உல்லாலா!

ரயிலில் நான் ஏறி அமர்ந்து ஆசுவாசப்படுத்திக்கொண்டதுமே பக்கத்தில் இருப்பவர் அறிமுகம் செய்வார். “சார் சாப்பாடு வாங்கலையா?”. அவர் கையில் பிளாஸ்டிக் பையில் சாப்பாடு பொட்டலம் இருக்கும். அதை பதமாக எடுத்து அப்பால் வைப்பார். “இல்ல சார், நான் ,  இட்லி கொண்டுவருவான்,  வாங்குவேன்”. ரயிலில் பழம் சாப்பிடுவதில்லை. ஏன் பழம் சாப்பிடுகிறேன் என விளக்கவேண்டியிருக்கும். அதற்கு வெண்முரசு ஒரு அத்தியாயம் எழுதலாம்

அவர் ஆரம்பிப்பார்.  “நான்லாம் வீட்டிலே இருந்து கொண்டு வந்துடறது சார். நமக்கு சுகர் இருக்கு. அதனால ராத்திரிக்கு இம்பிடுபோல கீரை சேத்து ஒரு சப்பாத்தி. பின்ன காணத்தொவையல்…” அருகிருப்பவர் “சக்கர வியாதிக்கு நீங்க சப்பாத்தி சாப்பிடக்கூடாது. எதுக்குச் சொல்றேன்னா… இப்ப பாத்தீங்கன்னா” என்று ஆரம்பிப்பார். அப்பாலிருந்தவர் “அப்டிச் சொன்னா நாம இப்ப பிரஷருக்கு என்ன சாப்புடுறோம்? பிரஷருக்கு உப்ப குறைக்கிறதிலே அர்த்தமே இல்ல…” என தொடங்குவார்.

சாப்பாடு பற்றிய உரையாடல் ஆரம்பிக்கும். நான் டிரைனோஸரஸிடம் டி-ரெக்ஸை மோதவிட்டுவிட்டு மெல்லக் கழன்றுகொள்வேன். மதுரை வரும்போது படுக்கை போட்டு “முருகா செந்திலாண்டவா!” என்று படுப்பார்கள். அதுவரை சாப்பாட்டுவிவாதம். சாப்பாடு வழியாகவே ஆன்மிகம், அரசியல், பண்பாடு.

என் வயதானவர்கள் வேறெதையும் பேசுவதில்லை என்பதை கண்டபின் அதைப் பேசவே கூடாது என முடிவெடுத்தேன். என்னிடம் சாப்பாடு பற்றிப் பேச வருபவர்கள் அதன் சுவை பற்றிப் பேசுகிறார்களா என்று கவனிப்பேன். “நம்ம எறச்சகுளம் முக்கிலே ஒரு பாய் கடைவச்சிருக்காரு.. ரத்தப்பொரியல் போட்டார்னா என்னான்னு கேக்கும்!” என ஒருவர் ஆரம்பித்தால் “என் இனமடா நீ” என பாய்ந்து அணைத்துக் கொள்வேன். என்னைச் சூழ்ந்திருப்பவர்கள் பெரும்பாலும் இந்த ரகம்தான். நாஞ்சில்நாடன் முதல் செல்வேந்திரன் வரை. விஜயராகவன் முதல் ராஜகோபாலன் வரை.

நம் சூழலில் ஒவ்வொரு வயதுக்கும் ஒரு பழக்கநெறிமுறை பயின்று வந்துள்ளது. ஒரு கெத்துக்காக ஆங்கிலத்தில் behavioral template என்கிறேன். அடுத்தமுறை எவரிடமாவது பேசும்போது உங்களுக்கும் உதவியாக இருக்கும். அதில் வயோதிகத்துக்கு என சில உண்டு. ஐம்பது கடந்தால் , இப்போதெல்லாம் நாற்பது கடந்தாலே, அது வந்து ஒட்டிக்கொள்கிறது. நாம் விழிப்பாக இல்லையேல் நம் மனதில் அது குடியேறிவிடும். வாயில் எழுந்துவந்தபடியே இருக்கும். எண்ணி எண்ணி அகற்றவேண்டும்.

