அன்பின் நண்பருக்கு,
வணக்கம்.
இன்று நீங்கள் வெளியிட்டிருந்த உங்களது ‘மொழியை பெயர்த்தல்’ எனும் பதிவினை வாசித்தேன். மிக அருமையான பதிவு. பலரும் வெளிப்படையாகக் கூறத் தயங்கும் விடயங்களை சிறப்பாக வெளிக் கொண்டு வந்திருக்கிறது கட்டுரை.
உண்மையில் பிற மொழியில் வெளிவந்துள்ள நூல், வாசிக்கும் போது தனக்குப் பிடித்திருந்தால், அது தமிழில் வெளிவந்து தமிழ் வாசகர்களுக்குப் பரவலாகப் போய்ச் சேர்ந்தால் சிறப்பாக இருக்கும் என எண்ணி மொழிபெயர்ப்பாளர் அதனை மொழிபெயர்த்தால் மாத்திரமே மூல ஆசிரியர் தனது நூலின் மூலம் வெளிக் கொண்டு வரும் உணர்வுகளை, பிரதிக்கு நியாயம் சேர்க்கும் விதத்தில் ஒரு மொழிபெயர்ப்பாளரால் மொழிபெயர்க்க இயலும்.
இதைக் குறித்து எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்கள், கடந்த வருடம் சாகித்திய விருது வென்ற ‘எனது தேசத்தை மீளப் பெறுகிறேன்’ எனும் எனது மொழிபெயர்ப்பு நூலுக்கு எழுதியுள்ள முன்னுரையை இத்துடன் இணைத்திருக்கிறேன். அக் கட்டுரை மொழிபெயர்ப்பு குறித்த பல விடயங்களைத் தெளிவுபடுத்தும்.
தமிழ்நாட்டில் துரித மொழிபெயர்ப்பாளர்கள் இன்று மிகைத்திருக்கிறார்கள். சில பதிப்பகங்கள், பிற மொழியின் மூல ஆசிரியரிடமிருந்து பதிப்புரிமையை வாங்கியோ, வாங்காமலோ நூலைப் பெற்று மொழிபெயர்ப்பாளர் எனத் தாம் எண்ணுபவர்களிடம் கொடுத்து இன்ன தேதிக்குள் தமிழில் மொழிபெயர்த்துத் தரும்படி உத்தரவிட்டு விடுகிறார்கள். மொழிபெயர்ப்பாளருக்கு அந்த நூல் பிடித்திருக்கிறதா? மொழிபெயர்ப்பாளரின் மொழிபெயர்ப்புக்கு அந்த நூல் இணக்கமாக இருக்கிறதா? மொழிபெயர்ப்பாளருக்கு மொழி வளம், திறமை இருக்கின்றனவா? என்பவற்றைக் குறித்து அப் பதிப்பகங்கள் கவலைப்படுவதில்லை. மொழிபெயர்ப்பாளர் மொழிபெயர்த்துக் கொடுப்பதை அப்படியே அச்சிட்டு வெளியிட்டு விடுகின்றன. அவற்றுக்குத் தேவையெல்லாம் இன்ன தேதிக்குள் நூலை வெளியிட்டு விற்று, பணத்தை அள்ளி விட வேண்டும் என்பது மாத்திரம்தான். இவ்வாறான சூழலில்தான் இரண்டு மொழிகளை அறிந்தவர்கள், தமக்கு மொழிபெயர்க்கும் திறமை இருக்கிறதோ, இல்லையோ மொழிபெயர்ப்பாளர் என்ற அவதாரமெடுத்து விடுகிறார்கள்.
இந்த நிலைமை மாற வேண்டும். மோசமான மொழிபெயர்ப்புக்களைப் புறக்கணிக்க பதிப்பகங்கள் அனைத்தும் ஒன்றாக முன்னின்றால் மாத்திரமே அது சாத்தியமாகும். உங்கள் கட்டுரை அதற்கான முதல் குரலாக, தைரியமான குரலாக முன்னிற்கிறது.
என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்
பாதுகாக்க வேண்டும்
அ. முத்துலிங்கம்
உலகத்தின் அதிசிறந்த நூல்களில் ஒன்றாகாகக் கருதப்படும் டொன் குவிசோட் நாவலை எழுதியவர் பெயர் செர்வாண்டே. அவருக்கு மொழிபெயர்ப்பு பிடிக்காது. மூல நாவலின் அழகை எவ்வளவு முயன்றாலும் கொண்டு வர முடியாது என்பது அவர் கருத்து. மொழிபெயர்ப்பு ஒரு கம்பளத்தின் பின்பக்கம்போல என்று அவர் சொல்வார். அதே நூல். அதே வர்ணம். அதே வடிவமைப்பு. இருந்தாலும் முன்பக்கம் இருப்பதுபோல கம்பளத்தின் பின்பக்கம் இருப்பதில்லை. மோசமாக அமைந்து விடுகிறது என்பார்.
