பிரபஞ்சனும் ஷாஜியும்

pra

பிரபஞ்சனும் நானும் ஷாஜி

இறந்தவர்களைப்பற்றி எழுதுவதற்கு தமிழகத்தில் ஒரு ‘டெம்ப்ளேட்’ இருக்கிறது. இறந்தவர் நல்லவர், இனியவர், சாதனையாளர், அரியவர் – அவ்வளவுதான். இதை எழுத தனக்கிருக்கும் தகுதி என்ன? எழுதுபவர் அவருக்கு எவ்வளவு அணுக்கமானவர், அவர் இவரை எவ்வளவு மதித்தார் என எழுதுவதுதான்.

சுந்தர ராமசாமி மறைந்தபின் வெளிவந்த ஏராளமான கட்டுரைகளைப் பற்றி அன்று ஒரு சுருக்கமான குறிப்பு எழுதினேன். அக்கட்டுரைகளை மூன்று அடிப்படைக் கருத்துக்களாக சுருக்கலாம். ‘சுரா இனியவர், நான் சென்றால் ரயில்நிலையம் வந்து வரவேற்பார். சுரா பெருந்தன்மையானவர் , நான் அவரை விமர்சித்தால் ஏற்றுக்கொள்வார். சுரா நல்ல ரசிகர். என் கதைகளை பாராட்டினார்’ இவ்வளவுதான். சுராவின் ஆளுமை, அவருடைய தோற்றம், பேச்சு எதுவுமே பதிவாகியிருக்காது. அவரிடம் என்ன பேசினோம் என்றுகூட எவரும் எழுதவில்லை. ஜெயகாந்தன் இறந்தபோது ‘இரவெல்லாம் பேசிக்கொண்டிருப்போம்’ என நூறுபேர் எழுதினர். என்ன பேசினார்கள் என எவருமே எழுதவில்லை.

பிரபஞ்சனைப்பற்றிய கட்டுரைகளும் அதே பாணியில்தான் விதிவிலக்கு பிரபஞ்சனைப்பற்றிய ஷாஜியின் கட்டுரை ’பிரபஞ்சனும் நானும்’. இதில் பிரபஞ்சனின் ஆளுமை உள்ளது. இப்படி நேரடியாக எழுதினால் உடனே பிரபஞ்சனின் ‘அணுக்கமானவர்கள் ‘ரசிகர்கள்’ கொதித்தெழுந்து ’இறந்தவரைப் பற்றி இப்படி எழுதுகிறாயே, அவர் இருந்திருந்தால் எழுதுவாயா?” என ஆரம்பிப்பார்கள். என்னிடம் அப்படி ஒருமுறை கேட்கப்பட்டது. இருக்கும்போது எவரும் அஞ்சலிக்கட்டுரை எழுதுவதில்லை என்று பதிலளித்தேன்

நம்மவர் இப்படி மொட்டையாக ஏன் எழுதுகிறார்கள் என்றால் அவர்கள் அந்த ஆளுமையை கூர்ந்து கவனித்ததே இல்லை என்பதனால்தான். அவர்கள் அடக்கமானவர்களாக காட்டிக்கொண்டாலும் தன்மைய நோக்கு கொண்டவர்கள். அந்த ஆளுமை தன்னைப்பற்றி என்ன நினைக்கிறது என்று மட்டுமே பார்த்திருப்பார்கள். அதைத்தான் எழுதமுடிகிறது அவர்களால். இதை பலமுறை ப.சிங்காரம் எழுதியிருக்கிறார். இளமைக்காலம் முடிந்தபின் நம்மவர் எதையுமே கவனிப்பதில்லை. ஆகவே எதையுமே எழுதுவதும் இல்லை. அவர்களை மீறி உள்ளே புகுந்தவற்றை, இளமைக்காலத்தை, மீண்டும் மீண்டும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.

பிரபஞ்சனின் தோற்றம், பேச்சுமுறை உணர்ச்சிகள் எல்லாவற்றையும்  எழுத்தாளனுக்குரிய கூர்மையுடன் ஷாஜி பதிவுசெய்கிறார். பிரபஞ்சனிடம் ஒரு நிலையா ஆளுமை உண்டு. சீரான உறுதியான குணச்சித்திரம் அல்ல அவர். அது அவர் எழுத்தாளர் என்பதனால்தான். உணர்ச்சிகரத்தன்மை என்பதே எழுத்தாளர்களை உருவாக்குகிறது.

