேத்ரக் களம்விட்டு மீளமாட்டாய். ஏனென்றால் நீ எவரேனும் ஆகுக, நீ பொருதிக்கொண்டிருப்பது இந்த யுகத்தின் தலைமகனிடம். நாளைய யுகத்தின் படைப்பாளனிடம். நீ வெல்லவே முடியாது. எவரும் வெல்லமுடியாது. எதுவும் தடைநிற்க இயலாது. நான் பதைப்பது அவன் வெல்லவேண்டும் என்பதற்காக அல்ல. அவன் வெல்வான். என் தவிப்பு அந்த வேள்வியில் என் மைந்தர் அவிப்பொருளாகிவிடக்கூடாது என்பதற்காக. ஆனால் நீ அழிவாய். இந்த குருக்ஷேத்ர மண்ணில் நெஞ்சுடைந்து விழுவாய். அப்போது அறிவாய், நீ ஒருநாள்கூட வாழவில்லை என. அன்பையே நீ அறிந்ததில்லை. மைந்தரின்பத்தையும் அறியவில்லை. உன் வாழ்நாளெல்லாம் நீ உன்னையே சமைத்துக்கொண்டிருந்தாய்” என்றாள்.

“தருணங்களுக்கேற்ப உருமாறியும் உருப்பெற்றும் கடந்துவருவதே மானுட இயற்கை. நீ அத்தனை தருணங்களிலும் உன்னை மாறாது அமைத்துக்கொண்டாய். ஆகவே தளிர்க்காத பூக்காத கல்மரமாக நின்றாய்” என்று குந்தி சொன்னாள். “உன்னைப்போலவே துணியை ஊசி என வாழ்க்கையை கடந்துசென்றவர் பீஷ்மர். அவர் அதோ அம்புப் படுக்கையில் கிடக்கிறார். அத்தனை அம்புகளும் அவரே அவர்மேல் எய்துகொண்டவை. ஒவ்வொன்றையாக எண்ணி எண்ணி உணர்ந்து நாள்கணித்து வான்நோக்கி படுத்திருக்கிறார். எண்ணிக்கொள், உனக்கும் அதுவே இறுதி. குருக்ஷேத்ரத்தில் வந்து முடிவதற்காகவே நீ இதுவரை கடந்துவந்தாய்.”

குந்தி தன் சொற்களின் விசையால் உடல் இறுக இரு கைகளையும் விரல்கோத்து பற்களைக் கடித்தபடி அவனை பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் உடல் மெல்ல நடுங்கிக்கொண்டிருப்பதை அவன் கண்டான். பின்னர் பெருமூச்சுடன் அவள் தணிந்தாள். விழிதிருப்பி குடில்சுவர்களை நோக்கினாள். “இங்கே எவரோ இருக்கிறார்கள்” என்றாள். அவன் பெருமூச்சுடன் தானும் தணிந்தான். இருவரும் அவர்கள் சென்ற அந்த உச்சத்திலிருந்து இரண்டு வழிகளினூடாக மெல்ல இறங்கினார்கள். மீண்டும் அவன் பெருமூச்சுவிட்டபோது குந்தியும் நீள்மூச்செறிந்தாள். “நீள்பொழுதாகிறது. எனக்காக தேர் காத்திருக்கும்” என்று அவள் சொன்னாள்.

நிலைமீண்டு அவள் உள்ளம் அனைத்தையும் தொட்டுத்துழாவத் தொடங்கிவிட்டதை அவன் உணர்ந்தான். எண்ணியிராத கணத்தில் “நீ உன் தோழனுக்கு அளித்த சொல் என்ன?” என்றாள். “நான் கூறிவிட்டேன், அன்னையே” என்றான். “மிகச் சரியாக சொல். உன் தோழனுக்கு நீ அளித்த சொல் என்ன?” என்றாள். “என்ன?” என்றான் கர்ணன். “துரியோதனனுக்கு நீ என்ன சொல்லுறுதியை அளித்தாய்? இறுதியாக நீ அவனிடம் சொன்ன சொற்கள் என்ன?” என்றாள் குந்தி. கர்ணன் “அர்ஜுனனை களத்தில் வெல்வேன். களம்வென்று அவர் மும்முடிசூடி அஸ்தினபுரியின் அரியணையில் அமரும்படி செய்வேன் என்று வாளுருவி வஞ்சினம் உரைத்தேன்” என்றான்.

