எஸ்.ரா. – கடிதங்கள்

esra

எஸ்.ராமகிருஷ்ணனின் இரவும் பகலும்  

அன்புள்ள ஜெ,

எஸ்.ராமகிருஷ்ணனைப் பற்றிய உங்கள் தடம் இதழ் கட்டுரை அருமையானது. என் ஆதர்ச எழுத்தாளர் அவர். அவரைப்பற்றி முன்பும் நீங்கள் நான்கு கட்டுரைகள் எழுதியிருந்தீர்கள். தமிழில் சமகால எழுத்தாளர் ஒருவரைப்பற்றி இப்படி விரிவான ஆய்வாக இன்னொரு எழுத்தாளர் எழுதியதில்லை. இந்தக் கட்டுரைகளை மட்டுமே திரட்டினால் ஒரு சிறிய நூல் வடிவில் வெளியிட்டுவிடமுடியும்

தடம் இதழில் வெளிவந்துள்ள இந்தக் கட்டுரை எஸ்.ராமகிருஷ்ணனை விரிவாகப் புரிந்துகொள்ள உதவும் ஒரு முன்வரைவாக உள்ளது. இந்தக்கட்டுரையை முன்னுரையாக எடுத்துக்கொண்டு தனித்தனி நாவல்கள் பற்றி நீங்கள் எழுதியிருக்கும் கட்டுரைகளை வாசிப்பது ஒரு முழுமையான பார்வையை அளிக்கும்

எஸ்.ராமச்சந்திரன்

அன்புள்ள ஜெ

எஸ்.ரா பற்றிய தடம் கட்டுரை சிறப்பாக இருந்தது. உங்கள் வழக்கப்படி எழுத்தாளர்களை மூன்று அடிப்படைகளில் மதிப்பிடுகிறீர்கள். ஒன்று அவர்கள் எழுதும் வாழ்க்கைப்புலத்தை அறிமுகம் செய்து அவர்களை அங்கே பொருத்துகிறீர்கள். அதன்பின் அவர்கள் தமிழின் இலக்கியப்பரப்பில் எங்கே வருகிறார்கள் என்பதை வகுத்து அங்கே பொருத்துகிறீர்கள்.

இதை அந்த எழுத்தாளரின் பொதுக்கூறுகளின் அடிப்படையிலே செய்கிறீர்கள். அதன்பின் அவருடைய தனித்தன்மைகளைப்பற்றிப் பேச ஆரம்பிக்கிறீர்கள். பூமணி முதலிய முன்னோடிகளைப் பற்றிய கட்டுரையிலும் இந்தபாணி இருந்தது. அப்போது என்ன இது இவர் இந்த எழுத்தாளர் இவர்கலைப்போல என்று சொல்கிறார், பின்னர் இவர்களைப்போல அல்ல என்று மறுக்கிறார் என்று எனக்குத் தோன்றியிருக்கிறது. ஆனால் இப்போது உங்கள் ஆய்வுமுறையே நன்றாகத் தெரிந்துவிட்டது.

எந்த எழுத்தாளரும் ஒரு பொதுவான களத்தில் இருந்தே எழுகிறார்கள். அந்தக் களத்தை அறிந்தால்தான் அவருடைய தனித்தன்மை என்ன என்று புரியமுடியும். ஓர் எழுத்தாளரின் முன்னோடிகளை அறியாமல் அவரை வாசிக்கமுடியாது. வண்ணதாசனிடம் இருக்கும் அசோகமித்திரனையும் ஜானகிராமனையும் அறியாமல் அவரை மதிப்பிட முடியாது. ரசனை விமர்சனத்தின் உலகளாவிய வழிமுறையே ஒப்பீடும் மதிப்பீடும்தான்

எஸ்.ராவின் தனித்தன்மையை அழகான ஒரு அட்டவணைபோல சுருக்கமாக அளித்துவிட்டீர்கள் இறுதியில். அவருடைய படைப்புகளை படிப்பவர்களுக்கெல்லாம் சிறந்த வழிகாட்டியாக அமையும் என நினைக்கிறேன். என்னைப்போன்ற கல்வித்துறையினருக்கு மிக உதவிகரமானது

ஜெகதீசன்

அன்புள்ள ஜெ

எஸ்.ரா பற்றிய கட்டுரை வாசித்தேன். நீண்ட கட்டுரை, ஆனால் மிகச்செறிவானது. எஸ்ராவின் வேர்நிலம், அவருடைய இலக்கியமுன்னோடிகள், அவருடைய தனித்தன்மை என்று மூன்று கட்டமைப்பாக அமைந்துள்ளது கதை. ஓர் எழுத்தாளன் எழுதும் நிலத்தைப் புரிந்துகொள்ளாமல் அவன் பாவிக்கும் படிமங்களை புரிந்துகொள்ள முடியாது

ஆனால் பிற்கால படைப்புகளில் எஸ்ரா அடையும் தோல்விகளைப் பற்றிச் சொல்லாமலேயே கடந்துசென்றுவிட்டீர்கள். அல்லது குறைவாக உணர்த்திச் செல்கிறீர்கள். இன்று மனம் ஒன்றாமலேயே எழுதுகிறார் என நினைக்கிறேன். இது அவர் விருதுபெற்றிருக்கும் தருணம் ஆகையால் நீங்கள் அப்படித் தவிர்த்திருக்கலாம். ஆனால் அதையும் சொல்லாமல் கட்டுரை முழுமையாகாது

எஸ்.நவீன்

முந்தைய கட்டுரைவரைகலை நாவல்கள் – கடிதம்
அடுத்த கட்டுரைமொழியை பெயர்த்தல்