‘நீள’கண்டப் பறவையைத் தேடி

a (2)

அன்புள்ள ஜெ.,

நலமா? ‘மார்கழித்திங்கள் பனி நிறைந்த நன்னாளாம் நீராடப் போகாதீர்’ பாட்டு கோயில்களிலோ ரேடியோ டீவியிலோ ஒலிக்கும் போது தான் சென்னையில் மார்கழி என்பதே ஞாபகத்திற்கு வரும். இந்த முறை அப்படியல்ல. பல நாட்கள் போர்வையின் துணை தேவைப்பட்டது. அப்படியாகப்பட்ட ஒரு விடிகாலை நேரத்தில் 05/01/2019 அன்று சனிக்கிழமை காலை கிண்டி ரயில் நிலைய வாசலிலிருந்து பேருந்தில் புறப்பட்டோம் புலிக்காட் ஏரி நோக்கி. நோக்கம் இந்த சீசனில் மட்டுமே காணக்கிடைக்கிற ‘பிளெமிங்கோ’ (பூநாரை) பறவைகளை தரிசிப்பது மற்றும் நெல்பேட்டா பறவைகள் சரணாலயம் காணுதல். ‘ஹிந்து’வில் சில நாட்களுக்கு முன்தான் விளம்பரம் பார்த்தேன் . நான் நீண்ட நாட்களாக பார்க்கவேண்டும் என்று  நினைத்த விஷயம். உடனே முன்பதிவு செய்து கொண்டேன். சுற்றுலா நடத்துனர் keyterns – ஸ்ரீனிவாசன். ‘பிளமிங்கோ ட்ரிப்’ என்ற வாட்சப் குரூப்பில் வரிசையாக அது சம்பந்தமாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. அதனால் சுற்றுலாவிற்கு முதலிலேயே அதற்கான மனநிலை அமைந்து விட்டது.

இதற்கு முன் நண்பர்களுடன் புலிக்காட் போயிருக்கிறேன். ஆனால் எதுவும் பார்க்கக்கிடைக்கவில்லை. எங்கெல்லாம் ‘போர்டிங் பாயிண்ட்’  என்று முதலிலேயே வாட்சப் பில் பகிரப்பட்டிருந்ததால் குழப்பமில்லை. உப்பிய கன்னத்தோடு அந்த விடிகாலை நேரத்தில் கிண்டியில் ஒரு பத்து பேர் பேருந்தில் ஏறியிருப்போம். ஸ்ரீனிவாசன், பாலாஜி  அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். பயண ஏற்பாட்டின் படி எங்களோடு ஒரு பறவையியலாளரும்(birder) வந்திருந்தார். என் பக்கத்து சீட்டில் அமர்ந்த பாடியில்  ஏறிய  கிருஷ்ணா ஒரு மல்லு இளைஞர். பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னைதான். சாப்ட்வேர் காரர். கன்னியாகுமரி ஊர். உற்சாகமாகப் பேசியபடி வந்தார். அவருடைய உற்சாகத்தை மேலும் அதிகரிக்கு முகமாக தங்களுடைய தளத்தைப் பற்றிப் பேசினேன்.ஜெயகாந்தனா என்றார். ஜெயமோகன் 2.0, சர்க்கார் என்று அவர் கவனத்தைக் குவித்தேன். வெண்முரசை’ப் பற்றி ஒரு ‘இண்ட்ரோ’ கொடுத்தேன். ஆனால் இதையெல்லாம் அறிமுகமான அரை மணி நேரத்திலேயே செய்து முடித்து விட்டேன் என்று உறைத்தபோது அடடா.. தப்பு பண்ணிட்டோமோ என்று தோன்றியது. ஆனால் கடைசி வரை உற்சாகமிழக்காமலேயே இருந்தார். அவருக்கு keyterns ஸோடு இது ஆறாவது சுற்றுலா. அது போக நண்பர்களோடு சுற்றுலா வேறு. தொடர் பயணத்தில் இருக்கிறார். சாப்ட் ஆக ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்து பின் தமிழுக்கு மாற்றிக்கொண்டார். எங்களுக்கிடையேயான குறைந்த பட்ச பறவையியல் அறிவைப் பரிமாறிக்கொண்டோம்.