“நன்கு நோக்கு. அர்ஜுனனை கொல்வேன் என்று மட்டுமே நீ கூறியிருக்கிறாய்” என்று குந்தி சொன்னாள். கர்ணன் குழப்பத்துடன் “ஆம், ஆனால் அவரை அரியணை அமர்த்துவேன் என்று சொன்னபோது நான் எண்ணியது…” என தொடங்க அவள் கையமர்த்தி “நீ சொன்ன சொற்களுக்கு மட்டுமே பொறுப்பாவாய்” என்றாள். “ஏனென்றால் அத்தருணத்தில் அச்சொற்களை சொல்ல வைப்பவை தெய்வங்கள். சொற்களின் பொருளையும் அவையே வகுக்கின்றன.” கையை நீட்டி “நீ அர்ஜுனனை மட்டுமே கொல்வேன் என அவனிடம் சொல்லுறுதி அளித்தாய். ஆகவே பிற நால்வரையும் கொல்ல மாட்டேன் எனும் சொல்லை எனக்களி” என்றாள்.

“அன்னையே…” என்றான் கர்ணன். “இனி உன் தோழனின் பெயரைச் சொல்லி நான் கோருவதை நீ ஒழிய இயலாது. தோழனுக்கு நீ அர்ஜுனனை மட்டும்தான் கொல்வேன் என்று சொல்லளித்திருக்கிறாய் என நீயே சொன்னாய்” என்றாள் குந்தி. கர்ணன் திகைத்து உடலெங்கும் பரவிய பதற்றத்துடன் நிற்க நீட்டிய கையை அசைத்து “சொல்லுறுதி அளி… உன் உள்ளத்தில் சற்றேனும் என்னை கருதினாய் என்றால் உன் சொல் எழுக!” என்றாள். அவன் எண்ணமற்றவன்போல விழி வெறித்திருக்க “அன்னையே…” என்றான். அவள் அவன் கையைப்பற்றி தன் கைமேல் வைத்து “சொல்” என்றாள். அவன் கை நடுங்கியது. அது வெம்மைகொண்டிருந்தது. குந்தி “சொல்… உன் நாவால் சொல்” என்றாள். “ஆம், சொல்கிறேன்” என்றான். “அர்ஜுனனை அன்றி பிற நால்வரையும் எந்நிலையிலும் கொல்லமாட்டேன் என்று சொல்” என்றாள் குந்தி. அவன் “அர்ஜுனனை அன்றி பிற நால்வரையும் எந்நிலையிலும் கொல்லமாட்டேன்” என்றான்.

குந்தி அவன் கையை விடாது பற்றிக்கொண்டு “அர்ஜுனனை கொல்ல முயல்வாய் என்றுதான் நீ சொல்லளித்திருக்கிறாய்” என்றாள். அவன் சொல்ல வாயெடுப்பதற்குள் “அதை நீ கடைக்கொள்ளலாம்” என்றாள். அவன் கை நடுங்கிக்கொண்டிருந்தது. “நீ உன்னிடமிருக்கும் நாகபாசத்தால் அர்ஜுனனை கொல்ல முயல்வாய் அல்லவா?” என்றாள். “ஆம்” என்று கர்ணன் சொன்னான். “அதில் காண்டவக்காட்டிலிருந்து தப்பிய தட்சன் என்னும் நாகம் அவனுக்காக காத்திருக்கிறது என்றார்கள். என்றேனும் பழிதீர்க்கும் பொருட்டு உன் ஆவநாழியில் உறங்குகிறது அது” என்றாள் குந்தி. கர்ணன் “அதிலிருந்து அவன் தப்ப முடியாது… மூவுலகில் எங்கு சென்று ஒளிந்தாலும் அது அவனை தேடிவரும். எனென்றால் அது அவனே எஞ்சவிட்ட நஞ்சு” என்றான்.

“ஒவ்வொருவரும் அவ்வாறு எதையோ விதைக்கிறார்கள்” என்று குந்தி சொன்னாள். கர்ணன் “ஆம்” என்றான். அவள் சொல்லவருவதென்ன என அவன் எண்ண முயன்றான். ஆனால் அவளுடைய அண்மையும் அருகிலெழுந்த நீர்விழிகளும் அவனை உளம்குவிய முடியாமல் ஆக்கின. குந்தி “அதை நீ அவன்மீது ஏவாதொழிய இயலாது. ஆனால் உன் தோழனுக்களித்த சொல் அதை நீ அவன்மேல் ஏவுவாய் என்றுதான். அதை நீ மீள மீள ஏவுவாய் என்றல்ல” என்றாள் குந்தி. “நீ அர்ஜுனனை வெல்வாய் என்ற சொல்லின் பொருள் அந்த அம்பை ஏவுவாய் என்று மட்டுமே. ஏவுக! ஆனால் ஒருமுறை மட்டுமே ஏவுக!” என்று தொடர்ந்தாள். “இல்லை” என்று கர்ணன் சொல்ல அவள் இடைமறித்து “உன் தோழனுக்கு அளித்த சொல்லை மறுக்காமல் நீ எனக்களிக்கக் கூடியது இது ஒன்றே. ஒருமுறை மட்டும் அரவம்பை அர்ஜுனன் மீது ஏவுக! பிறிதொருமுறை அதை அவன் மீது ஏவாதொழிக!” என்றாள்.

