சஞ்சயன் சொன்னான். முதலொளிக்காக காத்து நின்றிருக்கும் இரு படைப்பிரிவுகளையும் நான் காண்கிறேன். அவர்கள் அன்றைய போரை புதிய ஆர்வத்துடன் எதிர்பார்த்திருக்கிறார்கள். கௌரவர்கள் அனைவரும் பாண்டவப் படையின் முகப்பில் அர்ஜுனனின் குரங்குக்கொடி எழுகிறதா என்பதையே நோக்கிக்கொண்டிருக்கிறார்கள். அர்ஜுனன் எழுந்தமைக்கான எந்தச் சான்றும் ஒலியென எழவில்லை என்பதனால் அவர்களின் ஊக்கம் கணம்தோறும் கூடிக்கொண்டிருக்கிறது.
மறுபக்கம் பாண்டவர்கள் மெல்லிய துடிப்புடன் நின்றிருந்தனர். ஏதோ ஒன்று நிகழுமென அவர்கள் எவ்வண்ணமோ அறிந்திருந்தனர். அவ்வண்ணம் முடிவதற்குரியதல்ல அது என்பதையே அவர்கள் இரவெல்லாம் பேசிக்கொண்டிருந்தனர். அது பிறிதொன்று. வருந்தலைமுறையினர் எண்ணி எண்ணிப் பேசும் பெரும்பொருள். அது எழுந்தாகவேண்டும். அதை இயற்றும் இளைய யாதவர் மட்டுமே அறிந்த ஒன்று நிகழ்ந்தாகவேண்டும். அவர்கள் படைமுகப்பில் நின்றிருந்த தேர்களையே நோக்கிக்கொண்டிருந்தனர்.
பாண்டவப் படையின் அரைநிலவுச்சூழ்கையின் மையத்தில் யுதிஷ்டிரரின் மெய்க்காவல்படையினர் தங்கள் மின்படைக் கொடியுடன் நின்றிருந்தனர். அவர்கள் நடுவே உள்ளிருந்து அரசத்தேர் வருவதற்கான இடைவெளி விடப்பட்டிருந்தது. அதற்கு இருபுறமும் என விரிந்த நிலவுவளைவின் வலப்பக்கம் சாத்யகியும் திருஷ்டத்யும்னனும் துருபதரும் சிகண்டியும் விராடரும் இறுதியாக பீமனும் நின்றிருந்தனர். இடப்பக்கம் நீண்ட வளைவில் அபிமன்யுவின் மெய்க்காவலர் நின்றிருந்தனர். சுருதகீர்த்தியும் சுருதசேனனும் தேர்களில் வில்லுடன் நின்றிருக்க இறுதியாக அர்ஜுனனின் மெய்க்காவல்படையினர் நின்றனர்.
கருடச்சூழ்கையின் அலகென நின்றிருந்த துரோணரின் தேர்மகுடத்தில் கமண்டலக் கொடி பறந்துகொண்டிருந்தது. அவருக்குப் பின்னால் சுசர்மனும் சம்சப்தர்களும் நின்றிருந்தனர். பருந்தின் வலச்சிறகில் நின்றிருந்த அஸ்வத்தாமன் முரசுகளை நோக்கிக்கொண்டிருந்தான். அவனருகே பூரிசிரவஸ். அருகிலேயே ஜயத்ரதன் நின்றிருந்தான். இடச்சிறகில் சல்யர், அவர் அருகே கிருபர். அப்பால் பகதத்தர். பருந்தின் வலக்கூருகிர் என துரியோதனனும் தம்பியரும். இடது உகிர் என பால்ஹிகர். அவர்கள் ஒவ்வொருவரும் தங்களை மேலும் மேலும் தீட்டிக்கொண்டனர். முதற்கணத்தில் முழுமையாக எழுந்து கிளம்ப அகம்திரட்டிக்கொண்டிருந்தனர்.
எத்தனை முறை நிகழ்ந்தாயிற்று! இருப்பினும் அந்தப் புலரி முதற்கணம் முன்னறிய ஒண்ணாததாகவே உள்ளது. அதை முடிவெடுக்கும் பணியை தெய்வங்களே வைத்துக்கொண்டிருக்கின்றன. அரசே, அந்த முதல் கணத்தில் முதல் அம்பில் உயிர்விடவிருக்கும் முதல் வீரனை தெய்வங்கள் அப்போது தெரிவுசெய்து கொண்டிருக்கின்றனவா?
அந்த முகங்களை நான் மாறிமாறி நோக்குகிறேன். இப்போது இருபுறத்திலும் எழுந்து நடக்கும் நிலையிலிருக்கும் அனைவருமே போருக்கெழுந்துவிட்டனர். அடுமனையாளர்களும் மருத்துவர்களும் மட்டுமே எஞ்சியிருக்கின்றனர். பயிலாப் படைவீரர்கள் ஆகையால் அந்த முகங்களில் அச்சமும் தயக்கமும் எழுச்சியும் குழப்பமும் என ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு உணர்ச்சி நிறைந்துள்ளது.