ஸ்ரீநிவாசன் ஒலிபெருக்கியில் அன்றைய நிகழ்ச்சி நிரலைப் பகிர்ந்து கொண்டார் ஒரு பொறுப்புத் துறப்போடு. அதாகப்பட்டது ‘பிளமிங்கோ’ க்கள் இந்த பருவத்தில் அதிகமாக வரும் என்றாலும் , அவற்றைக் காண்பதென்பது அன்றன்றைய அதிர்ஷ்டத்தைப் பொறுத்ததே. நல்ல sighting கிடைக்கும் என்று நம்புகிறேன் என்றார். நம்பிக்கையோடு பயணத்தைத் தொடர்ந்தோம். இதற்கிடையே birder  பூநாரைகளைப் பற்றி ஒரு சிறிய அறிமுகம் கொடுத்தார். பூநாரைகள் பொதுவாக அதிக கூச்ச சுபாவமுள்ளவை. எனவே மற்ற பறவைகளைப் போல் எளிதாகப் பார்த்துவிட முடியாது. அநேகமாக அவை உள்நாட்டுக்குள் வலசை போகக்கூடியவை. மிகக் குறைந்த அளவிலேயே வெளிநாட்டிலிருந்து வருவதாகவும், அவையும் மும்பைக்கு அருகே மட்டுமே வருவதாகவும் கூறினார். சென்னையில் பள்ளிக்கரணை மற்றும் கேளம்பாக்கத்தில் குறைந்த எண்ணிக்கையில் காணப்படுவதாகவும், மிக அதிக எண்ணிக்கையில் காணக்கிடைப்பது புலிக்காட்டில் தான் என்றும் கூறினார். ‘உமது வாக்கு பலிக்கக் கடவது’ என்று சபிப்பதைத் தவிர வேறெதுதுவும் செய்வதற்கில்லை.பைனாகுலர், கேமரா சகிதம் வந்திருந்த ‘சஹ்ருதயர்’கள் விரைவிலேயே கூடிக் கும்மியடிக்கத் தொடங்கி விட்டனர். வந்தவர்களிலேயே பறவையியலை ‘சீரியஸ் ஹாபி’ யாகக் கொண்டவர்கள் சிலர் இருந்தனர். அவர்கள் birder ஐ துளைத்தெடுக்க ஆரம்பித்தனர். அவரும் சளைக்காமல் பதில் சொல்லிக்கொண்டிருந்தார்.

சென்னையிலிருந்து ஒரு மணி நேர பஸ் பயணத்திலேயே ஆந்திர கிராமப் புரங்களுக்குள் நுழைந்து விடுகிறோம். அங்கங்கே கிராமங்களில் சேவல்களை  சண்டைக்கு பழக்கிக்கொண்டிருந்தார்கள் சங்கராந்தியை ஒட்டி நம்ம ஊரு ஜல்லிக்கட்டு போல அங்கு நடத்துவார்கள் என்று கேள்விப்பட்டேன். சூலூர்பேட்டை ரவுண்டானாவிலேயே ஆளுயரக் ‘கட்டவுட்’களிலிருந்து ஆந்திரவாடுகள் முறைத்துக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருந்தார்கள். ஊரே ‘கட்டவுட்’களால் மறைக்கப்பட்டிருந்தது. சூலூர்பேட்டையில் காலைச் சிற்றுண்டியை எல்லோருக்கும் வாங்கிக்கொண்டு புலிக்காட் போய் சாப்பிடுவதாக திட்டம். அங்கு சற்று தாமதம் ஆகிவிட்டது. காலை எட்டரை மணிக்கே அவ்வளவு பனி இருந்தது. மிகக் குறைவான தூரமே காணக்கிடைத்தது. ஏற்கனவே பொறுப்புத் துறப்பு வேறு பயமுறுத்தியது.

