வரைகலை நாவல்கள் – கடிதம்

gra

மங்காப் புகழ் புத்தர்

இனிய ஜெயம்

மங்காப் புகழ் புத்தர் பதிவில்

//வரைகலை நாவல்கள் [graphic novel] மேல் எனக்கு பெரிய ஆர்வமிருந்ததில்லை. நான் வாசித்தவரை அவை ஆழமானவையாகவும் தெரியவில்லை. ஒருவகையில் அவை வாசிப்புக்கு இடர் அளிப்பவை. நம் வாசிப்பின்போது மொழியிலிருந்தே கால இடச்சூழலை உருவாக்கிக் கொள்கிறோம். காட்சிக் கோணங்களை மாற்றிக்கொண்டே இருக்கிறோம். நான் வாசிக்கையில் ஒவ்வொரு வாசிப்புக்கும் புனைவுகள் அளிக்கும் காட்சிகள் மாறிக்கொண்டிருப்பதை உணர்ந்திருக்கிறேன்.   வரைகலை நாவல்கள் அவற்றை நம் சார்பில் அவையே முற்றாக வகுத்து முடிவெடுத்துவிடுகின்றன. நாம் செய்வதற்கொன்றுமில்லை.

ஆனால் பிறிதொரு தருணத்தில் எனக்கு வரைகலைநாவல்கள் தேவைப்பட்டன. மூளை வேறொரு புனைவில் வேர் அமிழ்ந்து சிக்கியிருக்கையில் வாசிப்பது கடினமாக ஆகியது. ஆனால் அவ்வப்போது எளிய வாசிப்பும் தேவைப்பட்டது. ஆகவே படக்கதைகளை வாசிக்க ஆரம்பித்தேன். பெரும்பாலும் முத்து காமிக்சின் டெக்ஸ் வில்லர். அவை நான் பெரிதும் நாடிய எளிய இளைப்பாறலை அளித்தன.//

முதல் பத்தியாக நீங்கள் எழுதிஉள்ளவை மேற்கண்ட வரிகள் .  அவ்வபோது நானும் தமிழ் படக்கதைகளின் வாசகன் எனும் நிலையில் இது    உண்மை . நான் வாசித்த வரையில் தமிழில் பெரும்பாலான கிராபிக் நாவல்கள் ‘பெரியவங்களுக்கான ‘காமிக்ஸ் எனும் நிலையில்,டெக்ஸ் வில்லரை விஞ்ச இயலா நிலையில்  தான் நிற்கின்றன . அபூர்வமாக மிக சில கிராபிக் நாவல்கள் . கிராபிக் நாவல் எனும் ‘கலை ‘ வழியே வாசகனை அணுகுவதாக அமைந்து விடுகிறது .

மிக சிறந்த உதாரணம் இரண்டாயிரத்து பதினைந்தில்  வெளியான லே ரிப்போர்ட் தே ப்ரொடக் [ ப்ரொடக் அறிக்கை ] எனும் கிராபிக் நாவல் . எழுதியவர் பிலிப் க்லாடேல் . ஓவியர் மனு லார்ஸநெட் . போர் சூழல் .வதை முகம் ஒன்றினில் இருந்து தம்பி ,கண் மறைவாக பனி மலை கிராமம் ஒன்றினில் கூடி வாழும் மக்கள் . அவர்களை கட்டி மேய்க்கும் ஆர்ஷியர் எனும் அதிகாரி . அந்த கிராமத்துக்குள் ஊடுருவும் ஒரு அந்நியன் யாரும் அறியா வண்ணம் மாயமாக மறைந்து போகிறான் . அங்கே நடந்தது என்ன என மக்கள் மத்தியில் விசாரித்து அறிக்கை சமர்பிக்கும் பனி ப்ரோடெக் வசம் ஒப்படைக்கப் படுகிறது .  இந்த அடிப்படைக் கதைக் கட்டுமானம் மனுவின் ஓவியங்கள் வழியே , மக்களும் ,நிலமும் ,பொழுதும் உயிர் கொண்டு உலவ ,வாசகனும் அந்த கிராமத்தில் அவர்களில் ஒருவனாக சிக்கிக்கொண்ட ஆயாசத்தை முதல் வாசிப்பில் அளிக்கிறது .