அனைத்து உணர்ச்சிகளையும் மூடியிருக்கிறது களைப்பு. அங்கே நற்துயில்கொண்டு எழுந்தவர் சிலரே. போர் தொடங்கும்வரை துயிலின்மையால் தளர்ந்து விழப்போகிறவர்கள்போல் தெரிவார்கள். முரசொலித்ததும் அவர்களிடம் குடியேறுவது என்ன? இறப்பை அருகெனக் கண்ட உயிரின் பதற்றமா? உயிர்குடிக்க உள்ளிருந்து எழும் தெய்வங்களின் வெறியா? எவர் அறிய இயலும்? அங்கே கால்கள் மண்விட்டு எழத் துடிக்கின்றன. கைகள் சிறகுகளாக விழைகின்றன. வெறிகொண்ட மானுடர் ஏன் எம்பிக்குதிக்கிறார்கள்? நிலைமீறிய எதற்கும் மண்ணில் இடமில்லையென்பதனாலா? அமைவதே மண், எழுவதே வான் என்பதனாலா?
எழுகதிரின் முதலொளி தோன்றுவதற்கு சிலகணங்களுக்குமுன், முழைக்கழியில் முரசர்களின் பிடி இறுகிக்கொண்டிருக்கையில் பாண்டவப் படைமுகப்பில் அபிமன்யு தோன்றினான். அவனுடைய தேர் வந்து நின்றபோது அங்கிருந்த படைவீரர்கள் வாழ்த்தொலி எழுப்பினர். அது அலையெனப் பரவி படைமுழுக்க சென்றது. கௌரவர்கள் அபிமன்யுவை கூர்ந்து நோக்கினர். உடலின் கட்டுகளின்மேல் கவசங்கள் அணிந்திருந்தமையால் அவன் பருத்த உடல்கொண்டவனாகத் தோன்றினான். அவன் கையிலிருந்த வில் புதியதாக இருந்தது. குழலை தலைக்குப்பின் கட்டி அள்ளியிட்டு விளையாட்டுக்களத்திற்கு எழப்போகிறவன்போல் நின்றான்.
விழிகள் அர்ஜுனனை தேடிக்கொண்டிருக்க மிக அப்பால் வாழ்த்தொலிகள் எழுந்தன. கௌரவர்களின் படைவிரிவிலேயே அந்த ஆவல் விழிக்குத் தெரியும் அலையென்றாகியது. குரங்குக்கொடி மெல்ல அணுகிவந்தது. கர்ணன் தன் வில்லை நேர்நிறுத்தி வலக்கையால் மீசையை நீவியபடி நோக்கினான். துரோணர் விழிகளுக்குமேல் கையை வைத்து கூர்ந்தார். யானைமேலிருந்த துரியோதனன் துச்சாதனனிடம் “இளையோனே, அவனா?” என்றான். சுபாகு “அவரேதான், மூத்தவரே” என்றான். “களமெழுகிறான்!” என்று துச்சாதனன் வியப்புடன் சொன்னான். “ஆனால் அதில் வியப்பதற்கொன்றுமில்லை. அவ்வாறுதான் நிகழும்” என்றான் துரியோதனன்.
படைமுகப்பை அணுகுந்தோறும் அர்ஜுனன் விலகிச்செல்வதை ஜயத்ரதன் நோக்கினான். பிறையின் விளிம்பில் அர்ஜுனனின் மெய்க்காவல்படை நின்றிருந்தது. அவன் அங்கு செல்லாமல் யுதிஷ்டிரரை நோக்கி சென்றான். அவர்களின் திட்டம் புரிந்து சகுனி ஆணைகளை பிறப்பிப்பதற்குள் விடியலை அறிவித்து முரசுகள் முழங்கின. பாண்டவர்களிடமிருந்து முதல் அம்பு எழுந்து வந்து தாக்கியது. கௌரவப் படைகள் பொங்கிச் சென்றறைய போர் மூண்டது. இரு மரவுரிகளைச் சேர்த்துத் தைத்த வடுவென அந்தப் போர்முகப்புக்கோடு. ஆயிரம்கால் அட்டைபோல அது எங்கோ சென்றுகொண்டிருக்கிறது என்று விழிமயக்கடைகிறேன்.
கௌரவர்களின் அரசே, நான் அந்த முதல் அம்பை எய்தவனை கண்டேன். அவன் பெயர் வஜ்ரன். இந்திரப்பிரஸ்தத்திற்கு அருகே காமடம் என்னும் சிற்றூரைச் சேர்ந்த யாதவன். அங்கே இனிய காட்டில் கன்றோட்டி வாழ்ந்த சிறுவன். இந்திரப்பிரஸ்தம் அமைந்தபோது படையில் சேர்ந்தான். அம்புவிடப் பயின்றான். முதல் பத்துநாட்கள் அவன் படைகளுக்குப் பின்னிரையிலேயே இருந்தான். பின்னர் அவனை படைமுகப்புக்கே அனுப்பினர். அங்கே அவனுக்கு பெரிய நிலைவில்லும் அம்புகளும் அளிக்கப்பட்டன. முதல்நாள் அவன் கூட்டத்துடன் அலைமோதினான். அன்றே ஆணைகளை செவிகொள்ளவும் பிற அனைத்தையும் உளம்விலக்கவும் அவன் பயின்றான். “தோல்வரைக்கும்தான் வலி. போர்தொடங்குவது வரை மட்டுமே அச்சம்” என்னும் தொல்மொழியின் பொருளை அறிந்துகொண்டான்.