b

சூலூர்பேட்டையிலிருந்து ஸ்ரீஹரிகோட்டா செல்லும் சாலை இருபத்தியிரண்டு கிலோ மீட்டர் . நடுவில் எந்த கிராமமோ ஊரோ இல்லையாகையால் பேருந்து போக்குவரத்து இல்லை. தனியார் வாகனங்கள் வந்தால்தான் உண்டு. வேடந்தாங்கலுக்கும் செங்கல்பட்டிலிருந்து ஒரு நாளைக்கு ரெண்டோ மூன்றோ பேரூந்துகள்தான். புளியோதரையைத்  தின்றுவிட்டு கூச்சப்படாமல் தெருவில் வீசியெறிந்துவிட்டுப் போகிற தலைமுறை இருக்கிறவரை அரசு இந்த மாதிரி இடங்களுக்கு பேருந்து வசதி செய்து கொடுக்காமல் இருப்பதே நல்லது. ஸ்ரீஹரிகோட்டா ‘ஸ்பேஸ் சென்டர்’ ராணுவப் பாதுகாப்புக்கு உட்பட்ட பகுதியாதலால் பறவைகளுக்கு உச்சகட்ட பாதுகாப்பு. சரியான இடத்தையே தேர்வு செய்திருக்கின்றன. நான்கு அல்லது ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் புலிக்காட் ஏரி ஆரம்பிக்கிறது. முக்கால் பகுதி ஆந்திரா கால் பகுதி தமிழ்நாடு. இருமங்கும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பளீரென்று நீர்ப்பரப்பு. இதை brackish water என்று கூறுகிறார்கள். அதாவது  உப்புநீரும் நன்னீரும் கலந்த கலவை. இரண்டு ஆறுகள் அங்கு கலப்பதாகக் கூறுகிறார்கள்.  பூநாரைகள் விரும்பி வர அது ஓர் காரணம். இரண்டு பக்கமும் பார்த்துக் கொண்டே சென்றோம். ஆங்காங்கே சென்னையிலிருந்து பைக்கில் வந்த இளைஞர்களைப் பார்த்தோம். திடீரென்று ஸ்ரீநிவாசன் அதோ…லெப்ட்ல பாருங்க..என்றார்.

லேசான இள நீலத்தில் இருந்த நீர்ப்பரப்பு திடீரென்று வெள்ளைப் போர்வை போர்த்தியது போல இருந்தது. பூநாரைகள்….நூறு..ஐநூறு …கொஞ்சம் முன்னால போங்க என்றார் டிரைவரிடம். இல்லை இது மிகப்பெரிய கூட்டம்…எங்கள் birder குறைந்தது மூவாயிரம் இருக்கும் என்றார். Greater Flamingos. ‘தேரணி வேதியர் தில்லை மூவாயிரம் பேர்’  பாடல் மனதில் எழுந்தது. பறவைகள் மிக உள்ளே தள்ளியே இருந்தன. அதாவது ஒரு கிலோமீட்டர் தூரத்தில்.சற்றே ஏமாற்றமாக இருந்தது. It doesn’t matter என்றார் எங்கள் birder  எல்லோரையும் இறங்கச் சொன்னார்கள். எங்களுடைய birder மிகச் சிறந்த பெரிய தொலைநோக்கி ஒன்றைக் கொண்டு வந்திருந்தார (கடைசி வரை அதன் விலையைச் சொல்லவே இல்லையே?)  ஸ்டாண்டில் முடுக்கி செட் செய்யவே சற்று நேரம் பிடித்தது. அதில் பார்த்தபோது….ஆஹாஹா….பறவைகளெல்லாம் காலடியில் நடந்து கொண்டிருந்தன. என்ன தெளிவு…என்ன அழகு…தன்னுடைய தொரட்டி மூக்கை – கசடுகளை வடிகட்ட வடிகட்டியும் மூக்கிலேயே உண்டு –  தண்ணீருக்குள் விட்டு தலையைப் பிரட்டி பிரட்டி குடைசல். பல நிமிடங்களுக்கு தலையை எடுப்பதில்லை. அங்கே படிந்துள்ள நீர்தாவரக் கசடுகள் மற்றும் படிவுகள்தான் முதல் முக்கிய உணவு. காலை முன்னும் பின்னும் நடனம் போல் அசைத்துக் கொண்டே சாப்பிடுகிறது. அந்த நடனத்தில்தான் மண்ணைக் கிளறி கசடுகளை மேலே கொண்டு வருகிறது. சிறிது நடனம்…சிறிது நடை…சிறிது தலைப்பிரட்டல்….அதாவது உண்டாட்டு..நடுநடுவே தலையைச் சுழற்றி இறகுகளைக் கோதல்..ஒரு பார்வை.. நன்கு வளர்ந்த பறவை நிமிர்ந்தால் சாதாரணமாக நான்கடி உயரம் இருக்கிறது. இதை விட  நீண்ட கழுத்துள்ள பறவையை நான் பார்த்ததில்லை.  அடுத்தாற்போல் பாம்புதாராவைச் சொல்லலாம். இணையைக் கவர நடனம் புரியுமாம். எதுவும் கண்ணில் அகப்படவில்லை.