மொழிபெயர்ப்பு, மூலநூலின் ஆத்மாவை கடத்துவதில்லை என்பது இன்னும் சிலருடைய வாதம். அது மாத்திரம் அல்ல, ஆபத்தானதும்கூட. கிரேக்க மொழியில் இருந்து பைபிளை மொழிபெயர்த்ததற்காக வில்லியம் ரிண்டால் என்ற ஆங்கில எழுத்தாளருக்கு இங்கிலாந்து அரசன் கொலைத் தண்டனை விதித்தான். மொழிபெயர்ப்பு நகைச்சுவை தருவது என்றுகூட சிலர் சொல்லலாம். அமெரிக்க ஜனாதிபதியாக கார்ட்டர் இருந்த சமயம் அவர் போலந்துக்கு பயணம் செய்தார். அவருக்கு ஒரு மொழிபெயர்ப்பாளரை ஏற்பாடு செய்தார்கள். கார்ட்டர் ’நான் அமெரிக்காவிலிருந்து புறப்பட்டேன்’ என்று சொன்னார். அதை மொழிபெயர்ப்பாளர் ’நான் அமெரிக்காவை கைவிட்டு வெளியேறியபோது’ என்று மொழிபெயர்த்துவிட்டார். இரண்டு நாட்டு பத்திரிகையாளர்களும் இந்தப் பிழையை ஒருவாரமாக கொண்டாடினார்கள்.
மொழிபெயர்ப்பு என்பது மிகவும் நுணுக்கமான வேலை. அதிலும் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பது இலகுவான செயல் அல்ல. தமிழின் வாக்கிய அமைப்பு ஆங்கில வாக்கிய அமைப்புக்கு நேர் எதிராக இருப்பதால் மொழிபெயர்ப்பு கடினமாகிறது. ஆங்கிலச் சொற்களுக்கு நேரான தமிழ்ச் சொற்கள் இருந்தால் மட்டும் போதாது. மூலத்துக்கு விசுவாசமாக இருப்பதோடு அதற்குச் சொந்தமான உணர்வுகளையும் மொழிபெயர்ப்பு பிரதிபலிக்கவேண்டும். புறநானூறு மொழிபெயர்த்த ஜோர்ஜ் ஹார்ட் மூலநூலில் எத்தனை வரிகள் இருந்தனவோ அதே அளவுக்கு ஆங்கிலத்தில் வரிகள் இருக்கும் விதமாக தான் மொழிபெயர்ப்பை செய்ததாக கூறுகிறார்.
ரஸ்ய எழுத்தாளர் ரோல்ஸ்ரோயுடைய ’போரும் அமைதியும்’ நாவலை கொன்ஸ்டான்ஸ் கார்னெட் என்ற பெண்மணி ஆங்கிலத்தில் 1904லேயே மொழிபெயர்த்துவிட்டார். 1300 பக்கங்கள் கொண்ட நாவல் அது என்பதால் அவர் இரவும் பகலும் ஓய்வின்றி உழைத்தார். இறுதிக்கட்டத்தில் அவருடைய கண் மங்கலாகத் தொடங்கி விட்டதால் இன்னொரு பெண்மணி மூலத்தை வாசிக்க அவர் மொழிபெயர்ப்பை தட்டச்சு செய்தார் என்று சொல்வார்கள். 100 வருடங்கள் கழித்து இருவர் அதே நாவலை மறுபடியும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தனர். லாரிசா வொலோகோன்ஸ்கி மற்றும் ரிச்சார்ட் பீவர் . ஒரு நேர்காணலில் இவர்கள் சொன்னது வியப்பளித்தது. மொழிபெயர்க்கும் போது ரோல்ஸ்ரோய் காலத்தில் புழக்கத்திலிருந்த ஆங்கில வார்த்தைகளை மட்டுமே இவர்கள் பயன்படுத்தினார்களாம். நினைக்கவே எத்தனை மலைப்பாக இருக்கிறது.