வஜ்ரன் தன் வாழ்நாளில் எவ்வுயிரையும் அறிந்து கொன்றதில்லை. இலக்கு வைத்து அம்பெறிந்ததும் இல்லை. கௌரவப் படை இருக்கும் திசைநோக்கி அம்புகளை எய்தபடி ஆணையிடப்படும் திசைநோக்கிச் செல்வதையே அவன் இருநாட்களாக செய்துவந்தான். அவனுடன் வந்த அனைவரும் மடிந்த பின்னரும் அவன் உயிருடன் இருந்தமையால் அப்போரிலிருந்து உயிருடன் மீள்வதே தன் ஊழ் என அவன் தன்னுள் அறியா உறுதி ஒன்றை கொண்டிருந்தான். புலரிமுரசின் ஆணையெழுந்ததும் நின்ற வில்லில் நாணிழுத்து அம்புகோத்து விண்ணில் எய்தான். அடுத்த அம்பை எடுத்தபடி கூச்சலிட்டுக்கொண்டு முன்னால் ஓடினான்.
அந்த அம்புசென்று நெஞ்சிலறைய அலறி மல்லாந்து விழுந்து கைகால்களை உதறிக்கொண்டு துடித்து அணைந்தவன் ஜ்வாலன். அஸ்தினபுரிக்கு அருகே சுமந்தம் என்னும் ஊரைச் சேர்ந்த ஷத்ரியன். அங்கே அவன் தந்தை காவல்பணி செய்துவந்தார். தந்தையால் அவன் காவலனாகவே பயிற்சியளிக்கப்பட்டான். காவல்மாடத்தில் இரவும் பகலும் அமர்ந்திருந்த தந்தையை அவன் பல்லி என பழித்தான். அந்த வாழ்க்கையைக் கசந்து அங்கிருந்து எவருக்கும் தெரியாமல் வேலுடன் கிளம்பி அஸ்தினபுரிக்கு வந்து படையில் சேர்ந்தான். அனைத்துப் பயிற்சிகளிலும் அவன் பேரார்வத்துடன் பங்கெடுத்தான். தேர்ந்த வில்லவன் என்று ஆசிரியரால் பாராட்டப்பட்டான்.
ஒவ்வொருநாளுமென அவன் குருக்ஷேத்ரத்தை எதிர்பார்த்திருந்தான். அங்கே அவன் ஆற்றும் வீரச்செயலால் தன் பெயர் சூதர்நாவிலேறி தன் தந்தையை சென்றடையவேண்டும் என்று விழைந்தான். ஆனால் குருக்ஷேத்ரத்திற்கு வந்தநாள் முதல் அவனுக்கு எல்லைக்காவல் பணியே அளிக்கப்பட்டது. தேர்ந்த வில்லவரை எல்லையில் அமர்த்தினால் காவலுக்கு அவர்கள் ஓரிருவரே போதுமென்று காந்தாரர் சகுனி எண்ணினார். நாளும் போர்வீரர்கள் மடிந்துகொண்டிருக்க, எல்லைக்காவலைக் குறைத்து அனைவரையும் படைமுனைக்கு அனுப்பினர்.
அன்று காலைதான் அவன் முதல்முறையாக களத்திற்கு வந்தான். வில்லுடன் வெறிக்குரல் எழுப்பியபடி அவன் முன்னால் பாய்ந்த கணத்திலேயே அவன் நெஞ்சை துளைத்துச்சென்றது அம்பு. அவன் ஒரு மூச்சுத்திணறலை, சொல்முட்டிய ஒரு கணத்தை, உடற்தசைகளில் ஓடிய விதிர்ப்பை, வந்தறைந்த நிலத்தை, ஒளியுடன் விரிந்த வானை, மங்கலடைந்து அகன்ற ஒலிப்பெருக்கை மட்டும் இறுதியாக அறிந்தான். அவன் உடல் மேல் அவன் படைத்துணைவர்கள் மிதித்து ஏறிச்சென்றனர். தேர்களின் சகடங்கள் ஏறிக்கடந்தன. அவன் அங்கே அசைந்து அசைந்து தலையாட்டிக்கொண்டிருந்தான்.
அவன் எழுந்து தன் உடலை பார்த்தபோது அது மிகவும் சிதைந்திருந்தது. துயருடன் திரும்பியபோது அருகே இன்னொருவனும் அதை நோக்கிக்கொண்டிருப்பதை கண்டான். “யார்?” என்றான். “இந்த அம்பை எய்தவன்” என்று அவன் சொன்னான். “சற்று முன் என் மேல் யானை ஒன்று மிதித்து ஏறிச்சென்றது. என் உடல் சிதைந்து கிடக்கிறது.” அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கிக்கொண்டனர்.
