ஆயிரங்கால்களில் ஊர்வது

pon

அன்புள்ள அப்பா,

என் பெயர் பொன்மணி, சொந்த ஊர் மதுரை, தற்போது குக்கூ காட்டுப்பள்ளியில் இருக்கிறேன். என் அண்ணன் பெயர் அருண்குமார், பாசமலர் அண்ணன் தங்கை போல நல்ல பாசம் எங்களுக்கு. பால்ய வயதில் அருண் தான் எனக்கு புத்தகங்களை அறிமுகப்படுத்தியது. ஓரளவு கதை, நாவல் என வாசித்தலில் இருந்தபோது அருண் தந்த “யானை டாக்டர்” எனக்குள் பெரும் மாற்றம் ஏற்படுத்தியது. சொற்கள், தத்துவம், வர்ணனைகளின் கோர்வை பிடிபட்டது. பிறகு உங்கள் எழுத்துக்களை தேடி வாசிக்க துவங்கினேன். வணங்கான், ஓலைச்சிலுவை, பெருவலி, சோற்றுக்கணக்கு வாசித்த பின் தன்னளவில் பிரதி ஒரு மனிதன், சமூகம் அவனுக்குள் திணிக்கப்படும் அபத்தங்களை மீறி அறம் மீறாமல் தன்மகிழ்வு கொள்வதை தங்களின் இக்கதைகளின் வழி புரிந்துகொண்டேன். மிகவேகமாக வாசிக்கும் பழக்கமுடைய நான் உங்கள் படைப்புகளை வாசித்தபின் சொற்களுக்கும் வர்ணனைகளுக்கும் நேரம் கொடுத்து வாசிக்கின்றேன். அஃது தரும் பரவசம் எல்லையில்லாதது.

பின்பொருநாள்  சிவகுருநாதன் அண்ணனின் “நூற்பு” (கைநெசவாளர்களின் கூட்டுறவு) துவக்கவிழா குக்கூவில் நடைபெற்றது. நானும்  அருணும் குக்கூவிற்கு  முதன்முதலில் வந்தோம். பிறகு குக்கூவில் தொடர் சந்திப்புகளும், குக்கூ நண்பர்களுடனான உரையாடல்களும் வாழ்வனுபவங்களை வேறுதளத்தில் பார்க்க வைத்தது. சிவராஜ்  அண்ணன் அனுப்பும் உங்கள் வலைதள லிங்குகள் தொடர்ந்து வாசித்தோம் நானும் அருணும். காந்தியின் மீதிருந்த காரணமற்ற வெறுப்பு முற்றிலும் அகன்றது. காந்தியத்தை வலுவாக பற்றிக்கொள்ள  அறம் சொல்லின உங்கள் சொற்கள்.

குலதெய்வ வழிபாடுகளுக்காக ஆண்டுக்கு 2 நாட்கள் மட்டுமே பார்க்கும் கிராமத்தின் வேறுபரிமாணம் குக்கூ இருக்கும் புளியானூர் கிராமத்தில் இருந்தபோது விளங்கியது. இங்கு(புளியானூரில்) பெருமளவு பெண்கள் தங்கள் குழந்தைகளை உறவினர்களிடம் விட்டு பெங்களூர், திருப்பூர், ஈரோடு போன்ற ஊர்களில் வேலைக்கு செல்கின்றனர். இது கேள்வியுற்ற போது தான் அய்யலு ஆர் குமரன் அண்ணா எடுத்த ஒரு காணொளி பார்த்தேன். அது ஜவ்வாது மலைகிராம குழந்தையோடு உரையாடுவது போல இருக்கும், அதில் ஆறு வயதே ஆன அச்சிறுவன் அவன் அப்பா அம்மா பெங்களூரில் வேலை செய்வதாகவும், வருடத்திற்கு தீபாவளி அன்று மட்டுமே பார்ப்பேன் என்றான். ஆடை வடிவமைப்பியல் படித்த நான்,  என் கல்வி இந்த கிராமத்திற்கு என்ன உதவி செய்யும் ?  குடும்பப் பொருளாதார சிக்கலால் ஒரு தாய் தன் குழந்தையை விட்டுச்செல்லாமல் இருக்க என்னால் என்ன செய்ய முடியும்? என்ற வினாக்களுக்கு விடையாய் துவங்கியது, புளியானூர் கிராமத்தில்“தையல் பள்ளி “.