“ஆனால் அது எவ்வாறு…” என்று கர்ணன் முனகலாகக் கேட்க “நீ அளித்த சொல்லை மீறாது எனக்களிக்கும் கொடை அது ஒன்றுதான். நீ அதை எனக்கு அளித்தாகவேண்டும். இதை ஒழிந்தாயெனில் நீ என்னை புறந்தள்ளுகிறாய் என்றே பொருள்” என்றாள் குந்தி. கர்ணன் சலிப்புடன் சென்று தன் பீடத்தில் அமர்ந்தான். குந்தி அவனை அணுகி “அதில் எவ்வகையிலும் சொல் மீறல் இல்லை. உன் சொல்லுக்கு நீ முழுமையாகவே இருக்கிறாய்” என்றாள். “அந்நாகபாசம் எந்நிலையிலும் எவரையும் தப்பவிடாது என்றால் அதை மறுமுறை செலுத்தவேண்டிய தேவைதான் என்ன?” கர்ணன் “அது வில்லில் இருந்து எழுந்தால் குறிபார்க்கப்பட்டவரை கொல்லாது மீளாது, ஐயமே தேவையில்லை” என்றான். “பிறகென்ன?” என்று குந்தி கேட்டாள். “நீ அதை அவன்மேல் ஏவினால் அவன் தப்ப முடியாது.”

“அவ்வாறெனில் அச்சொல்லுறுதி உங்களுக்கு எதற்காக?” என்றான் கர்ணன். “உனக்காகத்தான். முதல்முறை நீ அதை ஏவுவது உன் தோழனுக்கு நீ அளித்த சொல்லுக்காக. அப்பழி உன்னை மறுபிறவிகளில் தொடராது. ஆனால் நீ அதை மீண்டும் செலுத்தினால் உன் தனிவஞ்சம் அதில் இருக்கும். அதனூடாக அவன் இறந்தால் உனக்கு அவ்வுலகிலும் இடமிருக்காது. உன் கொடிவழியினரிலும் அப்பழி நீடிக்கும்.” கர்ணன் குழம்பிய விழிகளுடன் நோக்கினான். “நான் எண்ணுவது உன்னைப்பற்றி மட்டுமே” என்றாள் குந்தி. கர்ணன் பெருமூச்சுடன் “அவ்வாறே ஆகுக!” என்றான். “இது நீ எனக்களிக்கும் சொல்லுறுதி. அரவம்பை ஒருமுறைக்குமேல் நீ ஏவமாட்டாய்” என்றாள் குந்தி. “ஆம்” என்று கர்ணன் சொன்னான்.

குந்தி நீள்மூச்செறிந்து “நான் எண்ணிவந்தது நிகழவில்லை. ஆனால் எனக்கென இவ்வளவேனும் நீ உளம்கனிந்ததில் நிறைவுகொள்கிறேன்” என்றாள். கர்ணன் அவளையே நோக்கிக்கொண்டிருந்தான். பின்னர் “அன்னையே, நான் ஒன்று கேட்கலாமா?” என்றான். “சொல்” என்றாள். “நீங்கள் சொன்னீர்கள், நான் கல்மரம் என்று.” குந்தி சிலகணங்கள் அவனை நோக்கியபின் “சினத்தால் அவ்வாறு சொன்னேன், சினமில்லையேல் சொல்லியிருக்க மாட்டேன். ஆனால் அது உண்மை” என்றாள். “என்னை நீங்கள் சந்தித்ததே இல்லை. ஆனால் மிகமிக அணுக்கமாக என்னை அறிந்திருக்கிறீர்கள்” என்று கர்ணன் சொன்னான். “அதிலென்ன வியப்பு? நான் உன்னை உளம்தொடர்ந்துகொண்டே இருந்தேன்” என்றாள் குந்தி.