அவர்களுக்குக் கீழே நிகழ்ந்துகொண்டிருந்த போரை குனிந்து நோக்கிய பின் ஜ்வாலன் “நாம் இங்கிருந்து செல்லவியலாதா?” என்றான். “நாம் இவர்களால் அனுப்பி வைக்கப்படவேண்டும்” என்று வஜ்ரன் சொன்னான். “என் தந்தைக்கு என் பெயர் சென்று சேராது” என்றான் ஜ்வாலன். “அதனால் எந்த வேறுபாடும் இல்லை. அவர் உன்னை மறப்பது உறுதி” என்று வஜ்ரன் சொன்னான். “ஏன்?” என்று ஜ்வாலன் கேட்டான். “இதோ பார், எத்தனை ஆயிரம்பேர். இவர்களை எவர் நினைவில்கொள்ள இயலும்?” என்றான் வஜ்ரன். பெருமூச்சுடன் “ஆம்” என்றான் ஜ்வாலன். பின்னர் “இவர்களை இங்குள்ளோர் முற்றாக மறந்தால் நன்று என்று தோன்றுகிறது” என்றான். “ஆம்” என்றான் வஜ்ரன்.
சகுனியின் ஆணைக்கேற்ப தலைப்பாகையில் செம்பருந்தின் இறகு சூடிய மாளவர்களும், வல்லூறின் இறகுசூடிய மகதர்களும், தாழைமடல் சூடிய துண்டிகேரர்களும், கருங்குருவி இறகுசூடிய மாவேல்லர்களும், ஈச்சம்பூக்குலைச் சூடிய அபிசாரர்களும், தென்னம்பாளை சூடிய அம்பஷ்டர்களும், பனம்பூக்குலை சூடிய ஆபிரர்களும், நாரையிறகு சூடிய அரட்டர்களும், மலையணிலின் வால்சூடிய லலித்தர்களும் என திரண்டிருந்த கௌரவப் படை எதிரில் நிறைந்து அலைத்த ஐந்துமணிப் பதக்கம் சூடிய பாஞ்சாலர்களுடனும், புரவிவால்குஞ்சம் சூடிய விராடர்களுடனும், கொக்கிறகு சூடிய மச்சர்களுடனும், பன்றிக்காது சூடிய நிஷாதர்களுடனும், காகச்சிறகு சூடிய கிராதர்களுடனும், வெண்ணிறப் பனிமானின் வால்முடியை சூடிய லடாகர்களுடனும் போரிட்டது.
கமுகுப்பாளையில் கழுதைக்காது சூடிய பத்ரர்களும், தென்னம்பாளையில் பசுக்காது சூடிய பிச்சகர்களும், யானைநகங்களைக் கோத்த தலையணிகள் அணிந்த வத்சர்களும், குதிரைப்பல் மணிமாலையை தலைப்பாகையில் அணிந்த சௌரவர்களும் அங்கே போருக்கெழுந்திருக்கிறார்கள். கோசலர்களின் கொம்புகள் காட்டெருமையின் ஓசைகொண்டவை. குலூதர்கள் சிறுநாணலால் தாங்கள் மட்டுமே அறியும் கூரிய வண்டுமுரலை எழுப்பி பேசிக்கொள்கிறார்கள். குக்குரர்களும் போஜர்களும் அந்தகர்களும் விருஷ்ணிகளும் வளைதடியால் எறிந்து ஒருவரை ஒருவர் தொட்டு செய்தியறிவிக்கிறார்கள். காம்போஜர்கள் எறிந்து அக்கணமே திரும்ப இழுத்துக்கொள்ளும்படி வேல்முனையில் சுருள்கொடி ஒன்றை கட்டியிருக்கிறார்கள். அரவேகர்களின் நீண்ட மூங்கில்வேலின் முனையில் சிறுத்தைச் சிறுநீர் நனைக்கப்பட்ட மரவுரிச்சுருள் உள்ளது. அது புரவிகளை நாசிவிடைத்து மிரளச்செய்கிறது.
கௌரவர்களின் தரப்பில் திரண்டிருந்த மஞ்சள்நிறமான சிற்றுடல்கொண்ட மத்ரர்களும், சுண்ணநிறத்தில் பேருடல்கொண்டிருந்த பால்ஹிகர்களும், பறக்கும் திறன்கொண்ட ஹம்ஸமார்க்கர்களும், தாள்தோயும் நீண்ட கைகளும் வளைந்த கால்களும் கொண்ட சம்ஸ்தானர்களும், பெரிய வெண்பற்கள் கொண்ட சூரர்களும், நீண்ட தலைமயிரை நிலம்தோய ஏழு சடைகளாகப் பின்னியிட்ட வேணிகர்களும், கழுத்தில் யானைத்தந்தத்தில் செதுக்கப்பட்ட வளையங்கள் அணிந்த விகுஞ்சர்களும் எதிரே எழுந்த செந்நிறமான ஹூணர்களையும், செம்மண் நிறமான அஸ்மாகர்களையும், கரும்பாறைபோல் வெண்தேமல் படிந்த உடல்கொண்ட காரூஷர்களையும், மாந்தளிர் நிறமான மருத்தர்களையும், சருகுநிறமான பிரயாகர்களையும் எதிர்கொண்டார்கள்.