நண்பர்களிடம் பழைய தையல் இயந்திரம் கேட்டு ஃபேஸ்புக்கில் ஒரு பதிவை பதிந்தேன். முகமறியா நபர்கள் மற்றும் குக்கூ நண்பர்களின் உதவியோடு 5 தையல் இயந்திரங்களோடு தையல்பள்ளி துவங்கினோம். 4 பெண்கள் தையல் கற்ற பின் அவர்களது பொருளாதார பூர்த்திக்காக கிராம சுயராஜ்ய முறையை தேர்ந்தெடுத்தோம்.  முழுமை என்பது, நாம் கற்றுக்கொண்ட திறன்களிலிருந்து நமது அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதே எனப்புரிந்தது.

உங்கள் எழுத்தின்வழி கிடைத்த பெயர்தான் ‘துவம்’. எனவே அதே பெயரில் பெண்களுக்கான உள்ளாடை தயாரித்து  விற்பனை செய்ய நாங்கள் முடிவுசெய்தோம். பொருளியல் சமநிலையை இதன்வழி நாங்கள் கற்றுக்கொள்கிறோம் . சாயமேற்றாத பருத்தி துணியில் தயாரிக்கப்படும் இது நமது தட்பவெப்ப சூழல், மருத்துவ மற்றும் சுகாதார ரீதியாகவும் ஏற்றது.

FB_IMG_1546011761230

துவம் துவங்குவதற்கு உங்களின் “தன்னறம்” கட்டுரையின் சாரமாக நானுணர்ந்த “தன்கற்றலில் காணும் கண்திறப்பின் வழிசெல்லுதல்” என்பதே பெரும்வழிகாட்டி. பிறகு உங்களை சந்தித்தபொழுதுகளில் நான் கேட்டடைந்த சொற்களின் வலிமை என்றும் உள்ளுள்ளது. விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழாவில் நான் கலந்து கொண்டு, துவம் பொருட்களை காட்சிக்கு வைத்தேன். ஒத்தக் கருத்துடைய பல மக்களை பார்க்கவும் அவர்களிடம் துவம் சென்று சேர்த்ததும் பெருமகிழ்வை தருகிறது.

தன்மீட்சி, உரையாடும் காந்தி புத்தகத்தில் கையெழுத்தும், உங்களிடம் ஆசீர்வாதமும் வாங்கிய போது பார்த்த உங்களது ஈரவிழிகள் எனக்கு என்றைக்குமான சொற்கள்..

உங்களுக்கான நன்றிகள் வார்த்தைகளில் இல்லப்பா வாழ்தலில் இருக்கு..

பொன்மணி பெத்துராஜன்

FB_IMG_1546011771665 (1)

அன்புள்ள பொன்மணி,

சராசரிக்கும் மேற்பட்ட அறிவும் ரசனையும் கொண்டவர்கள் ஏறத்தாழ அனைவருமே வழக்கத்திற்கு மாறான வாழ்க்கை ஒன்றை வாழவேண்டும் என்ற விருப்பம் கொண்டவர்கள்தான். நான் அவர்களின் தன்னைப்பற்றிய குறிப்புகளை பார்ப்பேன். அவற்றிலிருப்பது அவர்களின் ஆசைதான். ஆனால் அவர்கள் அன்றாடத்தின் முடிவிலாச்சுழற்சியில், அதன் பொருளின்மையில் சிக்கிக்கொண்டிருப்பார்கள்.