“அதனால்தான் உங்கள் வெறுப்பும் அத்தனை கூர்கொண்டிருந்தது. அச்சொற்களிலிருந்து நான் இனிமேல் மீளவே முடியாதென எண்ணுகிறேன்” என்று கர்ணன் சொன்னான். “சொல்க, அன்னையே! நான் தன்மையநோக்கும் ஆணவமும் கொண்டவன் என்றீர்கள். முற்றிலும் உண்மை அது. நான் ஏன் அவ்வாறு இருக்கிறேன்?” குந்தி “உன் இயல்பு அது” என்றாள். “அன்னையே, என்னை முலையூட்டி வளர்த்த ராதையின் உள்ளம் என்னுடன் இல்லை. என்னை இன்றும் அணைத்துக்கொள்கிறார். அமுதூட்டுகிறார். ஆனால் அவர் என்னைத் தொட்டால், என் விழிகளை அண்மையில் அவர் விழிகள் சந்தித்தால் அறிகிறேன் அவர் அகன்றுவிட்டிருப்பதை” என்று கர்ணன் சொன்னான்.

“அது இயல்புதான். வைரம் எங்கும் முழுமையாக ஒட்டாது என்று சொல்வார்கள்” என்றாள் குந்தி. கர்ணன் “நான் ஏன் இப்படி ஒருதுளியும் பிறழாதவன் ஆனேன்? நீங்கள் என்னை வளர்க்காததனாலா?” என்றான். “நான் சில தருணங்களில் எண்ணிக்கொள்வதுண்டு. பாலைநிலத்து விதைகளைப்போல உடையாத ஓடு கொண்டவன் ஆகிவிட்டேன் என்று.” குந்தி “நீ எண்ணித் துயருறவேண்டும் என்றால் இவ்வழியே செல்லலாம். ஆனால் அது உண்மை அல்ல. உண்மை மிகச் சிக்கலானதாகவே இருந்தாகவேண்டும் என்பதில்லை. அது மிகமிக எளிதானதாகவே இருக்கலாம். உச்சநிலை மெய்மைகள் மிகமிக உலகியல்சார்ந்ததாக, மிக அன்றாடத்தன்மை கொண்டதாக இருக்கலாம். அது பெண்களுக்கே புரியும். ஆண்கள் அடுமனைக்குச் செல்லவே ஏழுமலை கொண்ட காட்டுப்பாதையை தெரிவுசெய்வார்கள் என நாங்கள் பெண்கள் சொல்லிக்கொள்வதுண்டு” என்றாள்.

“சொல்க, என் இயல்பு ஏன் இவ்வாறாயிற்று?” என்று கர்ணன் மீண்டும் கேட்டான். “ஏன் நீ அர்ஜுனனை உள்ளூர அருவருக்கிறாய்?” என்று குந்தி கேட்டாள். “அன்னையே…” என்றான் கர்ணன். “சொல்க” என்றாள் குந்தி. கர்ணன் “நான் அருவருக்கவில்லை” என்றான். “சரி, இவ்வண்ணம் கேட்கிறேன். நீ அவனுடன் களம்பொருதுகையில் எந்தச் சொல்லால் பழித்துரைத்தாய்?” கர்ணன் சற்று தயங்கி “பேடி என” என்றான். “ஆம், அதுவே உன் அருவருப்பு” என்றாள் குந்தி. அவன் தலைகுனிந்து “ஆம், அவனிடமிருக்கும் பெண்மையை நான் வெறுக்கிறேன்” என்றான். குந்தி “அந்த ஒவ்வாமையை இளைய யாதவனிடமும் அடைகிறாயா?” என்றாள். “ஆம், அதை என்னால் தவிர்க்கவே முடியவில்லை” என்றான்.

குந்தி “நீ துரியோதனனுடன் ஏன் அணுக்கமாக உணர்கிறாய்?” என்றாள். கர்ணன் “நான் இதை எவ்வண்ணம் சொல்வது?” என்றான். “அதையும் இவ்வாறே எண்ணுக! நீ துரியோதனனை எப்போது வெறுப்பாய்?” கர்ணன் “இப்படி கேட்டால்…” என்று சொல்ல “நீ வினவியமைக்கு விடை தேடுகிறேன். சொல்!” என்றாள். “மிக அரிதாகத்தான்” என்றான் கர்ணன். “ஒரு தருணத்தை நினைவுகூர்க!” என்றாள் குந்தி. “அவன் தன் மகள் கிருஷ்ணையை அருகணைத்து இன்சொல் பேசும் ஒரு தருணத்தில் அருகிருந்தேன். அப்போது அவன் முகத்திலும் மொழியிலும் கூடிவந்த மென்மையை என்னால் தாளமுடியவில்லை. என் ஒவ்வாமையை வெளிக்காட்டாது அறையிலிருந்து அகன்றேன்” என்றான் கர்ணன்.