பாண்டவர்களால் தலைமைதாங்கப்பட்ட குனிந்தர்களும், தித்திரர்களும், தண்டகர்களும், தசார்ணர்களும், பௌரவர்களும் கௌரவர்களால் நடத்தப்பட்ட வாடாதனர்களையும், வனாயுக்களையும், மேகலர்களையும், முண்டர்களையும் எதிர்த்து நின்றனர். அரசே, இத்தனை குலங்கள் இப்படி திரண்டு ஒன்றென்றாவது இப்புவியில் போரிலன்றி என்றேனும் நிகழ வாய்ப்புண்டா? ஒரு பெருவிழவில் இவர்கள் இப்படி தோள்தழுவி ஒற்றை உடலென்றாகும் நாள் வருமா? இப்போரை அவர்கள் விழவென்று மாற்றி நடிக்கக்கூடும். அன்று இன்றுள்ள வஞ்சங்களும் வெறிகூச்சல்களும் மறைந்துவிட்டிருக்கும். சிரிப்பும் வாழ்த்துகளும் எழுந்துகொண்டிருக்கும். அன்று அந்தப் பெருங்களத்தில் என்னை இரு விழிமணிகளாக களிமண் உருளைமேல் நிறுவி அன்னமும் நீரும் மலரும் படைத்து வழிபடுவார்கள். பளிங்கு உருளைகள் மேல் அக்காட்சி சுருண்டு துளியென்றாகி சுழன்று அசைய நான் சொல்லின்றி நோக்கிக்கொண்டிருப்பேன்.
தன்முன் வந்து நின்றிருந்த அர்ஜுனனைக் கண்டு சுசர்மன் சற்று திகைத்தாலும் “தாக்குக!” என ஆணையிட்டு வில்லெடுத்து அம்புகளை தொடுக்கத் தொடங்கினான். அவனுக்கு இருபுறமும் நின்றிருந்த திரிகர்த்தர்கள் பெருங்கூச்சலுடன் அம்புகளை ஏவியபடி அர்ஜுனனை நோக்கி சென்றனர். அர்ஜுனனின் அம்புகள் அவர்களின் தேர்களையும் கேடயங்களையும் கவசங்களையும் அறைந்து சிதறடிக்கத் தொடங்கின. சுசர்மனின் இருபுறமும் சத்யரதனும் சத்யவர்மனும் சத்யவிரதனும் சத்யேஷுவும் சத்யகர்மனும் தேர்களில் நின்று அர்ஜுனனுடன் போரிட்டனர். அவர்கள் எப்போதும் அப்போதிருந்த உச்சவிசையுடன், உள்ளமும் உடலும் ஒன்றாகும் நிலையில் இருந்ததே இல்லை.
அர்ஜுனன் தேர்த்தட்டில் களைப்புடன் நின்றிருந்தான். அவன் முகம் வீங்கியிருந்தது. கண்களுக்குக் கீழே தசைவளைங்கள் கருமைகொண்டு தொங்கின. அவன் உடலில் இருந்த மெல்லிய நடுக்கை தொலைவிலேயே காணமுடிந்தது. அவன் கையில் காண்டீபம் அன்றிருந்ததுபோல் என்றும் ஆற்றல் குறைந்ததாக இருக்கவில்லை. அப்பால் வில்லுடன் எழுந்த கர்ணன் அவனை அரைக்கணமே விழியோட்டி நோக்கினான். பின்னர் நாணொலி எழுப்பியபடி அவன் திரும்பி சாத்யகியையும் திருஷ்டத்யும்னனையும் நோக்கி சென்றான். அவன் தன்னை நோக்கி வருவான் என எதிர்பார்த்து வில்லுடன் முன்னெழுந்த அர்ஜுனன் அவன் திரும்பிச்செல்வதைக் கண்டு தேர்த்தட்டில் திகைத்து நின்றான். அவனை எதிர்கொண்ட சுபலரும் காந்தாரப் படையினரும் அம்புகளைப் பொழிய அவர்களுடன் போர்புரியலானான்.
மறுபக்கத்தில் இருந்து துரோணர் அவனை நோக்கி வந்தார். அவருடைய நாணொலியைக் கேட்டு அவன் காண்டீபத்தைத் தூக்கியபடி அவரை நோக்கி சென்றான். அவருடைய அம்புகளைத் தடுத்து அவரை அம்புகளால் அறைந்தபடி படைகளைப் பிளந்து முன்னால் சென்றான். துரோணர் அர்ஜுனனிடம் பொருதத் தொடங்கிய சற்றுநேரத்திலேயே அவன் அம்புகளை காற்றில் முறித்து தன் அம்பால் காண்டீபத்தின் நாணை அறுத்தார். ஆனால் அவன் கீழே குனிந்து புது நாணேற்றி எழுவதற்குள் அவர் மறுதிசையில் திரும்பி சிகண்டியை எதிர்கொண்டார். அவன் அவர் அகன்றுசெல்வதை கண்டான். அதற்குள் திரிகர்த்தனாகிய சுசர்மன் வந்து அவனை எதிர்க்கத் தொடங்கினான்.