அதிலிருந்து தப்புவதைப்பற்றியதே அவர்களின் ரகசியக் கனவுகள். அவர்களின் விடுமுறைகள் எல்லாமே தற்காலிகமாக ஒரு தப்பிச்செல்லலை பாவனைசெய்பவை மட்டும்தான். மலைப்பகுதிக்கு செல்வார்கள். தன்னந்தனியாக பயணம் செய்வார்கள். எங்காவது சென்று சிலநாள் எவருமறியாது தங்கியிருப்பார்கள். அவர்கள் ‘இங்கிருந்து’ சென்று தங்கியிருக்கும் ஓர் இடம் ‘அங்கு’ எப்போதும் இருந்துகொண்டிருக்கும். அவர்களின் இன்பங்கள் அனைத்தும் ‘அங்கு’தான் இருக்கும்.  ‘இங்கே’ அவர்கள் இருப்பதை ‘அங்கே’ சென்றுவிடுவதைப்பற்றிய கனவைக்கொண்டுதான் தாங்கிக்கொள்வார்கள்.

அவர்களால் அவர்கள் வாழும் அந்த ‘இங்கை’ அழகுறச்செய்ய முடியாது. பொருள்பெறச் செய்யமுடியாது. ஏனென்றால் அது அவர்கள் தெரிவுசெய்தது அல்ல. அவர்கள்மேல் வந்தமைந்தது. அவர்கள்மேல் திணிக்கப்பட்டது. அவர்கள் சென்று படிந்தது. பெரும்பாலும் அது ஆசையாலும் ஆணவத்தாலும்தான். ‘எல்லாரையும்போல் இருப்பது’ என்றும் ‘நாலுபேர் மதிக்கும்படி இருப்பது’ என்றும் அது மறுசொற்கள் அளிக்கப்படுகிறது. எண்ணும்போது வியப்புதான், எந்த இன்பத்தையும் அளிக்காத வெறும்பொருட்கள் மனிதர்களை நிரந்தரமான நிறைவின்மையில் சோர்வில் கட்டிப்போட்டிருக்கின்றன. அவை பெரும்பாலும் வெறும் அடையாளங்கள் மட்டுமே. அவர்கள் கட்டுண்டிருப்பது அந்த அடையாளங்களில்தான்

என் நண்பர் ஒருவர் எப்போதும் ஒரு கானுறைவாழ்க்கையை கனவுகாண்பவர். ஆனால் சென்னையில் ஒன்றரைகோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு பகுப்பில்லத்தை வாங்கி அதற்கு மாதம் எண்பதாயிரம் ரூபாய் கட்டியாகவேண்டிய நிலை. நாளும் அதை சொல்லியே குமைவார். அந்தப் பகுப்பில்லம் அவருக்கு நடைமுறையில் பயனுள்ளதல்ல. வருமானம் வரும்போது சேர்க்கவேண்டும் என்பதற்காக அவர் அதை வாங்கினார். அவருடைய வருமானத்தின் மிச்சத்தைவிட இருமடங்கு விலைக்கு. அதன்பின் அதை உரிமைகொள்ளும் ஓட்டத்தை தொடங்கினார். ஏறத்தாழ பதினைந்தாண்டுகாலம் அவருடைய வாழ்க்கையை தீர்மானித்தது அந்த மாதக்கெடுதான். அவருடைய ஒவ்வொருநாளும் அதற்காகவே.

