விஷ்ணுபுரம் விழா: இலக்கியமெனும் களிப்பு
விஷ்ணுபுரம் அமைப்பின் கருத்தியல் என்ன?
விஷ்ணுபுரம் ஆவணப்படங்கள்
விஷ்ணுபுரம்விழா: கடிதங்கள்-16
அன்புள்ள எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு,
நலம். நலம் அறிய ஆவல்.
அது ஒரு கனா அல்லது லட்சியம் என்று சொல்லலாம். ஜூன் 2016-ல்சோற்றுக்கணக்கு கதை படிக்கப்போய், உங்கள் எழுத்துக்களில் ஈடுபாடு ஏற்பட்டு, ஒவ்வொருநாளும் உங்கள் எழுத்துக்களை தேடி படித்து, பழைய விஷ்ணுபுரம் விருது விழாக்களின் காணொளிகளை ,உங்கள் உரைகளை, யூடுயூபில் கேட்டு, உங்களை நேரில் சந்திக்கவும், விஷ்ணுபுரம் விருது விழாவில் கலந்துகொள்ளும் ஆவலையும் வளர்த்துக்கொண்டேன். உங்களுக்கு கடிதங்கள் எழுதி, உங்கள் இணையதளத்தை மேற்பார்வை பார்க்கும் நண்பர்களுடன் தொடர்புகொண்டு என, என்னுடைய நட்பு வட்டத்தை வளர்த்துக்கொண்டேன்.
உங்களின் வாசகர்கள் என்ற வகையில் மட்டும் அணுக்கமாகிவிட்ட, முகமே பார்த்திராதநண்பர்கள், நீண்டநாள் பழகிய நண்பர்கள் போல் , எனக்கு அன்றாடும் குறுஞ்செய்திகள் அனுப்பியும், மின்கடிதங்கள் எழுதியும் என்னுடன் தொடர்பில் இருந்தார்கள். அவர்களை நேரில்பார்க்கும் ஆர்வமும் வளர்ந்துகொண்டே இருந்தது. விஷ்ணுபுரம் விருது விழாவின் உரைகளைவேண்டுமானால், யூடுயூபில் கண்டுவிடலாம். புனைவுகளையும், கவிதைகளையும் படைக்கும்படைப்பாளிகளை நேரில் சந்தித்து உரையாடும் வாய்ப்பு , நேரில் வந்து விழாவில்கலந்துகொள்ளும் வாசகர்களுக்குத்தானே உண்டு?
எனது ஆசை கனவாக உருஎடுத்துக்கொண்டிருந்தது. எப்பொழுதும் குழந்தைகள் படிப்பு, விடுமுறை என்று பார்த்து, ஜூன்அல்லது ஜூலை மாதங்களில் சொந்த ஊரான கரூருக்கு வருபவன், கல்லூரி முடித்துவிட்டுவேலைக்குப் போகலாம் என குழந்தைகள் வளர்ந்துவிட, இந்த வருடம், விஷ்ணுபுரம் விருதுவிழாவில் வந்து கலந்துகொள்ளும் டிசம்பர் பயணம் என்று ஆக்கிக்கொண்டேன்.
விழாவிற்குஒரு புரிதலுடன் வரும்பொருட்டும், விவாதத்தில் கலந்துகொள்ளும் பொருட்டும், ஊருக்கு வந்தமுதல் நாளே, udumalai.com கடைக்கு நேரடியாகச் சென்று ராஜ் கெளதமனின் இரண்டுபுத்தகங்கள் – பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச்சமூக உருவாக்கமும் , சுந்தரராமசாமி கருத்தும் கலையும் வாங்கிக்கொண்டேன். வாசிக்கத்தான் இல்லை.