“அதுவேதான். மைந்தா, நீ வெறுப்பது பெண்மையின் இயல்புகளை” என்று குந்தி சொன்னாள். “ஏனென்றால் நீ முழுமையான ஆண்மகன். உன் உடலே உன்னை அவ்வாறு ஆக்குகிறது. உன் தோள்களும் கைகளும் நெஞ்சும் முற்றிலும் நிகர்நிலை கொண்டவை. உன் ஒவ்வொரு உறுப்பும் பிழையிலா முழுமைகொண்டது. உன் ஆண்மைப்பேரெழில் உன் தெய்வத்தின் கொடை. உன்னை நோக்குபவர் அனைவரும் விழிமலைப்பது அதனால்தான். நீ களமெழுந்தால் படைப்பெருக்கு கொந்தளித்து எழுகிறது. ஒவ்வொரு ஆண்மகனும் ஆகவிழையும் வடிவம் நீ. பல்லாயிரம் பெண்கள் உன்னை நோக்கி நோக்கி விழிநிறைத்திருப்பார்கள். ஆனால் என்னைப்போல் எவரும் உன்னை கண்களால் வழிபட்டிருக்க மாட்டார்கள்.”

“ஆனால் அந்த முழுமை மானுடருக்குரியதல்ல” என்று குந்தி தொடர்ந்தாள். “அந்த முழுமையே ஒரு குறைதான். அது ஊசலின் ஒருதிசை ஆட்டம்போல. ஆணில் பெண்ணும் பெண்ணில் ஆணுமென்றே மானுட உடலும் உள்ளமும் நிறைவுகொள்கின்றன. அர்ஜுனனிடம் இருக்கும் பெண்மையின் கூறுகளால்தான் அவன் பெண்களுக்கு அணுக்கமாகிறான். பெண் ஆணை அணுகுவது அவனிடமிருக்கும் பெண்மையினூடாகவே இயலும். அவனைப்போன்றவனே இளைய யாதவனும். நீ மூத்த கௌரவனால் கவரப்படுவது அவனும் உன்னைப்போல் வெறும் ஆண்மை என்பதனால்தான். உங்களுக்கு மறுதரப்புகள் தெரிவதில்லை. உள்ளத்தில் நெகிழ்வுகளும் பிசிறுகளும் இல்லை. நீங்கள் சிற்பங்களைப்போல மாறா முகமும் உணர்வும் கொண்டவர்கள்.”

“உன்னை பெண்கள் நோக்கி நோக்கி நெஞ்சழிவார்கள். அவர்கள் உன்னை வந்தடையவே இயலாது. எவ்வாறேனும் உன்னை அணுகுபவர்கள் உன்னால் எரித்தழிக்கப்படுவார்கள். கதிரவனுக்கும் மலர்களுக்குமான உறவைப்போல” என்று குந்தி சொன்னாள். கர்ணன் பெருமூச்சுவிட்டான். “நீ அவளை விரும்பியதுகூட அவளிலுள்ள ஆண்மையின் கூறைக் கண்டுதான்” என்றாள் குந்தி. “அன்னையே, நாம் அதைப்பற்றி இனிமேல் பேசவேண்டாமே” என்று கர்ணன் சொன்னான். “மெய்யாகவே இங்கு வருகையில் நான் எண்ணிவந்தது அதுதான். அவளும் நீயும் நிறைவடையக்கூடும் என. அவளை அடைந்தால் உனக்கு மூத்த கௌரவன் தேவைப்படமாட்டான் என்று” என்றாள் குந்தி. “வேண்டாம், அன்னையே” என்றான் கர்ணன். “சரி” என குந்தி சொன்னாள். கர்ணன் மீண்டும் பெருமூச்சுவிட்டான். ஆனால் அவன் முகம் தெளிவடைந்திருந்தது.