போர் சூழல் ,வதைமுகாம் நாவல்களுக்கே உரிய உளநிலை. சொற்களை இழந்த ,எதிர்கால நம்பிக்கை இழந்த ,இக்கால பீதியில் உறைந்த  அமுங்கிய கதா பாத்திரங்கள்.  இந்த காலத்தில் ,இந்த சூழலில் ,இந்த மனிதர்கள் இப்படித்தான் என வரையறை செய்தபடியே செல்லும் ,குறைவான கூரிய உரையாடல்கள் .

இந்த அடிப்படைகளுக்கு வெளியே நின்று ,ஒரு கலையாக கிராபிக் நாவல் கையாள வேண்டிய சவாலை தொட்டுப்பார்த்திருக்கிறது இந்த நாவல் . முதல் அலகாக இந்த நாவல் நிகழும் இரண்டாயிரம் ஓவியச் சட்டகங்களில் சரி பாதி , வாசகனின் ஆழ்மனத்தின் காய்ச்சல் நேர கொடுங்கனவுகளின் சித்திரங்களில் ,அவை உறைந்திருக்கும்  ஆழத்தில் இயல்பாக சென்று   அமைந்து விடுகிறது .  உதாரணமாக குதிரை ஒன்று, பனி மழையில், கழுத்தில் சுருக்கிட்டு ,தூக்குமரத்தில் சடலமாக தொங்கும் சித்திரம் . கதைக்குள் அந்த குரிரை முதன் முதலாக காட்சிப்படும் போது,அண்மைக் காட்சியாக அதன் விழி அத்தனை உயிர் கொண்டு துலங்கி வரும் சித்திரத்துடன் ,இந்த காட்சி இணைகையில் , கோதிக் காலக்கட்டத்தை சேர்ந்த முதல் தர ஓவியம் ஒன்று அளிக்கும் இருண்மை உணர்வு அகத்தை தைக்கிறது .நாவல் அது பேசும் ஆழத்தை    ஓவியங்கள்  மீது பார்வையாளனின் அகம் நின்று நிலைபெருவதன் வழிமுறை கொண்டு மட்டுமே தொடர்புறுத்துகிறது .

மிக சில கோடுகள் வழியே ,இந்த நாவல் நிகழும் களமான பனி வெளியும் ,குளிர் இரவுகளும் , நிழல் படிந்த முகங்களும் ,கருப்பு வெள்ளை சித்திரங்களில்  அந்த நிலத்தில் அந்த மனிதர்களுடன் நாம் சிக்கிக்கொண்டு விட்ட மூச்சுத் திணறும் அனுபவத்தை .ஒவ்வொரு சட்டகத்தின் வழியாகவும் , ஒரு தைல தாரை போல சீரான ஒழுக்கில் அகத்தில் படியச்செயகிறது .

அடுத்ததாக இந்த நாவலை கலைக்கு அருகே சென்று நிறுத்தக் கூடிய [சப் டெக்ஸ்ட் ] ஆழ்பிரதி .அதுவும் இந்த நாவலில் உரையாடலை தவிர்த்து ,முற்றிலும் ஓவியங்களின் மொழி வழியே மட்டுமே துலங்கி வருகிறது . உதாரணமாக நாவலில் பன்றிகளுக்கும் மனிதர்களுக்கும் பேதமே இல்லை எனும் வகையில்  நிகழும் ஓவியச் சித்தரிப்பு .  மிருகங்கள் போல கொடூர அகம் கொண்டு எஞ்சி இருக்கும் உயிர்கள் . அவர்கள் நடுவே ஒரு ஓவியன் வருகிறான் .அவர்கள் ஒவ்வொருவரையும் ஓவியமாக வரைகிறான் .ஒரு விசேஷ நாளில் . மக்கள் அனைவரையும் அழைத்து அவர்கள் முகத்தை வரைந்த ஓவியங்களை காட்டுகிறான் . ஒரு கணம் மூச்சடைத்து ஸ்தம்பித்து நிற்கும் கூட்டம் ,மறு கணம் வெறி கொண்டு அந்த ஓவியச்சாலையை அடித்து உடைத்து ,ஓவியனையும் கொன்று போடுகிறது .