உங்கள் எழுத்துக்களைப் படிக்கும் நானும், என் மனைவி ராதாவும், ஆங்கில எழுத்துக்களைஅதிகமாக படித்து எழுதுவதில் ஆர்வம் உள்ள எனது மகன் ஜெய்ந்தரும், படித்து பட்டம்பெறுவதற்காக மட்டும் புத்தகம் எடுக்கும் எனது மகள் பார்கவியும் டிசம்பர் 22 அன்று காலைகலைச்செல்வி அவர்களின் அமர்வின் பொழுது அரங்கில் நுழைந்ததும், எங்களைஎதிர்பார்த்திருந்த செந்தில்குமாரும், அரங்கசாமியும், ஷாகுல் ஹமீதும் ஒரு திருமணநிகழ்ச்சியில் வரவேற்பதைப்போல வரவேற்க, எங்கள் இலக்கியத் தேடலின் இன்னொருபரிமாணம் ஆரம்பமானது.
கரூரிலிருந்து, காலையில் எழுந்து நேராக வந்ததால் கொஞ்சம் தாமதமாக வந்தோம். மன்னிக்கவும். அதற்கு அப்புறம் இரண்டு நாட்களும், ஒரு அமர்வு விடாமல் கலந்துகொண்டோம். ஒவ்வொரு இலக்கிய அமர்விலும் கற்றுக்கொள்ளவும் பெற்றுக்கொள்ளவும், எனக்கு அல்லதுஎங்களுக்கு என்று இருந்த இலக்கியம், கதைகள், எழுத்து பற்றிய கேள்விகளுக்கு விடைகளும் கிடைத்தவண்ணம் இருந்தன. கலைச்செல்வி அவர்கள் , எழுத ஆரம்பித்தால் அப்புறம் அதுவேஎடுத்துக்கொண்டு சென்றுவிடும் என்று சொன்னதும், சரவணக் கார்த்திகேயன் அவர்கள்முதலில் பேஸ்புக்கில் எழுத ஆரம்பித்தபொழுது ஒரு தற்காலிக புகழுக்காக எழுதியதாகவும், இப்பொழுது பிடித்ததைத்தான் எழுதுவதாகவும் சொன்னது, அவ்வப்பொழுது வாழ்வியல்நிகழ்வுகளையும், வாசித்ததையும், ரசித்ததையும் எழுதும் எனக்கு ஊக்கமளிப்பவையாகஇருந்தன.
சரவணன் சந்திரன் அவர்கள், ஒரு நாள் எழுதாமல் இருந்தால் அவரால் நிம்மதியாகஇருக்கமுடியாது என்றும், எழுதுவதே அவருக்கு மிக நிம்மதி என்று சொன்னது எங்கள் மகன்சொல்வதுபோல் இருந்தது. சில கேள்விகளுக்கு அவரது உளவியல் ரீதியான அகம் திறந்தபதில்கள், என்னையும் என் மனைவியையும், எங்கள் மகன் பக்கம் திரும்பி உந்தன் பிம்பம்என்று பார்வையால் பரிமாறச் செய்தது. கல்லூரிப் பாடங்களைவிட, மற்ற புத்தகங்களைவாசிப்பதிலும், எதையாவது யோசித்து எழுதுவதிலும் ஆர்வமாக இருக்கும் எங்கள் மகனின்நிலைப்பாட்டை, மேலும் நன்முறையில் புரிந்துகொள்ள இந்த அமர்வு உதவியாக இருந்தது.
நாங்கள் சரியான வீட்டுப்பாடம் எதுவும் செய்யாமல் வந்திருந்தாலும், ஸ்டாலின் ராஜாங்கத்தின்செறிவான உரை, அவரது ஆளுமையையும் , ஞானத்தையும் எங்களுக்குள்கடத்திக்கொண்டுதான் இருந்தது. பண்பாட்டையும், தலித் சமுதாயத்தையும் பார்ப்பதற்குபிறிதொரு பார்வையை கொடுத்துச் சென்றது. நிகழ்வு முடிந்ததும், ‘ஆணவக்கொலைகளின்காலம்’ புத்தகத்தை வாங்க வைத்தது. சாம்ராஜின் பேச்சு அவையை சிரிக்க வைத்த வண்ணம்இருந்தது. இனிமேல் நான் மறந்தும்கூட ‘அற்புதம்’ என்ற வார்த்தையை உபயோகிக்கப்போவதில்லை. முடிந்தளவு புதிய வார்த்தைகளை உபயோகம் செய்ய வேண்டும் என்பதைஅவரது பகடியில் புரிந்து கொண்டேன்.