குந்தி எழுந்துகொண்டு “நான் கிளம்புகிறேன். இத்தனை பொழுதாகுமென நான் எண்ணவே இல்லை” என்றாள். கர்ணன் சிரித்தபடி “அன்னையே, பெண்கள் அணுகமுடியாதவனாகிய என்னை நீங்கள் எப்படி இத்தனை எளிதாக அணுகி வென்றீர்கள்?” என்றான். குந்தி நகைத்தபோது அவளுடைய வெண்பல்நிரை தெரிய அவள் இளமையின் அழகு கொண்டாள். “அது அவ்வாறுதான். ஆண்மைமுழுத்தவர்கள் பெரும்பாலும் அன்னையரின் குழவிகள்” என்றாள். கர்ணன் நகைத்து “விந்தைதான்” என்றான். “நீ என் மடியில் வளர்ந்திருந்தால் உலகையே வெல்லும் அடிமை ஒருவனை பெற்றவளாக இருந்திருப்பேன்” என்றாள். உளம்நெகிழ்ந்து அவன் தலையில் கைவைத்து “சிறப்புறுக! மேன்மை கொள்க!” என வாழ்த்தினாள்.

கர்ணன் அவள் கால்தொட்டு சென்னி சூடி “இங்கே என் வாழ்வு நிறைவடைகிறது, அன்னையே” என்றான். அவள் “ஏன் இப்படி நெடுமரம்போல் ஆனாய் என்று வியக்கிறேன்” என்று அவன் தோளை அறைந்தாள். அவன் வெடித்து நகைத்து “நானும் பல தருணங்களில் அதை எண்ணிக்கொள்வதுண்டு. பெரும்பாலான மானுடரை அவர்களின் தலைமுடியைக் கொண்டே அடையாளம் காண்கிறேன்” என்றான். குந்தி வாய்பொத்தி சிரித்து “கீழிருந்து நோக்கினால் உன் முகவாய் மிகத் தொலைவில் விந்தையாகத் தெரிகிறது” என்றாள். அவன் வெடித்துச் சிரிக்க அவளும் உடன் இணைந்து சிரித்தாள். பலமுறை முயன்றும் இருவராலும் சிரிப்பை நிறுத்தமுடியவில்லை. பின்னர் குந்தி கண்ணீர் வழிய ஆடைநுனியால் வாய்மூடி சிரிப்பை அடக்கி “நான் செல்லவேண்டும்” என்றாள். கர்ணன் சிரிப்பின் மூச்சிளைப்புடன் “இவ்வண்ணம் நகைத்து நெடுநாட்களாகின்றது” என்றான். “ஆம், நானும் சிரிப்பதேயில்லை” என்று அவள் சொன்னாள்.

அத்தருணத்தின் உளவிடுதலையையே சிரிப்பாகக் கொண்டோம் என கர்ணன் நினைத்துக்கொண்டான். பொருளில்லாத சிரிப்புதான் மெய்யாகவே சிரிப்பு போலும். அவள் மீண்டும் ஒருமுறை அவன் தலைமேல் கையை வைத்து வாழ்த்தியபின் “விடைகொள்கிறேன்” என்றாள். அவன் அவளுடன் நடந்தான். அவள் கை இயல்பாக நீண்டு அவன் கையை பற்றியது. அவள் கை அவனுடைய பெரிய விரல்களுக்குள் சிறுமியின் கை போலிருந்தது. கைகளைப் பற்றியபடி அவர்கள் குடிலை விட்டு வெளியே வந்தனர். “நான் விடைகொள்கிறேன்” என்று குந்தி மீண்டும் சொன்னாள். அவள் குரல் மிகத் தாழ்ந்திருந்தது. “சென்றுவருக, அன்னையே!” என்றான் கர்ணன்.

அவள் தன் கையை அவன் கைகளிலிருந்து விடுவித்துக்கொண்டு மெல்ல நடந்து சேடியை அடைந்தாள். சேடியிடம் ஒரு சொல் உரைத்துவிட்டு நடந்தாள். எத்தனை மெலிந்திருக்கிறாள், எவ்வளவு சோர்ந்திருக்கிறாள் என்று கர்ணன் எண்ணிக்கொண்டான். அவள் திரும்பி நோக்கியபோது அந்த இருளிலும் அவள் விழிகளை சந்திக்க முடிந்தது. மீண்டும் திரும்பி நோக்கியபோது நோக்கில்லாமலேயே விழிகளை சந்திக்க முடிந்தது. அவளுடைய வெண்ணிற உருவம் இருளில் மறைந்த பின்னரும் விழியில் சற்றுநேரம் எஞ்சியிருந்தது.

முந்தைய கட்டுரைபேருருப் பார்த்தல்
அடுத்த கட்டுரைபுதிய வாசகர்களின் கடிதங்கள்