ரயிலில் கடிதம் – 11

train4

ரயிலில்… [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

‘ரயிலில்’ சிறுகதையும் அதற்கு வந்த பல கடிதங்களும் படித்தேன். கடிதமெழுதிய‌ எல்லோரும் சொன்னது போல, ஆழமான பாதிப்பை உருவாக்கும் கதை.

சாமிநாதன் பாத்திரம்  Lord of the Flies கதையில் வரும் Piggyயை நினைவுறுத்தியது. ஆள் பலமோ உடல் பலமோ சூழ்ச்சித் திறனோ அற்றுப் போய் மற்றவர்களது நியாயவுணர்வையும், சட்ட அமைப்புமுறையின் பாதுகாப்பையும் நம்பியிருப்பவர். பொறுத்திருந்தால் என்றோ ஒரு நாள் நியாயம் வெல்லும் என்று வளைந்து கொடுத்துப் போகிறார்.

முத்துசாமி போன்றவர்களை செலுத்தும் மனவிசை என்ன என்பதை அசை போட்டால் எங்கெங்கோ எண்ணங்களைக் கொண்டு செல்கிறது.

தர்மமே நிலைத்து நிற்கும், தர்மவான்களை தெய்வம் காக்கும் என்பதற்கு சாட்சியாக சாமிநாதனின் குடும்பம் மீண்டும் நிலைகொண்டு செழித்ததை எடுத்துக் கொள்ளலாம். தெய்வம் நின்று கொல்லும் என்று நம்புபவர்கள் முத்துசாமியின் குடும்பம் அடைந்த‌ நிலைமையைப் பார்த்து “சொன்னேனில்ல, பாத்தியா!” எனலாம். அவர் மகள்கள் இருவருக்கும் கேடிகளால் நேரும் அவலங்களை முன்னிறுத்திக் கொள்பவர்கள் சாமிநாதனின் உள்ளார்ந்த கொடூரம் வெளிப்பட்டதாகக் கருதலாம். நேரடியாக ஏதும் செய்யாவிட்டாலும், முத்துசாமி பாவச் செயல்களின் மூலம் சம்பாதித்ததை அனுபவித்து வந்தவர்க‌ளாதலால் அதன் பின்விளைவுகளிலும் பங்குள்ளவர்கள் என்று சட்டம் படித்தவர்கள் வாதிடலாம்.

ஓயாமல் அடுத்தடுத்த பேரத்தில் ஜெயிப்பதுதான் முத்துசாமியை செலுத்துகிறது எனத் தோன்றுகிறது. லாபம் சேர்ப்பதைவிட பேரத்தில் வெற்றி பெறுவதே முக்கியமானதாகி, அதன் பொருட்டு பொய் சொல்வதும் ஏமாற்றுவதும் தொழில் கருவிகளாகி விடுகிறன. எல்லாவற்றையும் ஒரு தொழில் பேரமாகப் பார்ப்பதன் மூலம் எல்லாவற்றிலும் தயங்காமல் ஏமாற்ற முடிகிறது.

ஏமாறாமல் இருப்பது உன் கடமை, ஏமாற்றாமல் இருப்பது என் வேலையல்ல‌ என்கிற விதமாய் நடந்து கொள்கிறார். தன்னால் வஞ்சிக்கப்பட்டவர்கள், தன்னிடம் வந்து மன்றாடுபவர்கள் எல்லாம் பேரம் நடத்தி ஜெயிக்க‌த் தெரியாதவர்கள் என்று தன்னை உயர்த்திக் கொள்கிறார். எனவே ஈரமே இல்லாமல் மேலும் ஏமாற்றவோ, தெருவில் தள்ளிவிடவோ முடிகிறது. தர்மம், குற்றவுணர்வு போன்றவை, தன் இலக்கை அடையும் வழியில் மற்றவர்கள் வைக்கும் ஒரு  முட்டுக்கட்டை என எளிதில் கடந்து செல்ல முடிகிறது. அது மற்றவர்களிடத்தில் இருந்தால் அதையும் தயக்கமின்றிப் பயன்படுத்திக் கொள்கிறார்.