சுனில் கிருஷ்ணனும், தேவி பாரதியும், நான் இன்னும் அதிகம் தெரிந்துகொள்ளாத, அவசியம்தெரிந்துகொள்ளவேண்டிய ஆளுமைகள் என உணர்ந்தேன். அவர்களை அறிந்துகொள்ளும்பொருட்டு. ‘அம்பு படுக்கை’, ‘நட்ராஜ் மகராஜ்’ புத்தகங்களை வாங்கிக்கொண்டேன்.
வாசகர்கள் ஆர்வமுடன் பங்குகொள்ளுமளவு , குயிஸ் செந்தில் அவரது நிகழ்வை நடத்தினார். அவர் கேட்ட நாற்பது கேள்விகளுக்கு, எனக்கு இருபது கேள்விக்களுக்கு அடிப்படைவிஷயங்கள் இருந்தாலும், வந்திருந்த மற்றவர்களுடன் போட்டிபோடும் அளவு என்னிடம் வேகம்இல்லை. எனக்கு மிகவும் பிடித்த, இரண்டு மூன்று முறை வாசித்த , ஒரு புளியமரத்தின் கதை, புயலில் ஒரு தோணி சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு விடை தெரிந்தும் , உள்ளுக்குள் இருந்தது அதிவேகத்தில் வெளியில் வரவில்லை. சுஜாதா கதைகள் அதிகம் படித்தவன் என்ற மெத்தினம்எனக்கு உண்டு.
செந்திலின், கணேஷ் படிக்கும் அந்த இன்னொரு நாவல் என்ன என்ற சாப்பாட்டுகேள்விக்கு கூட என்னால் பதில் சொல்ல முடியவில்லை. தலை தொங்கி போச்சு. நேராக வெளியே சென்றேன். ‘பின் தொடரும் நிழலின் குரல் ‘ புத்தகம் வாங்கி வந்தேன். புத்தகம் எல்லாம் கொடுத்து முடித்திருந்த உங்களிடம் வந்து, புத்தகத்தில் ஒரு கையெழுத்து வாங்கிக்கொண்டேன். (நாங்க, கு. அழகர்சாமியின் , அன்பளிப்பு கதை படிச்சிருக்கோம்).
தமிழை பேசும், எழுத்து கூட்டி வாசிக்கும் மகன் ஜெய், அமர்வுகளில் கலந்துரையாடலை முழுதாக உள்வாங்கிக்கொள்ள கொஞ்சம் கஷ்டப்பட்டான். லீனா மணிமேகலையின்அமர்வையும் , அனிதா அக்னிஹோத்ரியின் அமர்வையும் ரசித்ததாக சொன்னான். லீனாமணிமேகலையின் அமர்வின்போது பெண்ணியத்தையும், தூமி பற்றிய பழைய / புதியஎண்ணங்களை விவாதித்ததையும் கவனித்து கேட்டான். நீங்களும் லீனாவும் கவிதை பற்றியமுரணான கருத்துக்கள் கொண்டு உரையாடினாலும், நிகழ்வு முடிந்து இருவரும் கைகுலுக்கிபேசிக்கொண்டிருந்ததை பார்த்து சந்தோஷப்பட்டான். லீனாவின் புத்தகமான பெண்ணாடியில்அவனும், அந்தரக்கண்ணி புத்தகத்தில் எனது மகளும் அவரது கையெழுத்தைவாங்கிக்கொண்டார்கள்.