அர்ஜுனன் அம்புடன் எழுந்தபோது சம்சப்தர்களின் முதல்வனான சுசர்மன் தன் தேரில் எழுந்து நின்று அர்ஜுனனை நோக்கி “பாண்டவனே, இன்று உன்னைக் கொல்லாமல் எங்கள் குடியில் ஒருவரேனும் மீளமாட்டோம் என்று வஞ்சினம் உரைத்திருக்கிறோம். இன்று நம் வஞ்சங்கள் முடிவுக்கு வரவேண்டும்” என்று கூவினான். அர்ஜுனன் சலிப்புடன் விலகிச்செல்லும் கர்ணனையும் துரோணரையும் பார்த்தபடி அவர்களுடன் போரிட வந்தான். மின்னும் அம்புகளால் சம்சப்தர்கள் அர்ஜுனனை அறைந்தனர். அவனைச் சூழ்ந்துகொண்டு ஒரே தருணத்தில் அம்புதொடுத்தனர். அர்ஜுனன் கையிலிருந்து அம்புகள் அரைவட்டமாகப் பெருகி வந்து அவர்களின் அம்புகள் கடக்கவியலாத காப்புப்புலம் ஒன்றை அமைத்தன.
அவர்கள் நடுவே மூண்ட போரில் ஒருபக்கம் கட்டற்ற வெறி இருந்தது. ஆகவே ஒவ்வொரு அம்பிலும் ஒரு வசைச்சொல் இருந்தது. ஒன்று கசந்தது, பிறிதொன்று சீறியது, மற்றொன்று பழித்தது, இன்னுமொன்று ஏளனம் செய்தது, சொல்லில்லாது ஊளையிட்டது ஒன்று. மானுடர் எந்த அளவுக்கு வெறுப்பை திரட்டிக்கொள்ள முடியும், எவ்வண்ணம் வெறுப்பிலேயே வாழமுடியும் என்பதை அந்த அம்புகள் காட்டின. அன்பில் வாழ்வோரைவிட வெறுப்பில் வாழ்பவர்களே மிகுதி. அன்பை பேரன்பாக்கி வீடுபேறடைவது அருந்தவம். வெறுப்பை பெருவெறுப்பாக்கி அதன் நிழலில் அமர்ந்திருப்பது யார்க்கும் எளிது. அரசே, நான் நான் என எழுவோர்க்கு வெறுப்பே நல்ல படைக்கலம். வெறுப்பே இப்புவியில் மிகவும் புழங்கும் பணம். வெறுப்பால் அனைத்தையும் வாங்கிவிடமுடியும். நிறைவு ஒன்றைத்தவிர.
மறுபக்கம் தேர்ந்த கைகளிடம் அனைத்தையும் விட்டுவிட்டு தன் ஓட்டுக்குள் ஒடுங்கிவிட்டிருந்த அர்ஜுனனால் அவர்களின் அம்புகள் தடுக்கப்பட்டன. அந்த அம்புகளில் அவனுடைய ஒரு சொல்கூட இருக்கவில்லை. ஆகவே அந்த அம்புகளின் தெய்வங்கள் அவற்றில் குடியேறின. அவை காற்று வெளியிலெழுந்து பரவின. எதிர்வருவனவற்றை சிதறடித்து தங்கள் இலக்கு நோக்கி சென்றன. சம்சப்தர்களின் அம்புகள் அனைத்தும் சிதறித்தெறித்தன. அர்ஜுனனின் அம்புகளை அவர்களால் தடுக்க முடியவில்லை. திரிகர்த்தர்களின் தேர்ந்த மலைவில்லவர்கள் அம்புபட்டு அலறி விழுந்துகொண்டே இருந்தனர். தங்களைச் சுற்றி வில்லவர்கள் நிலம்படிய தேர்கள் உருண்டு அகல உருவான வெற்றிடத்தில் சம்சப்தர்கள் மேலும் மேலும் சினவெறி எழுந்து நின்றுபோரிட்டனர்.
ஒவ்வொரு அம்புக்கும் ஒரு வடிவம் உள்ளது. எடையும், மிதப்பும், கூரும், கோணலும் உள்ளது. அதனூடாகவே ஓர் அம்பு பிறிதொன்றுடன் மாறுபடுகின்றது. அரசே, அம்புகளுக்கு எவரும் பெயரிடுவதில்லை. அவற்றின் தனித்தன்மையை அவற்றை வார்த்தவன்கூட அறிவதில்லை. நாணேற்றுகையில் வில்லவன் அறியக்கூடும். பறந்தெழுகையில் நோக்குபவர் அறியலாகும். தாக்குகையில் மாள்பவர் உணர்வதென்றாலும் ஆகும். ஆனால் அவை பிறந்த கணம் முதல் வெறும்பொருளென கிடக்கின்றன. கட்டுகளில், தொகைகளில் பிறவற்றுடன் சேர்ந்து புற்றுள்செறிந்த நாகக்குழவிகளென்றிருக்கின்றன. அவற்றின் வாழ்க்கை என்பது தூளியிலிருந்து எழுந்து நாணிலமர்ந்து விண்ணிலேறி பறந்து சென்று இலக்கிலமைவது வரைக்குமான சில கணங்களே. பிறந்து ஒருமுறை பறந்ததுமே மறையும் பறவைகள்.