gan

நான் அவர் அந்த இல்லத்தால் கட்டுண்டவர் என்று நினைத்தேன். ஆனால் சென்ற ஆண்டு அந்த மாதக்கெடு முடிந்தது. நான்குமாதங்களில் அவர் இன்னொரு பகுப்பில்லத்திற்கு முன்பணம் கட்டியிருந்தார். நான் அவருடைய கனவைப்பற்றி கேட்டேன். இப்போது ஓரளவு வருமானம் வருகிறது. இப்போது சேர்க்காவிட்டால் பின்னர் நினைத்தாலும் முடியாது என்றார். அவருக்கு நாற்பத்தெட்டு வயது. அறுபதுவயதில் இந்த மாதக்கெடு முடியும். ஒரு மொத்த வாழ்க்கையும் இரு பகுப்பில்லங்களாக மாறியிருக்கும். அந்தப் பகுப்பில்லங்களின் ஆயுள் நாற்பதாண்டுகள்தான். அவருடைய முதுமையில் அந்த இல்லங்களும் இறக்கத் தொடங்கியிருக்கும்.

எப்போதோ எவரோதான் விரும்பிய வாழ்க்கையை தெரிவுசெய்துகொள்ள முடிகிறது. அவர்கள் நல்லூழ் கொண்டவர்கள் என்றே சொல்வேன். அவர்களுக்கு எது கிடைக்கிறதோ இல்லையோ மகிழ்ச்சி கிடைக்கிறது. எதை வெல்கிறார்களோ இல்லையோ தங்கள் சொந்த வாழ்க்கையை வெல்கிறார்கள். நல்லூழ் என்றேன். உண்மையிலேயே உளத்திண்மையும் தெளிவும் இருந்தாலும்கூட புறச்சூழலினால் அவ்வாய்ப்பு கிடைக்காதவர்கள் உண்டு.அனைத்துமிருந்தாலும் அறியாத தயக்கங்களால் கடந்து கடந்து சென்று காலத்தை தவறவிடுபவர்கள் உண்டு.

1986-இல்  கேரள காந்தியவாதியும் சிந்தனையாளருமான ஜி.குமாரபிள்ளை அவர்களிடம் பேசும் வாய்ப்பு அமைந்தது. நான் பேசிய ஒரு கூட்டத்திற்கு அவர் தலைமைவகித்தார். சுந்தர ராமசாமிக்கு ஆசான் விருது கிடைத்ததை ஒட்டி திரிச்சூரில் நிகழ்ந்த பாராட்டுக்கூட்டம். அந்த நிகழ்வுக்குப்பின் திரிச்சூரில் அவருடைய இல்லத்தில் பலமுறை சென்று சந்தித்திருக்கிறேன். அவரிடம் காந்திய வாழ்க்கைமுறையைப் பற்றி கேட்டபோது மிகச்சுருக்கமாக ஒரு வரையறையை அளித்தார். இத்தனை ஆண்டுகளுக்குப்பின் அதை மிகத்தெளிவாக புரிந்துகொள்கிறேன்.

‘ஒட்டுமொத்தமாக கனவுஜீவியாகவும் அன்றாட நடைமுறையில் யதார்த்தவாதியாகவும் இருப்பதே காந்திய வழிமுறை’ என்று அவர் சொன்னார். எண்ணி எண்ணி விரித்துக்கொள்ள வேண்டிய வரி அது. பெரும்கனவுகளை கொண்டிருத்தல், இலட்சியங்களின் படி வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முனைதல் ஆகியவை ஒட்டுமொத்தமான பார்வையை முடிவுசெய்யவேண்டும். ஆனால் அந்தக் கனவுத்தன்மை அன்றாடவாழ்க்கையில் இருந்தால் மிக விரைவிலேயே நடைமுறைச் சிக்கல்களால் சோர்ந்துபோகவேண்டியிருக்கும். உலகியல்வாழ்க்கையின் ஈரமற்றதன்மை, அதன் கணக்குவழக்குகள் சலிப்பூட்டும். ஓரிரு அடிகளுக்குப்பின் அந்த ஒட்டுமொத்த கனவின்மேல், இலட்சியத்தின்மேல் அவநம்பிக்கையும் கசப்பும் உருவாகும்.