எக்காரணம் கொண்டும் தன் செயல்பாட்டில் நியாயவுணர்வுக்கு இடம் கொடுக்காமலிருக்க  விழிப்பாக இருக்கிறார்: அது வந்தால் அவரது மனச் சமன்பாடு போய்விடும். இத்தனை நாளாகச் செய்து வந்தவை த‌வறு எனத் தோன்றிவிட்டால் மொத்தமாகக் குற்றவுணர்வு அவரைத் தின்று விடும் எனத் தெரிந்திருக்கிறது. எனவேதான் நியாயவுணர்வுடன் பேசும் த‌ன் மனைவியை சீற்றத்துடன் விரட்டுகிறார். சாமிநாதனின் சொத்து நியாயமாகச் சேர்த்ததல்ல, எனவே தான் அபகரிப்பதில் தவறொன்றுமில்லை என்று கற்பித்துக் கொள்கிறார்.

எல்லாமே பேரத்துக்கு ஆட்பட்டது என்ற நம்பிக்கையும் முத்துசாமியை வழிநடத்துகிறது. இத்தனை நாட்களாகச் செய்துவந்ததெல்லாம் பாவமென்று தெரியவந்தால் அந்த சமயத்தில் கடவுளிடமே பேரம் பேசிப் பரிகாரங்கள் மூலம் ஈடு செய்து கொள்ளலாமென்று மனைவியிடம் கூறுகிறார். நீதிமன்றத்தில் சொத்துரிமை சாமிநாதனுடையது என்று முடிவான போதும், இவனால் நம்மை என்ன செய்து விட‌ முடியும் என்ற மனக்கணக்குடன் முத்துசாமி, பேரம் பேச வந்த சாமிநாதனை உதாசீனப்படுத்துகிறார்.

ஆனால் சொத்துரிமை, பலவீனமான சாமிநாதனிடமிருந்து பன்மடங்கு பலமும் கொடூரமும் அதிகாரச் செல்வாக்கும் வாய்ந்த கேடியிடம் போனதும் முத்துசாமியின் ராஜாங்கம் மொத்தமாகச் சரிகிறது. பேரம் என்பதற்கே இடமில்லாமல் போகிறது. அவரது மகள்கள் கடத்திச் செல்லப்பட்டுசிதிலமாக்கப்படுகிறனர். கேடியிடம் அழுது மன்றாடினாலும் எதுவும் கிடைக்காத‌ நிலைக்குப் போகிறார். குடும்பமே சின்னாபின்னப்பட்டுப் போகிறது.

மறுபடியும் தனக்குச் சாதகமான‌ பேரங்களின் வழியாகவே மீள தலைப்படுகிறார். பெரிய மகள் சரிக்கட்டமுடியாத நஷ்டமாகிப் போனதால்  கருணைக் கொலை செய்து அப்புறப்படுத்த  அனுப்பப்படுகிறாள். மனநலம் சரியில்லாத‌ இளைய மகளை ஒரு ஏமாளிக் குடும்பத்தில் திருமணம் செய்து கொடுத்துக் கண் காணாத இடத்துக்கு அனுப்பி விடுகிறார்.

சாதாரண மனிதனை பேதலித்துப் போகச் செய்யக் கூடிய இடரில் முத்துசாமி குடும்பத்தைத் தள்ளியதும், அதிலிருந்து ஒருவிதமாக‌ மீண்டு வர வழி செய்ததும், பேரத்தில் எவ்வாறேனும் ஜெயித்துவிட வேண்டும் என்ற அந்த தாட்சண்யமற்ற உந்துதல்தான்.

அன்புடன்,

சுப்பிரமணியன்

ரயிலில் கடிதங்கள்-10

ரயிலில்- கடிதங்கள் -9

முந்தைய கட்டுரைஇரண்டு – சத்யஜித் ரே
அடுத்த கட்டுரைஒரு தொல்நகரின் கதை