“காலம்பற டீ குடிச்சேன் சார், சூப்பர்!” என்றால் அது ஒரு மனநிலை. அதை நாற்பதுதாண்டினால் நாம் சொல்வதில்லை. “காலம்பற ஒருமாதிரி படபடான்னு வந்திச்சு… அப்டியே ஒரு டீயக் குடிச்ச அப்றம்தான் சமாதானமாச்சு” என்று சொல்லவேண்டும். டீ குடித்தபின்னர்கூட நெஞ்சைப்பிடித்து ஏப்பம் விட்டு “என்னத்த பாலோ என்னன்னு காச்சுதானோ, டீயக்குடிச்சா ஒருமாதிரி ஏப்பமாட்டுல்லா வருது” என்று சொல்லலாம். அமரும்போது “யப்பா செந்திலாண்டவா, முடியல. முதுகுலே ஒரு பிடிப்பு” என்று சொல்வதும் எழும்போது “அய்யோ… காலு ஒருமாதிரி இருக்கே…” என்று சொல்வதும் மரபு. இரண்டுமில்லாமல் சும்மா இருந்தால் “எந்திரிச்சு நடக்கமுடியுதா? சனியன் நாற வெயிலுல்லா அடிக்கி?” எனலாம்

உடல்நலம் குறித்த சலிப்பு என்பது உயர்குடிப் பண்பாடு. அதாவது நாம் உடலுழைப்பில்லாத முந்திய வாழ்க்கை வாழ்பவர்கள். “காலம்பற எந்திரிச்சா ஒரு கெறக்கம் மாதிரி… அந்தால மெள்ள எந்திரிச்சு ஒக்காந்து ஒரு காப்பியக் குடிச்சாத்தான் செரியாவும்”. படுக்கும்போது “பத்து பத்தரைக்கெல்லாம் என்னென்னு கெறக்கீட்டு வருதூங்கிய? ஒண்ணும் செரியில்ல” என்று சொல்லலாம். “நல்லா இருக்கேளா?” என எவராவது கேட்டுவிட்டால் “என்னத்தச் சொல்ல… கெடக்கோம். ஆண்டவன் அருள் பாக்கணும்…” என்று சொல்லத் தொடங்க அவர் “ஆண்டவன் இருக்கானே… வரட்டா, சோடக்காரன் வந்து நிக்கான்” என நகர முற்பட அவரை பிடித்து நிறுத்தி “எதுக்குச் சொல்லுதேன்னா நாலஞ்சுநாள இந்த இடத்தே காலுல ஒரு வெறயலு…” என ஆரம்பிக்கவேண்டும்

உடல்நலம் இல்லை என்பதை நாளும் சொன்னால் உடலே அதைப் புரிந்துகொண்டு நலமில்லாமல் ஆகிவிடும். நோயாளியாக ஆக மிக எளியவழி அது. உடல்நலம் இல்லை என்னும் சலிப்பு பலசமயம் நாம் உணர்ந்தே சொல்வதில்லை. நாம் அதை “சொவமாருக்கேளா? இப்பம் அங்கதானா?” போன்ற சமூகத்தேய்வழக்காகவே கற்றுக்கொள்கிறோம். “உஸ்ஸப்பாடா!” போன்ற வெற்றொலியாகவே பயன்படுத்துகிறோம். ஆனால் அதை நம் ஆழம் நேர் பொருளில் எடுத்துக்கொள்கிறது.

அந்தக்காலத்து கிழவாடிகளுக்கு இளவட்டங்கள் தங்களைக் கவனிக்கின்றனவா என்று சந்தேகம். கவனிக்கவேண்டும் என கட்டாயம்.  [“கல்லுக்குண்டு மாதிரி இருக்காரே. எளவு வயசாகியிருக்கும்லா பத்து அறுவது?” என] கண் போட்டுவிடுவார்களோ என்று பயம். ஆகவே இந்தவகையான ஆரோக்கியப் பிலாக்காணங்களை பயின்று வைத்திருந்தனர். அவை நம்மிடம் செவிச்செல்வமாக உலவுகின்றன. சொல்லப்போனால் வைரஸ் , அமீபியா அளவுக்கு நம் காற்றில் இவை உள்ளன. தப்புவதற்கு நிறைய எதிர்ப்புசக்தி தேவை.