முதல் நாள் மதியம் சாப்பிட்டு முடித்த கையோடு, அரங்காவும், ஷாகுலும் அவரவர் பங்குக்குஎன்னையும் என் குடும்பத்தாரையும் உங்களுக்கு எங்களை அறிமுகப்படுத்தினார்கள்.நீங்களோ , இவரைத் தெரியுமே என்றீர்கள். உங்களோடு பல புகைப்படங்கள் ‘கிளிக்’ ஆகிவிட்டது. சுற்றி பார்த்தால் நாஞ்சில் நாடனும், தேவதேவனும். நாஞ்சில் நாடனிடம் “உங்கள்பாஷையில் சொன்னால், சொல்லாழியில் அதிகம் சொற்கள் இல்லாதவன். நீல வேணி டீச்சரும், காவலாளி சுந்தர் சிங்கும் என் நினைவில் இருந்துகொண்டே இருப்பார்கள்” என்று என்னைஅறிமுகப்படுத்திக்கொண்டேன். ‘அட , இவன் கொஞ்சம் நம்மளை படிப்பான் போல’ என்றுபுரிந்துகொண்ட புன்னகை அவரது முகத்தில் வந்து போனது.
தேவதேவனும், நாஞ்சில் நாடனும், நானும் , குடும்பமும் என புகைப்படம் எடுத்துக்கொள்ள , தோழி லோகமாதேவி உதவி செய்தார். சொல்ல மறந்துவிட்டேன். அவரையும், நாங்கள் இதுவரை பாராமுகமாக குடும்பம் சகிதமாகபழகியிருந்தோம். இந்த விழாவில்தான் அவரையும் முதல்முறை நேரில் சந்திக்கிறோம். சுரேஷ்பிரதீப், விஷால் ராஜா, சுசித்ரா, யோகேஸ்வரன், தாமரைகண்ணன் என அனைவரையும் நேரில்சந்தித்து கை குலுக்கி, அவர்களது புன்னகையை பரிசாக பெற்றுக்கொண்டேன். கடலூர்சீனுவிடம், “தளத்தில் உங்களின் விமர்சனக் கடிதங்கள் அனைத்தையும் படிப்பேன்” என்று என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். டிசம்பர் 28, கி. ரா-வை பார்க்கச் செல்கிறேன், உங்களால் என்னுடன் இணைந்து கொள்ளமுடியுமா என்று சீனுவிடம் கேட்டேன். அவர் , அன்றுவீடு மாற்றும் வேலை இருக்கும் என்று சொன்னார்.
. ஒவ்வொரு நிகழ்வும் , நேரப்படி ஆரம்பித்து நேரத்தில் முடிந்தது ஆச்சரியப்பட வைத்தது. நான்வேலை பார்க்கும் நிறுவனத்தில் , GalaxZ என்று வாடிக்கையாளர்களை வரவைத்துஆண்டுதோறும் ஒரு மாநாடு நடத்துவோம். அதற்கு இணையாக இது இருந்தது. சாப்பாட்டுவிஷயத்திலும் அப்படித்தான். அந்த நிகழ்ச்சிக்கு சென்றால் மூன்று நேர சாப்பாடும், இடைஇடையே நொறுக்குத் தீனியும் குடிக்கும் பானங்களும் இருந்துகொண்டே இருக்கும். எனக்குத்தெரிந்து கடந்த இருபத்தைந்து வருடங்களில், நான் பொறுப்பு ஏற்காமல், ஒரு வாடிக்கையாளனாக பங்கேற்கும் ஒரு பொது நிகழ்வு இதுதான். எந்த விதமான கவலையும் இல்லாமல் (சாப்பிட்டிற்கு கூட எங்கு சென்று என்ன சாப்பிடுவது என்று அலையாமல்), பிடித்த இலக்கியம் மட்டும் பேசி , கலந்தோலசித்து, மகிழ்ந்திருந்த நாட்காளாக இந்த இரண்டு நாட்கள் இருந்தன. அமைப்பாளர்களுக்கும் , உங்களுக்கும், நண்பர்களுக்கும் மிக்க நன்றி
விருது வழங்கும் நிகழ்வில், பங்குகொண்டு வாழ்த்துரை கூறிய எழுத்தாளர்கள் – ஸ்டாலின் ராஜாங்கம், சுனில் கிருஷ்ணன், மதுபால், தேவி பாரதி, சிறப்பு விருந்தினர் அனிதாஅக்னிஹோத்ரி, நீங்கள், விருது கொடுத்து சிறப்பிக்கப்பட்ட ராஜ் கெளதமன் என அனைவரதுஉரைகளும் மிகச் சிறப்பு. அன்று விழாவில் கேட்டதல்லாமல் , ஊருக்கு வந்ததும் யூடுயூபிலும்கேட்டு அனைத்தையும் உள் வாங்கிக்கொண்டேன்.