அவலட்சணமாக காட்சி தரும் ஒவ்வொரு மனிதரும் அந்த ஓவியத்தில் அழகாக காட்சி தருகிறார்கள் . எது இருளோ ,எது தீமையோ ,எது குரூரமோ ,அது கொண்டு மட்டுமே நிகழும் ,காட்சி ஓட்டத்தில்,அதன் ஆழத்தில்   ஒவ்வொன்றும் எது ஒலியோ ,எது நன்மையோ , எது அழகோ அது உறைந்திருப்பதை அந்த ஓவியங்கள் காட்டுகிறது .  வெளியே நீங்கள் குரூபி ஆழத்தில் நீங்கள் அழகன் , வெளியே நீங்கள் சுயநலப் பொய்யன் உள்ளே ஆழத்தில் நீங்கள் உண்மை , வெளியே ஒருவரை ஒருவர் கொன்று உயிர் வாழும் தீயவர் ,உள்ளே கூடி ஆழத்தில் அன்பின் பொருட்டு கூடி வாழும் நல்லவர் . இந்த ஆழத்தை அந்த ஓவியன் அவர்களுக்கு திரை விலக்கி காட்டுகிறான் .  அந்த அழகை,நன்மையை ,உண்மையை உணர இயலாமல் ,அல்லது அந்த இழப்பை பொறுக்க இயலாமல்,  வன்முறையின் இருள் மீண்டும் அந்த மக்களை சுருட்டி விழுங்கி விடுகிறது .

மானுடம் இருளில் விழுந்து  மிருகத்தின் இயல்பை கைக்கொள்ளும் போதெல்லாம் அங்கே கலைஞன் ஒருவன் தோன்றி ,ஒளியைக் கொண்டு வருகிறான் . நீங்கள் உயிர் கொண்டு உலவ வந்த மந்தைகள் அல்ல ,வாழ வந்த மனிதர்கள் என்பதை தனது கலை கொண்டு அடிக்கோடிடுகிறான்.இங்கே இந்த நாவலில் அந்த கலைஞன் ஒரு ஓவியன் . ஆகவே இந்த நாவல் தன்னியல்பாக அது கோரும் சவால்களை தவிர்க்காமல் நேரடியாக தொட்டு கையாளுகிறது .என் நோக்கில் வெற்றியும் பெற்றிருக்கிறது .

gra

சாம்பிள் ஓவியங்கள் இந்த நாவலில் இருந்து 

இந்த நாவல் ஆங்கிலத்திலும் அமேசானில் கிடைக்கிறது .இந்த ஓவியங்கள் சென்று  தைக்கும் கொடுங் கனவின் ஆழத்து சித்திரம் எனும் அழகியலுக்காகவே அவசியம் இந்த நாவலை வாசிக்கலாம் .சித்திரங்கள் எனும் மொழி கொண்டு மட்டுமே இந்த நாவல் பேசும் ஆழ் பிரதிகாகவும்.

சில மாதங்கள் முன்பு அழகிய மொழிபெயர்ப்பில் தமிழில் கிராபிக் நாவலை வாசித்தேன் . வேறு யார் முத்து காமிக்ஸ் தான் .இந்த நாவலை எனக்கு அளித்தவர் புதுவை நண்பர் கவிஞர் ஓவியர் ரமேஷ் சுப்ரமண்யன் : ) இப்போது பதிப்பில் இருக்கிறதா தெரியவில்லை . அந்த லயன் கிராபிக் நாவலின் தலைப்பு நிஜங்களின் நிசப்தம் .

கடலூர் சீனு

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-24
அடுத்த கட்டுரைஎஸ்.ரா. – கடிதங்கள்