இன்னும் சில சொல்முறைகள் கிழட்டுத்தனத்திற்கென உண்டு. எந்த உணவு சாப்பிடுவதென்றாலும், அது தானே சமைத்தது என்றாலும், முதல்துளி வாயில் பட்டதுமே “உப்பு கம்மி” என்றோ “அடி பொகைஞ்சிருச்சோ?” என்றும் கருத்து தெரிவிப்பது. ”இம்மிணி சுக்கு தட்டி போட்டிருக்கலாம்” என்பதும் “நம்ம சரசு நல்லா சமைப்பா” என வேறெதையோ நினைவுகூர்வதும் “மிளகுரசம்னா நாணாவய்யர் வைக்கணும் ,சாப்பிடணும். பாவம் போயிட்டான்” என உருகுவதும் இவ்வகை நிராகரிப்பேயாகும். உணவு நன்றாக இருந்தால்கூட அதை “நல்லாத்தான் இருக்கூஊ” என இழுத்து நிறுத்தவேண்டும்.

நித்ய சைதன்ய யதி உணவை உணவின் முன் அமர்ந்து பழிப்பதுபோல் பழிசேர்வது வேறில்லை என்பார். அது எந்த உணவாக இருந்தாலும் எதிர்மறையாக ஏதும் சொல்லாமலிருப்பதே நற்பண்பு. பிடிக்காவிட்டால் சாப்பிடவேண்டாம். எவரேனும் கருத்து கேட்டால்கூட உணவின்முன் இருந்து எழுந்தால்தான் சொல்லவேண்டும்.

இன்னொன்று ‘இப்பல்லாம் யாருசார் அதேமாதிரி!” என அலுப்பது. அதற்குப் பல அர்த்தங்கள். அந்தக்காலத்தில் நாங்களெல்லாம் உயர்கலையில் நுண்ணிலக்கியத்தில் நல்லுணவில் இயற்கையின் மடியில் சிறந்த உறவுகளில் திளைத்தோமாக்கும். அப்படித் திளைத்தவர் ஏன் இந்த லட்சணத்தில் இருக்கவேண்டும் என சூழ இருப்பவர்கள் எண்ணாமலிருக்க மாட்டார்கள். இருந்தாலும் “இப்பல்லாம் என்னா சார் பாட்டு போடுதான். உல்லாலாலா உல்லாலான்னுட்டு. அந்தகாலத்திலே சந்திரபாபு போட்டான்  பம்பரக்கண்ணாலேன்னு… அது பாட்டு, என்ன சொல்றீய?” என்று ஆரம்பிக்கலாம். “எளவு, அதுதானே இது” என்று பிறர் வாய்க்குள் முனகினால் நமக்கென்ன?

முதுமைக்கு இந்தியாவில் அந்தக்காலத்தில் பெரிய மரியாதை இருந்தது. “சார், வாங்க. டேய் அய்யாவுக்கு சேர் போடு” என ஒரு காலம். ஆகவே அனைவரும் வயதானவர்களாக ஆக ஆசைப்பட்டார்கள். நாற்பது கடந்தாலே வயோதிகம்தான். [ஐம்பது வயது முதியவர் சாவு!!!! தினத்தந்தி] வயோதிகம்போல நடித்தாலேகூட ஒரு பெரியமனித இடம் கிடைக்கும். இன்று அப்படி இல்லை. விரைவுயுகம். இளமையே மதிப்பிற்குரியது. “யோவ் பெரிசு அந்தால போ. ஊட்ல யாருமில்லியா?”. இன்றும் நாம் நம்மையறியாமலேயே கிழவாடிவேடம் கட்டவைக்கின்றன இந்த தேய்வழக்குகளும் தேய்ந்த மனநிலைகளும். தள்ளுபவர்கள் தப்பமுடியும்.

ஆகவே மனசுக்குள் எப்போதும் உல்லால உல்லாலாதான்.

முந்தைய கட்டுரைகேசவமணி சுந்தரகாண்டம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-26