இறகின் மீது இளஞ்சிவப்பு நிறத் தீற்றல். மூக்கின் நுனியிலும் இளஞ்சிவப்புதான். இளஞ்சிவப்பு நிறத்தின் அடர்த்தி பறவைக்குப் பறவை வேறுபடுகின்றது. அவைகள் சாப்பிடுகிற Algae யைப் பொறுத்து நிற மாறுபாடு இருக்கும் என்றார் எங்கள் birder. இப்போது தெரிந்தது  நாங்கள் நண்பர்களோடு வந்திருந்தபோது  எங்கள் கண்முன் இருந்திருந்தால் கூட ஏன் பார்த்திருக்க முடியாது என்று. கண்களால் முடிந்த அளவு அள்ளிப்பருகி விட்டு சிறிய தொலைநோக்கிகளுக்கு மாறிக்கொண்டோம். எல்லோரும் பார்க்க வேண்டுமல்லவா? அவைகளும் சிறந்த தொலைநோக்கிகளே. திடீரென்று ஒரு கலைசல். பட பட படவென நூற்றுக்கணக்கான பூநாரைகள் பறக்க ஆரம்பிக்கின்றன. வானத்தில் தீப்பிழம்புகளை  வரிசையாக விசிறியடித்தாற்போல….ரெக்கையின் விரிப்பசைவில் இளஞ்சிவப்பு சுடர் விடுகிறது ..சுடர் கண்ணிலிருந்து மறையும் வரை தொலைநோக்கிக் கொண்டிருந்தேன்….என்ன ஒரு உன்னதமான நாள் இன்று…..

வருகிற வழியில் திரும்ப ஒரு முறை பார்ப்பதாக முடிவு செய்து கொண்டு காலைச் சிற்றுண்டியை பூநாரைகளுடனேயே(அதாவது அவைகள் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போதே…நீங்க வேற) முடித்துக் கொண்டோம். பயணம் தொடர்ந்தது. சரியாக அடுத்த ஐந்து கிலோமீட்டருக்குள்ளாகவே அடுத்த ‘மூவாயிரத்தோரை’ கண்டோம். மிகப் பெரிய பூநாரை மந்தை. எங்களுடைய birder தன்னுடைய அடிபட்ட  காலையும் பொருட்படுத்தாது நீண்ட தூரம் நடந்து பெரிய தொலைநோக்கியை ‘செட்’ செய்து கொடுத்தார். அங்கே பார்த்த அதே காட்சிகள். அலுக்கவேயில்லை. கண் நிறையப்பருகி மனம் நிறைய சேர்த்துக் கொண்டோம். இங்கு ஒரு ஒரு மணிநேரம் நன்கு கழிந்தது. பூநாரையை போகஸ் செய்யும் போதே ‘அலாஸ்க்கா’ விலிருந்து வந்த ஒரு அபூர்வப் பறவையை கண்டு விட்டார் ‘பட்சிராஜன்’. Striated Green  Heron என்று ஞாபகம். சில painted stark கள், சில Pelicon கள், வேறு சில நாரைகள். மேலும் பயணித்து சதீஷ் தவான் space centre க்குள்- இந்தியா விண்வெளிக்கு செலுத்துகிற செயற்கைக்கோள்கள் எல்லாம் இங்கிருந்துதான் ‘ராக்கெட்’டின் மூலம் செலுத்தப்படுகின்றது –  நுழைந்து தலை வாசலோடு திரும்பி விட்டோம். முறையான அனுமதி வேண்டும். மேலும் அது எங்கள் ‘அஜெண்டா’ விலேயே இல்லை. புலிக்காட் சரணாலயம் தகவல் மையத்திற்கு வந்தோம். அங்கு பூநாரைகள் பற்றிய குறும்படம் கண்டோம். பார்த்ததைத் தொகுத்துக்கொள்ள ஏதுவாக இருந்தது.