அந்த ஒருகணத்தில் அவற்றை ஆயிரத்தில் லட்சத்தில் ஒன்றைக்கூட விழிகள் நோக்குவதில்லை. நோக்கப்பட்டவற்றில் ஆயிரத்தில் லட்சத்தில் ஒன்றைக்கூட உள்ளம் அறிவதில்லை. உள்ளம் அறிந்தவற்றில் ஆயிரத்தில் லட்சத்தில் ஒன்றைக்கூட எவரும் பிரித்தறிந்து பெயரிடுவதில்லை. ஆனால் அத்தனை அம்புகளுக்கும் தெய்வங்கள் பெயரிட்டுள்ளன. அவற்றில் குடியேறி அவை காத்திருக்கின்றன. விண்ணிலெழுந்ததும் அவை களிப்புற்று சிறகுலைத்து கூர்சீறி பாய்கின்றன. இலக்கடைந்ததும் துள்ளித்துள்ளி குருதி குடிக்கின்றன. மண்ணில் பாய்ந்து நின்று செருக்கடிக்கின்றன. ஒன்றை ஒன்று முறித்து சிதறி உதிர்கின்றன.
தன் உளச்சொல்லை ஒருவன் அம்பிலேற்றுகையில் பிறிதொரு தெய்வத்தை அதில் அமைக்கிறான். இரு தெய்வங்களும் பூசலிடுகின்றன. அப்பூசலால் அலைக்கழிந்தபடி அவை செல்கையில் இலக்கழிகின்றன. தேர்ந்த படைக்கலங்களில் அவற்றை செலுத்துபவனின் ஒரு சொல்லும் இருப்பதில்லை. அவை அப்படைக்கலங்களுக்குரிய தெய்வங்களால் முற்றாக ஆளப்படுகின்றன. ஆகவே அவை வெல்லற்கரிய கூர்மையும் விசையும் கொண்டிருக்கின்றன.
சுசர்மன் அர்ஜுனனின் நிகர் அகவை கொண்டவன். அவன் தான் பிறந்த செய்தியை முதலில் தான் கேட்டதே அர்ஜுனனிடம் அவனை ஒப்பிடுவதாகத்தான். “அஸ்தினபுரியின் அர்ஜுனனுக்கு நான்குமாதம் இளையவன் நீ” என அவன் அன்னை அவனிடம் சொன்னாள். “உன்னை ஈன்றபோது வயற்றாட்டியும் அதையே சொன்னாள்.” அர்ஜுனனாக முயல்வதே அவன் இளமையாக இருந்தது. தேர்ந்த ஆசிரியர்களிடம் வில்பயின்றான். “ஒருநாள் நீ அஸ்தினபுரியின் இளவரசனுடன் வில்கோப்பாய். அன்று அவன் நீ அவனே என உணரவேண்டும்” என ஆசிரியர் அவனிடம் சொன்னார். அவன் வில்தேர்ந்தான், அர்ஜுனனைப்போல் மலைக்காடுகளில் அலைந்தான்.
திரிகர்த்தம் வழியாக அர்ஜுனன் படைகொண்டு சென்றபோதுதான் அவன் அர்ஜுனனை முதலில் பார்த்தான். அந்த கணத்தை அவன் பதினெட்டாண்டுகளாக எண்ணி எண்ணி காத்திருந்தான். அது அணுகும்தோறும் பதற்றம் கொண்டான். இரவுகளில் துயிலாமல் புரண்டான். இருளில் நின்று ஏங்கி அழுதான். அந்தநாளில் அவன் கால்கள் தளர உடல்நடுங்க முகம் வெளிர்த்து உதடுகள் உலர்ந்து விழிகள் ஒளிக்குக் கூச படைமுகப்பில் நின்றிருந்தான். அஸ்தினபுரியின் படை வருவதை கொம்புகள் அறிவித்தபோது அவன் விழுந்துவிடுவதைப்போல் உணர்ந்தான். மூச்சு வெம்மைகொள்ள விழி இருட்டி வந்தது. தொலைவில் அமுதகலக் கொடி தெரிந்தபோது கொம்புகள் முழங்க அரசகுடியினர் எழுந்து நின்றனர். அர்ஜுனனை அவன் தொலைவில் தேர்முகப்பில் பார்த்தான். பலமுறை ஓவியங்களில் பார்த்து உள்ளத்தில் வளர்த்தெடுத்திருந்த தோற்றம்.
ஆனால் அந்நிகழ்வை அவன் பல்லாயிரம் முறை உளம்நடித்திருந்தமையால் அது மிகச் சலிப்பூட்டுவதாக இருந்தது. அது எப்போது முடியுமென அவன் கணம் கணமென காத்திருந்தான். ஒவ்வொரு முறைமையாக முடிந்து அவன் அர்ஜுனனை அணுகியபோது நாக்கில் கசப்பென ஏதோ நிறைந்திருந்தது. அர்ஜுனன் அவனைத் தழுவி இன்சொல் உரைத்தான். “இவன் உங்களை எண்ணி வில்பயில்பவன், இளவரசே” என தந்தை அர்ஜுனனிடம் சொன்னது செவியில் விழுந்தபோது நெய் பற்றிக்கொள்வதுபோல சினம் பீறிட்டெழுந்தது. அக்கணமே வாளை உருவி அவனை வெட்டி வீழ்த்திவிடவேண்டும் என்பதைப்போல. நெஞ்சிலறைந்து வெறியோலமிடவேண்டும் என்பதுபோல.