மொழிபெயர்ப்பு என்பது இப்படி பலவிதமான நுட்பங்களைக் கொண்டது. இந்த தொகுப்பில் உள்ள கதைகளைப் படிக்கும்போது அவை மொழிபெயர்க்கப்பட்டவை என்று தோன்றுவதில்லை. ஆசிரியரே அவற்றைப் படைத்திருக்கிறார் என்ற எண்ணம்தான் வருகிறது. ஒரு மொழிபெயர்ப்பாளருக்கு அந்த நாட்டு கலாச்சார பரிச்சயம் இருப்பது முக்கியம். உதாரணமாக ஆப்பிரிக்காவில் மணமுடித்த ஆண்கள் தங்கள் தங்கள் தனிக்குடிசைகளிலேயே தங்குவார்கள் அவர்களுடைய மனைவிமாரும் பிள்ளைகளும் வேறு குடிலில் வசிப்பார்கள். அவர்களின் மனைவிமார் முறைவைத்து கணவருடன் அவர் குடிசையில் இரவு தங்கிப் பின் திரும்புவார்கள். ஆடுகளோ, மாடுகளோ விலையாகக் கொடுத்து ஆண்கள் பெண்களை மணந்து கொள்ளலாம். இப்படியான கலாச்சாரக் கூறுகள் கெடாமல் மிக லாவகமாகக் கடந்து செல்கிறார் இந்த நூலின் மொழிபெயர்ப்பாளரான ரிஷான் ஷெரீப். அந்த விதத்தில் அவருடைய மொழிபெயர்ப்பு மூலத்துக்கு மிகவும் விசுவாசமாக இருந்தது என்றுதான் கூறவேண்டும்.
இத் தொகுப்பில் 30 ஆப்பிரிக்க சிறுகதைகள் உள்ளன. 13 ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த 22 எழுத்தாளர்கள் படைத்த சிறுகதைகள். இந்த 22 எழுத்தாளர்களில் நாலு பேர் பெண்கள். இதில் எழுதிய சிலர் ஆப்பிரிக்காவில் மிகப் பிரபலமானவர்கள்; சிலரோ உலகப் புகழ் அடைந்தவர்கள். கென்யா நாட்டின் கூகி வா தியாங்கோவை உலகம் அறியும். பல பல்கலைக்கழகங்களில் பேராசிரியராக கடமையாற்றியவர். இவருடைய அரசியல் நிலைப்பாடு காரணமாக நாடு கடத்தப்பட்டவர். நைஜீரிய நாட்டைச் சேர்ந்த பென் ஒக்ரி எழுதிய The Famished Road நாவல் புக்கர் பரிசு பெற்றது. எகிப்து நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்ட அரபு எழுத்தாளர் நஜீப் மஹ்ஃபூஸ் இலக்கியத்துக்கான நோபல் பரிசை 1988ல் பெற்றார். டொங்காலா இன்னொரு புகழ்பெற்ற எழுத்தாளர். இவர் எழுதிய ’மனிதன்’ சிறுகதை உலகத்தின் கவனத்தை பெற்றது. சினுவா ஆச்சிபியை ஆப்பிரிக்க இலக்கியத்தின் பிதாமகர் என்று கூறுவார்கள். இவரிடமிருந்துதான் ஆப்பிரிக்க இலக்கியம் தொடங்கியது. நைஜீரியாவின் தேசிய விருதைப் பெற்ற இவர் எழுதிய Things Fall Apart நாவல் 2007ல் மான்புக்கர் சர்வதேச விருதை வென்றதுடன் 45 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. பெண் எழுத்தாளர்களில் கிறேஸ் ஒகொட் முக்கியமானவர். ஆங்கிலத்தில் முதலில் வெளிவந்தது இவருடைய தொகுப்புத்தான்.
இப்படியான புகழ்பெற்ற ஆசிரியர்களுடைய படைப்புகள் இந்த நூலில் அடங்கியிருப்பது வாசகர்களின் அதிர்ஷ்டம். இந்த தொகுப்பை வாசிப்பதன் மூலம் ஆப்பிரிக்க கண்டத்தின் இதயத் துடிப்பை, எகிப்திலிருந்து தென்னாபிரிக்கா வரை, கென்யாவிலிருந்து கானா வரை உணர்ந்து கொள்ளமுடியும். இந்தக் கதைகள் பல ஆங்கில மொழியிலேயே எழுதப்பட்டவை. சில பிரெஞ்சு மொழியிலும், அரபு மொழியிலும், போர்த்துக்கீய மொழியிலும் எழுதப்பட்டு பின்னர் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டவை. கதாசிரியர்கள் அனைவரும் பேராசிரியர்கள் அல்லது கல்வியாளர்கள் அல்லது பெரும் உத்தியோகம் வகித்து அனுபவப்பட்டவர்கள். சிறுகதை இலக்கியத்தில் தோய்ந்தவர்கள். ஆகவே சிறுகதைகள் நேர்த்தியானவையாகவும், ஆழமானவையாகவும் காணப்படுவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.
ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு மாற்றம் செய்யும்போது இரண்டு மொழிகளும் செழுமையடைகின்றன. இரு மொழி இலக்கியங்களும் வளர்கின்றன. பன்மொழி வல்லுநர்கள் சொல்வார்கள் ஒரு மொழியில் உள்ள வார்த்தை ஒன்றை மிகச் சரியாக மொழிபெயர்க்க இயலாது என்று. வார்த்தைகள் அந்த மொழிக் கலாச்சாரத்தோடு ஒன்றியவை. ஆப்பிரிக்காவில் ஒரு மொழி இருக்கிறது. அதில் இடது கால் செருப்புக்கு ஒரு வார்த்தை; வலது கால் செருப்புக்கு இன்னொரு வார்த்தை. மொழிபெயர்ப்பை கடினமாக்குவது இப்படியான வித்தியாசங்கள்தான். இத்தனை இடர்ப்பாடுகளையும் தாண்டித்தான் மொழிபெயர்ப்பு நிகழவேண்டும். அதில் வெற்றி கண்டிருக்கிறார் ரிஷான் ஷெரீப்.
நெப்போலியன் எகிப்துக்கு படை எடுத்தபோது ஒரு சாதாரண சிப்பாய் ரொசெட்டா துறைமுகத்தில் ஒரு கல்லைத் தற்செயலாகக் கண்டெடுத்தான். அதில் மூன்று மொழிகளில் அரச ஆணை ஒன்று பொறிக்கப்பட்டிருந்தது. கிரேக்க மொழி, எகிப்திய மொழி மற்றும் ஹிரோகிலிபிக்ஸ் என்னும் பட எழுத்து. ஆயிரம் வருடங்களாக முற்றிலும் அழிந்துபோன ஒரு மொழியை ரொசெட்டா கல் மீட்டுத் தந்திருக்கிறது என்றால் மொழிபெயர்ப்பு எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை ஓரளவுக்கு உணர்ந்துகொள்ளலாம்.
இத்தனை பெருமை மொழிபெயர்ப்புக்கு இருந்தாலும், மொழிபெயர்ப்பாளருக்கு போதிய அங்கீகாரம் கிடைப்பதில்லை. சன்மானமும் பெரிதாக வழங்கப்படுவதில்லை. ஒருவர் மொழிபெயர்த்த நாவலுக்கு நோபல் பரிசு கிடைத்தால் முழுப்பணமும் மூல ஆசிரியருக்குத்தான் போகிறது. மொழிபெயர்ப்பாளருக்கு ஒன்றுமே கிடையாது. இந்த அநீதியை பலர் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். சமீபத்தில் இது மாறத்தொடங்கியிருக்கிறது. நோபல் விருதுக்கு அடுத்த நிலையில் கருதப்படும் புக்கர் சர்வதேச விருது பரிசுத்தொகை 2015ல் இருந்து மொழிபெயர்ப்பாளருக்கும் மூல ஆசிரியருக்கும் சரிசமமமாக பிரித்துக் கொடுக்கப் படுகிறது. மிகவும் பாராட்டப்படவேண்டிய முடிவு. மொழிபெயர்ப்பாளர்களை ஊக்குவிப்பது அந்தந்த நாட்டு மக்களின் கடமையாகும். அவர்களால்தான் மொழி வளம் பெறுகிறது. வளர்கிறது.
ரிஷான் ஷெரீபை எனக்கு 15 வருட காலமாகத் தெரியும். அவரை நேரிலே பார்த்தது கிடையாது. பேசியதில்லை. மின்னஞ்சல் தொடர்புதான். அவருடைய அபார வளர்ச்சியை நான் தொடர்ந்து கவனித்து வருகிறேன். சிங்களமும் தமிழும் பக்கத்துப் பக்கத்தில் பல ஆயிரம் வருடங்கள் இலங்கையில் வாழ்ந்தாலும் சிங்களத்திலிருந்து தமிழுக்கோ அல்லது தமிழிலிருந்து சிங்களத்துக்கோ மொழிபெயர்ப்புகள் அரிதாகவே நிகழ்கின்றன. ரிஷான் ஷெரீப் சிங்களத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்க்கிறார். கவிதை, கட்டுரை, சிறுகதை, புத்தக மதிப்புரை எழுதுகிறார். ஆவணப்படம் எடுக்கிறார். கள ஆய்வு செய்கிறார். இலங்கை அரசின் இலக்கியத்துக்கான சாகித்திய விருது, மற்றும் கனடா இலக்கியத் தோட்ட விருது உட்பட பல விருதுகளை வென்றிருக்கிறார். இப்பொழுது 30 ஆப்பிரிக்க சிறுகதைகளை தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கிறார். இரண்டு மொழிகளில் மொழிபெயர்க்கும் திறமை கொண்டவர்கள் எந்த நாட்டிலும் அரிது. பன்முகத்திறமை கொண்ட இவர் பாதுகாக்கப்படவேண்டியவர்.
அ. முத்துலிங்கம்
கனடா, 26 செப்டம்பர் 2017