kumarapillai
ஜி குமாரபிள்ளை

கனவுகளின்படி வாழத் தொடங்கிய பெரும்பாலானவர்கள் நேர் தலைகீழாக செயல்பட்டு மிக விரைவிலேயே சலித்துச் சோர்ந்து பின்னடைவதை பார்த்துக்கொண்டிருக்கிறோம். அவர்கள் ஒட்டுமொத்தமாக கொண்டிருப்பது ஒரு உலகியல் வெற்றி. தன்னை இலட்சியவாழ்க்கை வாழ்ந்தவர் என உலகம் சொல்லவேண்டும் என்னும் விருப்பமே வெறும் நடைமுறைவாத நோக்கம்தான். ஆனால் அதன்பொருட்டு அன்றாடவாழ்க்கையில் கனவுத்தன்மை கொண்டிருப்பார்கள். சட்டென்று எல்லாவற்றையும் உதறிவிட்டு கிளம்பிவிடுபவர்களில் பெரும்பாலானவர்களின் இயல்பு இது. அதே விசையில் திரும்பியும் செல்வார்கள். ‘எல்லாம் பாத்தாச்சு சார். ஒண்ணுக்கும் அர்த்தம் இல்ல. எல்லாம் சும்மா’ என எஞ்சியநாள் முழுக்க விரக்தியை பேசுவார்கள். அல்லது எதையோ இழந்துவிட்டதுபோன்ற வெறியுடன் உலகியல்கொண்டாட்டங்களில் சென்றுவிழுவார்கள்.

காந்தியின் வாழ்க்கையை பார்க்கையில் அவர் நடைமுறையில் பெரும்பாலும் ஏமாற்றங்களையே பார்த்துக்கொண்டிருந்தார் என்று தோன்றுகிறது. அன்றாடச்சிக்கல்கள், பலவகையான தோல்விகள், பின்னடைவுகள். நம்பிக்கைவீழ்ச்சி, துரோகம், என்னவென்றறியாத எதிர்ப்புகள், காழ்ப்புகள், ஏளனங்கள்  ஆகியவற்றையும் அவர் நிறையவே பார்த்தார். அங்கெல்லாம் அவர் மிகச்சிறந்த வணிகனுக்குரிய நடைமுறைப் பார்வையுடன் கணக்குவழக்குடன்தான் செயல்பட்டார். ஒரு மளிகைக்கடைக்காரருக்குரிய வகையில் சலிப்புறாது அன்றாடச்செயலில் ஈடுபடுபவர் அவர் என அவரைப்பற்றி கோவை அய்யாமுத்து சொல்கிறார். ஆனால் ஒட்டுமொத்தமாக பெரும் கனவுகளுடன் இருந்தார். அதில் நாளும் நம்பிக்கை மிகுந்தபடி செயல்பட்டார். ஒவ்வொரு செயல்வழியாகவும் அதைநோக்கி சென்றுகொண்டிருந்தார்.

உங்கள் துணிவும், விரும்பியபடி ஓர் இலட்சியவாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் விசையும் என்னை நிறைவடையச் செய்கின்றன. நான் என் வாழ்க்கையிலிருந்து உங்களுக்காக எதையும் சொல்லும் தகுதி கொண்டவன் அல்ல. ஆகவேதான் காந்தியின் வாழ்க்கையிலிருந்து இதை சொல்கிறேன். ஆயிரம் கால்கள் இருந்தும் மெல்லவே செல்லும் அட்டைபோல அன்றாடத்தின்  கால்கள்மேல் உங்கள் கனவு நிதானமாக ஊர்ந்துசெல்லட்டும்

ஜெ

குக்கூ .இயல்வாகை – கடிதம்

கைத்தறி நெசவும் விஷ்ணுபுரமும்

தன்மீட்சி 

உரையாடும் காந்தி

தன்னறம் நூல்வெளி

முந்தைய கட்டுரைபத்ம விருது – கடிதங்கள்
அடுத்த கட்டுரைபுதியவாசகர் சந்திப்பு – ஈரோடு