அத்துடன் அவரை ஆட்டுவித்த சில உணர்ச்சிகள் உண்டு. ஒன்று  அவர் மகனின் நிலை. அவர் உளநிலைக்குலைவு கொண்டவர் என்பது பிரபஞ்சனை வாழ்நாளெல்லாம் ஆட்டிப்படைத்தது. அதைப்பற்றி அவர் பேச விரும்புவதில்லை, ஆனால் பேச்சில் வந்துகொண்டும் இருக்கும். அந்த அகவலி அவரிடம் அவ்வப்போது கொந்தளிப்பாக வெளிப்படும். அவரால் புண்படுத்தப்பட்ட நண்பர்கள் பலர் உண்டு. இந்த ஆழத்தை அவர்கள் உணர்ந்தால் பிரபஞ்சனை புரிந்துகொள்ளமுடியும். இத்தகைய நிலையில்  தந்தையின் மனம் ஒருபோதும் துயரில் இருந்து மீள்வதில்லை.

இன்னொன்று,  அவரால் நிதியை கையாள முடியாது என்பது. அவர் பணம் இருக்கையில் அள்ளி வீசுபவர். இல்லாதபோது தவிப்பவர். செல்வச்செழிப்பான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இளமைக்காலம் கொண்டவர் என்பதனால் உருவான குணாதிசயம் இது. கையில் பணமில்லாதபோதும் ஓட்டல்களுக்கும் வண்டிகளுக்கும் அவர்தான் பணம் கொடுப்பார். நான் அவருக்காக ஒருமுறைகூட பணம் கொடுக்கநேர்ந்ததில்லை. அதை அவர் இயல்பாகவே செய்வார்.

அவருடைய நூல்களை பதிப்பித்த அத்தனைபேருக்கும் ஒன்று தெரியும், அவருக்கு பதிப்புரிமைத்தொகையைவிட கூடுதலாகவே கொடுக்கவேண்டியிருக்கும். கேட்டுக்கேட்டு வாங்குவார். அதற்கு கணக்குவைத்துக்கொள்ள முடியாது. அவருக்கு அதன்பின்னரும் மனக்குறை எஞ்சியிருக்கும். உண்மையில் எவர் தனக்கு எவ்வளவு தரவேண்டும் என்பதை அவர் அறியமாட்டார். பதிப்பாளர்களைப் பற்றி அவர் சொல்வன அனைத்துமே அந்தந்தக் கணத்து உணர்ச்சிகள்தான்.

கடைசிகாலத்தில் சென்னையின் ஒரு பெனிஃபிட் பண்ட் நிறுவனத்தில் [ராயப்பேட்டை பெனிஃபிட் பண்ட் என சொன்னதாக நினைவு] பெரிய அளவு பணத்தை அவர் இழந்தார். அது அவரை மிகச்சோர்வுறச் செய்தது. அவருடைய நிலைகொள்ளா உள்ளத்திற்கு அதுவும் ஒரு காரணம். இந்த அலைக்கழிப்புகளை மறைத்துக்கொண்டுதான் அவர் சிரிப்பும் நட்புமாக வாழ்ந்தார். அந்த ஆழத்து வலிகளை உணர்ந்திருந்தால் அவர் அவ்வப்போது கொண்ட கொந்தளிப்புகளையும் புரிந்துகொள்ளமுடியும்.

பிரபஞ்சனின் மறைவுக்குப் பின்னர் அவர் தமிழ்ச்சூழலால் கைவிடப்பட்டிருந்தார் என்ற வகையிலான உணர்ச்சிகரமான குறிப்புகளை வாசித்தேன். தமிழின் மாபெரும் எழுத்தாளர் என்னும் கிளருணர்வுகளையும். அவையெல்லாமே இன்று வழக்கமான ‘எழுத்தாளர்ச்சாவு துட்டி’ களாக ஆகிவிட்டிருக்கின்றன.

பிரபஞ்சனுக்கு தொடர்ந்து உதவிசெய்த பலரை நான் அறிவேன். பலர் சினிமாக்காரர்கள். நானும் சற்று உதவியிருக்கிறேன். ஆனால் உதவிபெற்றமையாலேயே பிரபஞ்சனின் எழுத்தாளன் என்னும் அகங்காரம் புண்பட்டிருக்கும். ஆகவே உதவிசெய்தவர்களை அவர் எங்கேனும் பொது இடத்தில் கொஞ்சம் புண்படுத்துவார். நான் புண்பட நேர்ந்ததில்லை, கவனமாக ஒரு தொலைவை தக்கவைத்துக்கொண்டேன் பிரபஞ்சன் சாதாரணமாக ஒருவர் ஓய்வூதியமாகப் பெறுவதைவிட மும்மடங்கு பணத்தை இறுதிவரை எவ்வகையிலோ பெற்றுக்கொண்டுதான் இருந்தார்.