பின்னர் மெதுவாகப் பயணித்து முன்னர் கண்ட ‘மூவாயிரத்தோரை’ மறுபடியும் கண்டோம். அலுக்காமல் சலிக்காமல் Algae யை மொசுக்கித் தள்ளிக் கொண்டிருந்தார்கள். பறவைகள் கூட்டம் சற்றே நகர்ந்திருந்தது கரையை நோக்கி. ஆர்வக்கோளாறில் சற்றே முன் சென்றோம். பூநாரைகள் பின் செல்ல ஆரம்பித்தன.  அவைகளைக் காலடியில் கொண்டு வர இருக்கவே இருக்கிறார் birder. நிறையப் பேர் என்னைப்போல் ஏகாங்கிகள் தான். மூன்று பேர் குடும்பத்தோடு வந்திருந்தார்கள். ஒரு எழுபது வயது முதியவர் தனியாக வந்திருந்தார். வாயில் snacks ஐயும் கண்ணில் camera வையும் வைத்து நொறுக்கித் தள்ளிக் கொண்டிருந்தார். ‘நான் kenya ல நாப்பது ஐம்பது பார்த்திருக்கேன். இப்படி ஆயிரக்கணக்குல இப்பதான் பாக்கறேன்’ என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தார்.இன்னொரு சக பயணி அமெரிக்காவிலும் கனடாவிலும் பதினைந்து வருடம் வேலை செய்து விட்டு இந்தியா வந்து தொழில் தொடங்க இருக்கிறார். இந்தியாவைப் பார்க்க ஆரம்பித்திருக்கிறார். Keyterns வாடிக்கையாளர்.

கிராமங்களில் ஈரச் சேலையின் இரு புறமும் பிடித்துக்கொண்டு சுழற்றிச் சுழற்றி காயவைப்பார்களே அது போல பறவைகள் கூட்டமாகச் சேர்ந்து சமயங்களில் வானில் சில சமயங்களில்  நொடி தோறும் மாறும் ஓவியம் மற்றும் சிலை வடித்துக் காண்பிக்கும். பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் (குப்பை மேடுகள் மீது புல் முளைத்து சும்மா வாகமன் புல்மேடுகள் போல நிமிர்ந்து நிற்கின்றன. சுற்றுலா மையமாக்காமல் இருக்க வேண்டும்   )அலுவலகம் செல்லும் வழியில் பார்த்திருக்கிறேன். Birder யிடம் கேட்டேன். அதற்குப் பெயர் ‘முர்முரேஷன்’ (Murmuration). நெட்டில் காணக்கிடைக்கிறது.  கேட்டு அரை மணி நேரத்திலேயே காணக்கிடைத்தது ஆச்சரியம். பூநாரை அல்ல வேறு கொக்குகள் நூற்றுக் கணக்கில். வெள்ளைப் போர்வையை நீட்டி மடக்கி சுருட்டி ஆதாளி பண்ணிக்கொண்டிருந்தன.

சூலூர்பேட்டையில் மதிய உணவை வாங்கிக்கொண்டு நெலப்பட்டு பறவைகள் சரணாலயம் வந்து சேர்ந்தோம். அங்கு மதிய உணவு உண்டுவிட்டு பறவைகளைக் காண ஆரம்பித்தோம். open billed stork , Ibis, spoon billed stork, Pelicons கொத்துக்கொத்தாக மரந்தோரும் ஒவ்வொரு வகை. வேடந்தாங்கலைப் போன்றே இருந்தது. Birder இடம் பேசிக்கொண்டிருந்த போது ‘செம்போத்துவோட கண்ணை வாழைப்பழத்துக்குள்ள வெச்சி சாப்பிட்டா பிறக்கற குழந்தை கண்ணு அழகா இருக்குமாம். எங்க அம்மாவும் சாப்பிட்டாங்க, நானும் சாப்பிட்டேன்’ என்று ஒரு பெண் ஒரு பத்திரிகைப் பேட்டியில் கூறியிருந்ததைச் சொன்னேன். காதைப்  பொத்திக்கொண்டார். ‘ நான் என்னுடைய profession மூலமா birds க்கு கஷ்டம்தான் கொடுக்கிறேன். என்ன செய்ய?’ என்றார்.

