புதிய வாசகர்களின் கடிதங்கள்

dob

அன்பு ஜெ

டிசம்பர் 2013ல் இருந்து தினமும் உங்கள் வலைத்தளம் படித்து வருகிறேன்.

கொற்றவை காடு விசும்பு இன்றைய காந்தி இந்திய சிந்தனை புத்தகங்கள் வாங்கி வைத்துள்ளேன் :) இன்றைய காந்தி படித்து முடித்து விட்டேன். அந்த வாசிப்பு தந்த திறப்பு எனது அன்றாட வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கம் அதிகம்.

தினமும் உங்கள் வலைத்தளம் படித்து நான் சிந்திக்கும் முறையில் நிறைய நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது.

வெண்முரசு இது வரை அத்தனை அத்தியாயங்களும் தினமும் காலையில் முதல் வேலையாக படித்து வருகிறேன். புரிந்தாலும் புரியாவிட்டாலும்:)

தற்போது ராஜ்கௌதமனின் பண்பாட்டு வரலாற்று பார்வை தொடர் தரும் திறப்புகள் அநேகம்.

தினமும் நூற்றுக்கணக்கான கோடிகளில் நிகழும் பண பரிமாற்றங்களை கண்காணிக்கும் அதி உயர் அழுத்தம் தரும் பணியில் உங்கள் எழுத்து தரும் ஆசுவாசமும் புன்னகையும் கொஞ்சமல்ல.

எனது கடைசி காலத்தில் உங்கள் எழுத்து எனக்கு துணையாக இருக்கும் என தோன்றுகிறது. அதனாலேயே உங்களின் நிறைய புத்தகங்கள் படிக்காமல் தள்ளி போடுகிறேன்.

நன்றி

ஸ்ரீதர் ரகுநாதன்

அன்புள்ள ஸ்ரீதர்

நீங்கள் நாளும் வாசித்தாலும் பல ஆண்டுகளுக்கு நான் எழுதுவது போதும் என நினைக்கிறேன்.

தொடக்கத்தில் நாம் ஒரு பெரிய பரவசத்துடன் வாசிக்கிறோம். புதிய ஓர் அறிவுலகுக்குள்ளோ கலையுலகுள்ளோ நுழைகையில் உருவாவது அது. மெல்ல மெல்ல அதில் நாம் நமக்குரிய பகுதிகளை கண்டடைகிறோம்

தொடர்ந்து வாசியுங்கள்

ஜெ

அன்புள்ள ஜெ

சமீபமாக உங்கள் புனைவுலகுக்குள் நுழைந்தவன் நான். இப்போதுதான் வெறியுடன் உங்கள் தளத்தில் வெளிவந்துகொண்டிருக்கும் படைப்புகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன். ஒன்றிலிருந்து ஒன்று என்று சென்றுகொண்டே இருக்கும் கட்டுரைகளை வாசிக்கையில் ஒரு முழுநூலையே வாசித்த அனுபவம் அமைகிறது. அத்துடன் தொடர்ச்சியாக இதில் வாசகர்கள் உங்களை ஏற்றும் மறுத்தும் பேசியிருப்பதை வாசிக்கையில் சமகால அறிவுலகச் செயல்பாட்டை அருகே காணும் அனுபவம் ஏற்படுகிறது.

அதேசமயம் வெளியே நடந்துகொண்டிருக்கும் பேச்சுக்களையும் கவனிக்கிறேன். மிகப்பெரும்பாலும் சினிமாக்கள். கொஞ்சம் அரசியல். அரசியல்கூட அரசியல்கொள்கைகள் சார்ந்து அல்ல. வெறும் பற்று. எதிர்த்தரப்பை வசைபாடுதல். இந்தத் தளத்தில் இலக்கியம் மதம் பண்பாடு பற்றி நிகழ்ந்திருக்கும் இவ்வளவு பெரிய விவாதமும் இத்தனை கட்டுரைகளும் மெய்யாகவே ஆச்சரியமளிக்கின்றன. தமிழில் இது ஒரு புதுமையான தனித்த உலகம் என்ற எண்ணம் உருவாகியது.

நான் சிலகட்டுரைகள் கதைகள் எழுதியிருக்கிறேன். எழுதும் ஆர்வம் உண்டு. உங்கள் எழுத்துக்களை வாசிக்கையில் நீங்கள் உருவாக்கிய சவாலை எதிர்கொள்ளவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.

நன்றி

எஸ்.ஆர்.விஜயராகவன்

அன்புள்ள விஜயராகவன்

அந்த அறைகூவலை ஏற்றுக்கொள்ளுதல் நல்ல விஷயம்தான். வாழ்த்துக்கள்.

ஜெ

அன்புள்ள ஜெ

நான் இப்போதுதான் உங்கள் தளத்தை வாசிக்க ஆரம்பித்தேன். 2.0 படத்தின் எழுத்தாளராகவே உங்களை அறிமுகம் செய்துகொண்டேன். அப்போது அந்தக்கட்டுரையை சங்கர் அவர்கள் இணைப்பு தந்திருந்ததால்தான் உங்கள் தளம் அறிமுகமாகியது. இப்போது நாளொன்றுக்கு நான்குமணிநேரம் வீதம் இதை வாசித்துக்கொண்டிருக்கிறேன். இலக்கியம் பற்றி எல்லாம் எனக்கு பெரிதாக எதுவும் தெரியாது. இன்றைக்கு என் மனம் முழுக்க இலக்கியம்பற்றிய நினைவுகள்தான். நிறைய வாசிக்கவேண்டும் நிறைய ஆராயவேண்டும் என்ற வெறி எழுந்துள்ளது. இவ்வளவு பெரிய உலகம் இங்கே உள்ளது, எதையும் அறியாமல் சிமிழுக்குள் வாழ்ந்துவிட்டோமே என்ற எண்ணம் ஏற்படுகிறது. மிகப்பெரிய குற்றவுணர்ச்சி. ஆனால் வாசித்துவிடுவேன் என்றும் தோன்றுகிறது

சிபி சண்முகம்

அன்புள்ள சிபி

தமிழில் எவரும் தன்னியல்பாக அறிவுலகுக்குள் வர முடியாது. அதற்கான மரபான பாதைகளே இல்லை. அனைவருமே உங்களைப்போல வழிதவறி வந்தவர்களே.

வாழ்த்துக்கள்

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-29
அடுத்த கட்டுரைபிளெமிங்கோ – கடிதங்கள்