அத்துடன் ஓர் எழுத்தாளனாக தான் ‘காலாவதியாகி’ விட்டதாக அவர் எண்ணியிருந்தார். அது உண்மையும்கூட. படைப்பிலக்கியவாதியாக அவர் தீவிரமான வெளிப்பாடு கொண்டவர் அல்ல. ‘மானுடம் வெல்லும்’ மட்டுமே அவர் பெயர் சொல்ல நிலைகொள்ளும் படைப்பு. அவருடைய சிறுகதைகள் எவையுமே கலைவெற்றிகள் அல்ல. நேரடியான பேச்சுக்கள் அவை. [அவருடைய உச்சச் சாதனையாக சொல்லப்படும் பிரம்மம் கூட தி.ஜானகிராமனின் நகல்தான்] இந்த உண்மை அவரை படுத்தி எடுத்தமையால் மெல்லிய விமர்சனமாக ஏதேனும் வெளிப்பட்டால் அவர் கொந்தளிப்பார். ஆனால் அவரே என்னிடம் அதை சொல்லியிருக்கிறார்.

இந்தக் குறையை உணர்ந்தமையால் பிரபஞ்சன் சமகாலக் கருத்துக்களை ஒட்டியே கருத்துச்சொல்ல கவனம் எடுத்துக்கொண்டார். குடும்பம், பெண்ணுரிமை, பாரம்பரியம் பற்றிய அவருடைய கருத்துக்கள் எல்லாமே தான் ‘காலாவதியாகிவிடக்கூடாது’ என்னும் தன்னுணர்வின் வெளிப்பாடுகளே. ஆகவே அவை சற்று அத்துமீறிய புரட்சிகரம் கொண்டவை. அவர் தன்னியல்பில் சற்று மரபானவர். இன்று அவருக்கு அந்தக் கருத்துக்களால்தான் ஒரு வட்டம் உருவாகியிருக்கிறது என்னும்போது அதுவும் பிழையல்ல என்று இப்போது படுகிறது. அவருக்கு அஞ்சலியாக வெளிவந்த கருத்துக்கள் எல்லாமே அவருடைய அந்த சமூகக்கருத்துக்களை மட்டுமே அறிந்திருக்கும் வட்டத்திலிருந்துதான்.

இவையனைத்துக்கும் அப்பால் பிரபஞ்சன் ஒரு ‘தரமான மானுடன்’. எந்நிலையிலும் அவர் எவரையும் பழித்துரைப்பதில்லை. புறம்பேசுவதில்லை – மெல்லிய கிண்டலுடன் சரி. மனிதர்கள் நடுவே வேறுபாடு பார்ப்பதில்லை. வன்மங்களும் வஞ்சங்களும் கொண்டவர் அல்ல. எப்போதும் தேவையில் இருந்தவராயினும் எவரையுமே பயன்படுத்திக்கொள்ள முயன்றதில்லை. இசை, காபி, இலக்கியம், நறுமணம் என்னும் சுவைகளில்  ஆழ்ந்திருந்தார். அதற்கப்பால் அவர் ஆர்வம் கொண்டவை மிகச்சிலவே. உண்மையிலேயே அவருக்கு அரசியலில் ஆர்வமிருந்ததில்லை என்பதே என் கணிப்பு.

வாழ்வின்பொருட்டு ’சிறிய’ எழுத்துக்களை [நக்கீரன் போன்ற இதழ்களில்] எழுதவேண்டியிருந்தாலும்  எப்போதுமே பெரிய கனவுகளை, பெரிய கருத்துக்களை நோக்கிய உள்ளம் கொண்டிருந்தார். ஓளிநோக்கியே வாழ்தல் என ஒரு சொல் உண்டு. அவ்வண்ணம் வாழ்ந்தவர் அவர். அவ்வகையில் அவருடைய இறுதிநூலான எமதுள்ளம் சுடர்விடுக தான் அவருடைய நல்ல ஆக்கம் என நினைக்கிறேன். பிரபஞ்சன் என்னும் தொடர்வாசகனின் தேடல் அமைந்த நூல் அது.

ஷாஜியின் இந்தக் குறிப்பில் உள்ள உண்மை பிரபஞ்சனை அணுக்கமாக நமக்குக் காட்டுகிறது. அவருடைய அத்தனை நிலைகொள்ளாமைகளுடன் அருகே அவர் நிற்பதுபோலிருக்கிறது.

பிரபஞ்சன் : கடிதங்கள்

அஞ்சலி:பிரபஞ்சன்

பிரபஞ்சன் 55

கருத்துரிமைப்போராட்டம், பிரபஞ்சன், தோப்பில்…

எழுத்தாளனாகவே வாழ்வது என்பது…

கடிதங்கள்– பிரபஞ்சன்

எழுக!

எழுத்தாளர்களை அணுகுதல்….

பிரபஞ்சனும் சங்ககாலமும்

எழுத்தாளரின் பிம்பங்கள்

முந்தைய கட்டுரைநிலத்தில் படகுகள் – ஜேனிஸ் பரியத்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-27