keyterrns பற்றிச் சொல்லவேண்டும். விதம் விதமாக tour ஒருங்கு செய்கிறார்கள். Thematic tours. மஹாபலிபுரம், காஞ்சிபுரம், ஹம்பி, அங்கோர்வாட் என்று. ஒரு Archialogistஉம் கூட வருவார். குடும்பங்களுக்கு, அலுவலகங்களுக்கு (Corporate) என்று வேறு. ஆற்காட்டிற்கு ஒரு Callinary tour (சமையல் கலை) போகப் போவதாகச் சொன்னார் ஸ்ரீனிவாசன். கோத்தகிரி, மூணாறு trekking tour. சக பயணியரிலேயே இருந்த அவர்களின் வாடிக்கையாளர்கள் அவர்களின் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்கள்.

எல்லோரும் வளைத்து வளைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். எனக்கு அலுவலகத்தில் Camera mobile அனுமதி இல்லாததால் என் செல்பேசியில் Camera வை செயலிழக்கச் செய்திருந்தேன். படம் பிடிப்பது பெரிய கவனச் சிதறலைக் கொடுப்பதாகவே நினைக்கிறேன். ஆனால் ஸ்ரீனிவாசன் மற்றும் சௌந்தர் வாட்ஸப்பில் பகிர்ந்த படங்களை அனுப்பியுள்ளேன்.

நான் birder யிடம் மிமிகிரி செய்யும் பறவை உண்டா என்று கேட்டேன். Black Drongo என்றார். நம்ம கரிச்சான் தான். சங்கத் தமிழில் ஆனைச் சாத்தான் என்று வழங்கப்பட்டதாக காட்டியல் நிபுணர் மா கிருஷ்ணன் கூறுகிறார். மைனாதான் நாகணவாய் என்று ஒரு சொல்வனம் கட்டுரையில் சொல்லியிருந்தார் நாஞ்சில் நாடன்.  birder  ஒரு ‘சைட்’ சொன்னார் www.xeno-canto.org. அநேகமாக உலகிலுள்ள அனைத்து பறவைகளின் குரலும்  பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதில் நீங்கள் பறவையின் ஆங்கிலப்பெயரை அடித்துத் தேட வேண்டும். தி.ஜானகிராமன் சொல்லுகிற வலியன் குருவி, தினைக்குருவி, ஊசிவால் குருவி, மிளகாய் குருவிக்கெல்லாம் ஆங்கிலப் பெயர் என்னவோ? வரும்போது பேருந்தில் பறவைகள் சம்பந்தப்பட்ட வினாடி வினா நடத்தி பரிசு வழங்கப்பட்டது. நீங்கள் சொல்வது போல இசை விழா, திரைப்பட விழா போல இன்று பறவைத்திருவிழா.  பறவைகளைத் தவிர வேறு நினைப்பில்லாமல் கழிந்தது. தகுந்த நேர இடைவெளிகளில் உணவு, தேநீர் மற்றும் கழிப்பறை க்கான நிறுத்தம் கொடுத்து சுற்றுலா மிகச் சிறப்பாக ஒருங்கு செய்யப்பட்டிருந்தது.   இந்த மாதத்திற்குள் இன்னொரு முறை ‘பிளமிங்கோ ட்ரிப்’ இருக்கும் என்று சொல்லிக் கொண்டிருந்தார் ஸ்ரீனிவாசன். அவரவர் ஏறிய இடங்களில் இறக்கி விடப்பட்டோம்  இனிமேல் சுற்றுலாவிற்கு வந்தவர்கள் பறவைகளைப் பார்க்கும் பார்வை ‘பறவைப்பார்வை’யாக இருக்கப் போவதில்லை.

www.keyterns.com   Srinivasan    7550042234

அன்புடன்,

கிருஷ்ணன் சங்கரன்

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விழா- கடிதம் – 17
அடுத்த கட்டுரைகேசவமணி சுந்தரகாண்டம்