காலமும் சமயம் அமைந்தால், நான் குடும்ப சகிதமாக அடுத்து அடுத்து வந்து விஷ்ணுபுரம்விருது விழாவில் கலந்துகொள்வதாகவே உள்ளேன்
குறிப்பு
நல்லஒருங்கமைப்புடன் நடத்தும் விழா இது என்பதற்கு எந்த மாற்று கருத்தும் இல்லை. நேற்று , Netflex-ல் Ellen Degeners ஷோ பார்க்கும் பொழுது ஒரு எண்ணம் வந்தது. அமெரிக்காவில் நடக்கும்அமர்வுகளில் , ஒருவர் கேள்வி கேட்கும்பொழுது ஒரு முறையை கடைபிடிப்பது உண்டு. கேள்விகேட்பவர், தங்கள் பெயரையும், செய்யும் வேலை, ஊர் போன்றவற்றை சுருக்கமாகசொல்லிவிட்டு கேள்வி கேப்பார்கள். விஷ்ணுபுரம் விழாவிலும், அந்த முறைகடைபிடிக்கப்பட்டால், என்னைப்போன்ற புதிய பங்காளிப்பாளர்களுக்கு , மற்ற வாசகர்களைஅறிந்துகொள்ள உதவியாக இருக்கும்.
ஒருவரே, திரும்ப திரும்ப கேள்வி கேட்டால், சுயஅறிமுகத்தை தவிர்க்கலாம். இன்னொரு முறையும் சில பேச்சாளர்களால் கடைபிடிக்கப்படும். அதாவது, கேட்டகேள்வியையே , பார்வையாளர்களுக்கு , அவர் சுருக்கமாக , இன்னொரு முறை சொல்லிவிட்டு , அதற்கு பதில் சொல்வார். நண்பர் ராம் அவர்கள் , அனிதா அக்னிஹோத்ரி அவர்களிடம்கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, மொழி பெயர்க்க வேண்டிய சூழ்நிலை இருந்ததால், இதுகடைபிடிக்கப்பட்டது. இந்த முறை , மற்ற எழுத்தாளர்களுக்கும் பின்பற்றினால் நன்றாகஇருக்கும். உங்களுக்கு இதுவெல்லாம் தெரியாமல் இருக்காது. நேரம் விரயம் இவற்றில் ஆவதைநினைத்து, நீங்கள் தவிர்க்கவும் செய்யலாம். உங்களின்
விழாகுழு அமைப்பாளர்களின் தீர்வுக்கு விட்டுவிடுகிறேன்.
அன்புடன்,
வ. சௌந்தரராஜன்
ஆஸ்டின்
அன்புள்ள சௌந்தர்
முதல் விஷயம் ஓர் அரங்குக்கு ஒரு மணிநேரம் என்பது. அதில் கூடுமானவரை அந்த ஆசிரியரே பேசவேண்டும். கேள்விகேட்பவர் தன்னைப்பற்றிச் சொல்லலாம் என்றால் அந்த அறிமுகத்தையே இருபது நிமிடம் நீட்டிவிடுவார்கள் நம்மவர். கேள்விகள் சுருக்கமாக இருப்பதே நல்லது
அறிமுகங்களை எளிதாக ஓர் அரங்குக்கும் இன்னொரு அரங்குக்கும் இடையேயான இடைவெளியில் செய்துகொள்ளலாம் அல்லவா?
ஜெ