அன்றுமுதல் அவன் அர்ஜுனனை வெறுத்தான். அர்ஜுனன் திரிகர்த்தத்தில் இருந்த எட்டு நாட்களில் இரண்டாம் முறை சுசர்மன் அவனை சந்திக்கவே இல்லை. அர்ஜுனன் வந்த மறுநாளே அவனுக்கு உடல்நலம் குன்றியது. காய்ச்சலும் வலிப்பும் எழ நினைவிழந்து மருத்துவநிலையில் கிடந்தான். அர்ஜுனன் சென்ற பின்னர் எட்டு நாட்கள் கழித்தே எழுந்தான். பிறகெப்போதும் அவன் அர்ஜுனன் என்னும் சொல்லை நாவால் சொல்லவில்லை. செவிக்குக் கேட்டால் உளம்வாங்காது ஒழிந்தான். அதை அறிந்தபின் எவரும் அதை அவனிடம் சொல்லவுமில்லை. மெல்ல மெல்ல அப்பெயரை எண்ணுவதையும் அவன் கடந்துசென்றான். ஆனால் அவன் கனவுகளில் அர்ஜுனன் காண்டீபம் ஏந்திய கையுடன் விழிகளில் ஏளனத்துடன் வந்துகொண்டே இருந்தான்.
அவன் தம்பியர் அவனாலேயே உருவாக்கப்பட்டனர். அவர்களுக்கு அந்த வெறுப்பை சொல்லில்லாமல் அவன் அளித்தான். அவர்களுக்கு அனைத்தையும் அளிக்கும் ஆசிரியனாகவும் சொல்துணைவனாகவும் ஆளும்தெய்வமாகவும் அந்த வெறுப்பு அமைந்தது. ஒருமுறை சத்யேஷு “இவ்வாறு நாம் அவனை வெறுக்காவிட்டால் இத்தனை ஆர்வத்துடன் வில்பயின்றிருப்போமா? மலைக்குடிகளாகிய நாம் இவ்வளவு விரிவாக பாரதவர்ஷத்தின் அரசியலை அறிந்திருப்போமா?” என்றான். அவன் சொல்வதென்ன என உடன்பிறந்தாருக்குப் புரியவில்லை. அவர்கள் வெறுமனே அவனை கூர்ந்து பார்த்தனர். “இவ்வெறுப்பால் நாம் அடைந்ததே மிகுதி. நாம் இதனால் பேணிவளர்க்கப்பட்டோம்” என்றான் சத்யேஷு. அவர்கள் நால்வருக்கும் அப்போதும் அது புரியவில்லை.
குருக்ஷேத்ரப் போர்க்களத்தில் சுசர்மனும் தம்பியரும் தங்கள் பிறவிகளின் இறுதிநிலையை அடைந்தனர். அங்கே அவர்கள் ஒவ்வொருவரும் தங்களை பெருவியப்புடனும் களிப்புடனும் கண்டடைந்தனர். நான் நான் என பெருகினர். இன்மை வரை சுருங்கினர். அக்கணம் வரை வாழ்ந்தமை அதற்காகவே என்பதுபோல் திளைத்தனர்.
அர்ஜுனனின் பிறையம்பு சத்யரதனின் தலையை அறுத்து வீசியது. அதைக் கண்ட பிறர் வேறெங்கோ அது நிகழ்வதென உணர்ந்தனர். சத்யவர்மன் நெஞ்சில் பாய்ந்த நீளம்புடன் தேருடன் வைத்து தைக்கப்பட்டான். சத்யகர்மனும் சத்யவிரதனும் தலையறுபட்டு தேரிலிருந்து விழுந்தனர். சுசர்மன் “கீழ்மகனே!” என்று அலறியபடி வில்லுடன் புரவியில் பாய்ந்தேறி அம்புகளை ஏவிக்கொண்டே அர்ஜுனனை நோக்கி பாய்ந்தான். அவன் தலையை அர்ஜுனனின் அம்பு வெட்டி வீழ்த்த புரவியிலிருந்து அவன் பக்கவாட்டில் விழுந்து துடித்தான். புரவி விசையழியாது விரைந்துசென்று அர்ஜுனனின் தேர்க்காலில் மோதி விழுந்தது.
சத்யேஷு தன் உடன்பிறந்தார் கொல்லப்பட்டதை பார்த்தான். முதல்முறையாக அவன் அந்த வெறுப்பை தனக்கு அப்பால் நிறுத்தி நோக்கினான். “ஏன்?” என அவன் வியந்த அக்கணமே அவன் கழுத்தை அறைந்து தலையை வெட்டிச் சரித்தது அர்ஜுனனின் அம்பு. அந்த வினா எங்கோ எஞ்சியிருந்தது. “உச்சிப்பொழுதாகிறது, அர்ஜுனா. அங்கே பகதத்தரை உன் தமையன் எதிர்கொள்கிறான். அவரை அவனால் வெல்லமுடியாதென்று எண்ணுகிறேன்” என்று இளைய யாதவர் சொன்னார். தன்னைச் சூழ்ந்து சிதறிக்கிடந்த சம்சப்தர்களின் உடல்களை திரும்பி ஒருகணம் பார்த்துவிட்டு அர்ஜுனன் “செல்க!” என்றான்.